எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 30 செப்டம்பர், 2020

எதிஹாடில் பதிநான்கு மணிநேரம்

 ஜெர்மனிக்கு இந்தியாவில் இருந்து செல்லப் பல்வேறு விமானங்களும் பல்வேறு விமானத்தளங்களும் இருந்தும் நாங்கள் பெங்களூருவைத் தேர்ந்தெடுத்தோம். ஏனெனில் அங்கே எங்கள் பெரிய மகன் வேலை செய்து வருகிறார். 

அபுதாபி வழியாகச் செல்லும் எதிஹாட் ஏர்லைன்ஸில் டிக்கெட்டும் வாங்கியாச்சு. விசா, டிக்கெட், இன்சூரன்ஸ் எல்லாம் உட்பட ஒரு நபர் சென்று வர ஒன்றரை முதல் இரண்டு லட்சம் வரை செலவானது. சின்ன மகன் அழைத்துச் சென்றார் என்பதால் எனக்கு இதன் செலவு விபரங்கள் எல்லாம் சரியாகத் தெரியாது :) :) :)  


ஜெர்மனி சென்றாச்சு. இருமாதம் தங்கி ஐரோப்பா டூர் எல்லாம் முடித்து ஜெர்மனியில் இருந்து திரும்பும்போது எதிஹாடில்  ஏறியபோது எடுத்த படம் இது. 

செவ்வாய், 29 செப்டம்பர், 2020

பூரங்கழித்தலும் பெண் எடுக்கிக் காட்டுதலும்.

 1601. கழுத்துருவுக்குப் பொன் தட்டல் :- கல்யாணம் பேசி முடித்துக் கொள்ளும்போது ஆசாரியிடம் பவுன் காசைக் கொடுத்து சாஸ்திரத்துக்கு மூன்று முறை தட்டச் சொல்லி வாங்கிக் கொள்வார்கள். பெண்வீட்டார் ஏற்கனவே கழுத்துரு செய்துவைத்துவிடுவதால் இந்தப் பொன் தட்டுதல் சாஸ்திரத்துக்குத்தான். பெண்வீட்டாருக்கு மாப்பிள்ளைவீட்டார் தோதுக்குத் தகுந்தாற்போல 1, 3, 5, 7, 9, 11, 16 என்ற அளவில் பவுன் காசு கொடுப்பார்கள்.

1602. பூரங்கழித்தல் :- திருமணத்தன்று காலை நடைபெறும் முதல் நிகழ்ச்சி இது. பெண்ணைக் காக்கும் பூரம் என்னும் காவல் தெய்வத்திடம் பெண்ணைக் காக்கப் புருஷன் வந்துவிட்டார் அதனால் நீ நீங்கிக் கொள்வாயாக என்று செய்யப்படும் சடங்கு. ( இதுவே பெண் பூப்படையும்போதும் பூரம் என்னும் தெய்வத்தைக் காவலாக நியமிப்பதுபோல் அமையும் ) அதிகாலையில் தலைக்கு நீராடச் செய்து திருமணப் பெண்ணைச் சாமி வீட்டின் எதிரில் போடப்பட்ட பாப்பாரக் கோலத்தின்மேல் தடுக்குப் போட்டுக் கிழக்குப் பார்த்து நிற்கச் செய்து அத்தை, மாமி உறவுடைய பெண்கள் பூரம் கழிப்பார்கள். இதற்காகப் பெண்ணின் உடலில் ஏழு இடங்களில் ( தலை, தோள்பட்டை, மடித்த முழங்கைகள்/இடுப்பு, இரண்டு மேற்பாதங்கள்) வேப்பிலை வைத்து அதன்மீது அடை அல்லது பிஸ்கட்டை வைத்து இரும்புச் சத்தகத்தாலோ நொச்சி அல்லது வேப்பங்குச்சியாலோ தட்டி விடுவார்கள். இதன் பிறகு விநாயகபூசை, வர்ணபூசை செய்து புரோகிதர் பூரம் கழிப்பார்.

வெள்ளி, 25 செப்டம்பர், 2020

எனது இருபத்தி ஏழாவது மின்னூல், “ விவ..சாயம்”

 எனது இருபத்தி ஏழாவது மின்னூல். “விவ..சாயம்”. அமேசானில் விற்பனைக்கு உள்ளது. விலை ரூ. 49/-


///சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக் கவிதைகள். வ(ள)ரும் தலைமுறையினரின் எதிர்காலத்துக்குச் சேமித்து வைக்கவேண்டிய இயற்கைவளம்.கொஞ்சம் சுயமும்.///

விவ..சாயம்

https://www.amazon.in/dp/B08GJ5BST1

செல்ஃபோனில் கூட டவுன்லோட் செய்து படிக்கலாம். வாங்கியும் பரிசளிக்கலாம்.( ஈமெயில் ஐடிக்கோ, ஃபோன் நம்பருக்கோ பரிசாக அனுப்ப முடியும் 

இந்த நூலுக்கான அட்டையை வடிவமைத்த எனது மகன் சபாலெக்ஷ்மணனுக்கு நன்றிகள். 

புதன், 23 செப்டம்பர், 2020

ஓபர்ஹௌஸனில் ஒரு விருந்து

ஓபர்ஹௌஸனில் இருக்கும் திரு கந்தையா முருகதாசன் சார் அவர்கள் தங்கள் இல்லத்துக்கு விருந்துக்கு அழைத்திருந்தார். அவரும், அவர் மனைவி லைலாவும் மிகவும் தன்மையானவர்கள். முதல் முறை என்னைப் பார்க்க வரும்போதே அவர் எங்களுக்கு இனிப்புகளும் வடையும் கொண்டு வந்திருந்தார்கள். தங்கள் வீட்டுக்கும் அழைத்துச் சென்றார்கள். 

நான் இந்தியா திரும்பும் நாள் நெருங்க நெருங்க மகனிடம் அவர் இல்லத்துக்குச் சென்று வர வேண்டும் எனக் கேட்டேன். தினமும் இருவரும் நடைப்பயிற்சி செல்வோம். ஆரோக்கிய உணவுகள், திருப்புகழ் பாராயணம், சாய் வரலாறு படித்தல்,மகனுக்குப் பிடித்த உணவு வகைகளைச் செய்து கொடுத்தல், அளவளாவுதல், ஹம் காமாட்சி அம்மன் கோவில், மகனது நண்பர்களின் வீட்டில் விருந்து, சாய் பூஜைகள், பண்ணாகம் கிருஷ்ணமூர்த்தி சார், நிம்மி சிவா,  சந்திரகௌரி சிவபாலன் வீட்டிற்குச் சென்றது என நாளும் பொழுதும் ஓடி விட்டது. இவர்கள் எல்லாருமே தங்கள் அன்பினால் எங்களை மூழ்கடித்து விட்டார்கள். 

எனவே ஊருக்குச் செல்வதற்கு  முந்தைய வாரத்தில் செப்டம்பர் முதல் வாரத்தில்   ஓபர்ஹௌஸன் சென்று லைலா மேடத்தின் விருந்தில் களித்து அவர்கள் என் மகனுக்காகச் செய்து அனுப்பிய இனிப்பு பான்& இனிப்பு சிப்ஸ் ஆகியவற்றை வாங்கி வந்தோம். 



கீழிருந்து மேலாக ஃபோட்டோக்கள் அப்லோடியதால் உங்களுக்கும் லைலா மேம் கொடுத்த பான் & சிப்ஸ். எடுத்துக்கொள்ளுங்கள். 

செவ்வாய், 22 செப்டம்பர், 2020

அரசாணிக்கால் ஊன்றுதலும் மாத்துக் கட்டுதலும்.

 1591. அரசாணிக்கால் ஊன்றுதல்:- திருமணத்துக்கு முதல் நாள் பங்காளி வீட்டு ஆண்கள் அரசாணிக்கால் கட்டுவார்கள். உள்ளூர்த் திருமணமாக இருந்தால் மாப்பிள்ளை வீடு, பெண் வீடு இரண்டிலுமே அரசாணிக்கால் கட்டுவார்கள். வெளியூர்க் கல்யாணமாக இருந்தால் பெண் வீட்டில் மனைபோடும் இடத்தில்,, மனைக்கு எதிரில் (சாமி வீட்டின் எதிரே) அரசாணிக்கால் ( கறுப்புநிற – கிரானைட் கல்லில் படி வைத்துக் குழியுடன் இருக்கும் ஒரு கனமான சதுரக் கல்) வைத்து அதில் சிறிது பால் ஊற்றிப் பவளம் போடுவார்கள். இதில் ஒரு நீண்ட குச்சியை வைத்து அதில் கிளுவை பாலை மரக் கம்புகளை உத்தரத்தின் வளையத்தையும் இணைத்து சேர்த்துக் கட்டுவார்கள். இதில் மாவிலைகளையும் அரச இலைகளையும் சுற்றிக் கட்டி அழகுபடுத்துவார்கள். வீட்டார் சங்கு ஊத இதைப் பங்காளி வீட்டு ஆண்கள் வந்திருந்து ஊன்றுவார்கள். அரசன் ஆணை பெற்று அதன் அடையாளமாக அரசாணிக்கால் ஊன்றி இத்திருமணம் நடைபெறுவதாக ஐதீகம்.  

இதற்குப் பக்கத்தில் உயரம் குறைவான ஒரு ஸ்டூலில் சரவிளக்கை ஏற்றி வைக்க வேண்டும். அந்தக்காலத்தில் சரவிளக்கைத் தொங்க விடுவார்கள்.

1592. மாத்துக் கட்டுதல்:- சிலப்பதிகாரத்தில் இந்த மாற்றுக் கட்டுதல் பற்றிக் குறிப்பிடப்படுகிறது. மாலைகள் தொங்கும் உச்சியைக் கொண்ட வயிரமணித் தூண்களை உடைய மண்டபத்தில் நீல மேற்கட்டியின் கீழ் அமைந்த அழகிய முத்துப் பந்தலில், (“நீலவிதானத்து நித்திலப்பூம்பந்தர்க் கீழ் ” என்ற வரியின் மூலம் புலப்படுகிறது.) திருமணம் நடந்ததாம்.

Related Posts Plugin for WordPress, Blogger...