எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 17 ஆகஸ்ட், 2020

டிட்லிஸ் - ஐஸ் ஃப்ளையர் & க்ளிஃப் வாக்.

பனி படர்ந்த சிகரங்களுக்கு நடுவில் பறக்க வேண்டுமா, பனிச்சிகரங்களுக்கிடையிலான உயர்பாலத்தில் நடக்க வேண்டுமா ஸ்விட்ஜர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைத்தொடருக்குப் போகலாம் வாருங்கள். அதன் சிகரங்களில் ஒன்றான டிட்லிஸில் இவை மட்டுமல்ல பனிக்கட்டிகளைத் தூவி விளையாடலாம். க்ளேஸியரில் பனிச்சறுக்குச் செய்யலாம்.

யூரோப் டூரின் இரண்டாம் நாள் ப்ளாக் ஃபாரஸ்டிலிருந்து எங்கள்பர்க் ஹெச் ப்ளஸ் ஹோட்டலுக்குச் சென்று தங்கினோம். பசுமையும் பனியும் படர்ந்த எங்கள்பர்க் நகரின் அழகைப் பருக இருகண்களும் போதவில்லை.

ஓப்வால்டன் & பெர்ன் ஆகிய இரு மண்டலங்களுக்கு இடையில் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் அமைந்துள்ள சிகரமே டிட்லிஸ். இது கடல்மட்டத்திலிருந்து 3, 238 மீட்டர் உயரத்தில் ( 10623 அடி ) அமைந்துள்ளது.


நன்கு நெடிதுயர்ந்த மலைச்சிகரங்கள் கொண்டது ஸ்விட்ஜர்லாந்து. யூரோப் டூரில் நாங்கள் மிகவும் ரசித்த இரண்டு இடங்கள் ஸ்விட்ஜர்லாந்தும் ஃப்ரான்ஸும்தான். வீடுகள் அனைத்தும் மலைப்பாங்கான இடங்களிலேயே அமைந்திருக்கின்றன. பலவீடுகள் உச்சிச் சிகரங்களிலும் மேகமூட்டங்களிலும் கூட காட்சி அளித்தன. அவ்வளவு தூரம் தளவாடங்களைக் கொண்டு சென்று  எப்படித்தான் சாலைகளும் இல்லங்களும் சமைத்தார்களோ? சமதளம் என்றால் அது ஓரளவு ஹைவேஸ் சாலை மட்டும்தான்.

இயற்கை எழில் கொட்டிக் கிடக்கும் ஸ்விஸ்நகரில் காலடி எடுத்து வைத்தவர்கள் அதைவிட்டுப் போகவே விரும்பமாட்டார்கள். இங்கே கிடைக்கும் ஃபாண்டூ எனப்படும் மெல்டிங் சீஸின் சுவையும் அலாதி.

இதோ நாம் எங்கள்பர்க் நகருக்குள் நுழைந்துவிட்டோம். கோடைகாலம் என்பதால் பின்னணியில் இயற்கைப் பசுமை போர்த்திய மலைகள். மேலே பனி மூடிய சிகரங்கள்.

இரவு ஹெச் ப்ளஸ் ஹோட்டலில் தூங்கி மறுநாள் காலை எழுந்து சீக்கிரமே காலை உணவை முடித்துக் கொண்டு தயாராகி விட்டோம். எங்கள்பர்கிலிருந்து ரோப் கார்/கேபிள் கார் ஸ்டேஷனை வந்தடைந்தோம். முன்பே எங்கள் டூர் மேனேஜர் சந்தோஷ் ராகவன் டூர் பற்றிய விவரங்களை விலாவாரியாக விவரித்திருந்தார். கிட்டத்தட்ட 30 நிமிடங்களில் மூன்று க்ளெஸியர்களைக் கடந்து மூன்று கேபிள் கார்களில் இப்பயணம் நடைபெறும். அவர் விவரிக்கும்போதே த்ரில்லாக இருந்தது.டிட்டிலிஸில் மூன்றுவகையான கேபிள் கார்கள் உண்டு. முதலில் சாதரண கேபிள் கார், அடுத்து ஒரு க்ளேஸியரில் இருந்து இன்னொரு க்ளேஸியர் போக 180 டிகிரி ரொட்டேட்டிங் கேபிள் கார் , மூன்றாவது க்ளேசியர் சிகரங்களில் பயணிக்க ஐஸ் ஃப்ளையர். உயிரைக் கையில்பிடித்துக் கொண்டு போனால் அங்கே பணியில் இருந்த அதிகாரி கேலி செய்து ஈவனாக அமரவைத்தார். வெயிட் சமமாக இருக்க வேண்டும். எல்லா கேபிள் கார் & ஃப்ளையரிலும்.ஸ்டார் டூர்ஸில் சென்றதால் எங்கள்பர்க் டிட்டிலிஸில் ஐஸ்ஃப்ளையர் ,அடல்ட் ரொட்டேட்டிங்க் - டிட்லிஸ் ரொட்டேர் , கேபிள் கார் எல்லாத்துக்கும் ஆளுக்குப் பதினைந்து யூரோ கட்டணம். டேட்டும் டைமும் அடித்தே கொடுத்துவிடுகிறார்கள். அதை இறங்கும்வரை பத்திரமாக வைத்திருக்க வேண்டும். 15. 6. 2019 இல் இருந்து 30. 6. 2020 வரைக்கும் இந்த கார்டு வேலிட் !!!மேலும் கீழும் இறங்கி ஏறிச் செல்லும் கேபிள் கார். கிட்டத்தட்ட இதுபோல் நூறு கேபிள் கார்கள் மேலும் கீழும் போய் வந்து கொண்டிருந்தன.

மேலே ஏறும்போது மலை நோக்கியும், கீழே இறங்கும்போது கீழ் நோக்கியும் அமர்ந்தால் பிளட் பிரஷர் பாட்டிகளுக்குத்  தலை சுற்றாது.


ஏழு மலைகள் போல் எண்ணற்ற மலைகள். ஸ்விஸிலேயே கிட்டத்தட்ட 451 மலைச்சிகரங்கள் இருக்கின்றன. இதில் டிட்லிஸ் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் அமைந்திருக்கு. ( சிவந்தமண் படத்தில்வருவதுபோல் ஆல்ப்ஸ் மலை எங்கே எங்கே என டூர் மேனேஜரைத் துளைத்துவிட்டோம் ) அதன் பின் தான் ஆல்ப்ஸ் என்பது மலைத்தொடர் அதன் ஒரு உயர்ந்த சிகரம் டிட்லிஸ் என அறிந்தோம்.

உல்லாசப் பயணிகள் வருகைக்கு ஏற்ப அங்கே பத்தாயிரம் அடி உயரத்தில் உணவகமும் ஃபோட்டோ ஸ்டூடியோவும் உள்ளது.  வியூ டவர் வரை ரொட்டேடிங்  கேபிள் கார் நம்மைக் கொண்டு செல்லும்.


சுற்றிலும் பசுமை படர்ந்த புல்வெளிகள். ஆங்காங்கே மேயும் ஆவினங்கள். ஆயர்பாடிக் கண்ணன் இருக்கிறானோ என்று கூட தேடவைத்தன.


எங்கள்பர்க் டிட்டிலிஸ் டு & ஃப்ரோ என்றொரு டிக்கெட். அது மட்டும் அடல்ட் ஜிஜிஆர் எஃப் மூன்று நாட்களுக்கு வேலிட். செல்லுபடியாகும். 24. 7. 2019 இல் இருந்து 26. 7. 2019 வரை மட்டுமே. 


மேலும் கேபிள் கார் நான்கு ஸ்டேஷன்களில் நிற்கும். அதில் எதிலும் இறங்கக்கூடாது. மெயினா மூன்றாவதில் இறங்கவே கூடாது. அது அங்கே வேலை செய்யும் டெக்னீஷியன்களுக்கான நிறுத்தம்.

இதுவே மலை ஏறும் போதும் இறங்கும்போதும் பின்பற்றவேண்டிய விதி. கேபிள்கார் அனைத்து ஜங்க்‌ஷன்களிலும் லேசாக ஜெர்க் ஆகி ஜெர்க் ஆகிப் போகும்போதெல்லாம் வயிற்றில் லேசாகப் புளியைக் கரைத்தது. கடைசியில் சொய்ங் என்று ஒரே ரீங்காரத்துடன் வேகமாகப் பறந்து உச்சிக்குக் கொண்டு சேர்த்தது. 


அங்கே நம் பேருந்துப் பயணிகள் மட்டும் ஒரு குழுவாகப் பிரிந்து தனித்து நின்றோம். அதேபோல் அனைத்துப் பேருந்துப் பயணியரும் குழுக்களாக நின்றார்கள். ஒவ்வொரு குழுவையும் தனித்தனியாக இந்த ரொட்டேட்டிங் கேபிள் காரில் ஏற்றி அனுப்பினார்கள்.

டிட்லிஸ் ரொட்டேர் என்ற பெயருடைய அது வட்டவடிவமாக முற்றிலும் கண்ணாடியால் சூழப்பட்டிருந்தது. ஒரே நேரத்தில் 40, 50 பேர் நிற்கலாம். கூண்டோடு கைலாஸமோ வைகுந்தமோ போகும் பாணியில் அனைவரும் அதில் ஓரத்துக் கைப்பிடியைப் பிடித்துக் கொண்டு நின்றோம். இளையர்கள் ஒரே கும்மாளம். நடுவில் நின்று கொண்டார்கள்.

சுற்றிலும் இதுவரை பசுமலையாக இருந்தது இப்போது பனிமலையாக ஆகி இருந்தது. கீழேயோ அதல பாதாளம். 360 டிகிரியில் சுற்றத் தொடங்கியது நாம் ஏறி நின்ற கேபிள் கார். கிளர்ச்சியடைந்த அனைவரும்  உற்சாகக் குரல் எழுப்பினார்கள். பசுமைபூமியையும் வெண்ணிறச்சிகரத்தையும் மஞ்சள் சூரியனையும் ஒருங்கே கண்டோம். அற்புதக் காட்சி அது.

அடுத்த ஸ்டேஷன் வந்தது. அங்கே இறங்கி அடுத்து ஐஸ் ஃப்ளையரைப் பிடித்தோம். இதில் ஊஞ்சல் போல இருபக்கமும் கம்பி இருக்கும் நமக்கு முன்னே ஒரு தடுப்புக் கம்பி இருக்கும். நால்வரை சமமாக அமரவைத்தவுடன் அந்தத் தடுப்புக் கம்பியைப் போட்டு விடுவார்கள்.

எனக்கோ வயிற்றில் புளியைக் கரைத்தது மட்டுமல்ல பிரளயத்தையே கிளப்பிக் கொண்டு வந்தது பயம்.  அங்கே பணியில் இருந்த ஊழியரிடம் இதில் செல்வதால் தலை சுற்றுமா எனக் கேட்டேன். இல்லை லிஃப்டில் செல்வதுபோல் இருக்கும் என்று சொன்னவர் எந்த நாடு என விசாரித்தார். இந்தியா என்று சொல்லிவிட்டு மறத்தமிழச்சி பயப்படலாமா என மனதுக்குள் தைரியம் சொல்லியபடி கிளம்பினேன்.

மூன்றாவது சொர்க்கம் என்பார்களே அது இதுதான். திரிசங்கு சொர்க்கம். பூமியே கண்ணில் படவில்லை சுற்றும் முற்றும் ஒரே பனிதான். ஒரே லாவாக ஆற்றின் மேல் கட்டப்பட்ட விழுதில் நதியில் ஊஞ்சல் கட்டி ஆடுவதைப் படத்தில் பாத்திருப்பீர்கள். அதைப் போல இந்த ஐஸ் ஃப்ளையர் நாற்காலி/பெஞ்ச் லிஃப்ட் எங்களைத் தாலாட்டி ஊஞ்சலாட்டியபடி ஒரே லாவில் சர்ரென்று பனித்திடலில் உள்ள ஸ்டேஷனுக்குக் கொண்டு சேர்த்தது. இந்த சேர் லிஃப்ட் ஜோக்பாஸ் ( 7000 அடி ) என்ற இடத்திலிருந்து ஜோக்ஸ்டாக் ( 8, 000 அடி )  என்ற சிகரத்துக்கு நம்மைக் கொண்டு சேர்க்குது.

இந்த க்ளேசியர்தான் குளிர்காலப் பனிச்சறுக்கு விளையாட்டுகளில் எல்லாம் பயன்படுகிறது. நாமும் இந்த க்ளேஸியர் பார்க்கில் ஐஸ் ஸ்கீயிங் செய்தோம். அதை வீடியோவாக எடுத்ததனால் புகைப்படம் எடுக்க மறந்து போயிற்று.


வெளியே இறங்கி வந்து புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது என்று பாடி ஆடியபடி உயிர் தப்பியதே என்ற சந்தோஷத்தில் மிதந்தேன்.டவர் வியூ பாயிண்டில் இருந்து எங்கள்பர்க் நகரின் பள்ளத்தாக்கை ஒரு க்ளிக்.

ரொட்டேட்டிங் கேபிள் காரின் கேபிள்களும், ஐஸ் ஃப்ளையரின் கேபிள்களும்.

ஆங்காங்கே கிடுகிடு பள்ளம். தூரத்தே தெரிவன ஆல்ப்ஸின் மற்ற சிகரங்கள்.
கிட்டத்தட்ட 3,200 மீட்டர் உயரத்தில் சுற்றிலும் உள்ள இயற்கைக் காட்சிகளைக் கண்டு களிக்க முடியும் என்பது 360 டிகிரி சுழலும் இந்த ரொட்டேட்டிங் கேபிள் காரின் சிறப்பு. இந்தக் கேபிள் காரை 2015 இல் புதுமாதிரி வடிவமைச்சிருக்காங்க. இதுக்கு முன்னாடி இது பேரு டிட்லிஸ் எக்ஸ்ப்ரஸ் கொண்டோலா லிஃப்ட். ! இது ட்ரப்ஸீ என்ற  ஸ்டேஷனில் இருந்து ( 5000 அடி உயரம் ) மேலே இருக்கும் ஸ்டாண்டுக்குச் ( 7,000 அடி உயரம்)  செல்ல  உதவுது.


அப்பாடா ஒருவழியாக மேலேறி ஸ்கீயிங் செய்யுமிடத்துக்கு வந்துவிட்டோம்.

அனைவரும் பனிக்கட்டிகளை எடுத்து ஒருவர் மீது ஒருவர் வீசி விளையாட ஆரம்பித்துவிட்டார்கள். க்யா கோயி ஹமே ஜங்கிலி கஹே என்ற இந்திப் பாடல் என் மனக்கண்ணில் ஓட ஆரம்பித்தது.


மகனும் வீட்டுக்காரரும்.

இங்கே ஐஸ் ஸ்கீயிங் பாதையில் படு பக்காவாகத் தடுப்பு எல்லாம் போடப்பட்டு இருந்தது. ஆனால் கீழேயோ அதளபாதாளம். கிடுகிடு பள்ளம். கரணம் தப்பினால் மரணம்தான். ஆனால் பொதுமக்கள் உபயோகத்துக்காக நீண்ட தூரம் தடுப்புப் போட்டிருப்பதோடு கண்காணித்துக் கொண்டும் இருக்கிறார்கள். வருடாவருடம் இங்கே குளிர்கால விளையாட்டுகளும் அதிலும் குறிப்பாக ஜேம்ஸ்பாண்ட் படங்களில் பார்ப்பதுபோல் பனிச்சறுக்குப் போட்டிகளும் பிரபலமாம். இதற்கென க்ளப்புகளும் இருக்கின்றன.

ஸ்கீயிங் போர்டில் உட்காந்து பனிச்சறுக்கில் சறுக்கி விளையாடிவிட்டு பக்கவாட்டில் இருக்கும் சாய்வான பாதையில் நகரும் பெல்டில் நின்று வரவேண்டும். ஸ்கீயிங் கூட பயமாயில்லை. சாய்வுப் பாதையில் பிடியும் நகரும் கன்வேயர் பெல்ட்தான் பயமாக இருந்தது.


ஒரு வழியாக புதிய வானம் புதிய பூமி எனப் பாடியபடி டிட்லிஸில் பயம் தெளிந்து உலாவினோம்.


க்ளெயின் டிட்லிஸ் நிலையம் வரை இந்த ரொட்டேட்டிங் கேபிள் கார் கொண்டு போய் விடுது. அங்கேதான் சோவினீயர் ஷாப், ரெஸ்டாரெண்ட், ஃபோட்டோ ஸ்பாட், அப்ஸர்வேஷன் டெக், க்ளேஸியருக்குப் போவதற்கான ஐஸ் ஃப்ளையர் சேர் லிஃப்ட் நிலையம், ரெஸ்ட் ரூம், கண்காணிப்புக் கோபுரம் இன்னபிற உள்ளன. 


இங்கிருந்துதான் மிடில் ஸ்டேஷனில் இருக்கும் ட்ரூப்ஸீ மற்றும் லாபர்ஸ்க்ராட் ரிட்ஜ் வரை உள்ள இடங்களில்தான் போட்டிகளின் போது பனிச்சறுக்கு வீரர்கள் தங்கள் சாகஸ விளையாட்டை விளையாடுவார்கள்.கண்ணெட்டிய தூரம் வரை பனி.


டிட்லிஸின் தென்கிழக்குச் சிகரம்.

இதுதாங்க க்ளிஃப் வாக். இரு மலைச்சிகரங்களுக்கு இடையில் ஒரு தொங்கு பாலம் அமைத்திருக்கிறார்கள். ஒரு மீட்டர் அகலமும் நூறு மீட்டர் நீளமுமே கொண்டது. இருபுறமும் கம்பித்தடுப்பும் வலைகளும் உள்ளன. ஆனால் பாலத்தில் கால் வைத்தால் கிடுகிடுவென ஆடுகிறது. கீழேயோ 3,000 சொச்சம் அடிப்பள்ளம். இரண்டடி வைத்ததுமே தலைச்சுற்றுவதுபோல் இருந்ததால் மரியாதையாகக் கீழே இறங்கி வந்து வெளிப்புறம் ஐஸ் ஃப்ளையர் நிலையத்தின் தடுப்புக் கம்பியைப் பிடித்தபடி ஒரு புகைப்படம் மட்டும் எடுத்துக் கொண்டேன்.


30 நிமிடப் பயணம் மேலே செல்லவும், கீழிறங்கி வரவும். ஆகக்கூடி ஒருமணி நேரம் பயணம். மலை உச்சிக்குச் சென்றது கதகதப்பூட்டிக் கொள்ள காஃபி வாங்கி அருந்தினோம். அதிகமில்லை ஜெண்டில்மேன் டிட்லிஸ் பெர்பாக்னனில் ஒரு காஃபி 4. 20 யூரோதான். நம்மூரு விலையில் 360 ரூபாய்.

அப்புறம் சொல்ல மறந்துட்டேன். நாமளே ஃபோட்டோ ஸ்டூடியோவிலும் ( ஸ்விஸின் பாரம்பரிய உடை அணிந்து ) ஃபோட்டோ எடுத்துக்கலாம். இந்தியப் பயணிகளைக் கவர ஷாரூக்கான், காஜோலில் தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே கட் அவுட்டை வெளியிலும் வைத்திருக்காங்க. அங்கே நின்றும் டான்ஸ் போஸ் கொடுத்தபடியும் படம் எடுத்துக்கலாம்.


கீழே மூன்று கேபிள் கார்களிலும் விதிகள் மாறாமல் அமர்ந்து வந்து இறங்கி ஹெச் ப்ளஸ் ஹோட்டலில் எதிரே இருந்த உணவுக்கூடத்துக்குச் சென்று இந்தியன் உணவு அருந்தினோம். செல்லும்வழியில் சிலர் ஆரவாரிக்க மேலே  நிமிர்ந்து பார்த்தால்.  பாராசெய்லிங்கில் ஒருவர் பறந்துகொண்டிருந்தார். !

மதிய உணவு. டொமாட்டோ சூப், சாலட்ஸ், அச்சார், வெஜ் ஸ்டூ, ரைஸ்,தால், டோக்ளா, தஹி காரட் ஹல்வா, பாவ்பாஜி பன் , பாவ் பாஜி மசாலா. உணவருந்திய ஹோட்டலை விட்டு வெளியே வந்ததும் ஷ்வைஸர்ஹாஃப் எனப்படும் ஹோட்டலைப் பார்த்தோம். அது 1875 இல் இருந்து இந்த ஹோட்டல் நூற்றாண்டுகள் தாண்டியும் சேவை செய்து வருகிறது.

எங்கள்பர்க்கில் இன்னொரு சிறப்பு பாராசெய்லிங். இதோ இன்னும் சிலரும் மலைப்பாங்கான பகுதியில் ஆங்காங்கே பறந்து கொண்டிருந்தார்கள். நமக்கு மலைக்குச் சென்றதை விட இதைப் பார்த்தால் அதிகம் தலை சுற்றியது.


உயர்ந்த கூர்மையான உச்சிச் சிகரங்கள் கொண்டது டிட்லிஸ். ஆதிகாலத்தில் இதை வெடன்ஸ்டாக் , நோலன் என்றெல்லாம் அழைத்திருக்கிறார்கள். 1435 களில் அங்கே வாழ்ந்த விவசாயி டுடிலோஸ் என்பவரை கௌரவிக்கும் விதமாக டுடிலோஸ் மலைச்சிகரம் என்றழைக்கப்பட்ட அது பேச்சு வழக்கில் டிட்லிஸ் என மாறி இருக்கிறது.

இச்சிகரத்தில் 1904 இல் முதல் பனிச்சறுக்குச் செய்தவர்கள் ஜோஸப் க்ஸ்டர், வில்லி அம்ரைன் என்பவர்கள். 1967 இல் தான் மேலே செல்ல முதன்முதலில் கேபிள் காரை அமைத்திருக்கிறார்கள். அதுவரை நடராஜா சர்வீஸ்தான். 2012 இல் தான்  க்ளிஃப் வாக் ( சஸ்பென்ஷன் ப்ரிட்ஜ் )  எனப்படும் தொங்குபாலத்தைத் திறந்திருக்கிறார்கள்.

இது எங்கள்பர்கர் ஆ என்னும் நதியா தெரியல.ஆனால் எங்கள் பயணப்பாதையில் பக்கவாட்டில் ஓடிவந்து கொண்டிருந்தது சில கிலோமீட்டர் தூரம்.


வெனிஸையும் ஆல்ப்ஸ் மலைகளையும் ஒரு முறையாவது பார்க்கவேண்டும். அதற்கு வாய்ப்பாக அமைந்தது இந்த ஐரோப்பியப் பயணம். அதிலும் நாங்கள் சென்றது கோடைகாலம் என்றாலும் ( ஜூலை ) டிட்லிஸ் சிகரத்தில் சறுக்கி விளையாடிப் பனி தூவி மகிழ்ந்தது மறக்க முடியாத அனுபவம். சம்மர்தான் இங்கே செல்ல ஏற்ற க்ளைமேட். விடுமுறைகளில் வாய்ப்புக் கிடைத்தால் ஒருமுறையேனும் சென்று வரவேண்டிய ஊர்களில் ஒன்றாக டிட்லிஸையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். 

4 கருத்துகள்:

 1. பயண அனுபவங்களையும், உணர்வுகளையும் புனைவாக்கினால் சிறப்பாக இருக்கும்....

  பதிலளிநீக்கு
 2. சிறப்பான படங்கள். அனுபவங்களும் நன்று.

  பதிலளிநீக்கு
 3. Happy see your tour pictures Thenammai with place of visits details. Lovely places.

  பதிலளிநீக்கு
 4. முயல்கிறேன் துரை அறிவழகன் சார்

  நன்றி வெங்கட் சகோ

  நன்றி மணவாளன் சார்

  வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...