எனது இருபது நூல்கள்

எனது இருபது நூல்கள்
எனது இருபது நூல்கள்

சனி, 22 ஆகஸ்ட், 2020

லூசன் ஸ்வான் லேக்கும் லயன் மான்யுமெண்டும்.

ஸ்விட்ஜர்லாந்தின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ளது லூசன் ஏரி. இது இங்கிருக்கும் ஏரிகளில் நான்காவது மிகப் பெரிய ஏரியாகும்.

ரோலக்ஸ் வாட்சுகள், கிச்சன் கட்லெரி செட், சாக்லேட்டுகளுக்குப் புகழ்பெற்றது ஸ்விட்ஜர்லாந்த். ரோஜர் ஃபெடரர், ஃபாண்டு சீஸ், ஜீன் ஜாக்கஸ் ரூஸோ என்னும் தத்துவஞானி, பௌதீக விஞ்ஞானி ஆல்பர்ட் ஈன்ஸ்டின், ஆல்ப்ஹார்ன் எனப்படும் நீளக் கொம்பு வாத்தியம், பனிச்சறுக்கு விளையாட்டு எல்லாமே இங்கே ஸ்பெஷல்.

அதோடு அன்னங்கள் மிதக்கும் ஏரி, சிங்க நினைவுச் சின்னம் , ஏரியை ஒட்டிய மிகப்பெரும் ஹாலில் இசை நிகழ்ச்சி ஆகியனவும் ரோட்டோர பொம்மலாட்டமும் இசை நிகழ்ச்சியும் கண்டு களித்தோம்.

இந்த நாட்டுக் கொடியில் இருக்கும் ரெட் கிராஸ்தான் ரெட் கிராஸ் அமைப்பினர் கொடியிலும் இடம்பெற்றுள்ளது.


யூரோப் டூரின் இரண்டாம் நாள் ரைன் நீர்வீழ்ச்சியைப் பார்த்துவிட்டு லூசன் நகரை நோக்கித் தொடங்கியது எங்கள் பயணம். எங்கள் கோச்சின் சாரதி மைக்கேல். கோச்சின் மேனேஜர் பெயர் சந்தோஷ் ராகவன். என்னதான் அவசரம் என்றாலும் 100 கிமீ வேகத்துக்குமேல் ஓட்டமாட்டார் எங்கள் கோச் கேப்டன். இது ஒரு நிரந்தர விதி :)


இப்படியாக நாங்கள் ப்ளாக் ஃபாரஸ்ட், ரைன் நீர்வீழ்ச்சி எல்லாம் பார்த்துவிட்டு மாலை நேரம் லூசனுக்கு வந்து சேர்ந்தோம். ஃபேரி டேல்ஸில் பார்ப்பது போல் கண்கவர் கட்டிடங்கள் கண்ணையும் கருத்தையும் கவர்ந்தன. கோதிக் கட்டிடக் கலையைப் பின்பற்றிக் கட்டப்பட்டவை இங்கே உள்ள சர்ச்சுகள். ஒவ்வொரு சர்ச்சிலும் இதுபோல் உயரமான கோபுர அமைப்பும், பெல் டவரும், காற்றின் திசைக்கேற்ப சுழலும் சேவல் சிலையும் உண்டு.

ரீஸ் ( REUSS) என்னும் நதி இங்கே வந்து கலக்கிறது. லூசனில் பதிமூன்றாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஐரோப்பாவின் பிரபலமான (புகைப்படத்தில் காணப்படும் ) சேப்பல் ப்ரிட்ஜ் - KAPELLBRUKE எனப்படும் மேலே மூடப்பட்ட 204 மீட்டர் நீளமுள்ள வெகு அழகான மரப்பாலம் ஒன்றும் உண்டு.  அதன் பக்கத்திலேயே ஒரு வாட்டர் டவரும் உண்டு. இந்த மரப்பாலம் முழுக்க 17 ஆம் நூற்றாண்டின் லூசன் நகரைச் சித்தரிக்கும் ஓவியங்கள் அணிவகுக்கின்றன. !


இதோ லூசன் லேக்கின் பேருந்து மற்றும் நடைபாதைக்கு வந்துவிட்டோம். பரந்து விரிந்திருக்கிறது இந்த ஏரி. ஸ்டீமர் போட் மற்றும் பயணியர் போக்குவரத்துக்காகவும் தோணிகள் உண்டு. இங்கே ஒருவர் நீர் விளையாட்டுக்களில் பயன்படுத்தும் ஏர் போட்டைத் தலையில் கவிழ்த்து சிக்னலுக்காக நிற்கிறார். அதில் ஸ்விஸ் கொடியும் இணைக்கப்பட்டுள்ளது.

இண்டர்நேஷனல் படகுப் போட்டிகள், யாட்ச் எனப்படும் பாய்மரப் படகுப் போட்டிகள், மோட்டர் படகுப் போட்டிகள், டைவிங் போட்டிகள், நீர் விளையாட்டுகள் இங்கே பிரபலம். லூசன் யாட்ச் கிளப் என்ற அமைப்பு 1941 இல் இருந்து இங்கே பாய்மரப்படகு ஓட்டும் போட்டிகளை நடத்துகிறது.


மக்கள் அனைவரும் ஸ்விஸைச் சேர்ந்தவர்கள் என்றபோதிலும் ஆங்கிலம், ஜெர்மன், இத்தாலி மற்றும் ரோமன்ஷ் ஆகிய நான்கு மொழிகளில் பேசுகிறார்கள்.

லூசன் ஏரியைச் சுற்றி ஒரே கேளிக்கை கொண்டாட்டங்கள்தான். சாலை ஓரங்களிலும் பொம்மலாட்டக்காரர்கள் நமக்குப் புரியாத மொழியில் பாடல்கள் பாடி அழகான பொம்மைகளை இயக்குகிறார்கள்.


அவை வயலினும் வாசிக்கின்றன. !

லூசன் ஏரியின் அன்னங்கள் இப்பாடல்களைக் கேட்டுப் பொன்மாலைப் போதில் சிறகுகள் கோதி படிக்கட்டுக்களில் நடைபயில்கின்றன.

நீர் விளையாடி மீன் பிடித்து உல்லாசமாய் மிதக்கும் அன்னங்கள்.

ஸ்விஸ் கொடி தாங்கிய பொதுமக்களுக்கான போக்குவரத்துப் படகுகளும் உல்லாசப் படகுகளும் அவ்வப்போது இந்த அன்னங்களைப் பாதிக்காமல் கடந்து செல்கின்றன.

2000 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. கேகேஎல் ( KKL) கல்சுரல் & கன்வென்ஷன் செண்டர்.  ஏரியை ஒட்டி இருக்கும் இந்த  கன்சர்ட் ஹாலில் நாங்கள் சென்றபோது இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. சுற்றிலும் ஏரியும் டோம் போன்ற ஷேப்பில் குடிலில் தின்பண்டக் கடைகளும் இருந்தன.

கே கே எல்லில் ஒரு பாரும் உள்ளது. இங்கே குடிவகைகளை ஆர்டர் செய்துவிட்டு ஆற அமர அமர்ந்து பார்க்கலாம். சிலர் ஏரியின் பக்கவாட்டில் அமர்ந்து நீரில் காலைத் துளைத்தபடி இசையைக் கேட்டுக் களித்துக் கொண்டிருந்தார்கள்.

ஜீன் நோவல் என்ற ஃப்ரெஞ்ச் பொறியாளரால் ஃப்ரெஞ்ச் பாணியில் கட்டப்பட்ட மிகப் பிரம்மாண்டமான இந்த ஹாலில் எந்நேரமும் இசை ஒலித்துக் கொண்டே இருக்கிறது. ரஸ்ஸல் ஜான்ஸன் என்ற பொறியாளர் இதன் துல்லியமான ஒலி அமைப்புக்காகப் ப்ரத்யேகமான டிசைன்களை வடிவமைத்துள்ளார்.

அலைகளின் வெள்ளி வெளிச்சம் அடிக்கும்படி இதன் விதானம் அமைக்கப்பட்டுள்ளது. தோராயமாக  12,000 மீட்டர் உயரமுள்ளது.!


நாங்கள் சென்றபோது இந்தப் பெண் கிடாரில் இசையமைத்துப் பாடினார்.
இவரைச் சுற்றிலும் இசைக்கருவிகளும் ஒலிபெருக்கிகளும் இசைஞர்களுமாக இருந்தார்கள். பார்வையாளர்கள் நகர்ந்துகொண்டும் தின்பண்டக் கடைகளில் உண்டுகொண்டும் இசையைக் களித்துக் கொண்டிருந்தார்கள். உலகின் அனைத்துத் தின்பண்டங்களும் கிடைக்கின்றன. மிளகாய் பஜ்ஜியில் இருந்து ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ், லஸான்யா வரை. விலை சுமார் 5, 7, 10 யூரோக்கள். காஃபியும் 3 யூரோவிலிருந்து கிடைக்கிறது. பெரும்பாலோர் பீர்தான் அருந்துகிறார்கள். 10 யூரோவுக்குக் கிடைக்கிறது.

சிலர் சில நிமிடம் நின்றும் அவ்வப்போது நகர்ந்தும் கேட்டுச் சென்றார்கள். இல்லாவிட்டால் டூர் மேனேஜர் விட்டுப் போய்விடுவார். நமது கோச்சை அடுத்த நாட்டில் நம் செலவில்தான் சென்று பிடிக்க வேண்டும். :)


அங்கே இருந்த மினிஃபால்ஸின் முன்னால் ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டோம்.

பின்புறம் இருக்கும் லூசன் ஏரியும் மலைத்தொடர் காட்சியும்.

மீண்டும் சில அன்னங்களைப் புகைப்படம் எடுத்துக் கொண்டு லூசன் ஏரியை விட்டுப் புறப்பட்டோம்.

லோக்கல்/உல்லாசப் பயணிகள் மோட்டர் படகுத்துறை.

லூசன் ஏரிக்குப் பக்கவாட்டில் உள்ள பேருந்துப் பாதை.இதில் சென்று ஷாப்பிங் செய்தோம்.
இங்கே உள்ள கடைகளில் வாசனைத் திரவியங்கள், மொமண்டோக்கள், கத்திகள் ( கட்லெரி செட் ) , சாக்லேட்டுகள் கிடைக்கின்றன.ரோலக்ஸ் வாட்சுகள் பிரசித்தம்.

உல்லாசப் பயணிகளைக் கவர ரோட்டில் ட்ராம் வண்டிபோல் மினி ட்ரெயின் ஓடுகிறது. ப்ரஸ்ஸில்ஸிலும், பிஸா டவரிலும்,  இங்கேயும் நான் ரசித்த அதிசயம் இதுதான்.

ஸ்விஸ் சாக்லேட்டுகள் பலரகம் பலவிதம். சில சாக்லேட்டுகள் சாதாரண வெப்ப நிலையில் உருகிவிடும். டார்க் சாக்லெட்டுகளில் இருந்து சாக்லெட் பிஸ்கட்டுகள், வேஃபர்ஸ், வேஃபிள்ஸ் , டோநட்ஸ் வரை விதம் விதமாய் ரகம் ரகமாய் சுவைசுவையாய்க்  கிடைக்கும்.

ஸ்விஸ் சாக்லெட்டுகள் உலகப் பிரசித்தம். பாக்மேன் என்ற சாக்லேட்டுகள் பன்னிரண்டரை யூரோ. பக்கத்திலேயே விதம் விதமாய் ஃப்ளேவர்ட் ஐஸ்க்ரீம்கள் மற்றும் குளிர்பானங்கள்.

கடையில் சிறிது சாக்லேட்டுகள் வாங்கிக்கொண்டோம்.

ஆரஞ்ச் பழச்சாறு வாங்கி அருந்திவிட்டு லோவண்டென்க்மெல் எனப்படும் லயன் மான்யுமெண்டைப் பார்க்கப் புறப்பட்டோம்.

வழியில் ஒரு சாலையோர இசைஞர் தன் கிடாரில் இசைத்துப் பாடிக் கொண்டிருந்தார்.

இதோ வந்துவிட்டோம் லயண்டென்க்மெல் என்னும் லயன் மான்யுமெண்டுக்கு. இந்த சிங்க நினைவுச் சின்னம் லயன் ஆஃப் லூசன் என்று அழைக்கப்படுது. பெர்டெல் தோர்வால்ட்சன் என்ற சிற்பக் கலைஞரால் வடிவமைக்கப்பட்டது இது. 1820 - 21 இக்காலகட்டத்தில் லூகாஸ் அஹார்ன் என்ற கலைஞர் இதைச் செதுக்கினார்.
1792 ஆம் ஆண்டில் பிரெஞ்சுப் புரட்சியின் போது புரட்சியாளர்கள் பாரிஸில் உள்ள டுலீரிஸ் அரண்மனையைத் தாக்கினர்.அப்போது படுகொலை செய்யப்பட்ட சுவிஸ் காவலர்களை இது நினைவுகூர்வதற்காக இது அமைக்கப்பட்டது.

17 ஆம் நூற்றாண்டில் பதினாறாம் லூயிஸ் என்ற பிரஞ்சு மன்னன் தனது குடும்பத்தினருடன் வெர்சாய்லிஸ் அரண்மனையில் இருந்து டூய்லரிஸ் அரண்மனைக்குச் செல்லவேண்டி இருந்தது. அங்கேயிருந்து மேண்டிமோடி என்ற இடத்துக்குத் தப்பிச் செல்ல முயன்றார். ஏனெனில் அங்கு அவரது ராணுவமுகாம் இருப்பதால் தன்னைக் காத்துக் கொள்ள இயலும் என எண்ணினார்.

ஆனால் கிளர்ச்சியாளர்கள் குவிந்து அவரை முற்றுகையிட்டனர். அவரைக் காக்க ஸ்விஸ் காவலர்கள் உடனடியாக செயல்பட்டு அவரது குடும்பத்தினரை டூயிலரீஸ் அரண்மனையில் இருந்து தப்பிவிக்க வைத்து அழைத்துச் சென்றனர்.

இந்தப் போராட்டத்தில் கிளர்ச்சியாளர்கள் வீசிய வெடிமருந்துகள் சுவிஸ் காவலர்கள் பலரைப் பலி வாங்கின. அவர்களின் சேவையை நினைவுகூர்ந்து கௌரவிக்கும் வண்ணமாகவே இந்த லயண்டென்க்மல் நிறுவப்பட்டுள்ளது.
.

இது சுவிட்சர்லாந்தின் மிகவும் பிரபலமான நினைவுச்சின்னங்களில் ஒன்று. இது. சுவிஸ் நினைவுச்சின்னமாகப் பாதுகாக்கப்படும் இதைக் காண நம்மைப் போல் வருடாவருடம் ஒன்றரை மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகிறர்கள். 2006 இல் இருந்து பொதுமக்கள் பார்வைக்கு இது திறந்துவிடப்பட்டுள்ளது.
இவை லூசனில் இருக்கும் கட்டிடங்களில் சில. இது ஆர்மிக்கான கட்டிடம் என்று கோச் மேனேஜர். கூறினார். வெளிப்புறங்களில் ஓவியங்கள் வரைந்த பாரம்பரியக் கட்டிடங்கள் சிலவற்றையும் பார்த்தோம்.

இங்கே காஞ்சி இந்தியன் ரெஸ்டாரெண்ட் என்ற ஒரு உணவகமும் உள்ளது.


மொத்தத்தில் லூசன் பார்க்க வேண்டிய ஒரு நகரம். லூசன் போனா மறக்காமல் லயன் மான்யுமெண்ட்,  ஸ்வான் லேக் பார்த்துட்டு, இசை நிகழ்ச்சிகள் கேட்டுட்டு சாக்லெட்ஸ், கட்லெரிஸ், வாட்சஸ் வாங்கிட்டு வாங்க.

4 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...