அரும்பாக்கம் மிடில் ஸ்கூலில் அம்பேத்கார் பிறந்தநாளில் உரையாற்ற தோழி மணிமேகலை அழைப்பு விடுத்திருந்தார். இவர் சாஸ்திரிபவன் பெண்கள் & தலித் பெண்கள் நலச் சங்கத் தலைவி. பொதுத்தொண்டில் ஈடுபாடு உள்ள இவர் பள்ளிகளுக்குத் தேவையான உதவிகள் செய்து வருகிறார். கோடைகாலங்களில் பறவைகளுக்கு நீரும் உணவும் அளிக்கும் திட்டத்தைப் பள்ளி கல்லூரிகளில் செயல்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். சாஸ்த்ரி பவனில் அம்பேத்கார் சிலை அமையப் பெரும்பாடு பட்டு அதை நிகழ்த்தியும் உள்ளார். பெண்கள் உடல் மன நலன்களுக்காகப் பல்வேறு பெண் பிரபலங்களை சாஸ்திரி பவனில் உரையாற்ற அழைத்துள்ளார். உடல் நலனுக்குப் பல்வேறு முகாம்களும் ஏற்படுத்தி எல்லாப் பெண்களுக்கும் உற்ற தோழியாக விளங்கி வருகிறார். பெயரைப் போலவே பொதுமக்கள் தொண்டாற்றிவரும் அவர் வாழ்க பல்லாண்டு. வாழ்க அவர்தம் புகழ்.
அரும்பாக்கம் பள்ளியில் கலந்து கொண்டது பற்றி முன்பே எழுதி உள்ளேன்.
இப்பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி லூர்து ராணி என் சாதனை அரசிகளில் ( முதல் நூல் ) ஒருவர். இப்பள்ளி மாணாக்கர்களின் செயலூக்கம் பாராட்டத்தக்கது. முதல்வர் அறையில் இச்சிறார்களின் கைவண்ணத்தில் பல்வேறு வேலைப்பாடுகளையும் பார்த்தேன்.