எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 23 ஏப்ரல், 2019

மின் புத்தகங்களும் புத்தகக் குழந்தைகளும்.


மின் புத்தகங்களும் புத்தகக் குழந்தைகளும்.


புத்தக வாசிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அதே தினம் இன்று புத்தக பதிப்புரிமை நாளாகவும் கொண்டாடப்படுவது கவனத்தில் கொள்ளவேண்டிய ஒன்று. ஏனெனில் ஆன்லைனிலேயே அனைத்தையும் வாசிக்கும் தெரிந்துகொள்ளும் ஒரு தலைமுறை உருவாகிவிட்டது.
புத்தகமாக அச்சிடுவது ஈ புக் எனப்படும் மின்னூல்கள் இரண்டுக்கும் இருக்கும் சாதக பாதகங்களைப் பார்ப்போம். ஈ புக் என்றால் அமேஸான் போன்ற தளங்களில் புத்தகம் வெளியிடுவது. இது வலைப்பூவில் இடுகை போடுவது போல் எளிதுதான்.

அமேசானில் ஆங்கிலம் தமிழ் மட்டுமல்ல உலகின் எல்லா மொழிகளிலும் நூல் வெளியிடலாம். 


முதலில் அமேஸானில் ஒரு கணக்கு ஆரம்பிக்க வேண்டும். ஜி மெயில் ஐடி பாஸ்வேர்டு கொடுத்தே ஆரம்பிக்கலாம். அதில் புத்தகம் வெளியிடுவது மிக எளிது. வேர்ட் ஃபைலில் புத்தக வடிவில் தயார் செய்து வைத்துக் கொண்டால் போதும். அட்டை முதலியவற்றை அமேஸானிலேயே தயார் செய்துகொள்ளலாம்.

நம் புத்தகத்தின் பெயர், அதன் லேபிள்கள், ஆசிரியர்(நம்) பெயர், போன்றவையும் எத்தனை வயதுக்கு உட்பட்டவர்கள் படிக்கக்கூடியதாக இருக்கும். எந்த ஜானரில் உள்ள நூல் ( அரசியல், சமூகம்,மருத்துவம், கல்வி, காதல், காமம், நூல்கள், ஆரோக்யம், விளையாட்டு - அதன் உட்பிரிவுகள் ) குறிப்பிட வேண்டும் . இது முதல் பக்கம்.

அடுத்த பக்கத்தில் நம் நூலின் வேர்டு ஃபைலைக் கொடுத்து புத்தகத் தலைப்புடன் கூடிய அட்டையை பதிவேற்றவேண்டும். இது சில நிமிடங்கள் எடுக்கும்.

மூன்றாம் பக்கம் நம் புத்தகத்துக்கான விலை ( இந்திய & சர்வதேச பணமதிப்பில் ) நிர்ணயம் செய்து அதை இரவலாகவோ வாடகைக்கோ தர சம்மதம் தெரிவித்தலும் , நம் நூல் விற்றபின் பணத்தை நம் வங்கிக்கணக்கில் அமேசான் செலுத்த வேண்டி நம் வங்கி எண் விபரங்களும் கொடுக்க வேண்டும். பொதுவாக நாம் வைக்கும் விலை ஒரு டாலர் என்றால் 30 சதமும், அதற்கு மேல் என்றால் 70 சதமும் நமக்குத் தரும்படி நிர்ணயிக்கலாம்.

இதோடு முடிந்தது. நம்வேலை.மறுநாள் அதிகாலை நம் புத்தகம் அமேசான் மின்னூல் தளத்தில் பளிச்சிடும். அதை வாட்ஸப் ஃபேஸ்புக் மற்றும் நம் நண்பர்கள் வட்டாரத்தில் ப்ரமோட் செய்யலாம்.

புத்தகம் வெளியிட நாம் வேர்டு ஃபைலாக அனுப்பினால் போதும் பதிப்பாளருக்கு. இதில் நம்மோடு பதிப்பாளர், புத்தக விற்பனையாளர் ஆகியோரும் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். நம் படைப்பை லே அவுட் செய்தல், அட்டைப்படம் தயாரித்தல் , எடிட்டிங் செய்தல் ஆகியவற்றுக்காகவும் புத்தகம் போடும்போது நாம் பணம் செலுத்த வேண்டும். இது தவிர பதிப்புச் செலவு.  புத்தகம் தயாராகி வந்தபின் அதை பதிப்பாளர் நம்மிடம் கொடுத்ததும் முடிந்தது அவர் வேலை. 

இதே நாம் பணம் செலவழிக்காமல் பதிப்பாளர் செலவழித்துப் போட்டால் அவர் விலை நிர்ணயம் போன்றவற்றை செய்வார். விற்பனைக்கு ஏற்ப நமக்கு ராயல்டி கிடைக்கும். புத்தகக் கடைக்காரரிடம் அவர் புத்தகங்களை ஒப்படைத்து விற்பதற்கு ஏற்பக் கணக்கு நேர் செய்துகொள்வார்கள்.

புத்தக விற்பனை என்றால் அமேஸானில் போட்டதும் முடிந்தது. இதற்கும் நாம் பதிப்பித்து வெளியிடும்புத்தகங்களுக்கும் நாம் வாட்ஸப், ஃபேஸ்புக் போன்றவற்றில் ப்ரமோட் செய்யலாம். ஆனால் நூலின் பெயருக்கும் விறுவிறுப்புக்கு ஏற்பவே பரபரப்பான விற்பனை இருக்கிறது.

கவிதை கதை கட்டுரை போன்றநூல்களுக்கு அந்த எழுத்தாளருக்கு ( எழுத்துக்கு ) இருக்கும் ஈர்ப்பைப் பொறுத்தே வரவேற்பு அமைகிறது. 2000/- ரூபாய் நிர்ணயம் செய்தாலும் வாங்கத் தயங்காத வாசிப்பாளர்களும் இருக்கிறார்கள். மற்ற எழுத்தாளர்களின் நூல்கள் விலைகுறைவாக நிர்ணயம் செய்தாலும் ஓரளவே விற்பனை ஆகிறது.

எழுத்தாளன் பேசுவதை விட எழுத்து வாசகனோடு பேச வேண்டும். அப்படி இருந்தால் நிச்சயம் விற்பனை அமோகம்தான். அதற்கு சில பல எடுத்துக்காட்டுகள் உள்ளன.

தேவையறிந்து காலமறிந்து வெளியிடப்படும் கட்டுரை நூல்களும், கவிதை, கதை, நாவல் போன்றவைகளும் சரியான வெளிப்படுத்துதல், சந்தைப்படுத்துதல் இல்லாமல் விற்பனையில் தேங்கிக் கிடக்கின்றன. ஆங்கில நூல்கள் விற்பனைக்குக் காரணமே ப்ரமோட் செய்வதுதான். தமிழ் நூல்களுக்கும் அது காலத்தின் கட்டாயமாகி உள்ளது.

மின்னூல்களில் வருமானம் வங்கிக்கணக்கில் சேகரமாகிறது. ஆனாலும் அது ஒருவகையில் புத்தகவடிவ ப்லாக் போன்றே எனக்குத் தோற்றமளிக்கிறது. என்னவெனில் விலைகொடுத்து வாங்கி நம் ஈமெயில் அக்கவுண்டில் பர்சனல் லைப்ரரியில் வைத்து மகிழலாம். வாசிக்கலாம்.

மின் நூலாக இருந்தால் அது தனிப்பட்ட ஒருவரின் சொத்தாகிறது – சில இலவசமாகவும் அளிக்க ( ஈமெயிலுக்கு அனுப்ப )  உதவுகின்றன. பதிப்பிக்கப்பட்ட புத்தகங்களை எத்தனை பேர் வேண்டுமானாலும் படிக்கலாம். 

தகவல் திரட்ட இணையம் மிகவும் உதவுகிறது. ஆனால் புத்தகமாகக் கையில் பிடித்துப் படிக்க மின்னூலை விட பதிப்பிக்கப்பட்டவைகளே எனது முதல் சாய்ஸ். அது எத்தனை பக்கமாக இருந்தாலும். 

அமேஸான் ஈ ரீடரில் சேமித்து செல்ஃபோனில் அல்லது ரீடரில் படிப்பது கண்களுக்கு சிறிது உளைச்சலாகவே உள்ளது. அதை ஈ ரீடர் தற்போது எளிமையாக ஆக்கி இருப்பதாக என் மகன் சொன்னான். எழுத்தைப் பெரிதாக்கிப் படிக்கவும் வசதி உண்டு. என் காதல்வனம் நூலை அவன் வாங்கியபோது அது செல்ஃபோன் மெசேஜ் அளவில் கொடுத்ததாம். காதல்வனம் புத்தகம் 100 பக்கம்தான். அதுவோ ஒவ்வொரு பாராவையும் ஒரு பக்கத்தில் அளித்தது . கிட்டத்தட்ட 500 க்குமேல் பக்கங்கள், படிக்க எளிதாக இருந்தது என்றான்.  

எழுத்தாளருக்குத் தன் படைப்பை ஆவணப்படுத்துவதை மின் நூல் எளிதாயிருக்கிறது. யாரையும் கேட்கவேண்டாம். எதையும் அண்டவேண்டாம். அவருக்குப் பின்னும் அவருடைய நூல் மின் நூலாக உலாவந்து கொண்டிருக்கும். மக்கிப்போக வேலையில்லை.

ஆனால் புத்தகமாக அது பதிப்பிக்கப்படும்போது குறிப்பிட்ட காலக்கெடு அதற்கு உண்டு. அதிகபட்சம் 50 இல் இருந்து 100 வருடங்கள். அதன் பின் பராமரிப்புப் பொறுத்து அதன் பழமையைக் காக்கலாம். ஆனால் புத்தகமாக பதிக்கப்பட்டு வரும்போது அதன் புதிய வாசம் பிறந்த மழலையின் பச்சை மணத்துக்கு ஒப்பானது. அத்தோடு அது கையில் தவழும்போது புதிதாய்ப் பிறந்த குழந்தையை ஏந்தும் பரவசத்தை அதன் ஆசிரியருக்கு நிச்சயம் தரக்கூடியது. ஏன் வாசகருக்கும் கூட. 

மின்னூல் மூலம் ஒவ்வொருவரும் தமது நூல்களை ஆவணப்படுத்துதல் தொடங்கிவிட்டாலும் குறைந்தது இன்னும் 50 ஆண்டுகள் வரையிலுமாவது பதிப்பிக்கப்பட்ட புத்தகங்களின் ஆட்சி கோலோச்சிக் கொண்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இதுவரை அமேஸானில் என் இருபது நூல்கள் வெளியாகி உள்ளன. ஒரு நூல் என்னைப் பற்றி முபின் சாதிகா அவர்கள் அனுராகம் பதிப்பகத்துக்காக ( கலைஞன் பதிப்பகம் ) எடுத்த பேட்டி தொகுக்கப்பட்டுள்ளது. இனிய புத்தக நாள் வாழ்த்துக்கள் மக்காஸ். 

3 கருத்துகள்:

 1. தகவல் களஞ்சியமே, வாழ்க! புத்தகத் திருநாளில் பொருத்தமான தகவல் -- திருத்தமாகவும். தகவல் பகிர்வோர் பெரும்பாலும் கருத்துரைப்பதில்லை. கருத்துரைபோர் பெரும்பாலும் நடுநிலை பேணுவதில்லை.நடுநிலைக் கருத்துரையும் தகவலுரையும் தங்கள் தனி முத்திரை. அருமை

  பதிலளிநீக்கு
 2. நன்றி யாழ்பாவண்ணன் சகோ

  நன்றி நலந்தா செம்புலிங்கம் சார்

  வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...