மிக உயர்ந்த ஜாதி மரத்துண்டு அது. மித்ரபந்து தன் மனைவியுடன் நான்கைந்து நாட்களாக அதைப் பார்த்துப் பார்த்துச் செதுக்கிக் கொண்டிருக்கிறார்.
அது என்ன சிலையா இல்லையில்லை.. சிற்பம் போல உருவான ஒரு ஜோடி பாதரட்சை. காலில் அணியும் மரச்செருப்பு. அதைச் செய்தபின் அதன் அழகில் மயங்கி நின்றார் மித்ரபந்து. மிக மிக அழகான வடிவான இது யார் காலை அலங்கரிக்கப் போகிறது ?
அயோத்தி அன்று மணக்கோலம் பூண்டிருந்தது. நகரமெங்கும் விருந்தின் வாசனை, நறுமணத் திரவியங்கள் பூசிய ஆடவர்களும், அணிகலன்கள் அணிந்து கலகலவெனச் சிரித்தோடிய இளம்பெண்களுமாக நகரம் களைகட்டியிருந்தது. முதியோர்களும் சிறார்களும் கூட சந்தோஷமாக உரையாடி விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
