1591. அரசாணிக்கால் ஊன்றுதல்:- திருமணத்துக்கு முதல் நாள் பங்காளி வீட்டு ஆண்கள் அரசாணிக்கால் கட்டுவார்கள். உள்ளூர்த் திருமணமாக இருந்தால் மாப்பிள்ளை வீடு, பெண் வீடு இரண்டிலுமே அரசாணிக்கால் கட்டுவார்கள். வெளியூர்க் கல்யாணமாக இருந்தால் பெண் வீட்டில் மனைபோடும் இடத்தில்,, மனைக்கு எதிரில் (சாமி வீட்டின் எதிரே) அரசாணிக்கால் ( கறுப்புநிற – கிரானைட் கல்லில் படி வைத்துக் குழியுடன் இருக்கும் ஒரு கனமான சதுரக் கல்) வைத்து அதில் சிறிது பால் ஊற்றிப் பவளம் போடுவார்கள். இதில் ஒரு நீண்ட குச்சியை வைத்து அதில் கிளுவை பாலை மரக் கம்புகளை உத்தரத்தின் வளையத்தையும் இணைத்து சேர்த்துக் கட்டுவார்கள். இதில் மாவிலைகளையும் அரச இலைகளையும் சுற்றிக் கட்டி அழகுபடுத்துவார்கள். வீட்டார் சங்கு ஊத இதைப் பங்காளி வீட்டு ஆண்கள் வந்திருந்து ஊன்றுவார்கள். அரசன் ஆணை பெற்று அதன் அடையாளமாக அரசாணிக்கால் ஊன்றி இத்திருமணம் நடைபெறுவதாக ஐதீகம்.
இதற்குப் பக்கத்தில் உயரம் குறைவான ஒரு ஸ்டூலில் சரவிளக்கை ஏற்றி வைக்க வேண்டும். அந்தக்காலத்தில் சரவிளக்கைத் தொங்க விடுவார்கள்.
1592. மாத்துக் கட்டுதல்:- சிலப்பதிகாரத்தில் இந்த மாற்றுக் கட்டுதல் பற்றிக் குறிப்பிடப்படுகிறது. மாலைகள் தொங்கும் உச்சியைக் கொண்ட வயிரமணித் தூண்களை உடைய மண்டபத்தில் நீல மேற்கட்டியின் கீழ் அமைந்த அழகிய முத்துப் பந்தலில், (“நீலவிதானத்து நித்திலப்பூம்பந்தர்க் கீழ் ” என்ற வரியின் மூலம் புலப்படுகிறது.) திருமணம் நடந்ததாம்.