எனது நூல்கள்.

வெள்ளி, 19 ஏப்ரல், 2019

இன்னா செய்தாருக்கும் நன்னயம் செய்த அரசன். தினமலர் சிறுவர்மலர் - 13.


இன்னா செய்தாருக்கும் நன்னயம் செய்த அரசன்.

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல் என்று திருக்குறளில் படித்திருப்பீர்கள் குழந்தைகளே. ஒரு மன்னன் தனக்கு இன்னா செய்த எதிரி மன்னனையும் தன் சகோதரனையும் கூட மன்னித்து அவர்களுக்கு இனியன செய்ததைப் படிக்கப் போகிறோம் வாருங்கள்.
மதுரையை இராஜேந்திர பாண்டியன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவனது சகோதரன் பெயர் இராஜசிங்கபாண்டியன், இராஜேந்திர பாண்டியன் மிகுந்த இறைபக்தி கொண்டவன். நேர்மையானவன், வீரத்திருமகன். ஆனால் அவனது தம்பியான இராஜசிங்க பாண்டியனோ வஞ்சக எண்ணம் கொண்டவன். இராஜேந்திர பாண்டியனின் மேல் பொறாமை கொண்டவன்.
ஒரு முறை காடுவெட்டிச் சோழன் என்ற மன்னன் மதுரை சொக்கநாதரைத் தரிசிக்க விரும்பினான். எனவே இராஜேந்திர பாண்டியனுடன் நட்புக் கொண்டு மதுரை வந்து தரிசித்துச் சென்றான். பாண்டியனை நேரில் பார்த்ததும் அவனது நற்குணங்களால் கவரப்பட்டு அவனுக்குத் தன் மகளைத் திருமணம் செய்து கொடுத்து இரு நாடுகளுக்கும் இணக்கம் ஏற்படுத்திக் கொள்ள விரும்பினான்.

இதை அறிந்த இராஜசிங்க பாண்டியன் காடுவெட்டிச் சோழனை தனியாகச் சென்று  சந்தித்து நயவஞ்சமாகப் பேசி தனக்கே அவனது மகளை மணம் செய்து தரக் கேட்டான். பாண்டி நாடும் தன் வசமாகிவிடுமென்று தப்புக் கணக்குப் போட்ட காடுவெட்டிச்சோழன் அவனுக்கே தன் மகளை மணமுடித்தான்.
மருமகனுடன் சேர்ந்து கொண்டு காடுவெட்டிச் சோழன் பல்லாயிரம் படை வீரர்களுடன் மதுரை மாநகரின் நாலாபக்கமும் ஆக்கிரமிக்கத் துவங்கினான். போர் முரசு கொட்டியது. அப்போதுதான் நல்லிதயம் படைத்த இராஜேந்திர பாண்டியனுக்கு அவர்கள் சதித்திட்டம் உறைத்தது.
அண்டை நாட்டு மன்னனான காடுவெட்டிச் சோழனைக் கூட மன்னித்துவிடலாம் ஆனால் கூடப்பிறந்த தம்பி செய்த துரோகம்தான் அவனை செயலற்றதாக்கியது. இருந்தும் சோர்ந்து அமர்ந்துவிடாமல் என்ன செய்யலாமென யோசித்தான்.
உள்ளம் கொந்தளித்துக் கொண்டிருந்தது. கண்களில் நீர் பெருக சோமசுந்தரக் கடவுளை வணங்கித் தன்னை வழிநடத்துமாறு வேண்டினான். நீதியும் தர்மமும் இருக்கும் இடத்தில்தானே கடவுளும் இருப்பார். அவர் கருணைக் கரம் கொண்டு அவனைக் காப்பதாக உறுதி அளித்தார்.
மறுநாள் போர்முனையில் காடுவெட்டிச் சோழனையும் அவனது சகோதரன் இராஜசிங்க பாண்டியனையும் பார்த்த போது நட்புக்கும் உறவுக்கும் மரியாதை அளிக்காமல் அவர்கள் படையெடுத்து வந்தது பார்த்து மனம் குமுறியது இராஜேந்திர பாண்டியனுக்கு.
இப்படிப்பட்டவர்களை நம்பினோமே அடுத்துக் கெடுத்துவிட்டார்களே என்ற ஆதங்கமும் பெருகியது அவனுக்கு. அவன் போருக்குத் தயாராக இல்லாததால் அவனது பக்கம் படை சொற்பமாகவே இருந்தது. ஆனால் காடுவெட்டிச் சோழனின் பக்கம் மாபெரும் சைன்யமே நின்று கொண்டிருந்தது.
மனம் தளராமல் இறைவனின் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு இராஜேந்திர பாண்டியன் தனது படைகளுடன் முன்னேறிப் பொருதத் துவங்கினான். யானை, படை, சேனை, பட்டாளம் அனைத்தும் கொளுத்திய வெய்யிலால் வாடி வதங்கத் துவங்கின. இறைவனின் நெற்றிக்கண்போல் கொழுந்துவிட்டு எரிந்தது வெய்யில்.
இரு பக்கத்து வீரர்களும் களைத்துச் சோர்ந்து போனார்கள். போரில் அடிபட்டு வீழ்ந்து மரித்தவர்களும் காயம்பட்டவர்களும் குன்றுபோலக் கிடந்தார்கள் என்றால் வெய்யிலால் தவித்து தாகத்தால் வரண்டு மயங்கிக் கிடந்தவர்கள் மலைபோல வீழ்ந்து கிடந்தார்கள்.
சோழனின் படை கடல் போல் இருந்தாலும் தாகவிடாயால் தவித்துக் குளம்போல் வற்றத் துவங்கியது. அதே சமயம் இராஜேந்திர பாண்டியனின் படைகளுக்கு சோமசுந்தரக் கடவுள் முதியவர் தோற்றத்தில் வந்து ஒரு வற்றாத சுனை மூலம் நீர்ப்பந்தல் அமைத்துத் தாகவிடாய் நீக்கினார்.
கங்கையைச் சுமந்த இறைவனின் கைகளில் இருந்து  வைகை பெருகியது. அதைக் குடித்தவர்கள் அமிர்தம் அருந்தியவர்கள் போலத் தெம்பு பெற்றார்கள். மீண்டு எழுந்து போரிட்டு எதிரிப் படைகளைத் தோற்றோடச் செய்தார்கள். காடுவெட்டிச் சோழனது படைகள் புறமுதுகிட்டு ஓடின. சோழனையும் இராஜசிங்க பாண்டியனையும் வளைத்துப் பிடித்தது இராஜேந்திர பாண்டியனது படை.
அரசவையில் இராஜேந்திர சோழன் முன்பு கைது செய்யப்பட்டு நின்றார்கள் காடுவெட்டிச் சோழனும், இராஜசிங்கப் பாண்டியனும். நட்பைக் கருதாமல் துரோகம் செய்தவனும் உறவைக் கருதாமல் துரோகம் செய்தவனும் அருகருகே கைவிலங்கு மாட்டித் தலைகுனிந்து நின்றார்கள் இராஜேந்திர பாண்டியனின் முன்.
சர்வ வல்லமை படைத்த அரசனான இராஜேந்திர பாண்டியன் நினைத்திருந்தால் இருவரையும் சிரச்சேதம் செய்திருக்க முடியும். அல்லது காராக்கிரகத்தில் அடைத்து வாழ்நாள் முழுவதும் பாதாளச் சிறையிலேயே வைத்திருக்க முடியும். ஆனால் பெருந்தன்மை மிக்க இராஜேந்திர பாண்டியன் இருவரையும் பார்த்தான். மன்னிக்கத் திருவுளம் கொண்டான். கைவிலங்குகளை நீக்கச் செய்தான்.
”காடுவெட்டிச் சோழா நாடு பிடிக்கும் ஆசையில் குற்றம் புரிந்தீர். உனது குற்றங்களைப் பொறுத்தேன். நீவிர் உம் நாடு திரும்பிச் செல்லலாம்”  என்று கூறி அவனுடைய படைகளுடன் கௌரவமாகத் திருப்பி அனுப்பினான்.
தனது தம்பியை அருகே அழைத்து “ மன்னித்தேன். இனி இப்படிச் செய்யாதிரு “ என்று அறிவுரை கூறினான். மேலும் அவனது செல்வம் மற்றும் அரசபோக உரிமைகளைக் குறைத்துக் கண்காணிப்பில் வைத்து தனியாக வைத்தான்.
இப்படி ஒரு நல்ல எண்ணம் கொண்ட மன்னனான இராஜேந்திர பாண்டியன் தனக்கு இன்னா செய்த பகை நாட்டு மன்னனையும் தன் தம்பியையுமே மன்னித்து அவர்களுக்கு நன்னயம் செய்துள்ளான். அவனைப் போல நாமும் நமக்கு இன்னா செய்தாரையும் மன்னித்து அவர்கள் நாண அவர்க்கு நன்னயம் செய்து விட உறுதி ஏற்போம் குழந்தைகளே.

டிஸ்கி:-  இந்தக் கதை இதிகாச புராணக் கதைகள் என்ற தலைப்பில் 12. 4. 2019  தினமலர் சிறுவர்மலர் இதழில் இடம்பெற்றுள்ளது. நன்றி தினமலர் சிறுவர் மலர், தனது அழகான ஓவியங்களால் கதைக்கு எழில்கூட்டும் ஓவியர் அஷோக் & எடிட்டர் தேவராஜன் ஷண்முகம் சார்.

1 கருத்து :

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...