வெள்ளி, 4 ஆகஸ்ட், 2017

பீரங்கிக்கும் அஞ்சாத வீரன் அழகுமுத்துக்கோன்

பீரங்கிக்கும் அஞ்சாத வீரன் அழகுமுத்துக்கோன்

கண் எதிரே நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது, மனிதரை மட்டுமல்ல கோட்டை கொத்தளங்களையும் தூள்தூளாக்கும் இரக்கமற்ற இரும்பு பீரங்கி. இடது பக்கம் மூன்று தளபதிகள், வலது பக்கம் மூன்று தளபதிகள் நடுவில் கைகளிலும் கால்களிலும் விலங்கு பூட்டப்பட்டு இரும்புச் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு அஞ்சா நெஞ்சன் வீரன் அழகு முத்துக்கோன் நிறுத்தப்பட்டிருக்கிறார். அவரது கண் எதிரே அவரது 248 படைவீரர்களின் வலது கைகளையும் வெட்டி எறிகிறது கோரக் குணம் படைத்த கும்பினியப் படை.

” வரி கட்டினால் உயிர் மிஞ்சும் . ஒப்புக் கொள்கிறாயா, இல்லாவிட்டால் எங்கள் பீரங்கி உன்னைத் தூளாக்கும் “ எனக் கும்பினியப் படை வினவ , நம் சொந்த மண்ணுக்கே கப்பம் கட்டும் இழிநிலையிலா இருக்கிறோம் என்று கொந்தளித்த வீரன் அழகு முத்து முழங்கினார் இவ்வாறு. ”தாய்மண்ணின் மானத்தை இழப்பதை விட உயிரை இழப்பதே மேல் “


வெடித்துச் சிதறின பீரங்கிகள். தெறித்துச் சிதறின மாவீரர்களின் வீரத்திரு உடல்கள். அவர்களின் பாசரத்தத்தால் நனைந்து கிடந்தது தாய்மண். வஞ்சகத்தாலும் துரோகத்தாலும் மாவீரர்களைச் சிதறடித்துக் கொக்கரித்தாலும் அவர்களை அடிமையாக்க இயலாத, வெல்ல இயலாத தோல்வியால் தலைகுனிந்துதான் விட்டது கும்பினிப்படை.

ஆமாம் நவீன ஆயுதங்களாலும் நவீன யுத்த முறைகளாலும் அச்சுறுத்திய ஆங்கிலேயர்களுக்கும் சவாலாய்த் திகழந்த அந்த மாபெரும்வீரன் யார்..? கண் எதிரே சாவைக் கண்டும் அஞ்சாத அந்தச்சிங்கம் யார் ? யார் இந்த வீரன் அழகுமுத்துக் கோன்.?

இவரைப் பற்றித் தெரிந்துகொள்ள நாம் திருநெல்வேலிச் சீமைக்குப் போவோம். இங்கே உள்ள சிற்றரசான கட்டாலங்குளத்தில் கிருஷ்ணகோத்ரம் கோபாலவம்சத்தில் 1728 இல் அரசர் அழகு முத்துக்கோனுக்கும் அரசி அழகு முத்தம்மாளுக்கும் வீரன் அழகுமுத்துகோன் மகனாகப் பிறந்தார். குடும்பத்தில் அனைவருக்குமே அழகுமுத்துக்கோன் என்ற பெயர் குடும்பப்பெயராக வழங்கப்படுகிறது. வீரத்தைப் பெயரிலேயே கொண்டு பிறந்த மன்னர் இவர். இவருடைய தம்பியின் பெயர் சின்ன அழகு முத்துக்கோன்.

வீரன் அழகுமுத்துக்கோன் சிறுவயதிலேயே வாள்வீச்சு, காளை அடக்குதல், மல்யுத்தம் ஆகியவற்றில் சிறந்து திருமலை நாயக்கர் மன்னரிடம் சேர்வை பட்டம் பெற்றார். 1750 ஆம் ஆண்டு அனுமந்தக்குடிப் போரில் அரசர் அழகுமுத்துக்கோன் இறந்துவிட வீரன் அழகுமுத்துக்கோன் மன்னராக முடிசூட்டிக் கொண்டார்.

1857 இல் நடைபெற்ற முதல் சிப்பாய்க் கலகம்/புரட்சியைத்தான் முதல் விடுதலைப் போர் என்று கூறுகிறார்கள். ஆனால் அதற்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்பே விடுதலைப் போருக்கு வித்திட்டவர் வீரன் அழகுமுத்துக்கோன். ஆக்கிரமிப்பாளர்களின் அக்கிரமத்தை எதிர்த்த புரட்சியாளர்.

சிற்றரசர்களும் பாளையக்காரர்களும் ஆங்கிலேய அரசிற்குக் கப்பம் கட்டக் கட்டாயப்படுத்தப்பட்டனர். அதை வெறுக்கவும் தடுக்கவும் செய்தார் வீரர் அழகு முத்துக்கோன். இதைக் கண்டு கையாலாகாத ஆங்கில அரசு பிரிட்டிஷ் ஜெனரல் முகம்மது யூசுஃப்கானைப் படையுடன் அனுப்பி வைத்தது.


பெத்தநாயக்கனூர் கோட்டையில் வீரன் அழகுமுத்துக்கோனின் படைகளுக்கும் ஜெனரல் யூசுஃப்கானின் படைகளுக்குமிடையில் கடும்போர் மூண்டது. அந்தப் போரில் வீரன் அழகு முத்துக்கோனின் வலதுகால் சுடப்பட்டது. அதன்பின்னும் பலமணிநேரம் போர் தொடர்ந்தது. அப்போது நடந்த போரில் ஆங்கில அரசு அரசாட்சியைக் கைப்பற்ற கானகத்தில் தஞ்சமடைந்தார்கள் வீரன் அழகுமுத்துக்கோனும் அவரது எஞ்சிய வீரர்களும்.

பெத்தநாயகனூரைச் சேர்ந்த சில நயவஞ்சகர்கள்  காட்டிக் கொடுக்க வீரன் அழகுமுத்துக்கோனும் அவரது தளபதிகள் எழுவரும், வீரர்கள் இருநூற்று நாற்பத்தெண்மரும் இரும்புச் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு நடுக்காட்டூர் என்ற ஊரில் பீரங்கியின் முன் நிறுத்தப்பட்டு அச்சுறுத்தப்படுகிறார்கள்.

வரி செலுத்துமாறு வலியுறுத்தப்படுகிறார்கள். மன்னிப்புக் கேட்டால் உயிராவது மிஞ்சும் எனச் சொல்லப்பட மன்னிப்புக் கேட்கவும் மறுத்துவிடுகிறார் வீரன் அழகுமுத்துக்கோன். அவர்கள் செய்யும் அக்கிரமத்தை எதிர்த்துக் கர்ஜித்த வீரன் அழகுமுத்துக்கோனையும் தளபதிகள் எழுவரையும் பீரங்கிக்குப் பலியாக்கிவிட்டது ஜெனரல் யூசுஃப்கானின் கொடூரப்படை.

மார்பில் சுடப்பட்டு இவர்கள் மண்ணில் வீழ்ந்து வீர விதையானார்கள். நெஞ்சுரம் மிக்க இவர்கள் இரத்தமே உரமானது. இவர்களை பீரங்கிக்குப் பறிகொடுத்த இடம்தான் தற்போது  பீரங்கிமேடு என்று அழைக்கப்படுகிறது.

இன்றும் இவரது வம்சத்தினர் கட்டாலங்குளத்தில் வசித்து வருகிறார்கள். இவரது வாரிசு திரு. செவத்தசாமி என்பவர் இவர்கள் வம்சத்தினர் உபயோகித்த வாளை பத்திரமாக வைத்துள்ளார்.

1996 இல் சென்னை எக்மோர் ரயில் நிலையத்தின் முன்பு இவரது வெண்கலச் சிலையை முதல்வர் திறந்துவைத்துள்ளார்.  தமிழக அரசு புதுக்கோட்டைக் கோட்டப் பேருந்துகளை ”வீரன் அழகுமுத்துக்கோன் போக்குவரத்துக் கழகம்” என்ற பேரில் இயக்குகிறது. மதுரை யாதவா கல்லூரியில் வீரன் அழகுமுத்துக்கோன் சிலையை பீகார் முதலமைச்சர் லல்லுபிரசாத் யாதவ் திறந்துவைத்துள்ளார். தேனி மாவட்டம் வீரன் அழகுமுத்துக்கோன் மாவட்டம் என்று பெயரிடப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளது.

வீரன் அழகு முத்துகோனின் அஞ்சல் தலை, அஞ்சல் உறை, விவரக்குறிப்பேடு ஆகியவை வெளியிடப்பட்டுள்ளன. இவை அனைத்தும் இவரின் தேசப்பற்றுக்கும் தாய்மண்ணின் மேலான நேசத்திற்கும் நாடு செலுத்தும் அஞ்சலியாகும். 

3 கருத்துகள் :

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

நம் மண்ணுக்குப் பெருமை சேர்த்தவரின் வரலாறு அறிந்து மகிழ்ச்சி. நன்றி.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்லதொரு பகிர்வு. தகவல்கள் சிறப்பு.

Thenammai Lakshmanan சொன்னது…

nandri Jambu sir

nandri Venkat sago


வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...