2
சிதம்பரம்
நடராஜர் கோவிலில் எள் போட்டால் எண்ணெய் விழும் கூட்டம். குங்கிலியத்தைக் காட்டிச் சிரசின்மேல்
கரம்கூப்பி வணங்கிக் கொண்டிருந்தாக ஆவுடையப்பன் செட்டியார். “தொல்லை இரும்பிறவிச் சூழும்
தளை நீக்கி” என்று அவுக திருவாசகம் சொல்லச் சொல்ல கூட்டத்தை இடித்துக் கொண்டு காவக்கார
செந்திலண்ணன் உள் நுழைந்தார்.
பிரதோஷ உலா புறப்பட்டுக் கொண்டிருந்தார் சிவன். பின்னேயே பிரதோஷ வலம்வர கும்பல் நெருக்கிக் கொண்டிருந்தது. பெருமாளின் சந்நிதியிலிருந்து சிவன் சந்நிதிவரைக்கும் ஒரு கூட்டம் அலைபோலத் தள்ளித் தள்ளித் தள்ளாடிக் கொண்டிருந்தது. தூணைப் பற்றியபடி நின்றுகொண்டிருந்தாக ஆவுடையப்ப செட்டியார்.
ஆருத்ரா தரிசனமென்ன, ஆனித்திருமஞ்சனமென்ன எல்லாம் அவுகளோட்ட
காரைக்குடியார் மடத்துக் கட்டளைப்படி நடந்துகொண்டிருந்தது. சம்பாப் பாவாடை, ஜிலேபிப்
பாவாடை, லட்டுப்பாவாடை என்று வயல் வரத்து, வெளிநாட்டுப் பணம், வட்டிக்கடை வரவு செலவு
சிக்கலில்லாமல் வசூலாவது என்று ஏதாவது வேண்டிக்கொண்டு சாத்துவாக. அதனால் தீக்ஷிதர்கள்
எல்லாருக்கும் அவுகளைத் தெரியும். அவுகளைக் கோயிலில் பார்த்ததுமே தமது விபூதிப் பையில்
இருந்து திருநீறை எடுத்துக் கொடுத்து உரையாட ஆரம்பித்துவிடுவார்கள்.
செந்திலண்ணன் செட்டியாரின் கைபிடித்து இழுக்க அவுகளோ விடையேறும்
பாகன் பின் நகரத் துவங்கினாக. “ அப்பச்சி ஒரு விசயம் “ என்று வலுக்கட்டாயமாக அவுகளைப்
பிரித்து அழைத்து வந்தான் செந்திலண்ணன். கையை உதறி “ என்னடா அவசரம். பிரதோசம் முடியட்டும்.
போவோம் “ என்றாக ஆவுடையப்பன்.
”இல்லையப்பச்சி. ஒமையாச்சிக்குப் பிரசவ வலி எடுத்து காரைக்குடி
சுகுமாரம்மா ஆசுபத்திரில சேத்திருக்காகளாம். பிரசவம் கொஞ்சம் சிக்கலாயிருக்கும் போலேயிருக்காம்.
காரைக்குடியிலேருந்து பஸ்ஸப் புடிச்சு மூர்த்தி அண்ணேன் வந்து சொன்னாக. கடையில இருக்காக.
நான் உக்கார வைச்சிட்டு வந்திருக்கேன் ” இதைக்கேட்டதும் கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை
ஆவுடையப்ப செட்டியாருக்கு.
”இன்னும் நாளிருக்கே. ஆத்தா கொப்பாத்தா என்னாத்தா சோதனை. இருவது
நாளாவது இருக்குமே. மலயாவுல இருக்க மகன் கருப்பஞ்செட்டி இங்க வந்த பின்னாடித்தானே நாள்
சொன்னாக டாக்டரம்மா. அத நம்பித்தானே இங்கே வட்டிக்கடைக் கணக்கு வழக்கைப் பாக்க வந்தேன்.
“ இடுப்பில் கட்டியிருந்த மேல்துண்டை உருவித் தோளில் போட்டுக் கொண்டாக ஆவுடையப்பன்
செட்டியார்.
கோயிலில் ஸ்தலமரத்தின் அருகில் நின்றதால் அதைப் பற்றிக் கொண்டு
’நடராசா தாயையும் பிள்ளையையும் வேறாக்கிப் பிரிச்சுக் கொடுத்திறப்பா.’ என்று ஆவுடையப்பன்
வேண்ட மாலையின் பொன்வெய்யில் பட்டுப் பொற்கூரை ஜொலித்தது. பிரதோஷ உலா முடிந்து சிகண்டி
பூரணம் என்னும் மணிகள் ஒலிக்கத் தொடங்கின. ’டிங் டிங் டங்.. டிங் டிங் டங்’ என்ற மணிச்சத்தம்
கேட்டு அவுக திரும்பிப் பார்க்க சிதம்பர ரகசியத்தை விலக்கி தீபம் காட்டிக் கொண்டிருந்தார்கள். விடையேறு பாகன் நந்தியிலிருந்து
சண்டீசர் வரை மூன்று முறை பிரதக்ஷண அப்பிரதக்ஷண உலா வந்து இறக்கி வைக்கப்பட்டிருந்தார்.
கூட்டத்தில் சன்னிதிக்குக் கிட்டே செல்வதற்கு நேரமாகும் என்று
இங்கிருந்தே கன்னத்தில் போட்டுக்கொண்டு வேகமாக வெளியே விரைந்தாக ஆவுடையப்ப செட்டியார்.
”என்னப்பா ஆச்சு ”என்று மூர்த்தியிடம் விசாரிக்க, “ அண்ணே என்னவோ ஆச்சிக்குக் பனிக்கொடம்
ஒடைஞ்சாப்புல சொன்னாக. ஒங்களைக் கையோடக் கூட்டியாரச் சொன்னாக ஒமையாச்சி அப்பச்சி முருகப்பண்ணன்
“ என்றான்.
’விஷயம் ரொம்பக் கடிசாத்தான் இருக்கும் போலிருக்கே. தாயுமானவரே
நீதான் காப்பாத்தோணும். வாழத்தார் வாங்கிச் செலுத்துறேன். காப்பாத்திக் கொடப்பா’ என்று
வேண்டிக்கொள்ளும்போது கவுளி தட்டியது பல்லி. ’தட் தட்’ என்று கையால் வட்டிக்கடைக் கவுண்டரில்
தட்டியவர்கள் அதன் மேல் இருந்த சாமிகளை வணங்கிக் குலசாமிகளுக்குக் காசெடுத்து வைத்து
விபூதி பூசிக்கினாக.
”வேலு. ப்ளஷர் காரைக் கடைக்கு முன்னாடிக் கொண்டுவாப்பா” என்று
கூறிய ஆவுடையப்ப செட்டியார் ”எதுக்கும் கோவில் வழியாப் போய்ப் போப்பா” என்றார்கள். கோபுரத்தைப் பார்த்துக் கன்னத்தில் போட்டுக்கொண்ட
அவர்களின் இடது புறத்திலிருந்து வலது புறமாக
க்ரீச்சிட்ட சத்தத்தோடு வலியன் குருவி ஒன்று கடந்து போனது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)