எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 29 ஆகஸ்ட், 2020

வெக்கை – ஒரு பார்வை

 வெக்கை – ஒரு பார்வை.


வெக்கை

சிறுவன் ஒருவன் ஒரு கொலை செய்துவிட்டு சட்டத்தின் பிடியில் அகப்படாமல் சென்று முடிவில் குடும்பத்தாரின் கட்டாயத்துக்காகச் சரணடையச் செல்லும் கதை. அவனாவது பிழைத்துக் கிடக்கவேண்டுமே என்ற ஆதங்கத்தில் அவர்கள் சட்டத்துக்குத் தம்மை உட்படுத்திக் கொள்ளச் செய்கிறார்கள். பூமணி அவர்களின் பல்வேறு கதைகளைப் படித்திருந்தாலும் இந்த நூல் என்னை மிகவும் கவர்ந்தது. ஒரு அசல் நிகழ்வைக் கதையாக்கிய பாணிதான் காரணம். இவரின் மொழி அழகுக்காகவும் விறுவிறுப்பான நடைக்காகவும் தனி விருதே கொடுக்கலாம். 

முழுக்க முழுக்கத் தார்மீகக் காரணங்களின் பாற்பட்டு ஒரு சிறுவன் குற்றம் செய்ய நேரும் தருணம், பின் தப்பித்து ஒளிந்து செல்தல், செல்லும் எல்லா இடங்களிலும் நேர்மையான வழிமுறைகளைப் பின்பற்றல் முடிவில் சட்டத்துக்கு தன்னை ஒப்புக்கொடுத்தல் என ஒரு நேர்மறை திசையில் செல்லும் கதை. வெறுமனே வெருட்ட வேண்டித் தாக்க நினைத்தது கொலையாக நிகழ்ந்துவிட்டதுதான் இக்கதையினை இழுத்துச் செல்கிறது.

சாதியம், வர்க்கபேதம், தொழிலாளி முதலாளிகளின் மனோபாவம், பார்க்க இருவரும் ஒன்றுபோலத் தோன்றினாலும், இருவருமே ஒரே வட்டாரத்தைச் சேர்ந்தவர்களானாலும் இருவருக்குள்ளும் இருக்கும் நுண்ணிய வித்யாசங்கள் என வரைந்து செல்கிறது கதை.

தன் அண்ணனைக் கொன்றவனை நேரம் பார்த்துக் காத்திருந்து கொல்கிறான் தம்பி. அவனைச் சார்ந்தவர்களே நேரம் பார்த்துக்காத்திருக்க அவனோ முந்திக் கொள்கிறான். இக்கதையின் நாயகன் சிதம்பரம் அக்கொலை நடந்ததில் இருந்து அக்கம் பக்கம் கிராமம், காடு, வயல் மேடு, மலை, மலைப்பொந்து, கிணற்றடி, ஆற்றங்கரை, சுடுகாடு, ஓடை, கோட்டை என எல்லாப் பக்கமும் சுற்றித் திரிகிறான். இடம் மாற்றிக் கொண்டிருக்கும் அவன் கூடவே தந்தையும் செல்கிறார்.

தன் உறவினரைக் கொன்றதாகக் கருதும் ஒரு ஆதிக்கசாதி நபரைத் தண்டிக்க விரும்பும் சிதம்பரம் தவறுதலாக அரிவாளால் வெட்டிக் கொல்வதுடன் கையெறி குண்டுகளையும் தயாரித்துப் பத்திரப் படுத்தி வைத்துக் கொள்கிறான். வன்முறை என்பது எங்கேயிருந்தோ எப்படியோ தூவப்படுகிறது, விதைக்கப்படுகிறது.

கொலைக்குப் பின் ஓடத்துவங்கும் சிதம்பரம் பின்னர் ஓடிக்கொண்டே இருக்கவேண்டியதாகிறது. ஒவ்வொரு இடத்திலும் உணவைச் சமைக்க அவன் மேற்கொள்ளும் வழிமுறைகள் வித்யாசமானவை மற்றும் சுவாரசியமானவை. ஒரு கட்டத்தில் அவன் எப்படி சமைக்க சாமான் சம்பாரித்து அதில் எதை ஆக்கி உண்ணப் போகிறான் என்று தொடர்வதே நம் ஈர்ப்பாகிறது.

அதிலும் வேற்றாள் தோட்டத்தில் காய்த்த தக்காளியைக் கூடத் தாகத்துக்காகவேனும் தொடாத அவன் நேர்மை அதிகம் கவர்கிறது. தன் அண்ணனைத் தாக்கிக் கொன்றவனைப் பழி வாங்கியபிறகு அந்தக் கோபம் கொஞ்சம் வடிந்ததாகவே ஆகிவிடுகிறது. ஆயுதங்களைத் தமிழ் சினிமா போலக் காப்பதும் இடுப்பிலேயே கட்டிக்கொண்டு அலைவதும்தான் வித்யாசம்.

காட்டிலும் மேட்டிலும் வயலிலும் மலையிலும் கிடைக்கும் விதம் விதமான பொருட்கள் தின்பண்டங்கள் ஆகும் அதிசயத்தையும் படிக்கும்போது வியப்பேற்படுகிறது. கள்ளிப்பழம், எருமைச் சீத்தை,கருவை மரப் பிசின், தேன் தட்டு,மஞ்சணத்திப் பழம், பிரண்டைப்பழம், சீனிக்கிழங்கு என கேள்விப்பட்டிராத பொருட்கள் கதைமுழுவதும்.  

இப்படி ஒரு வாழ்வியலைப் பக்கம் இருந்து பார்த்தால்தான் எழுதமுடியும்.கதையின் நடுவில் வயலில் திருடும் நியாயத்திருடர்கள், பாம்புவேட்டை, போலீஸ்காரர்கள் நடவடிக்கைகள், வடக்கத்திக்காரனின் சூது,கத்தியின்/அரிவாளின் வகைகள், கமலை கட்டுதல், கிராமத்து வாழ்வியல், வயல்களின் வெள்ளாமை, தோட்டம் காடு பறவைகள் விலங்குகள் பற்றிய விவரணைகள், கஞ்சாச்செடிகள், பணக்காரர்கள் பக்கம் சாயும் நீதி,ஜெயில் வாழ்க்கை, ஜின்னிங் ஃபாக்டரி, கட்சிக்கூட்டங்கள், சாராயம் காய்ச்சுதல், கள் இறக்குதல் , கமிஷன் கடைகள், சுடலைமாடன் பாட்டு, ஆடு மேய்த்தல், கோர்ட் கேஸ் நடவடிக்கைகள், குடிக்கு ஆட்பட்ட மக்கள்,  என பல்வேறு விஷயங்களைத் தொட்டுச் செல்கிறது கதை.

விவசாயிகளின் நிலங்களை வாங்கிச் சேர்க்கும் வடக்கத்தியான், எளியவன் நிலம் வைத்திருப்பதும் சுயமாய் உழைத்து வாழ்வதும் பொறுக்காத ஆதிக்க மனப்பான்மை, அதனால் ஏற்படும் உரசல்கள் ஆகியவற்றை ஓங்கி உரைக்கிறது கதை.   

தந்தைக்கும் பிள்ளைகளுக்கும் உள்ள அந்யோன்யம், தந்தையைப் பிள்ளை மதிப்பதும் பிள்ளையைத் தந்தையும் குடும்பத்தாரும் மதித்துப் போற்றுவதும் என ஒரு அழகான வரையறைக்குள் செல்கிறது கதைப்போக்கு.

பணக்காரன் ஏழையைக் கொல்லும்போது சட்டம் கைகட்டி வேடிக்கை பார்க்கிறது சாட்சியம் இல்லை என. அதே போல் பாதிக்கப்பட்ட ஒரு ஏழை பொங்கியெழுந்து வெட்டும்போது அதைத் தான் செய்யவில்லை எனச் சொல்ல ஒளிந்து மறைந்து ஓட வேண்டியதாகிறது. முடிந்தவரை தப்பிப்போம் இல்லாவிட்டால் தண்டனை பெற்று வந்து மிச்சமுள்ள எதிரிகளையும் போட்டுத் தள்ளுவோம் என முடிவெடுக்கிறார் தந்தை.  

பணக்காரர்கள் வைத்த சட்டத்தில் ஏழைகள் நியாயத்துக்காகப் போராடுவதும் அவை வன்முறையில் முடிவதும். அதே வன்முறை பணக்காரர்களை ஒன்றும் செய்யாமல் ஏழைகளை நீதிமன்றப் படி ஏறவைப்பதும் சிறையில் அடைத்து உண்மையின் வாயை அடைப்பதுமாக இருப்பதைச் சித்தரிக்கும் இக்கதையோடு பயணித்துப் பாருங்கள். ஏழை படும் பாடு எவ்வளவு பாடு எனப் புரியும். எல்லாரும் ஒன்றெனவும் நீதியும் நியாயமும் கூட எல்லாருக்கும் ஒன்றெனவும் உரத்துக் கூவத் தோன்றும்.

நூல் :- வெக்கை
ஆசிரியர்:- பூமணி
பதிப்பகம்:- டிஸ்கவரி
விலை :- ரூ. 150.

4 கருத்துகள்:

  1. கரிசல் நிலத்தின் ஓவியத்தை உள்வாங்கி தங்கள் கேன்வாஸில் அழகான பதிவாக்கியுள்ளீர்கள். நவீன புனைவு வெளி குறித்து தொடர்ந்து பதியவும்.

    பதிலளிநீக்கு
  2. நல்லதொரு நூல் அறிமுகம். நன்றி. படிக்கத் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  3. நன்றி வேணி

    நன்றி துரை. அறிவழகன் சார்

    நன்றி வெங்கட் சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...