இருவர் அல்லது மூவர் கொண்ட ஒரு குடும்பத்தின் கணக்கு வழக்கை நிர்வகிக்கவே சிரமமாய் இருக்கிறது. யாரும் வரவு செலவைக் கணக்கெழுதி வைப்பதில்லை. ஆனால் ஆலயத்தின் அதுவும் ஈரேழு பதினான்கு லோகத்தையும் படைத்துக் காக்கும் சிவபெருமானின் ஆலயத்தின் வரவு செலவுக் கணக்குகளையும், சிவனுக்கு அளிக்கப்படும் உணவு, உடை ஆகியற்றையும் பல்லாயிரம் ஆண்டுகளாக நிர்வகித்து வருகிறார் ஒருவர். நித்யதியானத்தில் இருந்தாலும் அவரின் கணக்கு பிசகாது. அவர் யார், அவருக்கு சிவாலயத்தின் கணக்கை நிர்வகிக்கும் வேலை எப்படிக் கிடைத்தது என்று பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
சோழநாட்டின் மணியாற்றின் கரையில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். நீரில் துளைந்தும் நிலத்தில் குதித்தும் மர விழுதுகளில் ஊஞ்சலாடியும் மகிழ்ந்து கொண்டிருந்தார்கள் அவர்கள். அவர்களில் ஒரு ஞானக் குழந்தையும் இருந்தது. சேய்ஞலூர் என்ற ஊரில் வாழ்ந்த எச்சதத்தன், பவித்திரை ஆகிய தம்பதிகளின் மகன்தான் அவன். விசார சருமன் என்ற பெயர் கொண்ட அச்சிறுவனுக்கு அப்போது ஏழு வயது.
குழந்தைகள் விளையாடும் இடத்தில் சில இடையர்கள் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார்கள். அவ்வப்போது அவை இடையர்கள் ஓட்டிச் செல்லும் தடத்தை விட்டுப் பெயர்ந்து போய்க் கொண்டிருந்தன. அவற்றை அவர்கள் ஒன்றாக நடக்கும்படி விரட்டி மரக்கொம்பால் அடித்தனர். வாயில்லா ஜீவன்களான அவற்றின் துன்பம் கண்டு துடித்த விசாரசருமர் தானே அப்பசுக்களை மேய்ப்பதாகவும் அவற்றை அடிக்க வேண்டாமெனவும் கேட்டுக் கொண்டார். இடையர்களும் ஒப்புக் கொண்டனர்.
