எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 20 ஏப்ரல், 2019

சாட்டர்டே போஸ்ட். திரு விவிஎஸ் சார் கூறும் க்ரவுண்ட் ரியாலிடீ.

இந்தவார சாட்டர்டே போஸ்டில் திரு விவிஎஸ் சார் கூறும் கிரவுண்ட் ரியாலிடீ பற்றித் தெரிந்துகொள்வோம். 

கவனிக்க வேண்டிய கிரவுண்ட் ரியாலிடீ !

கையகலச் சொந்த நிலம்.  யாருக்குத்தான் இல்லை இந்தக் கனவு.  நியாயமான ஒன்றும்தானே !  ஆனால் அதை வாங்குவதில்தான் நமக்கு எத்தனை அவசரம் !

1200 சதுர அடி.  செங்கல்பட்டிரிலிருந்து 2 கிலோ மீட்டரில்.  ரூ 5000 முதல் தவணை.  பின்னர் ரூ 500  இ எம் ஐ.  இந்த வகையில் அடிப்படை விவரங்கள் கொண்ட சுவரொட்டி. 

கற்கண்டு போல் தண்ணீர்.  5 அடி ஆழத்தில்.  உடனடியாக வீடு கட்டி குடி போகலாம்.  சுற்றிலும் இருக்கும் வீடுகளின் ஃபோட்டோ.  நாளேட்டில் விளம்பரம்.  


“இந்த எடத்துல நெலம் வாங்கணுமா ?  இன்னைக்கு ரெண்டாயிரம் கொடுங்க ஸார். மீதிய மாசா மாசம் கொடுங்க.” – இரண்டு கைகளையும் அப்படியும் இப்படியுமாக அசைத்து தொகுப்பாளினி பேசுகிறார்.  உச்சி வெய்யில்.  அவரது பின்புலத்தில் பேருந்துகளும் மகிழுந்துகளும் அப்படியும் இப்படியுமாகச் ”சர் சர்” என்று ஓடுவது தெரிகிறது.

இவையெல்லாம் நம்மை ஈர்க்கச் சொல்லப்படும் விஷயங்கள்.  ஆனால் நமக்குப் பொருத்தமானவைதானா ?

ஒவ்வொருவருக்கும் ஒரு வீடு இருக்க வேண்டும்.  அதுவே ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தின் அடையாளம்.  ஆனால் மேலே சொன்ன விஷயங்கள் மட்டும் போதுமா ?

செங்கல்ப்பட்டிலிருந்து 2 கிலோ மீட்டர்.  எந்த திசையில் ?  நெடுஞ்சாலையிலேயேவா ?  அல்லது உள்ளூர் நோக்கிச் செல்லும் ரோட்டிலா ?  இரண்டாம் ஆப்ஷனாக இருந்தால் குறிப்பிடப்பட்டுள்ள விலை சரியானதுதானா ?  மனையா ? வயலா ? 

கிராமமாக இருந்தால் ஒரு விஷயத்தைப் பார்க்க வேண்டும்.  கைப்பணத்தைப் போட்டு விட்டு வீடு கட்ட லோன் வாங்கலாம் என்று நினைத்து விடக் கூடாது.  கிராமங்களில் பெரும்பாலும் பஞ்சாயத்து போர்ட்-தான் வீடு கட்டும் பிளானை சாங்ஷன் செய்யும்.  அடுத்து வரும் பஞ்சாயத்துக் குழு அதைக் கேள்வி கேட்கலாம்.  அதாவது அனுமதியளிக்கப்பட்ட பிளான் சரியல்ல என்று சொல்லலாம்.

இந்தப் பிரச்சனை பெரும்பாலும் உள்ளூரிலேயே தீர்க்கப்பட்டு விடும்.  ஆனாலும் வீடு கட்டக் கடன் தரும் நிறுவனங்கள் கடன் தர யோசிக்கின்றன.  “நமக்கேன் வம்பு” என்று இருந்து விடுகின்றன.  அதனால் கடன் வாங்கும் எண்ணம் இருந்தால் உள்ளூர் வங்கி அல்லது கடன் தரும் நிறுவனத்தின் கிளையை நாடி விவரங்களை அறிந்து கொண்டவுடன் பத்திரத்தைப் பதிவு செய்யுங்கள். 

சென்னையில் வசிக்கிறீர்கள்.  திருவண்ணாமலைக்கு அருகே ஒரு மனை சகாய விலைக்கு வருகிறது.   வாங்கி ஓரமா போட்டு வைப்போமே என்று நினைக்காதீர்கள். 

நிலத்தை அவ்வப்போது குறைந்த பட்சம் மாதம் ஒரு முறையாவது போய்ப் பார்க்க வேண்டும்.  இல்லாவிட்டால் யாராவது ஆக்கிரமித்து விடுவார்கள்.  அவர்களைக் கிளப்புவது கடினம்.  வீண் செலவும் அதிகம்.

கற்கண்டு போலத் தண்ணீர்.  “டேய்,  பிரசாதம்ன்னு சொல்லி ஜிலேபியக் குடுத்ததக் கூட நா பொறுத்துக்குவேன்.  ஆனா சந்திரபாபு நாயுடு திருப்பதில லட்டுக்குப் பதிலா ஜிலேபி செய்யச் சொல்லி ஆர்டர் போட்டார்ன்னு சொன்னியே ! அதத்தாண்டா என்னால தாங்கிக்க முடியல”ன்னு விவேக் சொல்வாரே.  அது மாதிரிதான் இதுவும்.

ஏஞ்சாமீ !  தண்ணீருக்கு நிரமில்லை. மணமில்லை. சுவையில்லைன்னு ஆறாம் கிளாஸிலேயே படிச்சோமே ? அது மறந்து போச்சா !  கற்கண்டு மாதிரி தண்ணீர் இருந்தா அதில் சாம்பாரையும் ரசத்தையும் செஞ்சா நல்லா இருக்குமா ?

நிலமே மாசத் தவணையில் கிடைப்பது நல்ல விஷயம்தான்.  ஆனால் நம் பெயரில் எப்போது பதிவு செய்யப்படும் ?  உடனேவா அல்லது தவணைகள் முடிந்த பிறகா ?  பின்னதாக இருந்தால் செலுத்திய பணத்திற்கு நமக்கு எந்த உத்திரவாதமும் இல்லை. 

உடனடிப் பதிவு என்றாலும் பத்திரம் யாரிடம் இருக்கும் என்பதையும் அதன் தாக்கம் என்ன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

”அதோ அதுதான் ஸார் ரயில்வே ஸ்டேஷன்.  இதோ இங்கே பாருங்க.  ஹை ஸ்கூல் ஸார்.  அஞ்சு நிமிஷம் நடந்தா பஜார் ஸார்.  எது வேணுமின்னாலும் கெடைக்கும்.”  தரகர் சொல்லும்    இவையெல்லாம் தரமான விஷயங்கள்தான். 

ஆனா ”அங்க ஒரு பிரிட்ஜ் இருக்குதே.  அத இடிச்சிட்டு ஒரு ஏர்போர்ட் கட்டப் போறாங்க ஸார். முன்னாள் முதலமைச்சர் பேரத்தான் வெக்கப் போறாங்க ஸார் “ -  இது நமக்கே கொஞ்சம் ஓவராத் தெரியல ?  நாம என்ன தெனமும் ஆபீஸுக்குப் பிளேன்ல போகப் போறோம் ?  அரை கிலோ மீட்டர்ல ஏர்போர்ட் இருந்தா சத்தம்தான் இருக்கும்.  தூங்கவே முடியாது.

தொலைக்காட்சி விளம்பரத்தில் பின்புலத்தில் ஹைவே தெரிவது ஒன்றும் பெரிய வரம் அல்ல.  நெடுஞ்சாலை விரிவாக்கத்தில் முதல் பலி நாமாகக் கூட இருக்கலாம்.  கொஞ்சம் உள்ளடங்கிய நிலமாக இருந்தாலும் வாங்கிப் போடுங்கள்.   பின்னாளில் மதிப்பு கூடும்.

கிரவுண்ட் ரியாலிடீ என்றால் உண்மையான கள நிலவரம் என்று பொருள்.   நாம் வாங்க நினைக்கும் கிரவுண்டின் ரியாலிடீயையும் (உண்மை மதிப்பையும்) தெரிந்து கொண்டு வாங்குவோமே !

டிஸ்கி:- விசுவின் ஒரு படத்தில் பார்த்ததுபோல் இருக்கு . கள நிலவரம் பற்றி தெளிவாக விளக்கம் கொடுத்தமைக்கு மிக்க நன்றி திரு விவிஎஸ் சார். 

3 கருத்துகள்:

 1. சிறப்பான பதிவு. பல விஷயங்கள் தெளிவாகச் சொல்லி இருக்கிறார். நிலம் வாங்கி ஏமாந்தவர்கள் நிறையவே.

  பதிலளிநீக்கு
 2. நன்றி வெங்கட் சகோ

  நன்றி டிடி சகோ

  வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...