வியாழன், 3 ஆகஸ்ட், 2017

மணக்கும் சந்தனம், நமது மண் வாசத்துக்காக

”அரைச்ச சந்தனம் மணக்கும் குங்குமம் அழகு நெற்றியிலே ”என்ற பாடலைக் கேட்டிருக்கலாம். அகில், பச்சைக்கற்பூரம், கஸ்தூரி மஞ்சள், கோரோசனை போன்ற இயற்கையான வாசனைப்பொருட்களிலே சந்தனம் வகிக்கும் இடம் முக்கியமானது. வெய்யில் காலம் வந்தாலே சந்தனத்தின் பயன்பாடு அதிகமாகிவிடும். வேர்க்குருவைத் தடுக்கவும் குளிர்ச்சிக்காகவும் சந்தனத்தை அரைத்து உடலில் பூசிக் கொள்வதுண்டு. ஆனால் வேட்கையைத் தூண்டும் சந்தனம் என்று


“வெறிகமழ் சந்தனமும் வேங்கையும் என்று நாலடியார் (80) குறிப்பிடுகிறது.”. 

சந்தனத்தில் மூன்று வகை உள்ளன. அவை ஸ்வேத சந்தனம் எனப்படும் வெள்ளைச் சந்தனம் – கொஞ்சம் வெண்மஞ்சள்நிறத்தில் இருக்கும். லட்சக்கணக்கான செஞ்சந்தன மரங்களுக்கிடையில் ஒரு வெண்சந்தனமரம் மட்டுமே இருக்கும் என்பதால் இதற்கு மவுசு ஜாஸ்தி. ரக்த சந்தனம் எனப்பதும் செஞ்சந்தனம், சிவப்பு நிறச்சந்தன மரத்தில் இருந்து பெறப்படுவது. இது செம்மரக் கட்டைகளில் இருந்தும் பெறப்படுகிறது. யானைக்குன்றுமணிச் சந்தனம் யானைக்குன்றுமணி மரக்கட்டையில் இருந்து பெறப்படுகிறது. 

இதன் தாவரப் பெயர் சாந்தாலம் ஆல்பம். இது மலைப்பாங்கான பகுதியில் வளரும் ஒரு தாவரம். செம்மரம் என்ற ஒன்று செஞ்சந்தனமரம் போன்ற பயன்பாட்டில் உள்ளது இதில் வைரமேறிய கட்டைகளில் அலைஉருவங்கள் எவ்வளவு நெருக்கமாக உள்ளனவோ அவ்வளவுக்கு அவை சிறப்பான ரகங்களாம். 

சாந்து என்ற சொல்லில் இருந்து சந்தனம் வந்திருக்கலாம். சந்தனக் கட்டையைக் கல்லில் அரைத்தோ உரைத்தோ சாந்தைப் பயன்படுத்தி வருகிறார்கள்.. இதைக் களபம் என்றும் கந்தம் என்றும் கூறுவார்கள். கந்தம் என்றால் வாசனைப் பொருள். இதிலும் வெள்ளைச் சந்தனம் வெகு சிறப்பானதாம். 

முக அழகு நிலையங்களில் ஆப்பிள், தேன், பால், தயிர், எலுமிச்சைச் சாறு, நெல்லிச்சாறு ஆகியவற்றைச் சந்தனப் பொடி, சந்தனப் பசை, சந்தன எண்ணெய் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றுடன் கலந்து சந்தன பேக் போட்டு முகத்தினை மென்மையானதாகவும் பளிச்சென்றும் ஆக்குகிறார்கள்.

ஆயுர்வேத மருத்துவத்தில் சந்தனத்துக்கு முக்கிய இடம் உண்டு. வெள்ளைச் சந்தனத்தைப் பசும்பாலில் உரைத்துச் சாப்பிட்டு வர வெட்டைச் சூடு, சிறுநீர்ப்பாதை அழற்சி, ரணம் ஆகியன நீங்கும். சிறுநீர்ப்பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியும், சொறி சிரங்கையும் குணப்படுத்தும். சிறந்த கிருமி நாசினி.  இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கும். 

வெள்ளைச் சந்தனத்தில் இறைவன் திருவுருவச் சிலைகளைச் செதுக்குகிறார்கள். இவை சமய வழிபாட்டில் முக்கியத்துவம் பெறுகின்றன. இதிலிருந்து சிற்ப வேலைப்பாடுகள் உள்ள பெட்டிகள், பொம்மைகள், கதவுகள், பென் ஸ்டாண்ட், பேப்பர் வெயிட், அலங்காரக் கத்தி, ஃபோட்டோ ஃப்ரேம் ஆகியன தயாரிக்கப்படுகிறது. 

கேசர் சந்தன் சர்பத் என்று பானமாகவும் பயன்படுது சந்தனம், மேலும் ரெட் ஒயின் தயாரிப்பில் நிறமூட்டியாக செஞ்சந்தன மரத்தூளைப் பயன்படுத்துகிறார்கள். ஆஸ்திரேலியப் பழங்குடியினர் குவாண்டாங்க் என்ற சந்தன மரத்தின் விதை, கொட்டை, பழங்கள் ஆகியவற்றை உணவாக உட்கொள்கின்றார்கள். ஆதியில் ஐரோப்பியரும் ஜாம் , சட்னி, கேக் செய்ய சந்தன இலை ஊறவைத்த தண்ணீரைப் பயன்படுத்தினார்கள். சந்தன மரத்தின் கொட்டையை நவீன செஃப்களும் வால்நட், ஆல்மோண்ட் , பாதாம் ஆகியவற்றுக்கீடாகப் பயன்படுத்தி வருகிறார்கள். வெட்டிவேர் மற்றும் சந்தனச் சத்துக்கள் சேர்ந்த நீரை அருந்தி வர தாகவிடாய் நீங்கும். ஆறு பருவ காலங்களிலும் சந்தனம் உபயோகப்படுத்தலாம் என்பது சிறப்பு.  
சித்தர் பாடல்களிலும் சந்தனத்தைக் குறிப்பிட்டுள்ளனர். 

வெந்சந் தனமரத்தா னல்லறிவு மின்பமெழிற்
பொற் செந்திருவருளும் பூமிதத்துண் - மெச்சுஞ்
சரும வழகுந் தனிமோ கமுமாம்
மிருமுநோ யேகும் பறழ்ந்து.

- பதார்த்த குணபாடம் - பாடல் (209)

இலக்கியத்திலும் ”செம்பஞ்சுக் குழம்பு கூட்டுதல்” என்ற ஒரு பழக்கம் பெண்களிடம் இருந்திருக்கிறது. செம்பஞ்சுக் குழம்பு என்றால் அவத்தகம் என்று பெயர். கொய்யில் என்ற பதத்திற்கு மகளிரின் தோள் ஸ்தனங்களில் வரிகளால் கோடு எழுதும் சந்தனக் குழம்பு என்று அர்த்தம். செவிலித்தாயர்கள் அரசியருக்கு சந்தனக் குழம்பு பூசி ஆறுதல் அளித்திருக்கிறார்கள்.  அரசர்கள் போருக்குச் சென்று வாகை சூடி வரும்போது அரசியர் அரசர் மார்பில் சந்தனம் பூசி வரவேற்கும் பழக்கம் இருந்திருக்கிறது. 

நெற்றியில் சந்தனம் எனப்படும் கோபி இட்டுக் கொள்வதும் சிலர் கடைப்பிடிக்கின்றனர். கேரளமக்கள் பெரும்பகுதியும் சந்தனத்தை விரும்பி அணிகின்றனர். குருவாயூர், சிதம்பரம் போன்ற கோயில்களில் சந்தனத்தையும் பிரசாதமாகத் தருகின்றனர். சாமி விக்கிரகங்களுக்கு மண்டகப்படி என்று சந்தன அபிஷேகம் செய்து, சந்தனக் காப்பு கூட சாத்தி மகிழ்கிறார்கள்.  மாசி மாதப் படைப்பு, தண்டாயுதபாணி பூசை போன்றவற்றிலும் சந்தனம் பயன்படுத்தப்படுகிறது. பழனி போன்ற தலங்களில் மொட்டை அடித்தபின் குளிர்ச்சிக்காகத் தலைக்கு சந்தனம் பூசுகிறார்கள். ஆண்களில் சிலர் சந்தனப்பொட்டு வைப்பது, கைகளில் சந்தனத்தைப் பூசிக்கொள்வது உண்டு. 

பெண் பூப்பெய்திய சடங்குகளிலும், திருமண நலங்குகளிலும் , வளைகாப்பு போன்ற வைபவங்களிலும் சந்தனம் பூசி வாழ்த்துவார்கள். எனவே இது இல்லாமல் பெரும்பகுதி தமிழகத் திருமணங்கள் நடைபெறுவதில்லை. நெற்றியில் வைக்கப்படும் சந்தனம் குளிர்ச்சியைத் தருகிறது. முகத்தில் பூசப்படுவதால் பொலிவைத் தருவதோடு பரு, கருப்பு வெள்ளைப் புள்ளிகளையும் போக்குகிறது. திருமணத்திலும் சடங்கிலும் ஒரு வாரத்துக்கு தினம் காலையும் மாலையும் சந்தனம் பூசி நலுங்கு வைப்பவர்களும் உண்டு. 

இஸ்லாமியர்களின் சந்தனக்கூடுத் திருவிழா என்பதும் சிறப்பான ஒன்று. நாகூர் கந்தூரி விழா என இதைக் குறிப்பிடுவார்கள். இலங்கைத்தமிழர்களிடன் காணப்பட்ட இவ்வழக்கம் இப்போது நெல்லை, ஏர்வாடி, இராமநாதபுரம் ஆகிய இடங்களில் காணப்படுகிறது. இத்தேர்த்திருவிழா தர்க்காக்களில் அவுலியாக்களின் பெயரால் நடத்தப்படுகிறது.   இக்கந்தூரி வைபவத்தில் மிக உயரமான அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு தேர் போன்று கலையம்சம் கொண்டதாக இருக்கும். இச்சந்தனக் கூட்டைக் குறிப்பிட்ட சில குடும்பத்தினரே இன்றுவரை கட்டி வருகிறார்கள்.  இது சமூக நல்லிணக்க விழாவாகவும் கொண்டாடப்படுகிறது. 

முன்னோர்கள் படங்களிலும் கடவுளர் படங்களிலும் சந்தனம் குங்குமம் வைத்து வழிபடுவதுண்டு. தீபாவளி, பொங்கல், சரஸ்வதி பூஜை போன்ற பண்டிகைகளில் சந்தனம் அவசியம் உபயோகப்படும். அவ்வமயம் வீட்டில் இருக்கும் ஆயுதங்கள், வாகனங்கள் ஆகியவற்றுக்கு சந்தனம். குங்குமம், வைத்துப் பூ & பூமாலை போட்டு வழிபடுவார்கள். லெக்ஷ்மி உறையும் மரம் சந்தன மரம் என்பது நம்பிக்கை. மரகத லிங்கம் போன்றவற்றை சந்தனக் காப்பு கொண்டு பாதுகாக்கிறார்கள். 

ஜைனமதத்தில் தீர்த்தங்கரரை சந்தனப்பொடி, குங்குமப்பூ கொண்டு வழிபடுகிறார்கள். பௌத்த மதத்தில் அமிதாப புத்தாவை சந்தன ஊதுபத்தி கொண்டு வணங்குகிறார்கள். சூஃபிக்களின் கல்லறையில் அவர்களின் சீடர்கள் கொண்டு சந்தனம் பூசப்பட்டு வழிபடப்படுகிறது. சைனர், ஜப்பானியர் வழிபாடுகளில் சந்தன மற்றும் அகர்பொடி கொண்டு ஊதுபத்தி வைத்து வணங்குகிறார்கள். ஜோராஸ்ட்ரியர்களின் நெருப்புக் கோயிலில் அகியாரி எனப்படும் அணையா விளக்கெரிக்க சந்தனக் கட்டைகளை வேண்டுதலாக அளிக்கிறார்கள். 

பூஜைக்குரிய பொருட்களில் முக்கிய இடம் வகிக்கும் சந்தனம் சந்தோஷ நிகழ்வுகள் அனைத்திலும் இடம் பெறும் ஒரு அவசியப் பொருளுமாகும். விபூதி கூட சந்தனத் தைலம் சேர்த்துத் தயாரிக்கிறார்கள். 

சந்தன மரங்களை அரசாங்கம் & வனத்துறை மட்டுமே பயிரிடலாம். இவற்றைத் தனியார் பயிரிட்டால் அது சிறைத்தண்டனைக்குரிய குற்றமாகும்.

உடன்கட்டை ஏறுதல் என்னும் சதி ஆகியவற்றுக்காகச் சந்தனக் கட்டைகளைப் பயன்படுத்துதல், மிகப்பெரும் மனிதர்கள், அரசியல்வாதிகள் இறந்தால் சந்தனக் கட்டையைப் போட்டு நெய்யூற்றி எரியூட்டி ஈமக்கிரியை செய்யும் பழக்கம் சென்ற நூற்றாண்டில் இருந்தது. 

நறுமண எண்ணெய் நிரம்பிய வைரம் ஏறிய கட்டைகள் மிக மதிப்பு வாய்ந்தவை. சந்தனப் பொடியை வேகவைத்து வடித்து சாண்டல் உட் ஆயில் தயாரிக்கப்படுகிறது. விக்கிரகங்கள், சிலைகள், பொம்மைகள், அலங்காரப் பொருட்கள், ஃபோட்டோ ஃப்ரேம்கள், நறுமணத் தைலங்கள் , அகர்பத்தி ( ஊதுபத்தி, இன்ஸ்டண்ட்/கம்ப்யூட்டர் சாம்பிராணி ) தயாரிக்க, மருத்துவப் பயன்பாடு ஆகியவற்றுக்கு உதவுகின்றன.

சந்தனப் பொடி பவுடராகவும், சோப்பாவும், அழகு சாதனப் பொருட்களாகவும் , ஃபேர்னெஸ் க்ரீமாகவும் தயாரிக்கப்படுகிறது. மேலும் உடைகளைப் பாதுகாக்க உதவும் சாண்டல் பேக்ஸ் எனப்படும் பூச்சி அரிக்காத நறுமணப் பாக்கெட்டுகள் சந்தனப் பொடியிலிருந்து தயாரிக்கப்படுகிறது. 

சந்தனக் கடத்தல் என்றொரு வாசகத்தை அடிக்கடி பத்ரிக்கைகளில் படித்திருப்பீர்கள். இதன் ஒரு சிறு இளமரமே ஒரு டன் அளவு சுமார் 6 லட்சம்  விலைபோவதால் இதன் மதிப்பு அதிகம். இன்னும் வைரம் பாய்ந்த நறுமணத் தைலம் உள்ள மரம் என்றால் அதன் மதிப்புகள் கோடிகளைத் தொடும். அதனால்தான் கடத்துகிறார்கள். மேலும் ஒரு முறை வெட்டிவிட்டால் மீண்டும் வளரப் பல ஆண்டுகள் பிடிக்கும். வெகு வறட்சியையும் வெகு பனியையும் இம்மரம் தாங்குவதில்லை. ஓரளவு வெய்யிலும் தேவையான தண்ணீரும் தேவையான நிழலும் இருந்தால் மட்டுமே இம்மரங்கள் உயிர்வாழ்கின்றன. மேலும் அதனால்தான் செம்மரத்தை இதற்கு மாற்றாகப் பயன்படுத்துகிறார்கள்.

கர்நாடாகா காடுகளிலேயே  பெரும்பகுதி சந்தன மரங்கள் விளைவதால் அங்கே சோப்பு, பவுடர் ஆகியன தயாரிக்கும் ஃபாக்டரிகள் இயங்கி வருகின்றன. வெளிநாடுகளுக்கும் சந்தனப் பொருட்கள், சந்தனக் கட்டை, பொடி ஆகியன ஏற்றுமதி செய்யப்படுகின்றன.  யூ டி டாய்லெட்டி என்ற பெயரில் சந்தனத் தைலங்களாக அவை அங்கிருந்து நமக்கே விற்பனை ஆகின்றன. 

எம்மதத்தினர் ஆனாலும் எந்த நல்ல நிகழ்வு ஆனாலும் பன்னீர் தெளித்து வாசனைச் சந்தனமும் பூவும் கொடுத்து வரவேற்பது தமிழர் மரபு. மிகுந்த சிறப்பு வாய்ந்தவர்களுக்கும், முக்கியஸ்தர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும், அலுவலக மேலதிகாரிகளுக்கும், பணி ஓய்வு பெறுபவர்களுக்கும், பிறந்தநாள் , திருமணநாள் கொண்டாடுபவர்களுக்கும், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் கொண்டாடுபவர்களையும் கௌரவிக்க சந்தன மாலையை அணிவிப்பதுண்டு. தம்மை உரைத்துத் தேய்த்து மணம் வழங்கிய வாசமிக்க சந்தனம் போல் அவர்களின் மிச்ச வாழ்க்கையும் மணக்கவேண்டும் என்பதற்காகவே இது வழங்கப்படுகிறது.

2 கருத்துகள் :

G.M Balasubramaniam சொன்னது…

தமிழ் நாட்டில் ஆலயங்களுக்குச் சென்று வந்தால் நெற்றியில் நீர் இருக்கும் கேரளத்தில் ஆலய வழிபாட்டுக்குப் பின் நெற்றியில் சந்தனக் குறி இருக்கும்

Thenammai Lakshmanan சொன்னது…

aam Bala sir. good observation


வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...