எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
ஆணி மாண்டவ்யர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆணி மாண்டவ்யர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 17 மார்ச், 2019

பூச்சிகளைத் துன்புறுத்தியதால் பெற்ற தண்டனை. தினமலர். சிறுவர்மலர் - 8.


பூச்சிகளைத் துன்புறுத்தியதால் பெற்ற தண்டனை. :-

சும்மா பறக்கும் தட்டாரப் பூச்சியைப் பிடித்து வாலில் நூல் கட்டிப் பறக்கவிட்டு மகிழ்வார்கள் சிலர். அதே போல் பொன்வண்டைப் பிடித்துத் தீப்பெட்டிக்குள் அடைத்து வைப்பார்கள். ஓரமாக தேமே என்று போகும் எறும்பைக் கண்டால் கூட காலால் நசுக்குவதும் தண்ணீரில் பிடித்துப் போட்டுச் சித்திரவதை செய்வதுமாக இருப்பார்கள் சிலர். அந்தப் பூச்சிகளுக்கு எல்லாம் அது எவ்வளவு கொடுமையாக இருக்கும் என்பதை உணரவே மாட்டார்கள். அப்படி சிறுவயதில் செய்த முனிவர் ஒருவர் பெற்ற தண்டனையை இப்போ உங்களுக்குச் சொல்லப் போகிறேன் குழந்தைகளே.

அது ஒரு அழகான ஆரண்யம். அங்கே கிளைவிரித்துப் பரந்திருக்கிறது மாபெரும் ஆலமரம். அதனருகே ஒரு எழில் மிகு பர்ணசாலை அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த ஆலத்தின் தண்ணென்ற நிழலில் ரிஷி ஒருவர் யோகத்தில் இருக்கிறார். அவர் பெயர் மாண்டவ்யர். பத்மாசனத்தில் அமர்ந்து கைகள் இரண்டையும் மடியில் மேல் நோக்கிப் பார்த்தபடி வைத்து கண்கள் மூடி அமர்ந்திருக்கிறார்.

அந்த ஆரண்யத்தின் அமைதியைக் குலைப்பது போல பலர் தடதடவென ஓடிவரும் சத்தம் கேட்கிறது. முரட்டு உருவத்தோடும் முறுக்கிய மீசையோடும் மிரட்டும் கண்களோடும் வடுக்கள் நிறைந்தமுகத்தோடும் வந்தவர்கள் முனிவரின் பர்ணசாலைக்குள் ஒளிந்து கொள்கிறார்கள். சும்மாவா ஒளிந்திருக்கிறார்கள். ஒவ்வொருவர் கையிலும் மூட்டை மூட்டையாய்ப் பொன்னையும் பொருளையும் அரண்மனையில் இருந்து கொள்ளையடித்துக் கொண்டு வந்தல்லவா ஒளிந்திருக்கிறார்கள். இது எதுவுமே முனிவருக்குத் தெரியாது.