எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 1 ஜூலை, 2012

பெண் சிசுக்களை நேசிப்போம்..

பெண் சிசுக்கொலை பற்றிய விழிப்புணர்வு.. இது இருக்கிறதா இல்லையா என்பது பற்றி பொதிகை தொலைக்காட்சியில் காரசாரம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைப்பு வந்தது . நல்ல கருத்துக்களைக் கூற ஒரு வாய்ப்புக் கிடைத்தது. இன்னும் விழிப்புணர்வு தேவை என்பது என் கருத்தாக இருந்தது.. அங்கு பேசப்பட்ட  பல சுவையான கருத்துக்களை இங்கே நான் என்னுடைய கருத்துக்களோடும் தர விழைகிறேன்.ஆயிரம் ஆண்களுக்கு 933 பெண் குழந்தைகள்தான் இருக்கிறார்கள். இன்னும் பெண் பிறப்பின் சதவிகிதம் குறைந்து வருகிறது. அதற்கு பெண் சிசுக் கொலைதான் காரணம்.


பெண் சிசுக்கொலை பொதுவாக ஏன் நடக்கிறது. வரதட்சணைக் கொடுமையை முதன்மையாக சொன்னார்கள் பலரும். நான் சொன்னேன். ”நானும் படித்திருக்கிறேன் , நானும் வேலைக்கு செல்கிறேன் நான் ஏன் உனக்கு வரதட்சணை தரவேண்டும் என பெண் கேட்கும் காலம் வரும். எனவே ஆண் பிள்ளை காப்பாற்றுவான். பெண் பிள்ளை என்றால் செலவு என்ற மனோபாவம் மாற வேண்டும். அப்படி மாறினால்தான் பெண் சிசுக் கொலை நிற்கும்.

அரசியல் ஆதிக்கம் மற்றும் இலக்கியத்தில் மொழி வழக்கு என்பதில் கூட ஆண்பால் ஆதிக்கம்தான் அதிகம். ஆண் சார்ந்து சிந்திக்கும் சமுதாயத்தில்தான் நாம் இன்னும் இருக்கிறோம். பெண்ணைச் சுய சார்புள்ளவளாக இருக்கவும் சிந்திக்கவும் விடுவதில்லை. அதில் ஆண் முடிவு செய்பவனாகவும் பெண் அந்த முடிவை ஏற்று நடத்துபவளாகவுமே இன்றைய காலகட்டத்திலும் இருக்கிறாள்.

ஒரு குழந்தை ஆணா , பெண்ணா என்பதல்ல முக்கியம் அது நல்லபடியாக சுகமாகப் பிறந்ததா.. தாயும் சேயும் நலமா, என்பதுதான் முக்கியம். ஆண் உசத்தி, வாரிசு, பேர் சொல்ல ஒரு பிள்ளை என்பதெல்லாம் போல பெண்ணும் உசத்திதான், வாரிசுதான்., பேர் சொல்லும் பிள்ளைதான். இன்று பல குடும்பங்களில் பெண்கள் தங்கள் தாய் தந்தையரைப் பாதுகாக்கிறார்கள். ஆண்மகன் மட்டும்தான் தாய் தந்தையரைக் கடைசிவரை காப்பாற்றுவான்., பெண் திருமணம் செய்து கொண்டு போய் விடுவாள் எனபது தவறான கண்ணோட்டம்.

” பெண் என்று பூமிதனில் பிறந்துவிட்டால் மிகப் பீழை இருக்குதடி தங்கமே" என்ற பாட்டை கேட்டிருப்போம். இன்று பீடு நடை போடும் பெண்களுக்கு மத்தியில் இன்னும் சில கிராமங்களில் பெண் சிசுக் கொலையாகவும், நகரங்களில் கருக்கலைப்பாகவும் அது செயல்படுவதாக வெளிச்சம் என்ற அமைப்பில் இருந்து வந்த பெண் கூறினார்.

இன்னும் கிராமங்களில் பெண் சிசுக் கொலை தொடர்வதை செய்தித்தாள்களில் பார்க்கலாம். குப்பைத்தொட்டியிலும், சாக்கடைகளிலும் வீசும் குழந்தைகளின் படம் பார்த்தாலே மனம் பதைக்கும்.. இது சில சமயம் குடும்பத்தாராலும், கணவனாலும் நடைபெறுகிறது. முறையற்ற உறவுகளில் பிறக்கும் குழந்தைகள் கூட இவ்வாறு கொல்லப்படுவது தண்டனைக்குரிய செயல்.. எனவே சட்டங்கள் கடுமையாக்கப்படவேண்டும்.

ஒரு மருத்துவர் தான் உயிரைக் காக்கும் தொழிலில் ஈடுபட்டிருக்கிறார். அவரை மக்கள் தெய்வமாகக் கருதுகிறார்கள். அவர் தான் உயிரைக் காப்பாற்றும் தன் இறையாண்மையை, உறுதியை நிறைவேற்ற வேண்டுமே தவிர ஒரு உயிரை கருவிலேயே அழிக்கும் செயலுக்கு உடன்படக்கூடாது என கருதுகிறேன். அதை உரத்தும் அங்கு பதிவு செய்தேன்.

இதில் சமூக ஆர்வலர் ஜேனட் செல்வகனி, முனைவர் ஹாஜா கனி, சமூக ஆர்வலர் ஷைலா சாமுவேல் ஆகியோர் சிறப்பு பங்கேற்று தங்கள் வலிமையான கருத்துக்களையும் சொன்னார்கள். பொதுவாக ஆசிய நாடுகளில் தென் தமிழங்களில்தான் சிசுக் கொலை அல்லது கருக்கலைப்பு நடக்கிறது. ஸ்கானிங்க் செய்யும்போது பாலினம் பற்றிக் கூறாவிட்டாலும் சில மருத்துவமனைகள் திங்கட்கிழமை ரிப்போர்ட்டை வாங்கிக் கொள்ளச் சொன்னால் அது ஆண் குழந்தை என்றும் செவ்வாய்க்கிழமை வாங்கிக் கொள்ளச் சொன்னால் அது பெண் குழந்தை என்றும் ஒரு சொல்லப்படாத சட்டத்தைக் கடைப்பிடிப்பதாக ஒருவர் சொன்னார்.

1994 இல் வந்த சட்டப்படி கருக்கலைப்பு செய்வது குற்றமாக கருதப்படும். 2003 இல் கொண்டு வரப்பட்ட பெண்கள் பாதுகாப்பு சட்டமும் அதையே சொல்கிறது. முதல்வர் தொட்டில் திட்டத்தை அறிமுகப்படுத்திய போது அதில் வந்த குழந்தைகள் அனைத்துமே பெண் குழந்தைகள்தான். உன் குழந்தையை நீ கொல்லாதே. நான் பார்த்துக் கொள்கிறேன் என்று பெற்றவர்களிடம் அரசாங்கம் உறுதி அளிப்பது எவ்வளவு கொடுமையான விஷயம். இது கலாசார சீரழிவான ஒரு விஷயமும் கூட.

1982 இல் இருந்து சமூக ஆர்வலராக தொண்டு செய்யும் ஷைலா சொன்னார், தத்தெடுக்க வரும் பெற்றோரும் ஆண் குழந்தைகள்தான் வாரிசு என ஆண் குழந்தைகளையே தேர்ந்தெடுப்பார்கள், பெண் குழந்தைகளை யாரும் தத்தெடுப்பதில்லை .

அந்தக் காலத்தில் பரிசம்தான் இருந்தது . வரதட்சணை அல்ல என கூறினார் ஹாஜா கனி. பெண் குழந்தைகள் சாபக்கேடு என எண்ண வைத்ததில் இந்த வரதட்சணைக் கொடுமைக்கு முக்கிய இடம் உண்டு எனக் கூறினார். 1997 இல் அரசாங்கம் இயற்றிய ஓரு சட்டப்படி இரு பெண் குழந்தைகள் கொண்ட குடும்பத்துக்கு அரசாங்கம் பாதுகாப்புத்தொகை தருவதாக கூறினார். பொதுவாக பெண்களுக்கு, சமூகப் பாதுகாப்பு, குடும்பப்பாதுகாப்பு மற்றும் முக்கியமாக கருவில் பாதுகாப்பு வேண்டும் என சொன்னார்.

கல்வியறிவு பெற்ற சமூகம் பெண் சிசுக் கொலை செய்வதில்லை. என்ன குழந்தை பிறந்தாலும் நம் குழந்தை என்ற மனோபாவம் வேண்டும். குழந்தைகள் நேசிக்கப்பட வேண்டும். பெண்கள் தங்கள் கணவனிடமும், மாமியார் வீட்டிலும் நம்பிக்கை கொடுக்க வேண்டும் நம் குழந்தை அது..நம்மால் நன்றாக வளர்க்க முடியும் என. பெண்குழந்தைகள் மதிக்கப்பட வேண்டும்

பொதுவாக மனமாற்றம் வேண்டும். சட்டங்கள் மூலமாக மன மாற்றத்தைக் கொண்டு வருவதை விட தனி நபர் ஒவ்வொருவரும் அந்த மன மாற்றத்தை மேற்கொள்ள வேண்டும். தன் வங்கியில் சேர்மனாக ஒரு பெண் இருப்பதாலும் பெண்களும் நன்கு படித்து சமூகத்தின் உயர் பொறுப்புக்களில் இருப்பதாலும் பெண் சிசுக் கொலை குறைந்திருப்பதாக என் கணவர் தன் சார்பாக விழிப்புணர்வு வந்து விட்டதாக சொன்னார்.

இன்னும் கிராமங்களில் கள்ளிப் பால், கருவை முள், கருக்கலைப்பு, சிசுக் கொலை போன்றவை அவ்வப்போது நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அனைவருமே நல்ல கல்வி அளிக்கப்பட வேண்டும். தன்னுடைய சுதந்திரம், வாழ்வுரிமை பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். தான் சூல் கொண்டது பெண்ணோ ஆணோ, குடும்பத்தாரின் கட்டாயத்துக்கு ஆட்படாமல் ஒரு அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுக்கும் உரிமை ஒரு தாய்க்கு உண்டு. அதற்கு இந்திய சட்டங்களிலும் வழி உண்டு.

பெண் சக்தி என்கிறோம்.. தாயாய், தாரமாய் , மகளாய் எல்லாமாய் நினைக்கிறோம் ஆனாl பெண் குழந்தை பிறந்தால் அழிக்கும் படித்த மக்களும் இருக்கிறார்கள். அவர்கள் மனோபாவம் மாற வேண்டும். ஆணும் பெண்ணும் சமம்தான் என உணர வேண்டும். இருவருமே வாரிசுகள்தான் எனபதையும், இருவருமே தம் ரத்தத்தில் உருவானவர்கள் என்பதையும் இறுதிவரை தம்முடனே இருக்கப் போவதும் அவர்கள்தான் என்பதையும் உணர்ந்தால் பெண் சிசுக் கொலை அல்லது கருக்கொலை என்ற அவலம் நிகழாது.

பெண் சக்தியைப் போற்றுவோம்.. பெண் சிசுக்களை நேசிப்போம். புதிய உயிர்களையும் புதிய பயிர்களையும் விளைவிக்கும் புதிய பூமியைப் போன்ற பெண் குழந்தைகளின் பிறப்பை வரவேற்போம்.!!!

டிஸ்கி:- இன்றைய நன்றிகள்.

1. 2010 இல் எனது கவிதையை மகளிர் தின இசைப்பாடலாக இணையத்தில் பதிவு செய்த நண்பர் செல்வகுமாருக்கும்,

2. சிகரம். காம் என்ற வெப்சைட் விளம்பரத்துக்கு என்னிடம் ஸ்க்ரிப்ட் கேட்டுப் பதிவு செய்த நண்பர் அருண்குமாருக்கும்

3.சாதனை அரசிகளுக்கு அட்டைப்படம் வரைந்து தந்த நண்பர் ஜீவா நந்தனுக்கும். 

4. என் அன்பு வேண்டுகோளுக்கிணங்கி என் முதல் புத்தகம் "சாதனை அரசிகளை" வெளியிட்ட பாரதி மணி ஐயாவுக்கும். மகளிர் கிரிக்கெட்டர் திருஷ்காமினிக்கும்,

5.என் இரண்டாவது புத்தகம் "ங்கா"வை பதிப்பித்த தாமோதர் சந்துரு அண்ணனுக்கும், வெளியிட்ட சிபி டைமண்ட்ஸ் பரசுராமுக்கும், பெற்றுக் கொண்ட கார்த்திகைப் பாண்டியனுக்கும்

6."சாதனை அரசிகள் விமர்சனத்துக்காக தோழி ராமலெக்ஷ்மி, மற்றும் நண்பர் சுரேகாவுக்கு

7.என் ஆசிரியை சுசீலாம்மா, லேடீஸ் ஸ்பெஷல் ஆசிரியை கிரிஜாம்மா, தோழிகள் ஃபாத்திமா பாபு, விஜயலெக்ஷ்மி, தனலெக்ஷ்மி, மணிமேகலை, கயல்விழி, மற்றும் நண்பர்கள் பாரதி ராஜா, விஜயகுமார், வெங்கடேஷ் மகாதேவன், , தமிழ்நாடு அறிவியல் கழகம் உதயன், ரத்னவேல் சார், கோபால் சார், பா. கணேஷ், குமார், நேசன், விஜய்,வரலாற்றுச் சுவடுகள், செய்தாலி, ஆழி செந்தில்நாதன், அப்துல் ரகீம், லயன் வெங்கடாசலம், பொன் பிரபாகர், வேடியப்பன்,சதீஷ் நாராயணன், ரம்யா முரளி, தினமணிக்கும் மனமார்ந்த நன்றிகள்.


எனது புத்தகங்கள் "சாதனை அரசிகள்" மற்றும் "ங்கா" கிடைக்குமிடங்கள்.

டிஸ்கவரி புக் பேலஸ். சென்னை

விஜயா பதிப்பகம் , கோவை.

ஸ்ரீ மீனாக்ஷி புக் ஸ்டால் மதுரை.


8 கருத்துகள்:

 1. ஸ்கேனிங் சென்டர்களில் இன்னும் பல மறை பொருள்களில் பெண் குழந்தை என்பதைச் சொல்வார்கள் என்று நானும் படித்திருக்கிறேன். படித்தவர்களும் இந்தக் கொடும் செயலைச் செய்கிறார்கள் என்பது வேதனையானதுதான். இன்னும் ஐம்பது வருடங்கள் போனாலும் இதைப் பற்றிய விழிப்புணர்வை உண்டாக்க வேண்டிய நிலையிலேதான் நாம் இருப்போமோ என்னவோ...

  பதிலளிநீக்கு
 2. வரும் காலத்தில் நிச்சயம் மாற்றம் நிகழும்!

  பதிலளிநீக்கு
 3. நல்லதொரு பயனுள்ள பதிவு.

  பெண் சிசுக்களை நேசிப்போம்..

  பதிலளிநீக்கு
 4. பெண் சிசு ஒன்று சொல்கிறது
  ‘’கட்டுண்டோம்..பொறுத்திருப்போம்..
  காலம் மாறும்...காத்திருப்போம்..” என்று!

  பதிலளிநீக்கு
 5. மனமாற்றமே தீர்வு. அருமையாகச் சொல்லியுள்ளீர்கள்.

  பதிலளிநீக்கு
 6. நல்ல பதிவு இதை சட்டங்களால் தடுக்க முடியும் என்று தோன்ற வில்லை. பெண் தற்சார்புடையவளாக மாறும் வரை இது தொடரும். இது குறித்து இன்னும் பல வகையில் விழிப்புணர்வு ஊட்டப்பட வேண்டும்.

  பதிலளிநீக்கு
 7. நன்றி ஸ்ரீராம்

  நன்றி வரலாற்று சுவடுகள்

  நன்றி கோபால் சார்

  நன்றி ஆர் ஆர் ஆர்

  நன்றி ராமலெக்ஷ்மி

  நன்றிதமிழானவன் உண்மைதான்.

  பதிலளிநீக்கு
 8. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...