எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 18 ஜனவரி, 2018

அன்புப் பரிசு அரசாளும் - தினமலர் சிறுவர்மலர் - 1

அன்புப் பரிசு அரசாளும்

மிக உயர்ந்த ஜாதி மரத்துண்டு அது. மித்ரபந்து தன் மனைவியுடன் நான்கைந்து நாட்களாக அதைப் பார்த்துப் பார்த்துச் செதுக்கிக் கொண்டிருக்கிறார்.

அது என்ன சிலையா இல்லையில்லை.. சிற்பம் போல உருவான ஒரு ஜோடி பாதரட்சை. காலில் அணியும் மரச்செருப்பு. அதைச் செய்தபின் அதன் அழகில் மயங்கி நின்றார் மித்ரபந்து. மிக மிக அழகான வடிவான இது யார் காலை அலங்கரிக்கப் போகிறது ?

யோத்தி அன்று மணக்கோலம் பூண்டிருந்தது. நகரமெங்கும் விருந்தின் வாசனை, நறுமணத் திரவியங்கள் பூசிய ஆடவர்களும், அணிகலன்கள் அணிந்து கலகலவெனச் சிரித்தோடிய இளம்பெண்களுமாக நகரம் களைகட்டியிருந்தது. முதியோர்களும் சிறார்களும் கூட சந்தோஷமாக உரையாடி விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

ராஜபாட்டையில் மங்கல வாத்தியம் ஒலிக்கத் துவங்கியிருந்தது. அதோ அந்த ரதத்தில் விஸ்வாமித்திரருடன் இரு இளைஞர்கள். அவர்கள்தான் ராமனும் லெக்ஷ்மணனும் அவர்களுடன் அழகிய நங்கையும் இருந்தாள் அவள்தான் மிதிலையின் இளவரசி சீதை.

சிவதனுசை முறித்து சீதையை மணந்த ராமர் நாடு திரும்பிக் கொண்டிருந்தார். அவருக்குக் கோலாகலமாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நாட்டு மக்களும் தனவணிகர்களும், மந்திரி ப்ரதானியாரும், அக்கம்பக்க தேசத்தினரும் பரிசுப் பொருளால் மண மண்டபத்தை நிரப்பிக்கொண்டிருந்தார்கள்.

பட்டும் பொன்னும் பீதாம்பரமும், வைரமும் வைடூர்யமும் கோமேதகமும் முத்தும் மாணிக்கமும் பரிசாகக் குவிந்துகொண்டிருந்தன. மித்ரபந்துவுக்கும் ஆசை தானும் ஏதும் ராஜாவுக்குப் பரிசளிக்க வேண்டும் என்று. அவரது மனமோ ஏக்கத்தால் வாடியது. ஏதாவது கொடுத்துத்தன் அன்பைத் தெரிவிக்க வேண்டும் என விரும்பினார். அவரிடமிருந்ததோ அப்போதைக்கு மிக அழகான அந்த ஒரு ஜோடி பாதுகைகள்தான்.

தன்னிடமிருந்த அந்த அழகான பாதுகைகளை எடுத்துக்கொண்டு பரிசளிக்க மேடையேறினார்.

அடடா இதென்ன பக்கத்தில் படாடோபமான ஒரு வணிகர் பட்டுப் போர்த்த பேழையை எடுத்துக் கொண்டு தயரதச் சக்கரவர்த்திகளுடன் மேடை ஏறுகிறாரே. அஹா இதென்ன அந்தப் பேழையைத் திறந்ததும் கண்ணைப் பறிக்கிறதே ஒளிவெள்ளம். ? தங்கத்தால் இழைக்கப்பட்ட இரு பாதுகைகள் நவரத்தினங்கள் கொண்டு செதுக்கப்பட்டு ஒளிவீசுகிறதே…

இதைப் பார்த்ததும் மித்ரபந்துவின் உள்ளம் கூச்சமடைகிறது. தன்னுடைய மரப் பாதரட்சையை ராமபிரானிடம் கொடுக்கவே யோசிக்கிறார். அவரது தயக்கத்தைப் பார்த்த ராமபிரான் அவரை அருகே அழைத்து அவர் அளித்த அந்த அழகிய பரிசைப் பெற்றுக் கொள்கிறார்.

கடவுள் அல்லவா அவருக்கு எல்லாம் சமமே. அதிலும் அன்பாக அளிக்கப்பட்ட பொருள்தான் அவரைப் பொறுத்தவரை விலை மதிப்பில்லாத பொருள். மித்ரபந்து மனம் குளிர்கிறார். தன் அன்புப் பரிசை ராமபிரானுக்குக் கொடுத்ததும் அதைவிட ராமபிரான் அதை மகிழ்வோடு பெற்றுக் கொண்டதும் அவருக்கு அளவற்ற மகிழ்ச்சியை உருவாக்குகிறது.

ஆனால் அவர் மகிழ்ச்சி நீடிக்கப்போவதில்லை என்பதை அறியவில்லை அவர் .

சிறிது காலம் சென்றது. மணம்முடித்த இளவலை அரசனாக்கிக் பார்க்க விழைகிறார் தசரதர். ஐயகோ இதென்ன விதி கூனி ரூபத்திலும் கைகேயி ரூபத்திலும் புகுந்து விளையாடுகிறதே.

“ராமன் பதினான்கு ஆண்டுகள் காட்டுக்குச் செல்லவேண்டும், பரதன் நாட்டை ஆளவேண்டும் “ என வரம் கேட்கிறாள் கைகேயி. வரம் கொடுத்துவிட்டுப் பின் வருத்தப்படுவதை தசரதனும் அனுபவித்தார். அயோத்தி நகரமே துயரத்தில் மூழ்கியது.

ராமன் கானகம் புறப்பட்டுவிட்டான். வனவாசத்துக்குரிய மரவுரி தரித்தாயிற்று. அவருடன் சீதையும், அவரது இளவல் இலக்குவனும் மரவுரி தறித்துப் புறப்பட்டு விட்டார்கள்.

ராஜபாட்டையில் குதிரையிலும் யானையிலும் செல்லும் பாதங்கள் கானகத்தில் கல்லிலும் முள்ளிலும் நடக்கப் போகின்றன. அப்போது கைகேயிடம் தனக்கு மித்ரபந்து அளித்த மரப் பாதுகையை அளிக்க வேண்டுகிறார் ராமன்.

அதோ ராஜபாட்டையில் மித்ரபந்து அளித்த மரக்காலணிகளுடன் நடந்து வருகிறார். அதைக் கண்ட மித்ரபந்துவின் உள்ளம் தத்தளித்தது. உணர்வு கொந்தளித்தது.

”ஐயனே நீர் வனவாசம் செல்லவா நான் இந்தப் பாதுகைகளை வழங்கினேன். அதற்காகவா இவற்றைச் செதுக்கினேன். எப்படிப்பட்ட பாவி நான்?” எனத் துடித்தார்.துவண்டார்.

ராமர் மித்ரபந்துவைத் தொட்டு ஆற்றுப் படுத்தினார். “ வருந்தற்க மித்ரபந்து. நான் கானகம் செல்லும்போது உன் அன்புப் பரிசு என் கூடவே இருக்கும். எனக்கு தகுந்த சமயத்தில் உதவிற்றே என்று நீ நிம்மதி கொள்வாயாக “ என்றார்.

தனது பரிசு இறைவனுடன் இருக்கப் போகிறது என்று  ஒருவாறு மனத்தைத் தேற்றிக் கொண்டார் மித்ரபந்து.

விபரம் அறிந்து கேகய நாட்டிற்குச் சென்றிருந்த பரதன் ஓடோடி வந்தான். கானகத்திற்குக் கடிது சென்றான். தனது தமையன் ராமனின் கால்பிடித்துப் போகவேண்டாம் என்று கெஞ்சினான். தாயின் தவற்றை மன்னிக்க வேண்டினான். அயோத்தி திரும்பும்படி கேட்டுக்கொண்டான். அவர் திருவடி பற்றித் தொழுதான்.

தந்தை சொற்படி நடந்து தான் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் முடித்துப் பின் நாடு திரும்புவதாக உறுதி அளித்தார் ராமபிரான். ஆனால் பரதனுக்கோ திரும்பிப் போகவே மனமில்லை. அண்ணலை அழைத்துச் செல்ல இயலாவிட்டாலும் அண்ணன் சார்பாக அவரது பாதுகைகளையாவது தரச் சொல்லிக் கேட்டான். அவற்றை சிம்மாசனத்தில் வைத்து ராமரின் பிரதிநிதியாக நாட்டைக் காத்து வருவதாக உறுதி அளித்தான்

அவனது வேண்டுகோளைத் தட்ட இயலாத ராமபிரான் தனது மரப்பாதுகைகளைக் கொடுத்தார். அவற்றைப் பெற்று வந்து அரியணையில் அமர்த்தி ராமர் திரும்பும் வரை அரசாட்சி செய்துவந்தான் பரதன்.

மித்ரபந்து அளித்த அந்த எளிய பொருள் அற்பமானதல்ல. அது அன்பினால் கட்டமைக்கப்பட்ட பரிசு எனவே அரசாளத் தகுதி பெற்று சிறப்புற்றது.

டிஸ்கி :- இந்தக் கதை இதிகாச புராணக் கதைகள் என்ற தலைப்பில் 12. 1. 2018  தினமலர் சிறுவர் மலர் இதழில் இடம்பெற்றுள்ளது. நன்றி தினமலர் சிறுவர் மலர் & தேவராஜன் ஷண்முகம் சார். 

4 கருத்துகள்:

  1. எங்களின் மனமார்ந்த வாழ்த்துகள்! கதை நன்றாக இருக்கிறது சகோதரி

    பதிலளிநீக்கு
  2. நன்றி ஜெயக்குமார் சகோ

    நன்றி முத்துசாமி சார்

    நன்றி கீத்ஸ்.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...