எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 15 ஜூன், 2022

பாண்டியனைத் துரத்திய பிரம்மஹத்தி

 பாண்டியனைத் துரத்திய பிரம்மஹத்தி


பாண்டிய மன்னன் ஒருவன் அறியாமல் ஒரு பாவம் செய்தான். அதனால் அவனைப் பிரம்மஹத்தி துரத்தியது. ஆனால் அவன் பக்தியைக் கண்டு கடவுளே அந்தப் பிரம்மஹத்தியிடமிருந்து தப்பிக்கும் உபாயத்தை அப்பாண்டிய மன்னனுக்கு அருளினார். அது என்ன கதை என்று பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே!.

எட்டாம் நூற்றாண்டில் பாண்டிய நாட்டை வரகுணன் என்ற மன்னன் ஆட்சி செய்து வந்தான். இவனுடைய பாட்டனார் சடையவர்மன். இவனது தந்தை இரண்டாம் இராஜசிம்மன். சிவபக்தியில் சிறந்தவன். கோயில்களுக்குப் பொன்னும் நிதியமும் அளித்துத் திருப்பணிகள் செய்தவன். கோயில்களில் நித்தமும் திருவிளக்கு எரிந்திட இறையிலி அளித்து ஆவன செய்தவன்.

இவனுடைய சமயத் தொண்டுகளைச் சிறப்பித்து மணிவாசகர்,பட்டினத்தடிகள், நம்பியாண்டார் நம்பி ஆகியோரும் கூடப் புகழ்ந்து பாடி இருக்கிறார்கள். சிவ பக்தர்களுக்கு இடையூறு நேராமல் காத்தவன். எப்பொருளிலும் சிவனைக் கண்டு வணங்கியவன். இப்படிப்பட்ட மன்னனுக்கும் ஒரு சோதனை வந்தது. அதுவும் அவன் அறியாமல் செய்த தவறால் வந்தது.


காட்டில் விலங்குகள் தொல்லை அதிகமாகி நாட்டு மக்களுக்கு இன்னல் ஏற்பட்டது எனவே அவர்களைக் கொடிய விலங்குகளின் தாக்குதலில் இருந்து காக்க எண்ணிக் காட்டிற்கு வேட்டையாடப் புறப்பட்டான் வரகுணன். வெகு நேரம் வரை கண்ணில் பட்ட கொடிய விலங்குகளை எல்லாம் வேட்டையாடியபடி சென்று கொண்டிருந்த மன்னன் தன் படையினரைத் தவறவிட்டு நடுக்காட்டிற்குள் சென்று விட்டான்.

அப்போது அந்தி மயங்கி இருள் சூழத் தொடங்கி விட்டது. பாதை மாறிப் போய்விட்ட மன்னன் நாட்டிற்குத் திரும்ப எண்ணித் தன் குதிரையினை வேகமாகத் திருப்பினான். எதிரே வருபவரோ இருப்பவரோ தெரியாத அளவு மையிருட்டு கவியத் தொடங்கியது. கானகத்தில் பாதையும் புரியவில்லை. காட்டுக் கொடிகள் வேறு குதிரையின் கால்களை நாலா பக்கமும் இழுத்தன. அப்படியும் குதிரையின் லகானை இழுத்து முடுக்கினான்..

ஆனால் காட்டில் அந்த மையிருட்டில் ஒரு வயோதிய மனிதர் படுத்திருந்தது அவன் கண்களுக்குப் புலப்படவில்லை. குதிரையின் குளம்புகள் அந்த வயோதிக மனிதரின் மேல் பாய்ந்ததில் அவர் அந்த இடத்திலேயே துடி துடித்து  இறந்து போனார். இந்த விபரம் ஏதும் அறியாமல் ஒருவழியாக நாடு வந்து சேர்ந்தான் வரகுணன்.

மறுநாள் காலையில் அரண்மனை வாயிலில் அந்த வயோதிக மனிதரின் உறவினர்கள் கூட்டமாகக் கூடினார்கள். அந்த வயோதிக மனிதரின் இறந்த உடலைக் கிடத்தி மன்னனின் பொறுப்பற்ற தன்மையைப் பற்றிக் குறை கூறத் தொடங்கினார்கள். முதல் நாள் நடந்த அந்த துர்ச்சம்பவம் பற்றி அறிந்து கொண்ட வரகுணனின் மனம் துணுக்குற்றது. பதறிப் போய் வெளியே வந்து பார்த்தான்.

அந்த வயோதிகரின் உறவினர்க்குப் போதிய பொன் பொருள் அளித்து இறுதிக் கடன்களைச் செய்யும்படிக் கூறினான். எனினும் அவன் அறியாமல் செய்த அப்பாவம் அவன் நிம்மதியைத் தின்றது. பிரம்மஹத்தி என்னும் தோஷம் பீடித்தது. எப்போதும் முகமலர்ச்சியுடனும் பொலிவுடனும் திகழ்ந்தவன் அதன் பின் வருத்தம் சோர்வு கொண்டு தான் செய்த பாவத்தை எண்ணித் துயருற்றான்.

என்னன்னவோ தானம், தவம், வேள்வி, யாகம் செய்தான். எதிலும் நிறைவு கிட்டவில்லை. என்ன செய்வதெனவும் அவனுக்குப் புரியவில்லை. அவனுடைய  நிம்மதி இன்மையைக் கண்ட அவையோர்கள் மறையோர்களைச் சரணடையச் சொன்னார்கள். அவர்களோ கடவுளைச் சரணடையச் சொன்னார்கள்.

“மன்னா நீங்கள் அறிந்து செய்யவில்லை. அறியாமல்தான் செய்தீர்கள். எனவே அறியாமல் செய்த பாவம் கடவுளைச் சரணடைந்தால் நீங்கும். மதுரையில் அரசாளும் சோமசுந்தரக் கடவுளை நீங்கள் நியம நிட்டையுடன் விரதம் பூண்டு ஒவ்வொரு நாளும் ஆயிரத்தெட்டு முறை பிரதட்சணம் செய்து வாருங்கள். உங்கள் பிரம்மஹத்தி தோஷம் நீங்க அவர் வழிகாட்டுவார். அவரே சரணாகதி “ என்றார்கள்.


மன்னனும் மன ஒருமைப்பாட்டுடன் விரதம் இருந்து ஆயிரத்தெட்டு முறை தினமும் சோமசுந்தரரை வலம் வந்து தன் பாவம் நீங்க வேண்டி ஆத்ம சுத்தியுடன் வழிபட்டான். மன்னனின் பக்தியால் மனம் நெகிழ்ந்த சோமசுந்தரக் கடவுள் அசரீரியாக “ உன் பக்தி என்னை மகிழ்விக்கிறது. கூடிய விரைவில் இத்தோஷம் உன்னைவிட்டு நீங்கும். உன் நாட்டின் மீது சோழன் படை எடுத்து வருவான். அப்போரில் என்னருளால் நீ அவனை வெற்றி கொண்டு துரத்திச் செல்வாய். அப்போது திருவிடை மருதூர் வருவாய். அங்கு அந்தப் பிரம்மஹத்தி உன்னை விட்டு நீங்கும்படி அருள்வேன்” என வாக்குரைக்கிறார்.

கடவுளே தனக்கு வாக்களித்ததும் மன்னனின் அகமும் முகமும் நிம்மதி கொண்டது. சோமசுந்தரக் கடவுளை வணங்கி மன்னன் அரண்மனை திரும்பினான்.

சோமசுந்தரக் கடவுள் கூறியது போலவே சில நாட்களில் சோழன் நந்திவர்மன் தன் மாபெரும் சேனையுடன் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து வருகிறான். எதைக் கண்டும் அஞ்சவில்லை வரகுணன். கடவுளே அவன் பக்கம் இருக்கும்போது யானையாவது சேனையாவது சோழனாவது. எல்லாப் படையையும் சோழனோடு துரத்தித் துரத்தி அடித்தான் வரகுணன்

புறமுதுகிட்டுத் தோற்றோடினான் நந்திவர்மன். அவனை விரட்டியபடி சென்ற பாண்டியன் திருவிடை மருதூரைச் சென்றடைந்தான். அங்கே காவிரி ஆறு பொலிவோடு பாய்ந்து கொண்டிருந்தது. அதில் நீராடி திருவிடை மருதூரில் அருள்பாலித்துக் கொண்டிருந்த சிவனை கிழக்குக் கோபுரம் வழியாகச் சென்று தரிசித்து வணங்கினான்.

அது வரையில் அவன் பின்னேயே சென்று அவனைத் துன்புறுத்திக் கொண்டிருந்த பிரம்மஹத்தியானது அவன் கிழக்குக் கோபுரம் வழியாக உள்ளே சென்றதும் அவனுடன் செல்ல முயன்றது. ஆனால் சிவனின் அருட்சக்தியால் அதனால் உள்ளே நுழைய முடியவில்லை. எனவே கிழக்குக் கோபுர வாயிலேயே நின்று விட்டது. அவன் திரும்ப வந்ததும் அவனைப் பீடித்துக் கொள்ளலாம் என்று காத்து நின்றது.

ஆனால் அங்கோ சிவன் வரகுணனின் பக்தி கண்டு மகிழ்ந்து “ வரகுணா, உன்னைப் பீடித்த பிரம்மஹத்தி இப்போது நீங்கி விட்டது. அது கிழக்குக் கோபுர வாயிலில் நிற்கிறது. கோயிலின் உள்ளே அதனால் நுழைய முடியாது. அதனால் நீ திரும்ப அந்தக் கிழக்கு வாயிலின் வழியாக வெளியே வரும்போது உன்னைப் பிடித்துக் கொள்ளலாம் என்று காத்திருக்கிறது. அதனால் நீ கிழக்குக் கோபுரம் வழியாக வெளியேறாதே. மேற்குக் கோபுரம் வழியாக வெளியே போ” என்று ஆணையிட்டார்.


இறைவனின் ஆணையைக் கேட்டு மேற்குக் கோபுரம் வழியாக வெளியேறிய வரகுணன் பிரம்மஹத்தி நீங்கிப் பழைய பொலிவையும் மன நிம்மதியையும் அடைந்தான். அக்கோயிலுக்கு இன்னும் பல திருப்பணிகளும் செய்தான். எனவே அறியாமல் செய்த பிழையால் மன்னன் பட்ட பாட்டை

அறிந்தோம்தானே. 


அப்பிழையும் இறைவனைச் சரணடந்தால் நீங்கி விடும் எனினும் அறியாமல் கூட எந்தப் பிழையும் செய்யாமல் வாழக் கற்போம் குழந்தைகளே.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...