தொலைக்காட்சியில் பெண்கள் ஃபாஷன் டிவியில் வருவதுபோல் புடவை கட்டி வரிசையாக நடந்துகொண்டே இருக்கிறார்கள். “ அடி இந்தச் சேலைதான். இதுவும் நல்லா இருக்கு. அட இதுவும் நல்லா இருக்கு “ எனச் சொல்ல மகள் உடனே அந்தத் தொலைபேசி எண்ணுக்கு புடவைகள் எண்ணைக் குறிப்பிட்டு எஸ் எம் எஸ் கொடுக்கிறார். அடுத்த நாளே பார்சல் வருகிறது. பணம் கொடுத்து வாங்கிப் பார்த்தால் எல்லாம் கண்ணை உறுத்தும் நிறங்களில் உயரம் குறைவான சேலைகள்.
”என்னடி இது ஆயிரம் ரூவாயையும் முழுங்கிட்டானா.. ” ”ஆயிரம் ரூவாய்க்கு அஞ்சு சேலைன்னு நீதான வாங்கச் சொன்ன “ மகள் அம்மாவிடம் முறைக்கிறார். தான் வேலை செய்யும் வீட்டுக்குச் சென்று இதை அம்மா புலம்ப அந்த வீட்டுக்காரம்மாவோ ”அதையேன் கேக்குறீங்க மல்லிகாக்கா. வாட்ஸப்புல என் ஃப்ரெண்டு ஒருத்தி சேலை விக்கிறேன்னு படம் அனுப்புனா. பாங்குல அவ அக்கவுண்ட்ல பணம்போட சொன்னா. படத்துல வயலட் கலர்ல இருந்தது வந்ததும் பார்த்தா ப்ளூ கலரு. ஃபோட்டோவுல அப்பிடித்தாம் இருக்கும்னுட்டா. அதே கலர்ல என்கிட்ட பல சேலை இருக்கு. சொளையா மூவாயிரம் ரூபா போச்சு “ என்று இருவரும் அலுத்துக் கொண்டிருக்கும் வேளையில் “ அம்மா கூரியர் “ என்ற சத்தம்.
