பாண்டியனைத் துரத்திய பிரம்மஹத்தி
பாண்டிய மன்னன் ஒருவன் அறியாமல் ஒரு பாவம் செய்தான். அதனால் அவனைப் பிரம்மஹத்தி துரத்தியது. ஆனால் அவன் பக்தியைக் கண்டு கடவுளே அந்தப் பிரம்மஹத்தியிடமிருந்து தப்பிக்கும் உபாயத்தை அப்பாண்டிய மன்னனுக்கு அருளினார். அது என்ன கதை என்று பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே!.
எட்டாம் நூற்றாண்டில் பாண்டிய நாட்டை வரகுணன் என்ற மன்னன் ஆட்சி செய்து வந்தான். இவனுடைய பாட்டனார் சடையவர்மன். இவனது தந்தை இரண்டாம் இராஜசிம்மன். சிவபக்தியில் சிறந்தவன். கோயில்களுக்குப் பொன்னும் நிதியமும் அளித்துத் திருப்பணிகள் செய்தவன். கோயில்களில் நித்தமும் திருவிளக்கு எரிந்திட இறையிலி அளித்து ஆவன செய்தவன்.
இவனுடைய சமயத் தொண்டுகளைச் சிறப்பித்து மணிவாசகர்,பட்டினத்தடிகள், நம்பியாண்டார் நம்பி ஆகியோரும் கூடப் புகழ்ந்து பாடி இருக்கிறார்கள். சிவ பக்தர்களுக்கு இடையூறு நேராமல் காத்தவன். எப்பொருளிலும் சிவனைக் கண்டு வணங்கியவன். இப்படிப்பட்ட மன்னனுக்கும் ஒரு சோதனை வந்தது. அதுவும் அவன் அறியாமல் செய்த தவறால் வந்தது.
