சனி, 19 செப்டம்பர், 2015

கதை கதையாம் காரணமாம், தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய்.7. தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய்.

இராய செல்லப்பா அவர்களின் சிறுகதைத் தொகுதி தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய். இதில் பன்னிரெண்டு சிறுகதைகள் உள்ளன. வாழ்க்கையில் நிகழ்ந்த நிகழ்வுகளை நினைவில் கொண்டு புனையப்பட்டுள்ள இக்கதைகள் இயற்கையைப் பற்றியும் மனிதநேயத்தை வளர்ப்பதையும் பேசுகின்றன. மிக லேசாக கிண்டலும் இழையோடுகிறது இவரது எழுத்துகளில்.

கண்ணே கலைமானே வெளிநாட்டில் வளர்ப்பு மிருகத்துக்கு என்னென்ன சட்ட திட்டம் உண்டென்று பேசினாலும் பேத்தியிலும்தாய்மையைப் ப்ரதிபலிக்கிறது. சிறுவயதுத் தோழி, மந்தாகினி, ஊன்றுகோல் நானுனக்கு, மனோரமா ஆகியன பெண் உணர்வுகளைப் பேசும் கதைகள். இரண்டாவது கிருஷ்ணனும் அன்னையைத் தேடியும்  பழமா பாசமாவும், சாந்தி நிலவ வேண்டுமும் முடிவற்ற தேடல்களும் கண்ணைக் கசிய வைத்த கதைகள். தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய் கிராமத்துக்கே அழைத்துச் சென்றது. இயற்கை வாழ்வை நேசிக்க வைத்த கதை இது.
ஏழு இரவுகள் வித்யாசமான கதை. ஆண்கள் உலகம் எப்படி என்று புரிய வைத்தது. சில இடங்களில் ஏழு இரவுகளும் மனோரமாவும் சினிமாட்டிக்காக இருக்கின்றன. மொத்தத்தில் அருமையான தொகுப்பு. சென்ற புத்தகத் திருவிழாவில் வாங்கிய அகநாழிகை நூல்களை இப்போதுதான் படித்துக் கொண்டிருக்கிறேன்.எழுத்து நடையில் இது மிகச் சிறந்த நூலாக இருக்கிறது.  

நூல்  - தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய்.
ஆசிரியர்  - இராய.செல்லப்பா
பதிப்பகம் – அகநாழிகை
விலை – ரூ 120/-
8. கதை கதையாம் காரணமாம்,

பத்ரிக்கையாளரான சூரிய சந்திரன் பத்தொன்பது எழுத்தாளர்களிடம் எடுத்த காத்திரமான பேட்டிகளின் தொகுப்பு. பல்வேறு தளங்களில் இயங்கும் இவர்களை எழுத்து என்னும் நூல் பிணைக்கிறது. ஒவ்வொருவரைப் பற்றியும் ஆழ்ந்து படித்து தரவுகள் எடுத்து அதன்பின்னரே பேட்டி எடுக்கப்பட்டுள்ளதால் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. எதார்த்தமான கேள்விகளும் அதற்கு எதிர்பாராத பதில்களுமாக சுவையாக இருக்கிறது தொகுப்பு.

நாம் வியந்து படிக்கும் ஒவ்வொருவருக்குள்ளும் உள்ள எதார்த்தத்தை பகிர்கிறது. வாழ்வியல் இடையூறுகளையும் நோய்க்கூறுகளையும் கடந்து அவர்கள் எவ்வாறு சாதித்தார்கள் என்பதைப் படிக்கும்போது பிரமிப்பாய் இருக்கிறது. எம் வி வெங்கட்ராம், ச தமிழ்ச் செல்வன், வேல இராமமூர்த்தி, சு சமுத்திரம், பாரதி பாலன், சிவகாமி, தேவகாந்தன், பூமணி, பாமா, கந்தர்வன், பா செயப்பிரகாசம், சோலை சுந்தரப் பெருமாள், மேலாண்மை பொன்னுச்சாமி, ஜோடி குரூஸ், தங்கர்பச்சான், இரா. நடராசன், ஆதவன் தீட்சண்யா, திலீப்குமார், இமையம் ஆகியோரது பேட்டிகள் இடம்பெற்றுள்ளன. சிறப்பு என்னவென்றால் இவர்கள் அனைவருமே விளிம்பு நிலை மக்களின், எளிய மக்களின் கதைகளைப் பதிவு  செய்தவர்கள். எல்லாருமே புரட்டிப் போடும் எழுத்துக்கும் கருத்துக்கும் சொந்தக்காரர்கள். சமுதாயத்தை நிமிர்ந்த சிந்தையும் நேர்கொண்ட பார்வையும் கொண்டு சாடியவர்கள். அதை வலிமையாகப் பதிவு செய்தவர்களும் கூட. எனவே பேட்டிகளும் கார சாரமாய் இருக்கின்றன. எழுத்துக்களைப் படித்த நாம் இதில் எழுத்தாளர்களைப் படிக்கமுடிவதால் இது மிகச் சிறந்த ஆவணப் புத்தகமாக உள்ளது .

நூல் – கதை கதையாம் காரணமாம்
பேட்டித் தொகுப்பு – சூரிய சந்திரன்
பதிப்பகம் – சந்தியா பதிப்பகம்
விலை – ரூ 120/-

11 கருத்துகள் :

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

மூத்த வலை பதிவர் திருமிகு இராய.செல்லப்பா அவர்களின்
தாத்தா தோட்டத்து வெள்ளரிக்கா
ரசித்துப் படித்திருக்கிறேன்
நன்றி சகோதரியாரே

Jeevalingam Yarlpavanan Kasirajalingam சொன்னது…

இரு நூல்களுமே பயன்மிக்கது.
கதை கதையாம் காரணமாம்
என்ற நூல்
படைப்பாளிகளுக்கு வழிகாட்டுமே!


முன்னேறும் உலகில் பின்னேறும் தமிழர் பண்பாடு!
http://www.ypvnpubs.com/2015/09/blog-post_18.html

Nagendra Bharathi சொன்னது…

அருமை .நன்றி

sury Siva சொன்னது…

இராய.செல்லப்பா அவர்கள் புத்தகம்
எனக்கு அன்பளிப்பாக அவர் தந்தார்.
கதைகள் விரும்பி படித்தேன்.
மனதில் நிலைத்து நிற்கின்றன
என்ற பின்னே தான் நானும் படித்தேன்.

அவரது கதைகள் அல்வா போல .

சட் என்று முழுங்கி விடாமல்,
அதை மென்று மென்று சுகம் அனுபவிக்கத்
தோன்றுவது போல
மேலும் மேலும் ஒரு முறை இரு முறை படிக்கத் தூண்டுகின்றன.

அடுத்த கதை தொகுப்பு எப்போது சார் !!

சுப்பு தாத்தா.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

முதல் நூல் படித்து ரசித்திருக்கிறேன்..... இரண்டாம் நூல் அறிமுகத்திற்கு நன்றி.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

திரு இராய செல்லப்பா அவர்களின் புத்தகம் வாசித்து விமர்சனமும் எழுதினோம் எங்கள் தளத்தில். மிகவும் ரசித்து வாசித்த புத்தகம்.

இரண்டாவது நூல் அறிமுகத்திற்கு மிக்க நன்றி! சகோதரி..

‘தளிர்’ சுரேஷ் சொன்னது…

இரண்டுமே வாசிக்கவில்லை! வாங்கி வாசிக்க வேண்டும்! பகிர்வுக்கு நன்றி!

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி ஜெயக்குமார் சகோ

ஆம் ஜீவலிங்கம் சகோ நன்றி.

நன்றி நாகேந்திர பாரதி சகோ

நன்றி சுப்பு சார்

நன்றி வெங்கட் சகோ

நன்றி துளசி சகோ & கீத்ஸ்.

நன்றி சுரேஷ் சகோ

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

Chellappa Yagyaswamy சொன்னது…

எனது சிறுகதைத் தொகுதி - 'தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய்' பற்றிய தங்கள் மதிப்பீடு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. மிக்க நன்றி. புதுக்கோட்டையில் சிந்திப்போம். - இராய செல்லப்பா

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...