எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 3 ஏப்ரல், 2019

அரசியலில் பெண்களின் பங்கு.

அரசியலில் பெண்களின் பங்கு.


நமது நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் நாடாளுமன்றத்திலும் பாராளுமன்றத்திலும் பெண்களுக்கு 33 சத இட ஒதுக்கீடு கொடுத்துள்ளது. ஆனால் உண்மை நிலவரம் என்னவெனில் நாடாளுமன்றத்தில் 9 சதமும் பாராளுமன்றத்தில் 11 சதமுமே பெண்கள் பங்களிப்பு செய்து வருகிறார்கள். ஆனால் மக்கள் தொகையில் நாம் சரிபாதி இருக்கிறோம்.
பெரிய நிறுவனங்களின் உயர் பொறுப்பிலிருந்து பொதுமக்களுக்கான களப்பணியில் இருக்கும் வரை எத்துறையில் பெண்கள் ஈடுபட்டாலும் அரசியல் என்றால் கொஞ்சம் பின்வாங்கவே செய்கின்றார்கள். சமூக சேவையில் ஈடுபடும் பெண்கள் கூட அரசியல் என்றால் தேர்தல் குளறுபடிகள், கொலைகள், அடியாட்கள் அராஜகம், சட்டமன்ற அமளி , பாராளுமன்ற ஒத்திவைப்பு, புறக்கணிப்பு போன்றவை பார்த்து ஒதுங்கி விடுகிறார்கள்.
பார்க்கப் போனால் சங்ககாலம் தொட்டு இக்காலம் வரை அரசியலில் பெண்களின் பங்களிப்பு இருந்து வந்தே இருந்திருக்கிறது என்றாலும் அது கணிசமான அளவு உயரவில்லை. அதியனை நேர்ப்படுத்திய ஔவை, ஜனகரின் அவையில் இருந்த கார்க்கி வாசக்னவி இவர்கள் மட்டுமல்ல, வேலு நாச்சியார், ஜான்சி ராணி, மங்கையர்க்கரசியார், ஆகியோரும் கூட அரசாட்சியில் ஈடுபட்டு வெற்றி கண்டவர்களே.

இரும்புக்கரம் கொண்ட பெண்மணிகளான ஜெ ஜெயலலிதா, இந்திராகாந்தி மட்டுமல்ல, தமிழக கவர்னர் ஃபாத்திமா பீவி, இந்திய ஜனாதிபதி ப்ரதிபா பாட்டீல், உலக அளவில் மார்க்கரெட் தாட்சர், பெனாசிர் புட்டோ, ஜெர்மனியின் முதல் சான்ஸிலர் ஏஞ்சல் மார்க்கல், ஹிலாரி க்ளிண்டன் ஆகியோரின் அரசியல் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது மட்டுமல்ல பெண்கள் முன்மாதிரியாகக் கைக்கொள்ள வேண்டியதும் கூட. தடைகளைத் தகர்த்து அவர்கள் முன்னேறி அப்பெரும் இடத்தை அடைந்து ஒரு இயக்கத்தின் தலைவியாகவும், நாட்டின் பொறுப்புமிக்க, வானளாவிய அதிகாரமிக்க பதவிகளிலும் அமர்ந்து ஆணையிட்டு நிறைவேற்றியதும் எளிதானது அல்ல.
முவலூர் ராமாமிர்தம் அம்மையார், டாக்டர் முத்துலெக்ஷ்மி ரெட்டி, கவிக்குயில் சரோஜினி நாயுடு, வி என் ஜானகி, ராணி அண்ணாத்துரை, கீதா ஜீவன், பாலபாரதி, கனிமொழி, சுப்புலெக்ஷ்மி ஜெகதீசன், வசுந்தரா சிந்தியா, நடிகைகள் வைஜெயந்திமாலா, ஹேமாமாலினி போன்றோரின் பங்களிப்பும் அரசியலுக்கு உண்டு. இதில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையாரும், டாக்டர் முத்துலெக்ஷ்மி ரெட்டியும் தம் கேள்விகளாலும், உரைகளாலும் அரசவையையே கிடுகிடுக்க வைத்தவர்கள்.
சர்ச்சைக்குள்ளானாலும் இந்தியப் பெண் அரசியல்வாதிகளின் பங்கும் வளர்ச்சியும் கவனிக்கப்படத்தக்கது. டெல்லி முதலமைச்சர் ஷீலா தீட்சித், ஜம்மு காஷ்மீரின் மெஹ்மூபா முஃப்டி, காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, ராஜஸ்தானின் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா, கம்யூனிஸ்ட் கட்சியின் ப்ருந்தா காரத், பாரதீய ஜனசக்தியின் உமா பாரதி, உபியின் முதல்வ மாயாவதி, திரிணமுல் காங்கிரஸ் தலைவி மம்தா பானர்ஜி ஆகியோரின் வெற்றியும் போராட்டங்கள் நிறைந்ததே.
இவர்களில் சிலருக்கு அரசியல் பின்புலம் வாய்த்த குடும்பங்கள் இருந்தாலும் பலர் சுயம்புவாக தானே அரசியலில் ஈடுபட்டு மக்கள் பணி செய்து அந்த இடத்தை அடைந்தவர்கள். மதுரை மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கவுன்சிலர் லீலாவதி போன்றவர்களின் தியாகம் மெச்சத்தகுந்தது. 

தற்போதைய மத்திய அரசில் 75 அமைச்சர்களில், 8 பெண் அமைச்சர்கள் மட்டுமே உள்ளனர். மக்களவையின் முதல் பெண் சபாநாயகராக மீரா குமார் (2009-2014), தற்போதைய சபாநாயகராக சுமித்ரா மகாஜன் (2014-லிருந்து) என இரண்டு பெண் சபாநாயகர்கள் இடம்பெற்றுள்ளனர். தற்போதைய நாடாளுமன்ற மாநிலங்களவையில் மொத்தமுள்ள 243 உறுப்பினர்களில், 26 பேர் மட்டுமே பெண் உறுப்பினர்கள். சுதந்திர இந்தியாவில் பிரதமராகப் பதவி வகித்த ஒரே பெண், இந்திராகாந்தி மட்டுமே. சுதந்திர இந்தியாவில் 1951-ம் ஆண்டு நடைபெற்ற முதல் நாடாளுமன்றத் தேர்தலில், திருவள்ளூர் தொகுதியில் வெற்றிபெற்று, தமிழகத்தின் முதல் நாடாளுமன்ற உறுப்பினராகவும், மூன்று முறை மத்திய அமைச்சராகவும் இருந்தார், மரகதம் சந்திரசேகர். இந்தியாவை விட குறைவான மக்கள் தொகைகொண்ட பாகிஸ்தான், வங்கதேச நாடுகளைவிடவும், நம் இந்திய நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படும் பெண் பிரதிநிதிகளின் எண்ணிக்கை பெருமளவு குறைவு.ஏன் பெண்கள் குறைவு ?

ஆண்களை திறமையால் அளவிடும் சமூகம், பெண்களை உடலியல் ஒழுக்கத்தால் அளவிடும் அளவிற்கு தான் பாலின சமத்துவம் குறித்த புரிதல் உள்ளது. எதிர்காலத்தில் அரசியலில் சிறந்து விளங்குவேன் என்ற யாரும் சிறு வயதில் லட்சியமாக கொள்வதில்லை
தேர்தலில் போட்டியிடவே தயங்கும் மனநிலை மாபெரும் மகளிர் கூட்டங்களின் தலைவிகளுக்கும் இருப்பது வியப்பு. அரசியல் ஒரு சாக்கடை என்றால் அதை சுத்தப்படுத்த வேண்டிய பொறுப்பும் நாட்டை நன்முறையில் நிர்மாணிக்க வேண்டிய பொறுப்பும் மகளிருக்கு உண்டு.
கூட்டங்களில் பேசுவதற்கு ஜனவசியக்கலை தெரிந்திருக்க வேண்டும், பேச்சுக்கலை பயின்றிருக்க வேண்டும் என்பதெல்லாம் இல்லை. உண்மையாக மக்களுக்கு உழைத்து கொடுத்த வாக்குறுதிகளை மெய்ப்பிக்கத் தெரிந்தவர் வந்தால் போதும். மக்களின் தேவைகளை நிறைவேற்றும் மாண்பு இருந்தால் போதும்.
பெண்கள் ஆட்சிக்கு வந்தால் அடிப்படைத் தேவைகளின் அவலம் புரிந்து நிறைவேற்றுவார்கள். தண்ணீர், ரேஷன், கல்வி, மருத்துவம் அனைத்தும் துரித கதியில் இலவசமாகவோ குறைந்த செலவிலோ கிடைக்கும்.  லஞ்சம் ஊழல் குறையும். நாட்டின் பாதுகாப்பும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பும் அச்சத்துக்குரியதாக இருக்காது.  
பெண் கல்வி, வேலைவாய்ப்பு, பணியிடப் பாதுகாப்பு, ஆகியன உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு சீர்படுத்தப்படும். இணைய அச்சுறுத்தல்கள் இருக்காது. எல்லாத்துறையிலும் தாமதங்கள் இருக்காது. பிரச்சனைகளின் வீரியம் பார்த்து அவற்றை உடனுக்குடன் நிறைவேற்றுவதில் பெண்கள் வல்லவர்கள். கறைகள் படாத கரங்களுக்குச் சொந்தக்காரர்கள் இவர்கள்.
சோதனைகள் இல்லாமல் சாதனைகள் இல்லை. மகளிர் மன்றத் தலைவிகள், தொழிற்சங்கத் தலைவிகள் அனைவருமே தங்களது வார்டுகளில் கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடலாம். தங்கள் தொகுதியின் தேவைகளை நிறைவேற்ற முடிந்த அளவு பங்களிப்பு செய்யலாம். இதெல்லாம் அரசியலில் ஈடுபட்டால் எளிதாக நிறைவேற்றலாம்.
ஆண் எதிர்கொள்ளும் சவாலை விட பெண் எதிர்கொள்ளும் சவால் அதிகம்தான். எல்லா இடத்திலும் ஆண் பெண் என்ற பாலியலால் கணக்கிடப்பட்டு கீழிறக்கப்படாமல் இருக்கவும், பாலியல் துஷ்பிரயோகம், வன்முறைக்கு ஆட்படாமல் சுதந்திரமாக செயலாற்றவும் பதவி அவசியம்.


விமன் பொலிட்டிகல் லீடர்ஸ் ( WPL ) என்பது பெண் அரசியல் தலைவிகள் அடங்கிய உலகளாவிய பெரும்குழு. இது அரசியலில் பெண்களின் பங்களிப்பு கணிசமான அளவில் அதிகரிக்கவேண்டுமெனப் பணியாற்றி வருகிறது. இதில் அங்கத்தினராய் இருப்பவர்கள், பெண் அதிபர்கள், முதல்வர்கள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மேயர்கள் ஆவார்கள். இதன் முக்கிய அட்வைஸரி மெம்பர்களில் ஒருவரான சிலி என்ற நாட்டின் அதிபரான மிச்செல் பாச்லெட் என்பவர் மனித உரிமைக்கான ஐநா சபையின் ஹை கமிஷனராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.  

பெண்கள் தினம் வருடா வருடம் கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் பாலன்ஸ் ஃபார் பெட்டர் என்பது தீம். அதன்படி பெண்கள் ஆணைக்குக் கட்டுப்படுபவர்களாக இல்லாமல் ஆலோசனை பெறுபவர்களுள் ஒருவராகத் திகழ வேண்டும் என்ற ஆலோசனையை வெளியிட்டிருக்கிறது.  பெண்கள் தீர்மானம் எடுப்பதில் வல்லவர்கள், மேலும் அவர்களின் தீர்ப்பு சரியாகத்தானிருக்கும் என்றும் கூறுகிறது.


”பெண்கள் இல்லாமல் பெண்களுக்கான எதுவுமே இல்லை” என கென்யன் நேஷனல் அசெம்பிளியைச் சேர்ந்த ஆலிஸ் முத்தோனி வாஹோம் கூறி இருக்கிறார். பெண்களுக்கான சமத்துவமே தாரகமந்திரம் என பெண்களின் குரலை ஓங்கி ஒலிக்கச் செய்கிறது விமன் பொலிட்டிகல் லீடர்ஸ் என்ற அமைப்பு.  
அரசு இதைச் செய்யவில்லை, அதைச்செய்யவில்லை என்ற பரிதவிப்பு இல்லாமல் தாமே முடிவெடுக்கும் மூலாதார சக்தியாக ஆகவேண்டுமெனில் துணிந்து அரசியலில் ஈடுபடுவதே சிறப்பு. 

வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு நாம் என்ன செய்யலாம்? ஓட்டுப் போடுவதன் அவசியத்தை, விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தலாம். நல்ல வேட்பாளரைத் தேர்ந்தெடுங்கள் என பிரச்சாரம் செய்யலாம். ஓட்டுக் கேட்டு வருபவரிடம் துணிச்சலாக நம் குறைகளைச் சொல்லலாம். இந்தக் கோரிக்கையை நிறைவேற்றுவீர்களா எனக் கேள்வி எழுப்பலாம். தேர்தலில் போட்டியிடலாம். ஓட்டுக்கு அன்பளிப்பு அளிப்பதைத் தடுக்கலாம். வாக்காளராகச் சென்று ஓட்டுபோடலாம். நம் கடமைகளைச் செய்வோம். உண்மையான ஜனநாயகம் அப்போதுதான் மலரும்.

சவால்களை எதிர்கொள்ளத் துணிவும் போராடத் தயங்காத தெளிவும் கொண்ட பெண்கள் அரசியலில் ஈடுபட்டு 33 சதம் என்ன 50 சதம் இடத்தையே பெற்று நாட்டை முன்னேற்ற அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

2 கருத்துகள்:

 1. சிறப்பான கட்டுரை. வாழ்த்துகள்

  கீதா

  பதிலளிநீக்கு
 2. நன்றி கீத்ஸ்

  வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...