எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 22 செப்டம்பர், 2015

”விழுதல் என்பது எழுகையே.” நிறைவுப்பகுதி.


பெண் என்று பூமிதனில் பிறந்துவிட்டால் மிகப்பீழை இருக்குதடி தங்கமே. என்று பாரதியார் பாடியது சும்மாவா.

பத்மகலாவின் வருகைக்காக சீலன் பிராங்போர்ட் ஏர்போர்ட்டில் வெளியேறுவார் கதவிற்கு முன்னால்  படபடப்புடன் காத்திருந்தான். விமானத்தை விட்டிறங்கி பாஸ்போட் பரிசோதனை முடிந்து வெளியே வரும் கதவுக்கூடாக  ஒவ்வொரு பயணியும் வரும் போதும் கதவு திறப்பதும் வருவது பத்மகலாவா என ஆவலுடன் கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

சில விநாடி இடைவெளிகளுக்குள் மூடித்திறக்கும் கதவிடுக்குள் ஊடாக பத்மகலாவின் உருவம் தெரிகிறதா என அவனின் கண்கள் தேடின.

இதோ ப்ராங்க்ஃபர்ட் ஏர்ப்போர்ட்டில் பீடு நடைபோட்டு தன்னருகே வரும் பத்மகலாவைப் பார்த்துப் பெருமிதமாக இருந்தது சீலனுக்கு. 

சீலன் தனக்காக ஒற்றைச் சிவப்பு ரோஜாவுடன் கண்களில் ஆவலும் பரசவமும் மின்ன காத்திருப்பதைக் கண்டதும் அவனை நோக்கி வேகமாக நடந்து வர அவனும் அவளை நோக்கி நடந்தான்.

சில விநாடிகள்தான், தாயிடம் சேய் பாய்ந்து சென்று அணைத்துக் கொள்வது போல் இருவரும் ஒருவரை அணைத்துக் கொண்டனர்.


பத்மகலா சீலனின் தோள்மீது சாயந்து அவனை இறுக்கி அணைத்தவாறு குலுங்கி குலுங்கி அழுது ஆனந்தக் கண்ணீர் சொரிந்தாள். 

அவளின் கண்ணீர் சீலனின் சேர்ட்டையையும் பனியனையும் தாண்டி அவனின் முதுகைச் சுட்டது. அவள் முதுகை ஆதரவாக வருடிவாறு தனது கண்களையும் துடைத்துக் கொண்டான்.

சீலன் உன்னோடு சேருவேன் என எதிர்பார்க்கவேயில்லை'

குலுங்கி குலுங்கி அழுதாள்.அது காதலில் தோய்ந்து வந்த அழுகை.

அவர்கள் இருவரும் பொது இடம் என்றும் கவனிக்காது அணைத்துக் கொண்டு  நின்றதை வெள்ளைக்காரர்கள் வியப்புடன் பார்த்தார்கள். ஏனென்றால் தமிழ்க் காதலர்கள் பொது இடங்களில் கட்டிப்பிடித்து அணைப்பது அரிது அதனால் அவர்கள் வியப்புடன் பார்த்தார்கள் சிலர் அவர்களிருவரையும் பார்த்து புன்னகைத்துக் கொண்டே சென்றார்கள்.

அணைப்பிலிருந்து விடுபட்டனர் இருவரும்.

சீலன் தனது காதலியை அழைத்துச் சென்று வாங்கொன்றில் உட்கார வைத்துவிட்டு „இருங்கோ இங்கே ஒரு கோப்பி குடிச்சுப் போட்டுப் போவோம் என்றான் சீலன். 

அதனருகே ஒரு மக்டொனால்ட்ஸ் கடை இருந்தது. இருங்கோ வாரேன் என்று ஸ்டார்பக்ஸ் காஃபியை வாங்கிக் கொண்டு  மக்டொனால்ட்ஸில்  இரண்டு பர்கர் ஆர்டர் செய்து எடுத்துவந்தான். 

முன்சனுக்கு செல்லும் புகையிரதத்தில்  திரும்பி வீட்டிற்கு வரும்போது சுடச் சுட பர்கரும் காஃபியும் சாப்பிட்டபடி வந்தார்கள். அவனது நெடுநாளைக்கு முன்னான கனவு ஞாபகம் வந்தது. 
குழந்தைத்தனமான கனவு.. பத்மகலாவுடன் பர்கரும் ஐஸ்க்ரீமும் சாப்பிடுவதான கனவு. அவளைப் பார்த்துப் புன்னகைத்தான்.

அது விரைவுப் புகையிரதம், பெரிதாகப் பயணிகள் இல்லை. பத்மகலா அவனின் தோளில் சாய்வதும் தலைநிமிர்த்தி பர்கரை சாப்பிடுவதும் கோப்பி குடிப்பதும் பிறகு தோளில் சாய்வதுமாக இருந்தாள்.

கனடாவிலிருந்து புறப்படும் போது தலைக்குத் தேய்த்துக் குளித்த சாம்பூவின் வாசனையும் அவளின் உடலிலிருந்த வாசனையும் அவனைக் கிறங்கடித்தது.

அவனை அவள் உற்று என்ன என்பது போல் பார்க்க அவள் கண்கள் கலங்கி இருந்தன. பதறிவிட்டான் சீலன். முன்பு எப்போதோ கோபித்ததை நினைத்து அழுகிறாளோ. இல்லை அவள் பட்டென்று போட்டுடைத்தாள். அவனுடன் இனி சேர்வோமோ என்ற நிலையிலிருந்து இன்று கண்டடைந்த நிலை வரை அவள் மனக்கண்ணில் ஓடி இருந்தது. 

„சீலன்.. சீலன் என்று குழந்தை போலத் தேம்பியபடி. இந்தப் பொறாமைதான் எவ்வளவு பெரிய விடயம்..பானு அக்காவைப் போய் சந்தேகப்பட்டேனே மன்னிச்சிருங்கோ' என்றாள். 
„அதெல்லாம் விடு. உன் மனக்குழப்பம் அப்பிடிப் பேச வைத்தது. ஆனால் நீ கொடுத்து வைத்தவள் கலா. நம்மட பெண்கள் இங்கே படும் பாட்டை அறிந்தால் வருந்துவாய். நீ பாக்யசாலி என்பேன்';.

'என் அம்மா. என் அம்மாவைப்போல எத்தனை அம்மாக்கள். தங்கட குஞ்சுகளை வெளிநாட்டுக்கு அனுப்புவித்து தப்பிச்சு வாழ்ந்தா போதுமெண்டு தங்கள் சொத்துசுகம் எல்லாத்தையும் வித்து தியாகியாக் கிடக்குறாங்க. தன் ரத்தத்தைப் பாலாக் கொடுத்து தன் சேமிப்பையும் வழிச்சுக் கொடுத்து என்னென்ன துயரத்தோட வாழ்ந்து வர்றாங்க. 

படிப்பு ஒண்டே தன்னை உயர்த்தும் என்று படிக்க வந்து பணத்தட்டுப்பாடாலும் உடல் நிலையாலும் பாதிப்படிப்போடு கல்யாணம் கட்டிப்போன என் தங்கச்சி, இங்கே தங்கட தாய்நாட்டை விட்டுத் தனியா உபத்ரவம் செய்யும், சந்தேக குணம் கொண்ட புருசனோட சின்னஞ்சிறு பிள்ளைகளோடும்  ஊர் ஏக்கத்துல வாழ்ந்து வர்ற பானு அக்கா, குடிப்பழக்கத்தாலயும் மற்ற பழக்கங்களாலயும் புருஷன் அழைக்காம இருந்தாலும் வந்து அவனுக்குப் பணிவிடை செஞ்சு அவனுக்குப் பின்னே அநாதரவா ஆன பிரான்சில் வாழும் கமலா அக்கா, அடுத்தவங்களுக்கு உதவி வர்ற வவா அன்ரி, டேவிட் அங்கிள் மனைவி, தன்னோட வாழ்க்கையை தந்தைக்குப் பயந்து ஒளிச்சு பின்னே ஓடிப்போய்த் திருமணம் செய்த நிரோஜா.. ஹ்ம்ம் பெண்களுக்கு எங்கேயும் அதிகாரம் இல்லை. முடிவெடுக்க முடிவதில்லை. .'

 
உணர்ச்சி வசப்பட்ட மனநிலையில்  பேசிக்கொண்டிருந்தான் சீலன். மனம் கட்டறுந்த நிலை.. 'இன்னும் சிலபேரைப் பத்திச் சொன்னா உன் மனசு துடிக்கும் கலா .. என்னைத் தன் சகோதரனாய் வரிச்ச சாந்தி தன்னோட கணவனைக் காண பூஜைக்கு வந்த புஸ்பம் போல இருந்தா. ஆனா இந்த கண்டம் விட்டுக் கண்டம் மாறும் வித்தையில  விசாவுக்கு ஏற்பாடு செய்த ஒரு காடையனால  தன்னோட உடல் மாசடைஞ்சிருச்சின்னு சொல்லி ஏழாவது மாடிலேருந்து உயிர்துறந்த சாந்தி.. அதை விடக் கொடுமை. நல்ல சீர் செனத்தியோட அப்பா அம்மா கட்டி வைச்ச பவித்ரா அக்கா இங்கே இப்போ என்று சொல்லும்போது குலுங்கிக் குலுங்கி அழுதுவிட்டான்'.

பதறிப்போன கலா.. 'சீலன் சீலன்.. என்னாச்சு ? ' என்றாள். அவங்க காரியம் முடிஞ்சு போச்சுன்னு அங்கே அவங்க அப்பா அம்மா எல்லாம் கர்மா பண்ணிட்டாங்க. ஆனா அவங்க இங்கே இங்கே ஒரு சீரழிவைச் சந்திச்சு இப்போ அதிலிருந்து மீள முடியாம இருக்காங்க.. பெண்களை போகப் பொருளா உலகமெங்கும் பயன்படுத்துறாங்க. அதுக்கு ஜெர்மனியும் விதி விலக்கில்ல. ஐரோப்பாவோட மையமா இது திகழுதுன்னு சொல்றாங்க. 

திருமணம் செய்து கூட்டி வந்து புருசனால கைவிடப்பட்டவங்க., கள்ளவிசாவில வந்தவங்க தாங்கள்  ஜீவிக்க வேண்டி ஒரு வேலை தேடிப் போகும்போதும் அந்த அலுவலகங்கள்ல பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகுறாங்க. யாதும் ஊரே யாவரும் கேளீர்னு இதுல ஈடுபட்டவங்க போதை அடிமையாவும் ஆகிடுறாங்க. அப்படிப்பட்டவங்களுக்கு நாம் ஏதும் உதவி செய்யணும் கலா என்றான்.' அவனுடைய நெகிழ்வும் தீவிரமும் அவளிடமும் தொற்றிக் கொண்டது. 

இந்தப் பேப்பரைப் பார். இதுல அடுத்த கிழமை பிராங்பேர்ட்டிலபெண்களுக்கு நேரும் குடும்ப வன்கொடுமைகள் குறித்தும் பாலியல் பலாத்காரத்தை எதிர்த்தும் பேரணி நடக்க இருக்கு. அந்தப் பேரணியும் கருத்தரங்கும் அனைத்துலகப் பெண்கள் அமைப்பினால் நடத்தப்படவிருக்கின்றது.
உலக  நாடுகள் அனைத்திலுமிருந்து அந்ததந்த நாடுகளிலிருக்கம் பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளுகிறார்கள்.

அதன் முடிவுல நடக்கப் போற கருத்தரங்கத்துல மதுரைப் பல்கலைக்கழக பேராசிரியை  மங்கையர்க்கரசியாரும், டென்மார்க்கிலிருக்கும் பேராசிரியர்;  குமாரவேலு  அவர்களும்  பேசுறாகிறார்கள். ஜேர்மனிய பெண்கள் அமைப்பு அவர்களை அழைத்திருக்கிறார்கள்.

„அவர்கள் இருவரும் உன்னுடன் தொடர்பு கொண்டார்களா'

„ஓம் நான் அவர்களின் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது அவர்கள் வருவதாகச் சொன்னார்கள். அவர்களிருவரும் பிராங்பேர்ட்டில் உள்ள ஒரு விடுதியில் தங்கப் போகிறார்கள். அவர்களுக்கான செலவை ஜேர்மனிய பெண்கள் அமைப்பு பொறுப்பேற்றுளளது'

„அது சரி கலா நீ இங்கை என்ன படிக்கப் போகிறாய் கனடாவிலை மூன்று மாதம் டொக்ரருக்குப் படித்தாயே'

„பெண்ணியம் சம்பந்தப்பட்ட படிப்பையும் ஜேர்னலிசமும் படிக்கப் போகிறன் „

„அப்ப டொக்ரர் படிப்பு'

„அதைவிட எனக்கு இதிலைதான் விருப்பம். படிப்புக்கு எல்லையும் இல்லை வயதும் இல்லை. யோசிப்பம்'என்றாள் பத்மகலா.

„அருமையான முடிவு. கனடாவிலை பெண்களுக்கான டொக்ரர் படிப்பை படித்தனி. அதை இங்கை தொடர முடியும். பெண்ணியம் சம்பந்தப்பட்ட படிப்பையும்  ஜேர்சனலிசத்தையம் படித்தால் ஒன்றுக்கொன்று தொடர்பு உள்ளதாயும் இருக்கின்றது, இது முடியுமா உன்னால்....' என்று வாய் மூடமுன்,

„முடியும் சாதித்துக் காட்டிறன்' என்றாள் உறுதியாக.

புகையிரதத்தில் பேசியபடியே வந்த  பத்மகலா சீலனின் தோளில் தூங்கிவிட்டாள். முன்சன்  புகையிரத நிலையத்தை புகையிரதம் வந்தடைந்தது.

தனது தோளில் தலைசாய்த்துத்  தூங்கிக் கொண்டிருந்த பத்மகலாவின் தலையை மெதுவாகத் தூக்கிய சீலன் „கலா நாங்கள் இறங்க வேண்டிய ஸ்ரேசன் வந்துவிட்டது, இறங்குவம்' என அவளை எழுப்புகிறான்.
புகையிரதத்தை விட்டு முதலில் இறங்கிய பத்மகலா, கனடாவிலிருந்து கொண்டுவந்து சூட்கேசை சீலனிடமிருந்து வாங்குகிறாள்.

„கலா இனி வீட்டை போய் சமைக்க ஏலாது, இங்கேயே உருளைக்கிழங்கு பொரியலை வாங்கிக் கொண்டு போய் வீட்டிலை வைத்துச் சாப்பிடுவம் „ என்ற சொல்லியவாறு பத்மகலாவை அழைத்துக் கொண்டு புகையிரத நிலையத்திற்க எதிரேயிருந்த உணவு விடுதியில் உருளைக்கிழங்குப் பொரியலை பாரசல் செய்து வாங்குகிறான்.

பத்மகலா விமானப் பிரயாணம், புகையிரதப் பிரயாணம் என சோர்ந்து போயிருந்தாள்.தனது வீட்டுக்கு பஸ்ஸில் அவள் இருக்கும் கூட்டிக் கொண்டு போக முடியாது என புரிந்து கொண்ட சீலன் ராக்சியில் அவளைக் கூட்டிக் கொண்டு போனான்.

அவனது வீடு மாடியில் இருந்தது. 

ஒரு கூடம் கூடத்தோடு திறந்த சமையலறை,ஒரு படுக்கையறை மலசலகூடம் இவ்வளவுதான் அவனது வீடு.

கூடத்திலிருந்த சோபாவில் இருவரும் அமர்ந்தார்கள். மேலே பார்த்தபடி இருந்த பத்மகலாவின் கண்களிலிருந்து மெல்லக் கண்ணீர் கசிந்தது.

சீலன் அவளை ஆதரவாக அணைத்தபடி „இப்ப எதற்கு அழுகிறாய்.......எதை நினைத்து அழுகிறாய்....அழாதை'என்கிறான்

அப்படியே அவன் மடியில் தலை வைத்தவள் குலுங்கி குலுங்கி அழுதாள்.

„முடியேலை சீலன் முடியேலை அழாமலிருக்க  முடியேலை...சீலன்  நான் கனடாவிலிருந்த போது உனக்கும் எனக்கும் இனிச் சரிவராது எனக்குச் சமனாக உன்னால் முடியாது என்று சொன்னேன். அதைக் கேட்ட நீ எவ்வளவு வேதனைப்பட்டிருப்பாய் என்பதை உணர்ந்தேன். 

அன்றிரவு நித்திரை இல்லாமல் அழுதேன். அக்காவிற்கும் அத்தானுக்கும் நான் இங்கு வருவதில் விருப்பம் இல்லை. ஆனால் பிடிவாதமாக இருந்தேன்.அவர்களுடன் தினம் தினம் வாக்குவாதப்படுவதால் ஏதோ கோபத்தில் அப்படிச் சொன்னேன். 

நீ எவ்வளவு நல்லவன். எதையும் மனதில் வைத்திருக்காமல் இருக்கிறாய். என்னை மன்னித்துவிடு சீலன்' என அவனிடம் மன்னிப்புக் கேட்டாள்.

சீலன் அவளை ஒரு குழந்தையை மடியில் படுக்க வைத்து தலையை வருடிக் கொடுப்பது போல் அவளின் தலையை வருடிக் கொடுத்தபடியே „கலா அழுகையை நிறுத்து. நான் ஒன்றுமே நினைக்கேலை அழாதை „ அவளின் கண்ணீரைத் துடைத்துவிடுகிறான்.

கலா ஜேர்மனிக்கு வரப் போகிறாள் என்று அவள் சொன்னவுடன் சீலன்  வீட்டுக்கு லாண்டலைன் தொலைபேசி இணைப்பை எற்படுத்தியிருந்தான். 

தாய்க்கும் சுவிஸிலிருந்த தவம்,டேவிட் அங்கிள், பானுவுக்கும் டென்மார்க்கில் ஆனந்தருக்கும் பேராசிரியர் குமாரவேலுவுக்கும் மதுரைப் பேராசிரியர் மங்கையற்கரசிக்கும் தனது தொலைபேசி இலக்கங்களைக் கொடுத்திருந்தான்.

நேற்று மங்கையற்கரசியும் குமாரவேலுவும் அடுத்த கிழமை பிராங்பேர்ட்டில் நடக்கவிருக்கும் சர்வதேசப் பெண்கள் பேரணியிலும் கரத்தரங்கிலும்  கலந்து கொள்ள வருவதாக அறிவித்துவிட்டார்கள்.

முகம் கழுவிவிட்டு வருகிறேன் என பத்மகலா எழவும் தொலைபேசி மணி அடித்தது. பத்மகலா தொலைபேசியை எடுத்து „கலோ' என குரல் கொடுக்க, மறுமுனையில் இரண்டு விநாடிகள் சத்தம் வரவில்லை.மறுபடியும் „கலோ' என்கிறாள் கலா.

மறுமுனையில் „கலோ நான் பானு பேசுகிறன் சுவிஸிலிருந்து இது சீலனின் வீடுதானே......நீங்கள்....

„நான் பத்மகலா' அவள் சொல்லி முடிக்குமுன்,

„பத்மகலாவா' உற்சாகத்திலும் மகிழ்ச்சியிலும் பானுவின் குரல் தொலைபேசிக்கூடாக அதிர்கிறது. தொடர்ந்து பானு „எப்ப வந்தனீங்கள்' என்கிறாள் பானு, „இன்றைக்குத்தான் வீட்டுக்கு வந்து கொஞ்ச நேரந்தான் ஆகுது' என பத்மகலா சொல்லிக் கொண்டிருக்கும் போதே சீலன் எழுந்து தொலைபேசியிலிருந்த ஒலிபெருக்கியை அமத்த மறுமுனையில் பானு „ எனக்கு சரியான சந்தோசம் பத்மகலா நீங்கள் சீலனுடன் வந்து சேர்ந்தது, சீலனுடன் பேசமுடியுமா என அவள் கேட்க' சொல்லுங்கள் பானு அக்கா நான் கேட்டுக் கொண்டிருக்கிறன் „ எனச் சீலன் சொல்கிறான்.

„சீலன்! வருகிற சனிக்கிழமை பிராங்பேர்ட்டிலை நடக்கிற சர்வதேச பெண்கள் பேரணியில் கலந்து கொள்ள நானும் சுவிஸ் பெண்கள் ஐந்து பேரும் வருகிறம். பிராங்பேர்ட்டில் விடுதியில் தங்குவதற்கு ஒழுங்கு செய்திருக்கிறார்கள், உங்கள் இருவரையும் சந்திக்க வேண்டும் என்று விருப்பம்.....' என்று பானு சொல்ல,

„நானும் கலாவும் அந்தப் பேரணியில் கலந்துகொள்ள வருகிறோம். உங்களை அங்கு சந்திக்க முடியும்'

„அப்படியா சந்தோசம் நான் வேலை செய்கிற இடத்திலையிருந்துதான் ரெலிபோன் எடுத்தனான், சரி சந்திப்பம் ரெலிபோனை வைக்கிறன்' . மறுமுனையில் பானு தொலைபேசியை துண்டிக்கிறாள்.

உருளைக்கிழங்கு பொரியலை இருவரும் சாப்பிட்டு தேநீரும் போட்டுக் குடிக்கின்றனர். சீலன் சோபாவில் காலை நீட்டி படுக்க ஆயத்தமாக அவனின் தலைமாட்டில் உட்கார்ந்த கலா அவனின் தலையை தனது மடியில் வைக்கிறாள்.

சீலன் மெதுவாகக் கண்ணயர்கிறான். என்னதான் அக்காவுடனும் அத்தானுடனும் வாக்குவாதப்பட்டு தான விரும்பிய காதலைத் தேடி ஜேர்மனிக்கு வந்துவிட்டாலும், என்னதான் இருந்தாலும் அவள் என் அக்கா என எண்ணிய பத்மகலா தொலைபேசியை எடுத்து எண்களை அமத்தி காதில் வைக்கிறாள்.

சில விநாடிகளில் தொடர்பு கிடைக்க „அக்கா நான் வந்து சேர்ந்துவிட்டன் சரி வைக்கிறன்' எனச் சொல்லி தொடர்பைத் துண்டிக்கிறாள்.

அவள் தொலைபேசியை வைக்க தொலைபேசி மணி அடிக்க எடுத்து காதில் வைத்து கலோ சொல்ல முன்பு „சீலா ராசா நான் அம்மா பேசுகிறன்' சீலனின் தாயின் குரல் வர பத்மகலா தடுமாறுகிறாள், சில விநாடிகள் எதுவும் பேசாமல் இருக்கிறாள்.

சீலனின் குரலைக் கேட்காத  தாயார்'சீலா நான் பேசுவது கேட்கவில்லையா சீலா' என பரிதவிப்புடன் கேட்க' கலோ „ பத்மகலா குரல் கொடுக்க, ஒரு பெண்ணில் குரல் வர தாய் பலவாறாக யோசித்து 
„சீலன் இல்லையா நீங்கள்..............?'

„நான் பத்....ம...கலா'

„ஓ'.....

„சீலனிடம் கொடுக்கவா'

„இல்லை உங்களோடைதான் கதைக்க வேண்டும்' என சீலனின் தாய் சொன்னதும் பத்மகலா என்ன ஏதுவோ என  பயப்படுகிறாள்.

„பிள்ளை பயப்படாதை நீங்கள் கனடாவிலையிருந்து வரப்போவதாகச் சீலன் சொல்லியிருந்தான்'
பத்மகலாவிற்கு வியப்பும் பயமும் வந்து கொண்டிருந்து. இதற்கிடையில் சீலன் கண்முழித்து எழுந்து யார் என சைகையால் கேட்கிறான். உங்கள் அம்மா என சத்தம் வராமல் சொல்கிறாள்.

„சீலனிடம் கொடுக்கவா' என பத்மகலா மீண்டும்  கேட்க „வேண்டாம்  உங்களுக்கு கொஞ்சம் புத்திமதி  சொல்லுறன், கவனமாக கேள் பிள்ளை'

„சொல்லுங்கள்'

„நீங்கள் இரண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புகிறியள்  எண்டு நீங்கள் யாழ்ப்பாணத்தில் படித்துக் கொண்டிருந்த போது ஒரு நாள் எங்கள் வீட்டிற்கு வந்த போதே கண்டுபிடித்துவிட்டன்'

„....................'

„ அது ஒண்டும் பிரச்சினை இல்லை, இப்ப நீதான் கழுத்திலை தாலி ஏறும் வரை கவனமாக இருக்க வேண்டும், இல்லாட்டி பதிவுத்திருமணம் முடியும் வரையுமாவது கவனமா இருக்க வேண்டும், நான் என்ன சொல்லுகிறன் எதற்காகச் சொல்லுகிறன் என்பது புரியுதுதானே'

„ம்'
„பிள்ளை தாலி பவுணிலைதான் கட்ட வேண்டும் என்றில்லை, மஞ்சள் கொடியிலை ஒரு மஞ்சளை கட்டி அதை தாலியாக கட்டினாலே போதும்'

„அதுவரை.....'

„புரியுது'

„சீலன் கட்டுப்பாடுடையவன்தான், ஆனால் சூழ்நிலைதான் எல்லாத்துக்கும்  காரணம், நீங்கள் பெண் கவனமாக இருக்க வேண்டும் என்ரை பிள்ளை என்பதற்காக முழுசாக நம்ப முடியாது'
„நீங்கள் பயப்படாதையுங்கோ பிழை ஒன்றும் நடக்காது என்னை நீங்கள்  நீங்கள் என்று கூப்பிடாதையுங்கோ, நீ என்றே கூப்பிடுங்கோ' என பத்மகலா சொல்ல'

„என்னை மாமி என்று சொல்லிப் பேசலாந்தானே' என்கிறாள் சீலனின் தாய்.

„சரி மாமி'
„சீலனிடம் ரலிபோனை குடு பிள்ளை'

பத்மகலா தொலைபேசியை சீலனிடம் கொடுக்கிறாள். பத்மகலாவிற்கு சொன்னதையே அவனுக்கும் தாய் சொல்கிறாள்.

„சரி அம்மா, நீங்கள் சொன்ன மாதிரியே நடக்கிறம்' என சீலன் பதில் சொல்கிறான்.

இரவு எட்டு மணியாகியது. நாளைக்கும் எங்கேயாவது கடையிலை சாப்பிடுவோமா என சீலன் கேட்க இல்லை சமைத்துச் சாப்பிடுவம் என பத்மகலா சொல்கிறாள்.

இரவுச் சாப்பாடாக பாணை ஜாமுடன் சாப்பிட்டவுடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். பேச்சின் நடுவில் புங்குடுதீவில் வித்தியாவிற்கு நடந்த கொடுமை பற்றி பத்மகலா கடுங்கோபத்தடனும் குமுறலுடனும் கதைக்கிறாள். நான் பெண்ணியம் பற்றியும் ஜேர்சனலிஸம் பற்றியும் படிக்க வேண்டும் என்ற ஒரு பிடிவாதம் வந்ததற்கு எங்கள் நாட்டில் நடைபெறும் பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறையும் ஒரு காரணம் என்கிறாள்.

பத்மகலாவைப் பெருமையுடன் பார்க்கிறான் சீலன். நித்திரை இருவரையும் ஆட்கொள்ள „கலா போய் அறைக்குள் படு' என்கிறான் சீலன். அவள் எழுந்து போகிறாள் சீலன் சோபாவில் படுக்க வசதியாக படுக்கையறையிலிருந்த தலையணையை பத்மகலா கொண்டு வந்து கொடுக்கிறாள்.

மஞ்சல் கயிற்றிலாவது தாலி அல்லது பதிவுத்திருமணம் என்ற காவலரண் இருவரையும் தடுத்து வைக்கிறது. எல்லாவற்றையும்விட  சீலனின் தாய் தங்களில் வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என இருவரும் நினைக்கின்றனர்.

அடுத்த நாள் முன்சனில் உள்ள தமிழ்க்  கடைக்குப் போன சீலனும் பத்மகலாவும் பொருட்களுடன் மஞ்சள் கயிறொன்றை வாங்குகின்றனர. கடைக்காரர் சிரித்துக் கொண்டே மஞ்சள் கயிறை கொடுக்கும் போது வெற்றிலையில் வைத்துக் கொடுக்கிறார்.

வீட்டுக்கு வந்த சீலனும் பத்மகலாவும் விவேக் அங்கிளுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருகிற வெள்ளிக்கிழமை வீட்டுக்கு வர முடியுமா எனக் கேட்டு உங்கள் முன்னிiயில் பத்மகலாவிற்கு தாலி கட்ட இருப்பதைச் சொல்கிறார்கள்.

அவர்களும் மகிழ்ச்சியுடன் சம்மதிக்கிறார்கள். தாலி கட்டுவதுடன் பதிவுத்திருமணம் மிக முக்கியம் என விவேக் அங்கிள்  புத்தி சொல்ல, அதற்கான விண்ணப்பத்தை கொடுக்கவிருப்பதாக சீலன் பதில் சொல்கிறான்.

தீவிரமான சிந்தனை ரேகைகள் ஓடுகின்றன கலாவின் மனதிலும். இப்போது அவளும் சீலனும் தனித்தனி இல்லை. இணைந்த கைகள் இணைந்து செயல்பட்டால் எதிலும் வெற்றி நிச்சயம்.
சீலன் பிஎம் டபுள்யு கார் தயாரிக்கும் நிறுவனத்தில் பயிற்சிப் படிப்பு படிக்கிறான். பத்மலாவும் படிக்கப் போகிறாள். 

ஆனால் தம்மைப்போல இங்கே பாடுபட்டு ஓடிவந்த தம் மக்களுக்காக இதுவரை என்ன செய்தோம் இனி என்னென்ன செய்யலாம் என்ற எண்ணங்கள் இருவரின் மனதிலும் எழும்பத்தொடங்கின. மென்மேலும் செய்யவேண்டியவை பற்றி இருவரும் தங்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
விழுதல் யார் வாழ்க்கையிலும் நிகழலாம். ஆனால் அதன் பின் எப்படி எழுந்தார்கள் என்பதே சரித்திரம் ஆகிறது. தோல்விக்குப் பின் வரும் வெற்றியைச் சரித்திரம் குறித்துக்கொள்கிறது. இங்கே அகதிகளாய் வந்த ஒவ்வொரு பெண்ணுக்காகவும் ஏன் இம்மண்ணில் பிறந்த பெண்களுக்காவும் குரல் கொடுப்பது தமது தர்மம் என்பதை உணர்ந்தார்கள். தாங்கள் பணிபுரியும் இடங்களிலும் மற்ற நிறுவனங்களிலும் விமன்ஸ் செக்சுவல் ஹரேஸ்மெண்ட்  செல் ஆரம்பிக்க எண்ணம் கொண்டார்கள். 

மறுநாள் மாலை. ப்ராங்க்பர்ட் நகரத் தெருக்களில் பல்வேறு பண்பாட்டைச் சார்ந்த பெண்களின் பேரணி. அதில் முதல் வரிசையில் சுபத்ரா, பானு, பத்மகலாவும் அவளுடன் சீலனும் பேராசிரியர்கள் மங்கையர்க்கரசியும் குமாரவேல் சாரும் நடந்து வந்தார்கள். பத்மகலாவின் கழுத்தில் மஞ்சள் கயிறு தாலியாக தொங்க கமபீரமாக அவள் நடப்பதை பெருமிதமாக பார்க்கிறாள் பானு. கையில் பிடித்திருந்த பதாகைகள் அவர்களது கொள்கைகளை அழுத்தம் திருத்தமாக அறிவித்தன. 

'ஆக்கும் சக்தி பெண். அழிவுச் சக்தி ஆக்காதீர். '
'போதைப் பொருளல்ல பெண்
போகப் பொருளல்ல பெண்.
சக மனுசி பெண்.'
'சிகரங்களைத் தொட 
கடந்தவைகளை மற. 
விழுதல் இயற்கையென்றால்
எழுதலும் இயற்கையே '

தர்மசீலனையும் பத்மகலாவையும் பெருமிதமாய்ப் பார்த்தபடி நடந்து கொண்டிருந்தார்கள் மங்கையர்க்கரசியாரும், குமாரவேல் சாரும். அவர்கள் பின்னே பிரளயத்தைக் கொண்டுவந்து பூமியைச் சுத்தம் செய்யும் ஆழிப்பேரலை போல பெண்கள் வெள்ளம் தொடர்ந்து சென்று கொண்டிருந்து.
பேரணி முடிவில் மாபெரும் மண்டபத்தில் கருத்தரங்கிற்கு ஏற்பாடாகியிருந்தது. பேச்சாளராக மேடையில் பல்வேறு நாடுகளிலுமிருந்து தெரிவு செய்யப்பட்ட ஆண்களும் பெண்களும் உட்கார்ந்திருந்தார்கள்.

பல நாட்டுப் பெண்களுடன் ஆங்காங்கே அந்த மண்டபத்தில் ஆண்களும் கேட்போராக உட்கார்ந்திருக்கிறார்கள். பானு, சீலன் சுபத்திரா, பத்மகலாவும் உட்கார்ந்திருக்கிறார்கள்.

பெண்களுக்கெதிரான கொடுமைகள் பன்முக நிலையில் நடைபெறுகின்றன என பேச்சாளர்கள் ஒருவர் மாறி ஒருவர் பகிர்ந்து கொள்கிறார்கள். ஒவ்வொரு நாட்டிலும் இந்தக் கொடுமைகள் இடம்பெறுகின்றன என்பதை அந்தந்த நாட்டிலிருந்து வந்த பெண்கள் கோபத்துடனும் குமுறலுடனும் சொல்கிறார்கள்.
மேடையில் இருந்த நான்கு ஆண்களில் டென்மார்க்கில் இருந்து வந்த பேராசிரியர் குமாரவேலுவும் ஒருவர்.

அவர் பேச எழுந்ததும் ஒரு வேண்டுகோளை ஏற்பாட்டாளர்களிடம் முன் வைக்கிறார். இலங்கையை தாயகமாக கொண்ட பெண்ணியம் படிக்கப் போகிற பத்மகலா என்பவர் இங்கே கேட்போராக இருக்கிறார். அவரைப் பேச அழைக்கலாமா, அவரின் ஆங்கிலப் பேச்சை அவரின் காதல் கணவனே ஜேர்மன் மொழியில் மொழிபெயர்ப்பார் என அனுமதி கேட்க பத்மகலாவிற்கு அனுமதி கிடைக்கிறது.

பத்மகலாவும் சீலனும் மேடையை நோக்கி எழுந்து போகிறார்கள். பத்மகலாவும் சீலனும் 'எழுகையே' என்பது போல கம்பீரமாக நடந்து போவதை எல்லாரும் கைதட்டி வரவேற்கிறார்கள்.

ஒலிவாங்கி முன்னாள் நின்ற பெண்களுக்கெதிராக உலக நாடுகள் எங்கும் இடம்பெறும் பாலியல் வன்முறை நிறுத்தப்பட வேண்டும் எனக் கூறிய அவள் அண்மை நாட்களில் இலங்கையில் புங்குடுதீவு என்ற இடத்தில் ஒரு மாணவி மீது மேற்கொண்ட குழுப்பாலியல் வன்முறையை விபரித்து இவற்றுக்கு காரணியாக போதைப்பொருள் விற்பனையும் இருப்பதால் போதைப் பொருளுக்கெதிராகவும் பெண்கள் போராட வேண்டும் என சரளமாக ஆங்கிலத்தில் பேச அதைச் சரளமாக சீலன் மொழிபெயர்த்தான்.

நாடு நாடாக அலைந்து படாத கஸ்டங்களை அவமானங்களை தாங்கி இன்று ஜேர்மனியின் முக்கிய நகரொன்றின் முக்கிய நிகழ்வொன்றில் மொழி வல்லோனாக அந்த மொழி அறிவுக்கூட துறைசார் கல்வி எதனையும் கற்று சாதிக்க முடியும் விழுந்தாலும் எழுந்து நிமர முடியும் என்பதை சீலனும் எத்தனை தடை வந்தாலும் இலட்சியத்தையும் இலக்கையும் காதலையும் அடைவதற்கு விடாமுயற்சியே காரணம் என தெளிவுபட உறுதிபட காதல் ஜோடி இருவரும் உதாரணமாக அந்த மேடையில் நின்றனர்.
„விழுதல் என்பது எழுகையே'  நிறைவுப் பகுதி (1)
எழுதியவர்: திருமதி.தேனம்மை லக்ஸ்மணன், கைதராபாத்,இந்தியா
மேலே இருப்பது வெளியான பகுதி. சுவாரசியத்துக்காக சிறிது சேர்த்திருக்கிறார்கள். :)

”விழுதல் என்பது எழுகையே “
ஒரு ஆண்டு நிறைவாகிறது!

இதில் என்னுடைய பங்களிப்பும் இருப்பது குறித்து பெருமிதமும் மகிழ்வும் அடைகிறேன். நன்றி பண்ணாகம், கிருஷ்ணமூர்த்தி சார் & கந்தையா முருகதாசன் சார் !!!

நன்றி கல்லாறு சதீஷ் !!!
இலக்கிய தாரகை தேனம்மை லெக்ஷ்மணன் அவர்கள் நிறைந்த ஆளுமை கொண்ட கவிஞர் எழுத்தாளர்.
2010 இல் டிஸ்கவரி வுக் பலஷில் பொன்காசிராஜன்,வேடியப்பன் ஆகியோருடனான ஒரு சந்திப்பில்
கலந்து கொண்டு அன்றைய நிகழ்வை
அழகாகப் பதிவிட்டவர்.
"விழுதல் என்பது எழுகையே" எனும்
பெரும் தொடரில் அவரும் பயணிப்பது
மிக்க மகிழ்ச்சிக்குரியது. கதையின் கடைசி அத்தியாயத்தை முடிக்கும் நால்வரில் அவரும் ஒருவர்.
அந்த நாலு பேருக்கும் நன்றி.
திரு.கந்தையா முருகதாசன் ஆலோசனையில்,
என்னால் முதல் பாகமாகத் எழுதப்பட்ட "விழுதல் என்பது எழுகையே"எனும் கதையைத் தொடர்ந்து கந்தையா முருகதாசன் ,பண்ணாகம் கிருஸ்ணமூர்த்தி ,நோர்வே நக்கீரன்,உட்பட எழுதிய இருபத்தாறு எழுத்தாளர்களும் வாழ்த்துக்குரியவர்கள்.
இனி இறுதி அத்தியாயம் இங்கே;இதனைப் படைத்துள்ளார் தேனம்மை லெக்ஷ்மணன் அவர்கள்.
்்்்்்
„விழுதல் என்பது எழுகையே' நிறைவுப் பகுதி (1)
எழுதியவர்: திருமதி.தேனம்மை லக்ஸ்மணன், கைதராபாத்,இந்தியா


///’’விழுதல் என்பது எழுகையே’’
என்ற பெருந் தொடர்கதை 26 எழுத்தாளர்கள் எழுதிய தொடர் வெற்றிகரமாக நிறைவுக்கு வருகிறது . ஒருகதைக்கு 5 முடிவுகள் கொண்டதாக வித்தியாசமான முறையில் நிறைவுக்கு வரவிருக்கிறது என்பதையும் மகிழ்வுடன் அறிவிக்கின்றோம்.///

///50 வது தொடர் முடிந்ததும் முடிவுப்பகுதிகள் 5 எழுத்தாளர்கள் தனித்தனி 5முடிவாக எழுதி உள்ளார்கள் அவைகள் வெளிவந்ததும் நிறைவுப்பகுதியாக நிர்வாக இணைப்பாளர்,நிர்வாக பொறுப்பாளர்களின் ஒருவருட அனுபவங்கள் நன்றியறிதல்கள் என்பவற்றுடன் இக்கதை நிறைவு பெறுகிறது இக்கதையை ஒரு புத்தகமாக வெளியீட இருக்கின்றோம். எனவே இதுவரை மிக்க ஒத்துழைப்பு நல்கியதுபோல் தொடர்ந்தும் கைகோத்து பயணிப்போம்.///
http://www.pannagam.com/end-of-the-story-1-2-3-4


’’விழுதல் என்பது எழுகையே’’
கதையின்  26 பிரமாக்கள்     (26 கதைஆசிரியர்கள்) அனைவருக்கும் பண்ணாகம் இணையத்தின் நன்றிகள்.
(A to Z  oder)

 கதையின் வித்தியாசமான நிறைவுப்பகுதிகள்  4 இல்  

 (மற்ற முடிவுப் பகுதிகள்  தொடர்ந்து வரும்)

நிறைவுப்பகுதி 1  இந்தியாவில் இருந்து

திருமதி லட்சுமணன் தேனம்மை அவர்கள்

   எழுதிய முடிவுப் பகுதி 1.


 **************************************************
இதுதான் நான் எழுதி அனுப்பியது :)

பெண் என்று பூமிதனில் பிறந்துவிட்டால் மிகப் பீழை இருக்குதடி தங்கமே. என்று பாரதியார் பாடியது சும்மாவா.இதோ ப்ராங்க்ஃபர்ட் ஏர்ப்போர்ட்டில் பீடு நடைபோட்டு தன்னருகே வரும் பத்ம கலாவைப் பார்த்துப் பெருமிதமாக இருந்தது சீலனுக்கு.

இருங்கோ இங்கே ஒரு கோப்பி குடிச்சுப் போட்டுப் போவோம் என்றாள் கலா. அதனருகே ஒரு மெக்றொனால்ட்ஸ் கடை இருந்தது. பரவஸத்தால் துள்ளியது சீலனின் உள்ளம். இருங்கோ வாரேன் என்று ஸ்டார்பக்ஸ் காஃபி ஆர்டர் செய்து அவளை அமர வைத்துவிட்டு அவன் மெக்றோனால்ட்ஸில் இரண்டு பர்கர் ஆர்டர் செய்து எடுத்துவந்தான்.

காரில் திரும்பி வீட்டிற்கு வரும்போது சுடச் சுட பர்கரும் காஃபியும் சாப்பிட்டபடி வந்தார்கள். அவனது நெடுநாளைக்கு முன்னான கனவு ஞாபகம் வந்தது. குழந்தைத்தனமான கனவு.. பத்மகலாவுடன் பர்கரும் ஐஸ்க்ரீமும் சாப்பிடுவதான கனவு. அவளைப் பார்த்துப் புன்னகைத்தான்.

என்ன என்பது போல் பார்த்த அவள் கண்கள் கலங்கி இருந்தன. பதறிவிட்டான் சீலன். முன்பு எப்போதோ கோபித்ததை நினைத்து அழுகிறாளோ. இல்லை அவள் பட்டென்று போட்டுடைத்தாள். அவனுடன் இனி சேர்வோமோ என்ற நிலையிலிருந்து இன்று கண்டடைந்த நிலை வரை அவள் மனக்கண்ணில் ஓடி இருந்தது.

சீலன்.. சீலன் என்று குழந்தை போலத் தேம்பியபடி. இந்தப் பொறாமைதான் எவ்வளவு பெரிய விஷம்..பானு அக்காவைப் போய் சந்தேகப்பட்டேனே மன்னிச்சிருங்கோ என்றாள்.

அதெல்லாம் விடு.. உன் மனக்குழப்பம் அப்பிடிப் பேச வைத்தது. ஆனால் நீ கொடுத்து வைத்தவள் கலா. நம்மட பெண்கள் இங்கே படும் பாட்டை அறிந்தால் வருந்துவாய். நீ பாக்யசாலி என்பேன்.

”என் அம்மா. என் அம்மாவைப்போல எத்தனை அம்மாக்கள். தங்கட குஞ்சுகளை வெளிநாட்டுக்கு அனுப்புவித்து தப்பிச்சு வாழ்ந்தா போதுமெண்டு தங்கள் சொத்துசுகம் எல்லாத்தையும் வித்து தியாகியாக் கிடக்குறாங்க. தன் ரத்தத்தைப் பாலாக் கொடுத்து தன் சேமிப்பையும் வழிச்சுக் கொடுத்து என்னென்ன துயரத்தோட வாழ்ந்து வர்றாங்க.

படிப்பு ஒண்டே தன்னை உயர்த்தும் என்று படிக்க வந்து பணத்தட்டுப்பாடாலும் உடல் நிலையாலும் பாதிப்படிப்போடு கல்யாணம் கட்டிப்போன என் தங்கச்சி, இங்கே தங்கட தாய்நாட்டை விட்டுத் தனியா உபத்ரவம் செய்யும், சந்தேக குணம் கொண்ட புருஷனோட சின்னஞ்சிறு பெட்டைகளோடயும் ஊர் ஏக்கத்துல வாழ்ந்து வர்ற பானு அக்கா, குடிப்பழக்கத்தாலயும் மற்ற பழக்கங்களாலயும் புருஷன் அழைக்காம இருந்தாலும் வந்து அவனுக்குப் பணிவிடை செஞ்சு அவனுக்குப் பின்னே அநாதரவா ஆன கமலா அக்கா, அடுத்தவங்களுக்கு உதவி வர்ற விவா அன்ரி, டேவிட் அங்கிள் மனைவி, தன்னோட வாழ்க்கையை தந்தைக்குப் பயந்து ஒளிச்சு பின்னே ஓடிப்போய்த் திருமணம் செய்த நிரோஜா.. ஹ்ம்ம் பெண்களுக்கு எங்கேயும் அதிகாரம் இல்லை. முடிவெடுக்க முடிவதில்லை. .”

உணர்ச்சி வசப்பட்ட மனநிலையில் காரோட்டியபடியே பேசிக்கொண்டிருந்தான் சீலன். மனம் கட்டறுந்த நிலை.. ”இன்னும் சிலபேரைப் பத்திச் சொன்னா உன் மனசு துடிக்கும் கலா .. என்னைத் தன் சகோதரனாய் வரிச்ச சாந்தி தன்னோட கணவனைக் காண பூஜைக்கு வந்த புஷ்பம் போல இருந்தா. ஆனா இந்த கண்டம் விட்டுக் கண்டம் மாறும் வித்தையில  விசாவுக்கு ஏற்பாடு செய்த ஒரு காடையனால  தன்னோட உடல் மாசடைஞ்சிருச்சின்னு சொல்லி ஏழாவது மாடிலேருந்து உயிர்துறந்த சாந்தி.. அதை விடக் கொடுமை. நல்ல சீர் செனத்தியோட அப்பா அம்மா கட்டி வைச்ச பவித்ரா அக்கா இங்கே இப்போ என்று சொல்லும்போது குலுங்கிக் குலுங்கி அழுதுவிட்டான்”.


பதறிப்போன கலா.. ”சீலன் சீலன்.. என்னாச்சு ? “ என்றாள். அவங்க காரியம் முடிஞ்சு போச்சுன்னு அங்கே அவங்க அப்பா அம்மா எல்லாம் கர்மா பண்ணிட்டாங்க. ஆனா அவங்க இங்கே இங்கே ஒரு சீரழிவைச் சந்திச்சு இப்போ அதிலிருந்து மீள முடியாம இருக்காங்க.. பெண்களை போகப் பொருளா உலகமெங்கும் பயன்படுத்துறாங்க. அதுக்கு ஜெர்மனியும் விதி விலக்கில்ல. ஐரோப்பாவோட மையமா இது திகழுதுன்னு சொல்றாங்க.

திருமணம் செய்து கூட்டி வந்து புருஷனால கைவிடப்பட்டவங்க., கள்ள விசாவுல வந்தவங்க தாங்க ஜீவிக்க வேண்டி ஒரு வேலை தேடிப் போகும்போதும் அந்த அலுவலகங்கள்ல பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகுறாங்க. யாதும் ஊரே யாவரும் கேளீர்னு இதுல ஈடுபட்டவங்க போதை அடிமையாவும் ஆகிடுறாங்க. அப்படிப்பட்டவங்களுக்கு நாம் ஏதும் உதவி செய்யணும் கலா என்றான்.” அவனுடைய நெகிழ்வும் தீவிரமும் அவளிடமும் தொற்றிக் கொண்டது.

இந்தப் பேப்பரைப் பார். இதுல நாளைக்கு இங்கே ஒரு பெண்களுக்கு நேரும் குடும்ப வன்கொடுமைகள் குறித்தும் பாலியல் பலாத்காரத்தை எதிர்த்தும் பேரணி நடக்க இருக்கு. அதன் முடிவுல நடக்கப் போற கருத்தரங்கத்துல ரீச்சர் மங்கையர்க்கரசியாரும், குமாரவேல் சேரும் கலந்துக்கிட்டு பேசுறாங்க. சிறப்பு அழைப்பாளரா ஜெர்மனி தமிழ்ச்சங்கம் அழைச்சிருக்கு.


தீவிரமான சிந்தனை ரேகைகள் ஓடுகின்றன கலாவின் மனதிலும். இப்போது அவளும் சீலனும் தனித்தனி இல்லை. இணைந்த கைகள் இணைந்து செயல்பட்டால் எதிலும் வெற்றி நிச்சயம். அவள் பெண்களுக்கான சிறப்பு மருத்துவராகிவிட்டாள். மருத்துவருக்கு எந்த நாட்டிலும் வரவேற்பு உண்டு என்பதால் ஜெர்மனியின் பேர்பெற்ற மருத்துவமனையில் பணிபுரிய அழைக்கப்பட்டிருக்கிறாள். சீலனும் பிஎம்டபிள்யு நிறுவனத்தில் மிகப் பொறுப்பான பதவியில் இருக்கிறான். இன்னும் இருவரும் மிகப்பெரும் உயரங்களை எட்டலாம்.

ஆனால் தம்மைப்போல இங்கே பாடுபட்டு ஓடிவந்த தம் மக்களுக்காக இதுவரை என்ன செய்தோம் இனி என்னென்ன செய்யலாம் என்ற எண்ணங்கள் இருவரின் மனதிலும் எழும்பத்தொடங்கின. மென்மேலும் செய்யவேண்டியவை பற்றி இருவரும் தங்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

விழுதல் யார்வாழ்க்கையிலும் நிகழலாம். ஆனால் அதன் பின் எப்படி எழுந்தார்கள் என்பதே சரித்திரம் ஆகிறது. தோல்விக்குப் பின் வரும் வெற்றியைச் சரித்திரம் குறித்துக்கொள்கிறது. இங்கே அகதிகளாய் வந்த ஒவ்வொரு பெண்ணுக்காகவும் ஏன் இம்மண்ணில் பிறந்த பெண்களுக்காவும் குரல் கொடுப்பது தமது தர்மம் என்பதை உணர்ந்தார்கள். தாங்கள் பணிபுரியும் இடங்களிலும் மற்ற நிறுவனங்களிலும் விமன்ஸ் செக்ஷுவல் ஹரேஸ்மெண்ட் செல் ஆரம்பிக்க எண்ணம் கொண்டார்கள்.

மறுநாள் மாலை. ப்ராங்க்பர்ட் நகரத் தெருக்களில் பல்வேறு பண்பாட்டைச் சார்ந்த பெண்களின் பேரணி. அதில் முதல் வரிசையில் சுபத்ரா, பானுவுடன் கைகோர்த்தபடி பத்மகலாவும் அவளுடன் சீலனும் பேராசிரியர்கள் மங்கையர்க்கரசியும் குமாரவேல் சாரும் நடந்து வந்தார்கள். கையில் பிடித்திருந்த பதாகைகள் அவர்களது கொள்கைகளை அழுத்தம் திருத்தமாக அறிவித்தன.

“ஆக்கும் சக்தி பெண். அழிவுச் சக்தி ஆக்காதீர். ”

”போதைப் பொருளல்ல பெண்போகப் பொருளல்ல பெண்.சக மனுஷி பெண்.”

“சிகரங்களைத் தொட கடந்தவைகளை மற. விழுதல் இயற்கையென்றால்எழுதலும் இயற்கையே “

தரும சீலனையும் பத்மகலாவையும் பெருமிதமாய்ப் பார்த்தபடி நடந்து கொண்டிருந்தார்கள் மங்கையர்க்கரசியாரும், குமாரவேல் சாரும். அவர்கள் பின்னே பிரளயத்தைக் கொண்டுவந்து பூமியைச் சுத்தம் செய்யும் ஆழிப்பேரலை போல பெண்கள் வெள்ளம் தொடர்ந்து சென்று கொண்டிருந்து.

டிஸ்கி :-

தமிழ் எழுத்தாளர் இணைய அகத்தில் இடம் பெற்றது குறித்து மகிழ்ச்சி :)

Kandiah Murugathasan
21 மணிகள் · தொகுத்தது ·

எமது வேணடுகோளை ஏற்று கவிதைத் தொடரில் பங்குபற்ற ஆதரவு தந்த தங்கள் அனைவருக்கும் தமிழ் எழுத்தாளர் இணைய அகத்தின் சார்பாக பணிவன்பான நன்றிகளை வணக்கத்துடன் தெரிவித்து இத்திட்டத்தில் இணைந்துள்ள படைப்பாளிகளின் பெயர்களை இங்கே மகிழ்வோடு பதிவு செய்கின்றோம்.

திரு.பொலிகை ஜெயா - சுவிஸ்
திருமதி. கோசல்யா சொர்ணலிங்கம் - ஜேர்மனி
திருமதி.சுமதி பாலசசந்தர் - பிஜித்தீவு
திருமதி. சுபாஜினி சிறீரஞ்சன் - டென்மார்க்
திருமதி. ரஜனி அன்ரன் - ஜேர்மனி
திரு. ஆதவன் கதிரேசர்பிள்ளை – டென்மார்க்
திருமதி. பாமா இதயகுமார் - வன்கூவர், கனடா
திருமதி.வேதா இலங்காதிலகம் - டென்மார்க்
திருமதி. மாலினி மாலா – ஜேர்மனி
செல்வி. சறீகா சிவநாதன் - ஜேர்மனி
திரு. நோர்வே நக்கீரா – நோர்வே
திருமதி.நர்மதா சஞ்சீபன் - யாழ்ப்பாணம்
டாக்டர் எழில்வேந்தன் - தமிழகம், இந்தியா
திரு. எஸ் தேவராஜா – டெனமார்க்
திருமதி. ரதி சிறீமோன் - டென்மார்க்
திருமதி. நிவேதா உதயராயன் - லணடன்
மருத்துவர். மதுராகன் செல்வராஜா – வவுனியா, இலங்கை
மருத்துவர். அகிலன் நடேசன் - காரைதீவு(மட்டக்களப்பு)இலங்கை
திரு.இணுவையூர் சக்திதாசன் - டென்மார்க்
திரு. இணுவையூர் மயூரன் - சுவிஸ்
திரு.வண்ணை தெய்வம் - பிரான்ஸ்
திரு.சசிகரன் பசுபதி – லண்டன்
திருமதி. தேனம்மை லக்ஸ்மணன் - கைதராபாத், இந்தியா
திருமதி. கவிதாயினி நிலா – புத்தளம், இலங்கை
திரு.பார்த்தீபன் பத்மநாதன் - பிரான்ஸ்
திரு.வன்னியூர் செந்தூரன் - வன்னி, இலங்கை
திரு.நயினை விஜயன் - ஜேர்மனி
திரு.பகீரதன் அரியபுத்திரன் - கனடா
திரு.மண் சிவராஜா – ஜேர்மனி
திரு. மட்டுவில் ஞானகுமாரன் - கனடா
திருமதி. சிவமேனகை – சுவிஸ்
திரு. ஆவூரான் - அவுஸ்திரேலியா
திரு.பசுபதிராஜா – ஜேர்மனி
திரு. தமிழ்முரசு பாஸ்கரன் - அவுஸ்திரேலியா
திருமதி. நகுலா சிவநாதன் - ஜேர்மனி
திரு. வேலனையூர் பொன்னண்ணா – டென்மார்க்
திரு. அம்பலவன் புவனேந்திரன் - ஜேர்மனி
திரு. சரவணன் - மலேசியா
திரு.ராஜ்கவி ராகில் - சிசில்தீவுகள்

(இத்திட்டத்தில் இன்னும் பல படைப்பாளிகளின் பெயர்களையும் இணைக்கவிருக்கின்றோம்)

தமிழ் எழுத்தாளர் இணைய அகம்
Tamil Writers Net Portal

டிஸ்கி :- இக்கதையை அழகாக எடிட் செய்து வெளியிட்ட திரு. கந்தையா முருகதாசன் சகோ அவர்களுக்கும், திரு, கிருஸ்ணமூர்த்தி சகோ அவர்களுக்கும் எனது பாராட்டுகளும் வந்தனங்களும். இது மாபெரும் முயற்சி. வெவ்வேறு காலநிலைகளில் வெவ்வேறு நாடுகளில் வாழும் எழுத்தாளர்களின் எண்ணப் போக்குகளை ஒருங்கிணைத்து சில நேரங்களில் கதைப்போக்கை சூசகமாக உணர்த்தி இம்மாபெரும் தொடரைக் கொண்டுவந்தது மிகச் சிறப்பு. இம்முயற்சியில் தங்கள் நேரத்தை ஒதுக்கிப் பங்குபெற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

5 கருத்துகள்:

 1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு
 2. அருமை! சகோ! தங்களின் வெளியான பகுதியையும், தாங்கள் எழுதியதையும் வாசித்தோம். இலங்கைத் தமிழ் நன்றாக வந்திருக்கின்றதே.

  கீதா:நான் இலங்கையில் 3 ஆம் வகுப்பு படிக்கும் வரை இருந்தேன் அப்பாவின் வேலை நிமித்தம் காரணமாய். அதன் பின் இங்குதான் வாசம்.

  மிக அழகாக எழுதியுள்ளீர்கள் தேனு...

  பதிலளிநீக்கு
 3. அஹா அருமை கீதா. மிக்க நன்றி உங்க வாழ்த்துக்கு :) அப்போ இன்னும் அதிகமா உங்களுக்கு ஈழத் தமிழ் சரளமா வருமே :)

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...