எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 4 நவம்பர், 2016

நந்தினி :-



                   நந்தினி

ந்த ஆஸ்பத்திரியின் வெளி கேட் வரை அமர்ந்திருந்த மக்கள் கூட்டம் நின்றுகொண்டும் நகர்ந்து கொண்டும் ஒழுங்கற்ற அசைவோடும் இரைச்சலோடும் உணர்ச்சி வசப்பட்டும் கூச்சலிட்டுக் கொண்டிருந்தது.

“அந்த டாக்டரம்மாள வரச் சொல்லு. என் புள்ளய கொன்னுட்டா.. இப்ப என் மாப்பிள்ளையும் தூக்கு மாட்டி செத்துட்டாரு.” பச்சைபிள்ளைபோல மேல்துண்டால் முகத்தைத் துடைத்துக் கொண்டு அழுதுகொண்டிருந்தார் கதிரேசன்.

”பொம்பளையா அவ.. அவளுக்கு மனசாட்சி இல்ல. இந்த ஆசுபத்ரியே வேணாம்னே. கொலைகாரப் பயலுவ. ஒழுங்கா கெவனிக்க மாட்டானுவ. போன வருஷம் நம்ம வெள்ளையன் மகளும் பிரசவத்துல செத்துப் போச்சுல்ல.. “ என்று கூடவே சேர்ந்து யார் யாரோ குரல் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

”டாக்டரம்மா வந்தாத்தான் வாங்கிட்டுப் போவோம்.”

 ஒரே ஆஸ்பத்ரியில் அவரது மகள் மாப்பிள்ளை இருவரும் வெவ்வேறு இடங்களில் எடுத்துச் செல்லப்படுவதற்காகக் காத்திருந்தார்கள்.

பச்ச மக பவள மக. இச்ச தீர்க்க வந்த மக.
ஆச மக ஆஸ்தி மக ஆளில்லாமப் போனாளே

செல்ல மக சின்ன மக செவலப் பசு போல மக
சிட்டு மக பட்டு மக சொல்லிக்காமப் போனாளே.

வெள்ளி மக வைர மக வெளைஞ்சகதிரு போல மக
வெள்ளிச்சிலை போல மக வாழ்வழிஞ்சுபோனாளே.

தங்க மக சிங்க மக சிங்காரமா வளர்ந்த மக
தங்கச்சிலை போல மக சிரிப்பத் தூக்கிப் போனாளே.

நெஞ்சில் அடித்துக் கொண்டு ஒரு பச்சை சீலை ஆயா அழ கூடவே இருந்த பெண்கள் அனைவரும் கண்ணீர் விட்டுக் கதறினார்கள். சில பெண்களின் இடுப்பில் அமர்ந்திருந்த சிறு குழந்தைகளும் அம்மாக்களைப் பார்த்து அழ ஆரம்பித்தன.

துபாயில் வேலைபார்த்து வந்த சேகருக்கு 50 பவுன் நகை போட்டு தன் மகள் வள்ளியைக் கட்டிக் கொடுத்திருந்தார் கதிரேசன். சொந்த ஊரில் உழைச்ச காசில் பிரம்மாண்டமாய் வீடு கட்டி இருக்கான். நல்ல பையன் என்று நினைத்துத் திருமணம் செய்தார். முதலில் அவன் போய்விட்டு மனைவிக்கும் விசா பாஸ்போர்ட்டு ஏற்பாடு செய்து அழைத்துப் போனான். மொத்தமே ஒரு வருஷம் கூட இருக்காது.


அங்கே வேலையிலிருந்து ஆட்குறைப்பு செய்கிறார்கள் என்று கொத்துக் கொத்தாக எல்லாரும் திரும்பிக் கொண்டிருந்தார்கள். ஊர் கண்ணே படும்படித் திருமணம் செய்து சீரோடு சென்ற மகள் ஐந்து மாத கர்ப்பிணியாய் மாப்பிள்ளையோடு திரும்பி இருந்தாள். தாயில்லாப் பிள்ளையான அவள் சொல்லாத சோகத்தைச் சுமந்திருந்ததாகப்பட்டது.

முதல் பிரசவம். டாக்டரிடம் செக்கப் செய்யவேண்டும் என்ற உந்துதல் எல்லாம் இல்லாமல் இருவரும் ஏனோ என்று வருத்தத்தில் இருந்தனர். காடு வேறு பொய்த்துப் போய் மழையும் கைவிட்டிருந்தது. ஊரில் விவசாயம் பார்த்தவர்கள் எல்லாம் டவுனுக்கு வேலைக்குப் போயிருந்தார்கள்

டாக்டரிடம் வாம்மா என்று அழைத்தபோதெல்லாம் மகள் சொடிந்த முகத்தோடு மறுத்தாள். வள்ளிக் கிழங்காட்டம் போனவள் வள்ளிக் கொடியாட்டம் துவண்டு சிறுத்துக் கொண்டே வந்தாள். சூல் கொண்ட வயிறு மட்டும் பெரிதாக இருந்தது. அவள் மட்டுமில்லாமல் மாப்பிள்ளையும் துரும்பாகிக் கொண்டிருந்தான்.

ஒழுங்காக சோறு உண்பதில்லை. அடிக்கடி இருவரும் சீக்கு வந்த கோழிகள் போல வீட்டிலேயே முடங்கி கிடந்தார்கள். ஒரு நாள் கதிரேசன் மகளிடமும் மாப்பிளையிடமும்,

”அதெல்லாம் ஆனதெல்லாம் ஆச்சு. இப்ப டவுன் ஆஸ்பத்ரில போய் டாக்டர்கிட்ட காமிச்சிட்டு வந்திரலாம். எட்டு மாசமாச்சு. எப்ப பிரசவம் ஆகும்னு டெஸ்ட் எல்லாம் பண்ணி சொல்லுவாங்க. ஏதோ தடுப்பூசி எல்லாம் போடுவாங்களாம். வயித்துப் புள்ளக்காரி ஒன்னும் போடாமத்தான் உனக்கு நோவு வருது.” என்று பெரிதாக அதட்டுப்போட்டார். இருவரும் வேண்டாவெறுப்பாகப் போனவாரம்தான் டாக்டரிடம் செக்கப்புக்குப் போனார்கள்.

டாக்டர் நந்தினி டவுனிலேயே பெயர் பெற்ற பெரிய டாக்டர். கைராசிக்காரி என்று பெயர் பெற்றவள். திருமணம் குழந்தை என்று இல்லாமல் தன்னுடைய டாக்டர் வேலையையே திருமணம் செய்துகொண்டமாதிரி வாழ்ந்து வந்தாள். இத எல்லாம் நம்பித்தானே போகச் சொன்னோம் . என்று கசந்து வந்தது கதிரேசனுக்கு.

”மாமா நீங்க உம்முன்னு சொல்லுங்க. போலீஸ் கம்ப்ளெயிண்ட் கொடுத்துடுவோம். இந்த ஆஸ்பத்ரில செரியா கெவனிக்கலைன்னு “ தங்கச்சி மகன் ரமேஷ் கோபாவேசத்தோடு கதிரேசனிடம் கேட்டான்.

இனிக் கண்ணீரே இல்லை என்ற அளவுக்குக் காய்ந்து போயிருந்த கண்களால் அவனை வெறித்துப் பார்த்தார். ”என்ன ஆச்சு எனக்கு எவ்ளோ பெருமை. என் பிள்ளை என் மாப்பிள்ளைன்னு.  வெளிநாட்டுல இருக்கா எம் மவ.  ஃப்ளைட்டுல பறந்து போனான்னு எவ்ளோ இறுமாப்பா இருந்தேன். இப்ப என்னயே விட்டுட்டுப் போயிட்டாளே.”

டாக்டரின் கார் கேட்டுக்கு வெளியே வந்து நின்றது. இவர் மகளுக்குப் பிரசவ சமயத்தில் நந்தினிக்கு ஒரு மருத்துவ மாநாடு இருந்ததால் சென்னைக்குச் சென்றிருந்தாள். அடுத்த லெவலில் இருந்த மருத்துவர்கள்தான் பிரசவம் பார்த்திருந்தார்கள். பெருங்கூட்டத்தைப் பார்த்த நந்தினி உள்ளே நெருங்க நெருங்க அனைவரும் கசகசவென்றும் சத்தமிட்டும் ஆஸ்பத்ரியினைப் பற்றிப் பலவாறாகக் குறைகூறிக் கொண்டுமிருந்தனர்.

துண்டை எடுத்து வாயில் அடக்கிய கதிரேசன்.. “ யம்மா என் புள்ளய உங்க ஆஸ்பத்ரில கொன்னுட்டாங்கம்மா. என் வாரிசும் போச்சு என் மாப்பிள்ளையும் துக்கத்துல தூக்குல தொங்கிட்டாரு.. என்னம்மா வைத்தியம் பார்க்கிறீங்க என் புள்ள போச்சே.. திருப்பித் தாங்கம்மா. என் புள்ளயத் திருப்பித்தாங்கம்மா. “ என்று ஓங்கிக் குரலெடுத்து அழ ஆரம்பித்தார்.

கதிரேசனின் நடுங்கிய இரு கரங்களையும் பிடித்த டாக்டர் நந்தினிக்கும் கண்ணீர் பெருகியது.

“கொஞ்சம் உங்க கூடப் பேசணும். ப்ளீஸ் உள்ள வாங்க ” என்று சொல்லித் தன் அறைக்குள் அழைத்துச் சென்றாள் நந்தினி.


பைண்ட் செய்த கல்கியின் பொன்னியின் செல்வன் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தாள் தேன்மொழி. எவ்வளவு அழகி அந்த நந்தினி. பெரிய பழுவேட்டரையரின் பத்தினி. ஆனால் யாராலும் ஆளமுடியாத அழகுப் பேரரசி. நந்தினியின் சித்திரத்தில் மூழ்கிக்கொண்டிருந்த அவளது காதில் அம்மா அமராவதியின் இரைச்சல் தாக்கியது.

”ஏய் தேமொழி என்னடி செய்யிறே. இம்மா நேரமா கூப்பிடுறேன். அப்பிடி என்ன அந்த புஸ்தகத்துல இருக்கு. பொட்டச்சியா லச்சணமா அம்மாவுக்கு ஏதும் உதவி செய்தா என்ன. ? “

வேகமாக வந்த அம்மா வெடுக்கென்று பிடுங்கி அந்தப் புத்தகத்தைப் பலம் கொண்டமட்டும் பிய்த்துப் போட்டாள்.

“ஐயோ அம்மா அது மூணாம் வீட்டு அக்காவோடது. என்னக் கேட்டா என்ன செய்வேன்.. ?”

“நான் செகிடியாட்டம் பொஸ்தகம் படிச்சதால அம்மா பிடுங்கி அடுப்புல போட்டுருச்சுன்னு சொல்லு.  இந்த சோறு வெந்ததும் வடிச்சிட்டு கொழம்பு ஆக்கிவை.”

கண்ணீர் பெருக கலர் கலராக சோற்றுப் பானையின் கீழ் விறகில் எரியும் புஸ்தகத்தைப் பாதுகாக்க இயலாத பரிதவிப்போடு பார்த்துக் கொண்டிருந்தாள் தேமொழி.

வேகவேகமாகச் சென்று அமராவதி  துவைக்க ஆரம்பித்திருந்தாள். உவர்மண்ணிட்டு வெள்ளாவிப்பானையின் சூடு ஆறிய துணிகளை வெளுத்து வெளுத்துக் கையும் காலும் வெளுத்துப் பிய்ந்து சேற்றுப் புண்ணாகி இருந்தது. கொசுவிக்கொசுவித் துவைத்து அலசிப் பிழிந்து துணிகளைச் சடசடவெனச் சத்தம் கேட்கும்படி உதறிக் காயப்போட்டாள் அமராவதி.

கரியைப் பத்தவைத்துக் கொண்டிருந்த தேமொழியின் அப்பா மகளைப் பரிவோடு பார்த்து தன்னுடைய வேட்டியின் மேல் கட்டியிருந்த பட்டை பெல்ட்டிலிருந்து 5 ரூபாயை எடுத்து ” அவ கெடக்கா . நீ அழுவாதே. வேற புக்கு வாங்கி கொடுக்கலாம். நீ வேணுங்கிற தீனி வாங்கிக்கம்மா” என்று சொல்லி கொடுத்தார். அவள் கண்ணில் கண்ணீர் வழிந்தால் அவர் நெஞ்சில் ரத்தம் வழியும் அல்லவா.

”ஐய அப்பா அது பைண்ட் பண்ண புக்கு. லெண்டிங் லைப்ரரிக்காரனுது. காசு கொடுத்தாலும் ஒப்புக்குவானா தெரிலப்பா. அக்கா திட்டும். இனி புக்கு தராது. ” என திரும்பக் கண்ணீர் விட ஆரம்பித்தாள்.

என்ன செய்வதென்று தெரியாமல் சூடு ஏறத் தொடங்கி இருந்த இஸ்திரிப்பெட்டியைக் கல் மேல் வைத்துவிட்டு துணிகளை நீவி நீவி மடிக்க ஆரம்பித்தார்.

“ சரி கண்ணு நானு அந்தப் பையனைப் பார்த்தா சொல்றேன். நீ போய் அந்த டீச்சரம்மா கிட்ட இந்த துணிய எல்லாம் கொடுத்திட்டு வா, நேத்தே கொடுக்கணும் அவங்க வீட்ல இல்ல . இப்ப கொடுக்காட்டா அவங்க இஸ்கோல் போயிடுவாங்க” என்றார்.

சோத்து அடுப்பின் விறகுக் குச்சியை வெளியே இழுத்து விட்டாள். தணலில் சோறு ஆகட்டும். வந்து வடிச்சிக்கலாம். எட்டாங்கிளாஸு படிச்ச பின்னாடி பெரிய புள்ளயான பொறவு அம்மா ஸ்கூலுக்கே விடமாட்டேங்குது. ரெட்டை சடை போட்டு யூனிஃபார்மெல்லாம் போட்டுப் போய்ப் போனவருஷம் ஸ்கூல் போனது. ஹ்ம்ம்  பெரிய டீச்சராகணும்கிற கனவு கனவாவே போச்சு.

தன்னுடைய டீச்சர் வீட்டுக்கு இஸ்திரி போட்ட துணிகள் கொண்ட கட்டைப் பைகளைச் சுமந்து சென்றபோது அதன் வாசம் மூக்கில் ஏறி உடம்பிலும் ஒரு வித வெக்கையான சாம்பல் வாசம் பரவிற்று.

தெருமுக்கில் திரும்பும்போது அங்கே இருந்த ஆட்டோ ஸ்டாண்டிலிருந்து வெங்கடேசன் விசிலடித்துப் பாடத் துவங்கினான்.

பார்த்தும் பார்க்காமலும் சென்ற தேமொழி ஏதோ ஒரு தருணத்தில் காதலில் விழுந்து ஒரு நாள் மாலையும் கழுத்துமாக வீட்டுக்கு வந்தாள் புருஷனுடன் ஆட்டோவில். சொந்தத்தில் ட்ரைக்ளீனிங்க் கடை போட்டிருந்த மாப்பிள்ளை எல்லாம் காத்திருக்க ஆட்டோ ஓட்டுறவனைக் கட்டி வந்ததில் கொஞ்சம் கோபமிருந்தாலும் பெருமையாயிருந்தது அமராவதிக்கு. தான் சலவை செய்த ஆசுபத்திரியிலிருந்து பணம் கடன் வாங்கி விருந்து வச்சு நகைச்சீட்டை எடுத்து நகை எல்லாம் போட்டாள் மகளுக்கு.

ஆளமுடியாத அழகுப் பேரரசி நந்தினி பிறந்தாள். எந்நேரமும் கைக்குழந்தையுடனே இருந்தாள் தேமொழி. எந்தச் சூதுமில்லாத வாழ்வில் சூதும் வஞ்சமும் புகுந்தபோது சில பல தொடர்புகளால் வெங்கடேசனுக்குள் ஹெச் ஐ வி புகுந்தது. அடுத்து சில மாதங்களில் கர்ப்பமானாள் தேமொழி.

மாப்பிள்ளைக்கு அடிக்கடி காய்ச்சலடிக்க மகளோ உருக்குலைந்து போக பேத்தியை வைத்துக் கொண்டு அல்லாடிக் கொண்டிருந்தாள் அமராவதி. தான் பணிபுரியும் ஆசுபத்ரியில் கூட்டிச் சென்று காண்பித்தால் மாப்பிள்ளைக்கு எய்ட்ஸ் இருக்கிறது என்று டாக்டர் சோதனை பண்ணிச் சொன்னார். மகளுக்கும் நோய்க்கூறு தொற்றிவிட்டதாம்.

கிறுகிறுவென்று வந்தது அமராவதிக்கு. எப்பிடிக் காப்பாத்தப் போறோம்னு. முதலில் மாப்பிள்ளை இறந்துவிட. அடுத்துப் பிரசவத்தில் பிள்ளைகளைக் கையில் கொடுத்து அம்மாவின் கையை தேவதையின் கையைப் போலப் பற்றிக் கொண்ட தேமொழி கதறிக்கதறி அழுதாள்.

“ யம்மா நா போயிடுவேன். எம் புள்ளங்கள எப்பிடியாச்சும் காப்பாத்தி படிக்க வெச்சிடும்மா..  விட்ராதம்மா. “ அழுது அழுது கதறிக் கொண்டிருந்தவள் அப்பா இஸ்திரி பண்ணும் மேடையின் பக்கவாட்டு இடத்திலேயே படுத்துக்கிடந்தாள். பிள்ளைக்குப் பால் கொடுப்பதுமில்லை. இரண்டையும் கொஞ்சுவதுமில்லை. சாப்பிடுவதுமில்லை. ஒரு நாள் காலை சொடக்கென்று அவள் தலை ஒருபக்கம் சாய்ந்து கிடக்க முகத்தைச் சுற்றி ஈ மொய்த்துக் கிடந்தது. .

அதோடு அமராவதியின் துன்பம் நிற்கவில்லை. நந்தினியின் தம்பி குழந்தையாக ஒரு வயது வரை படாத பாடு பட்டு வளர்ந்தான். சொல்பவர் சொல்வதை எல்லாம் கேட்டு சுண்டைக்காய் இலையை அரைத்துத் தேய்த்துக் குளிப்பாட்டுவது, சத்துமாவெல்லாம் கரைத்து ஊற்றுவது என்று செய்துகொண்டிருந்தாள். அவனுக்கும் அடிக்கடி வயிற்றுப் போக்கும் காய்ச்சலும் பாதித்துக் கொண்டிருந்தது.

4 வயது நந்தினிக்கு என்ன புரிந்ததோ இல்லையோ அப்பா, அம்மா  செத்ததும் தம்பி தோல்குடுவைமாதிரி இருப்பதும் ஏதோ வேதனை என்று புரிந்தது. அவனும் ஒரு நாள் அமராவதி ஆயா கதறக் கதற சொடுக்கென்று தலை சாய அவள் கையிலேயே விழுந்து இறந்து கிடந்தான். வலிக்க வலிக்க நிகழ்ந்த அந்த சோகங்கள் அவளுக்கு சின்னப் பிள்ளையில் இருந்து நன்கு தெரியும்.

”பாட்டி உனக்கு ஆப்பரேஷன் பண்றேன்” என்று டாக்டராகி விளையாடும்போதெல்லாம் அமராவதி கட்டிக்கொண்டு முத்தமிட்டுச் சொல்லுவாள். “ ”என் ராஜாத்தி.. டாக்டர் ஆகி நோவுல இருக்க எல்லாரையும் காப்பாத்து தாயி. “  

யா உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும். சொல்லித்தான் ஆகணும். மனசத் தேத்திக்குங்க. 

இனியும் என்ன சொல்லப்போகிறார் டாக்டர் என்று நிமிர்ந்து கசங்கிய கண்களோடு பார்த்தார் கதிரேசன்.

“ உங்க மகளுக்கும் மாப்பிள்ளைக்கும் எயிட்ஸ் இருந்தது. போன வாரம் செக்கப்புக்கு வந்தாங்கள்ல அப்ப சில சோதனைகள் செய்தோம் உங்க மகளுக்கு. எனக்கு சந்தேகம் இருந்ததால உங்க மாப்பிள்ளைக்கும் இரத்த சோதனை செய்தோம். இரண்டு பேருக்கும் எயிட்ஸ் இருந்தது.

“ ஐயோ .. இல்ல பொய் சொல்றீங்க. “ என்று கத்தினார் கதிரேசன்.

” ஐயா நான் உங்ககிட்ட பொய் சொல்ல வேண்டிய அவசியமில்ல. இந்த ரிப்போர்ட்ல இருக்கு எல்லாம்.  நான் சென்னைக்குப் போனதே இது மாதிரி ஒரு மருத்துவ மாநாட்டுல கலந்துக்கத்தான். வெளிநாட்டுல இதுக்கு ஆராய்ச்சி செய்து மருந்து கண்டுபிடிச்சிட்டாங்கன்னு செய்தி வந்தது. அந்த மருந்து பற்றியும் அது செயல்படும் முறை பற்றியும்தான் இந்த மாநாடு நடந்தது.

” கடவுளே.. கடவுளே உனக்குக் கண்ணில்லையா. என் பிள்ளைக்கு இதெல்லாம் வரணுமா. “ கதறினார் கதிரேசன்.

“ ஐயா மனுஷங்க தவறு செய்தா கடவுள் என்ன செய்ய முடியும். உங்க பேத்திக்கும் இது ரத்தத்தின் மூலம் வந்திருக்கு.”

கதிரேசனைப் பார்த்தால் மயக்கம் போட்டு விடுவார் போல இருந்தது. தன் பக்கம் மூடி போட்டு வைத்திருந்த தண்ணீர் க்ளாசை அவரிடம் நீட்டினாள் நந்தினி.

தன்னையறியாது வாங்கிக் குடித்துவிட்டு மேல்துண்டால் வாயைத் துடைத்துக்கொண்டார். கிடைத்த அதிர்ச்சிச் செய்திகள் அவர் மூளையை மரமரத்துப் போகச் செய்திருந்தன.

இனியும் என்ன இருக்கு என்பது போல நந்தினியைப் பார்த்தார்.

” எய்ட்ஸ் பாதித்த பெற்றோருக்குப் பிறந்த குழந்தைகளுக்கும் பிறந்த உடனேயே எய்ட்ஸுக்கான மருந்து ( AZT, 3TC, NEVIRAPINE ) கொடுக்க ஆரம்பிச்சுட்டா காப்பாத்தலாம். கர்ப்பத்துல இருக்கும்போதே தெரிஞ்சுட்டா இரண்டாவது குழந்தைக்கும் எய்ட்ஸ் நோய் வராம தடுத்திடலாம். செல் ட்ரான்ஸ்ப்ளாண்ட் தெரஃபி மூலம் உங்க மாப்பிள்ளையும் பெண்ணையும் காப்பத்தலாம்னுதான் அவங்களுக்கு இத தெரிவிச்சேன். நோய் எதிர்ப்பு சக்தி இல்லாம உங்க மகளுக்கு எட்டு மாசத்திலேயே டெலிவரி ஆகி ரத்தம் அதிகம் வெளியேறி சடன் ஸ்ட்ரோக்கால இறந்துட்டாங்க. உங்க மாப்பிள்ளை விவரம் தெரிஞ்சபின்பு தன்னைக் காப்பாத்திக்க பல லட்ச ரூபாய்க்கு மருந்து சாப்பிடணும்னு கவலைப்பட்டுத் தூக்குல தொங்கிட்டார்.  நான் நேற்று சென்னையிலிருந்து புறப்படும்போதுதான் தகவல் வந்தது. நேரா இங்கதான் வர்றேன்.”

உண்மையா என்பது போல இருந்தது அவர் பார்வை.

நந்தினி மேலும் தொடர்ந்தாள். ”இந்த மருத்துவ முறைகள் எல்லாம் முன்பே கண்டுபிடிக்கப்பட்டிருந்தா என் அம்மா அப்பா தம்பியை இந்த நோய்க்குப் பலி கொடுத்திருக்க மாட்டேன். இனியும் யாரும் உயிரிழக்காமப் பார்த்துக்கணும்னுதான் பாடுபடுறேன். புரிஞ்சுக்குங்க. “ நந்தினியின் கண்களும் கலங்கி இருந்தன.

“வெளியே போய் என் மகளுக்கும் மாப்பிள்ளைக்கும் எய்ட்ஸ் அதான் இறந்துட்டாங்கன்னு எப்பிடிம்மா சொல்வேன். ? “ திரும்ப அவர் கண்கள் கசிய ஆரம்பித்தன.

”ஐயா நீங்க பெரியவங்க. ஒண்ணும் சொல்ல வேண்டாம். நான் வெளிய வந்து மன்னிப்புக் கேட்டுக்கிறேன். உங்க பேத்தி எங்க கண்காணிப்புல இருக்கட்டும். இது எங்க தவறாகவே இருக்கட்டும். உங்க பேத்திய மட்டும் எங்கள நம்பி விட்டுட்டுப் போங்க. அவ பிழைச்சு இந்த நோயை எதிர்க்க முடியும்னு தெரிஞ்சபின்னாடி எல்லார் கிட்டயும் சொல்லிக்கலாம். ”

சுவரில் மாட்டியிருந்த காமதேனுப் பசுவும் அதன் குட்டி நந்தினியும் இருந்த ஓவியத்தைப் பார்த்து டாக்டர் நந்தினியையும் பார்த்துத் தன் பேத்தியாவது பிழைத்துவிடுவாள் என்ற நம்பிக்கையோடு வெளியேறினார் கதிரேசன்.



5 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...