எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 2 ஜூன், 2015

எரு முட்டை. ( புதிய தரிசனம் )


ரு முட்டை :-

ணலில் ஒளிர்ந்து கொண்டிருந்தன எரு முட்டைகள். மெல்ல மெல்ல கங்குகளைப் போலாகி ஒளிரும் நெருப்பின் முன் சாம்பல் நிற இருளில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான் குமரன். கண்ணீர்க் கோடுகள் தீயாய் நீண்டு மண்ணில் சொட்டுச் சொட்டாக விழுந்து லேசாக மண் வாசத்தைக் கிளப்பிக் கொண்டிருந்தன.


சாம்பலாகிக் கொண்டிருந்தன எரு முட்டைகள். சாம்பல்.. பிடி சாம்பலாகும் தேகத்துக்குள்ளேதான் எவ்வளவு அழுக்கு, காமம் , ஆசைமும்மலம் சுமந்த உடல். தன்னிரக்கம் பொங்கி  கண்களை விரித்துக் கொண்டிருந்தது  . துடைக்கப் பிடிக்காமல் நெருப்பை உற்று நோக்கிக் கொண்டிருந்தான். அரசங்குச்சிகளின் வழியே நெருப்பின் கரங்கள் ஆவலாய் மேலெழும்பி எரு முட்டைகளைச் சுவைத்துக் கொண்டிருந்தது. அதன் நீள் கரங்கள் இன்னும் இன்னும் என்று மேலெழும்பிக் கொண்டிருந்தன .

காமமும் காதலும் பெருகக் கேவல் உள்ளேயே எழுந்தடங்கிற்று. அழுதழுது ஆற்றுப் போனது போல் குரல் அடைத்தது. கோடைகாலத்தின் வெக்கையோடு மனசின் வெக்கையும் சேர்ந்து கொப்பளித்துக் கொண்டிருந்தது. ரோகிணி குளித்துக் கொண்டிருந்தாள்.

ஆம் . அப்படித்தான் அவள் சொன்னாள். படுக்கையறைக் கதவு சாத்தியிருந்தது. வெளியே போய்விட்டு வந்து சரியாகக் கொக்கியிடாத வீட்டுக் கதவைத் திறந்து தாழிட்டிருந்த படுக்கையறைக் கதவைத் தட்டியபோது , “ குளிச்சிட்டு இருக்கேன் . இதோ வந்திடுறேன்என்றுதான் குரல் எழுப்பினாள்

விபூதிப் பாக்கெட்டுக்களைப் போட்டுவிட்டு வழக்கமான எட்டு மணிக்குத்தான் வீடு திரும்புவது வழக்கம். இன்று சீக்கிரமே முடிந்து விட்டதால் வீட்டுக்கு வந்துவிட்டான். ஹாலில் சுத்திக் கொண்டிருந்த மின்விசிறியை அணைத்துவிட்டுப் புழக்கடைக்குப் போகும்போது மல்லிகை வாசம் கூடத்துக் காற்றில்  சுத்திக் கொண்டிருந்தது. வழக்கமாக வரும் பூக்காரி வழியில் சந்தித்தபோது விலை அதிகம் இருப்பதால் மல்லிகையே வாங்கவில்லை என்றாளே.

கொசுத்தொல்லை அதிகம் இருப்பதால் பின் வாசல் வழியாக  புழக்கடை பக்கத்து ஜன்னலைச் சாத்தச் சென்றான். அந்த அறையிலிருந்து குளியலறைக்கும் அதில் இருந்து புழக்கடைக்கும் வரலாம். தங்கை பெரியவளானதும் குளியலறையும் கழிவறையும் வேண்டும் என்று அப்பா கட்டியது. அந்தக் கதவு வழியே வீட்டுக்குள் வராமல் பள்ளிக்குச் சென்று வரலாம். அவளுக்குத் திருமணம் ஆகி அம்மாவும் அப்பாவும்  இறந்தபின் அந்தப் படுக்கை அறை அவர்களுடையது ஆனது.. சொல்லப் போனால் ரோகிணியின் வசமானது.  

புழக்கடையில் சுவற்றில் சாத்திய ஒரு சைக்கிளும் ஒரு ஜோடி செருப்புகளும் சிதறிக் கிடந்தன. திக்கென்றிருந்தது. இது மதியழகனோடதாச்சே.. இங்கே ஏன்..

படுக்கையறைப்பக்கமிருந்து  கண்ணாடி வளையல்கள் சத்தத்தோடு லேசான சிரிப்பொலியும் சிணுங்கலும் அவன் வீட்டிலிருந்து ஜன்னல் வழி கசிந்து கொண்டிருந்தது. நெஞ்சக் குலை அறுந்தது போலிருந்தது குமரனுக்கு. கண்ணை இருட்டியது. அங்கங்கே கிடந்த நாய்களின் மலத்தை மிதித்துவிடாமல் தடதடவென்று தோட்டத்துக்கு வந்து சேர்ந்தான்

அருவருப்பு நிறைந்து காறித் துப்ப வேண்டும் போலிருந்தது. திருமணம் ஆகி 8 வருடம் ஆகிவிட்டது. இன்னும் புழு பூச்சி வைக்கலியா என அக்கம் பக்கத்தவர் கேட்டுக்கொண்டுதான் இருந்தார்கள். இருவருக்கும் நெருக்கத்துக்கும் அன்புக்கும் குறைவில்லை. எந்தக் குறையுமில்லாத தாம்பத்யம்தான் இருந்தும் ரோஹிணி கருத்தரிக்கவில்லை.

எதனால் இப்பிடிச் செய்தாள் அவள். மதியழகன் சிரிக்கச் சிரிக்கப் பேசுவான் . செகப்புத் தோல்காரன். தலை நிறைய முடி. உண்ட வீட்டுக்கு ரெண்டகம் நெனைக்கிற பய., சேக்காளியா இருக்கவன் பண்ற காவாலித்தனத்தை நினைக்க நினைக்க ஆத்திரம் தலைக்கேறியது.

கன்று ஈனாத பசுஞ்சாண உருண்டைகளோடு அருகம்புல் போட்டுப் பிசைந்து காய வைச்ச எரு உருண்டைகள்  கொல்லைத் திண்ணையில் வேட்டி பட்டு சலசலவென சத்தமிட்டன. கொட்டடியில் கட்டி வைத்திருந்த அரசங்குச்சிக் கட்டை எடுத்துக்கிட்டுப் போயி பொடம் போட உக்கார்ந்தான்.

மனசுல இருக்க அவசம் போல பத்தவெச்சதும் வெய்யில்ல சுக்காக் கெடந்த அரசங்குச்சி பத்திக்கிட்டு எரிஞ்சுது. பொடம் போட வழக்கமா அழகா அடுக்கித்தான் பத்த வப்பான். இன்னிக்கு என்னவோ அள்ளி அள்ளி ஓமத்துல போடுறவன் போல போட்டுட்டுப் பார்த்துக்கிட்டு இருந்தான். ஆத்தாமைய அடக்க முடியல.

புழக்கடைப் பக்கம் குளியலறைக் கதவோட லேசான கீச்சும், சரசரப்பும் பாம்புச் செவியா இருந்த குமரனுக்குக் கேக்காம இல்லை. அதுக்கும் பொறவு குளிச்சிட்டு வந்து ரோகிணி  சாப்பிடவான்னு கூப்பிட்டுப் போனா. நெஞ்சு நெறையக் கசந்து கிடந்த இவனுக்கு சாப்பிடப் பிடிக்கல. வேணாம் என்றான்.

இந்நேரத்துல என்ன எரிச்சிக்கிட்டு இருக்க. வெளிய சாப்பிட்டியா என்றபடி மல்லியைத் தண்ணீரில் நனைத்துத் தலையில வச்சிக்கிட்டு உள்ளே போனாள். எரிந்து சாம்பலான எரு உருண்டைகளைப் பத்துக் குரடால்  லாவகமாகத் தள்ளியபடியே கண்ணீரை கண்ணுக்குள்ளேயே விழுங்கிக் கொண்டு எழுந்தான். சோறும் குழம்பும் போட்டுச் சாப்பிட்டுக் கொண்டிருந்தவளை  கடந்து போய் வெளித் திண்ணையில் கோபமாகப் படுத்துக் கொண்டான். ஊமைக் கோவம். கங்கு கூட இல்லாமல் சாம்பலாய்ப் போன கோவம்.

இந்தப் பயித்திக்காரி மேல பித்தா இருக்கமே.. இவளை முடியப் பிடிச்சு இழுத்து அடிச்சுக் கேக்க முடியலையேன்னு தன் மேலேயே ஏலாமை.. என்னத்த இந்தக் கழுதையப் போயித் தொட்டுக்கிட்டு. தலைக்குக் குளிச்சுக் காயவைச்சு மல்லிப் பூ வச்சு வாசமா ராத்திரில மோகினிப் பிசாசு மாதிரி எம்புட்டு அழகா இருப்பா இவ. எத்தனை ராத்திரி இந்த மல்லிப் பூவோட மல்லிப்பூவா குழைஞ்சு கொழந்தையாப் படுத்துக் கெடந்திருக்கான்.

வேர்வையும் புழுக்கமும் மல்லியை இன்னும் விசிறியடிக்க அத அவ சடையிலேருந்து பிடுங்கி வீசணும்போல இருந்துது அவனுக்கு. தேய்ஞ்சு போன நெலா லேசா எங்கேயோ கெடக்க அதப் பார்த்து மொறைச்சபடியே ஒரு நாய் ஊளையிட்டது. மயிர்க்காலெல்லாம் சிலிர்க்க அசையாம கிடந்தவன் கொசுக்கடிகூடவே நொறுங்கிய மனசோடு தூங்கிப் போனான்.

தாச்சு பல மாசம். மதியழகன் வர்றதும் அரசல் புரசலா அக்கம் பக்கம் பேசுறதும் அவனுக்கு ஈயத்தைக் காய்ச்சி ஊத்துனமாதிரித்தான் இருந்துச்சு. குருநாதன் மட்டும் இல்லைன்னா குமரன் தூக்குல தொங்கி இருப்பான். சேக்காளின்னா எல்லாருமா கெட்ட பயலுகளா இருக்கானுங்க.

அவன்தான் சொல்லுவான். டேய் குமரா இந்தால விபூதி கலரு இல்லாம இருக்கு. நீயும் பொடம் போட்டு துணில சலிச்சு அத்தர், சந்தனம் , சவ்வாதுன்னு என்னன்னவோ செண்ட் கலந்துதான் கொடுக்குறே.. இன்னும் சேர்மானம் சேத்து மாட்டு எலும்பை கொஞ்சம் போட்டு சுட்டுட்டு கலந்தியானா வெள்ளை வெளேருன்னு இருக்கும்ல. உன் விபூதிக்கும் கிராக்கியா இருக்கும்ல. இப்பிடி அலையாம பெரிய கடைக்காரனே ஒன்னப் பிடிச்சுக்குவான்.

எங்கப்பாரு காலத்துலேருந்து இப்பிடியே சுத்தபத்தமா செஞ்சு பழகிட்டோம். கலப்படம் பண்ணா கடவுளுக்கே அடுக்காதுடா. அப்பிடின்னு நியாயம் சொல்லுவான் குமரன்.

வெளியூரு பஸ்ஸ்டாண்டுல ரெண்டு பேரும் பேசிக்கிட்டே போகும்போது சைடால வந்த சரக்கு வேன் ஒண்ணு குமரனை அடிச்சிருச்சு. ரத்தம் வழிய வழியப் பக்கத்துல இருந்த ஆஸ்பத்ரிக்கு ஆட்டோவுல தூக்கிப் போட்டுக்கிட்டு ஓடினான் இந்த குருநாதன்தான். இவன் இல்லைன்னா அன்னிக்கே போயிச் சேர்ந்திருப்பான்.

நெனைச்சிக்கிட்டே அதே டாக்டர் கிட்ட தனக்குப் பிள்ளை இன்னும் பிறக்காத காரணத்தை விசாரித்திருந்தான். அவரும் ரெண்டு மூணு டெஸ்ட் பண்ணிப் பார்த்துட்டு விந்தணு கம்மியா இருக்கு. புள்ள பிறக்கறதுக்குத் தேவையான அளவு விந்தணு இல்ல என்று இடியைப் போட்டிருந்தார்.

இந்தக் காலத்துல விந்தணு இல்லாட்டா டோனர்கிட்ட வாங்கி கரு முட்டையோடு  செலுத்தி கரு உண்டாக்க வைக்கலாம். நல்ல ஆரோக்கியமான பிள்ளை பிறக்கும் . அப்பிடி ஒரு நடை முறை பிள்ளையே பிறக்காதவங்களுக்கு வரமா இருக்குன்னு சொன்னார். போய்யா நீயும் உன் பிள்ளையும் என்று கோபத்தை அடக்கியபடி எழுந்து வெளியே வந்தான்.

இந்த சோகத்திலும் கோவத்திலும் வீட்டுக்கு வந்தவனிடம் ரோகிணி முழுகாம இருக்கும் நல்ல சேதியைச் சொன்னாள். திகுதிகுவென புடம்போட்ட எரு முட்டை போல அவன் உடலெல்லாம் , மனசெல்லாம் பற்றி எரிந்தது. தானே சாம்பலாகி அவளையும் சாம்பலாக்கி சுற்றிச் சுழலவேண்டும் என்ற தீரா நெருப்பு அவனிடம் தொற்றிக் கொண்டது. ரெண்டு பேர் மேலயும் மண்ணெண்ணையை ஊத்திப் பத்த வைச்சிக்கிடுவோமா என்று கூட யோசித்தான்.

முழுகாமல் இருக்கும் அவளது தாய்மை அழகு வெருட்டுவது போல் இருந்தது. தலை விரித்து முன் பக்கம் வயிறு சரிந்திருக்க பார்க்கப் பார்க்கக் காளியோ, நீலியோ என்பது போலிருந்தாள். தலையை முடிந்து கொண்டே திரும்பி ஆடி அசைந்து உள்ளே போனாள். பின்னாடியே மந்திரித்தவன் மாதிரி அவள் பின்னே போனவன் உள்ளம் பல மாதிரியாகவும் பேதலித்துக் கொண்டிருந்தது.

பிள்ளைப் பெற வக்கில்லாதவன் பெண்டாட்டிக்கு இன்னொருத்தன் பிள்ளையா.. பிள்ளை பிறந்ததும் அவளுக்குத் தெரியாமல் செத்துப் போச்சுன்னு சொல்லி எங்கேயாவது கொண்டுபோய் போட்டு விடலாமா. சுவற்றில் மருந்துக்கடை காலண்டரில் இருந்த கொழு கொழு பாப்பா உஷ் என்று வாயில் விரல் வைத்து அதட்டியது. அதன் மென்மையையும் குழி விழும் கன்னத்தையும் முன் நெத்தில விழும் முடியையும் பார்த்தான். பக்கத்தில் போய் அது உண்மைக் குழந்தை போலத் தொட்டுப் பார்த்தான். என்னவோ பொண்டாட்டியின் வயித்தையும் தொட்டுப் பார்க்கத்தோணியது. தங்கச்சிக்குப் பிறந்த பிஞ்சுக் குழந்தையின் வாசமும் அந்தப் பஞ்சுப் பொதியும் அவன் நெனைப்பில் ஒரு கணம் வந்து போனது.

தன்னை ஏமாத்தினவளுக்கு தண்டனை கொடுக்க வேண்டும்தான்.அவளுக்குப்பிறக்குற குழந்தை என்னுடையது இல்லைங்கிறது எனக்கு மட்டும்தான் தெரியும். அவளுக்கோ மதியழகனுக்கோ அவனுக்கு இப்பிடி ஒரு குறை இருப்பது தெரியாது.

இவங்க ரெண்டு பேரும் பண்ண துரோகத்துக்கு பொறக்கப்போற புள்ள என்ன பாவம் செஞ்சுது. பொறக்கட்டும் அது ஆணோ, பெண்ணோ அதுக்கு நாந்தான் தகப்பன். அத நல்லா வளர்ப்பேன். நல்லா படிக்க வைப்பேன். அது என் கொழந்தை. அதுக்கு எந்த பாதகமும் பண்ண மாட்டேன். அவங்க பாவத்துக்கு அவங்க பலனை அனுபவிப்பாங்க. தீர்த்துக் கட்டவோ தீர்ப்பு சொல்லவோ எனக்கு என்ன அதிகாரம் இருக்கு. அருவாளால வெட்டணும்னா அன்னிக்கே வெட்டி இருக்கணும். இப்ப என்ன வந்திச்சு . இது என் பிள்ளைன்னு கொஞ்சுறதே அவங்க ரெண்டு பேருக்கும் நான் தரப் போற தண்டனைதானே.


மனசும் விரல்களும் நடுங்கிக் கொண்டிருந்தன  மனைவியின் கர்ப்பத்திலிருக்கும் சிசுவுடன் பேசுவதுபோலப் பேசிக் கொண்டிருந்தான். இது கையாலகாத்தனம் இல்ல. பாவமன்னிப்பு. போறா போ. கொல்ல நினைத்த கைகளை உற்றுப் பார்த்தான். சாம்பல்படிந்து சாந்தமாய் இருந்தன. அவரவர் பாவமூட்டைகளை அவரவரே சுமந்து அவரவரே எரிக்கட்டும். எருமுட்டைகள் அரசங்குச்சியில் பஸ்பமாகி மணம் வீசிக் கொண்டிருந்தன.


டிஸ்கி :- இந்தச் சிறுகதை புதிய தரிசனம் இதழில் வெளிவந்தது.

டிஸ்கி 2. 

முகநூலில் இதைப் பகிர்ந்தமைக்கு நன்றி செல்வம் ராமசாமி சார். 


"எரு முட்டை"
சிறுகதை...!
தேனம்மை லட்சுமணன்...!
புதிய தரிசனம்...!

துரோகத்தை பழிவாங்கும்
புதிய பரிமாணம்!
— with Thenammai Lakshmanan.
 

7 கருத்துகள்:

 1. சும்மா சொல்லக்கூடாது கதையின் கருவும்,கதை நகர்த்தலின் அழகும் அற்புதம் . ..பன்முகத் தலைவியே பாராட்டுக்கள் ----சரஸ்வதி ராசேந்திரன்

  பதிலளிநீக்கு
 2. //அவரவர் பாவமூட்டைகளை அவரவரே சுமந்து அவரவரே எரிக்கட்டும்.//
  அழகான முத்தாய்ப்பு.பிரமாதம்

  பதிலளிநீக்கு
 3. பாவ மூட்டைகள்..... அவர்களே சுமக்கட்டும்....

  நல்ல சிறுகதை. பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 4. அருமையான கதை! வித்தியாசமான கோணம்! //பாவமன்னிப்பு. போறா போ.// ஷமா ஹி சத்ய ஹை! இது மகாபாரதத்தில் தர்மர் சொல்லும் ஒரு வாக்கு! யேசுவின் வார்த்தைகள்! இது போன்ற மாபெரும் மனது அன் கண்டிஷனல் லவ் என்ற தத்துவத்தை பின்பற்றினால் மட்டுமே சாத்தியமாகும்....கதை நாயகன் உயர்ந்து நிற்கின்றான்!

  //அவரவர் பாவமூட்டைகளை அவரவரே சுமந்து அவரவரே எரிக்கட்டும். // ஆம்! அவரவர் செய்த தவறுகளுக்கு அவரவரே தண்டனையை அனுபவிப்பர். னாம் தண்டனை கொடுக்க வேண்டும் என்ற அவசியமே இல்லைதான்......கதை நடை அருமை....

  பாராட்டுகள் சகோதரி! வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 5. சிறுகதை அருமை...

  பாராட்டுகள் சகோதரி...

  பதிலளிநீக்கு
 6. நன்றி சரஸ் மேம் :)

  நன்றி பித்தன் சார்.

  நன்றி வெங்கட் சகோ

  நன்றி துளசி சகோ

  நன்றி டிடி சகோ

  பதிலளிநீக்கு
 7. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...