எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 1 ஜூன், 2015

ரேட்டிங்கும் ரா(ங்)கிங்கும் :-

ரேட்டிங்கும் ரா(ங்)கிங்கும் :-

சமீபகாலமா எதை எடுத்தாலும் ரேட்டிங்க்தான். ஒரு பொருளை வாங்கப் போனாலும் சரி ஒரு அலுவலகத்தில் வருடாந்திர முடிவிலும் சரி, ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் சரி. ரேட்டிங் போட்டு அவர்களைத் தரம்தாழச் செய்வதில்தான் முனைப்பாக இருக்கிறது உலகம்.

முன்பு எல்லாம் பொருட்களுக்கு ரேட்டிங்க் வைத்து விற்பதில்லை. தரமான பொருட்களையே நாம் வாங்கினோம் என்பதல்ல. அவ்வளவு சுகாதாரக் கேடும் நோயும் ப்ளாஸ்டிக் உபயோகமும் , மரபணு மாற்றப் பயிர்களும் உரங்களும் தாக்காத காலகட்டத்தில் இருந்தோம். சுமார் 30 வருடங்களுக்கு முன்பு இன்றைப் போல பெருவாரியாக விதம் விதமான காய்ச்சல்களும் தொற்று நோய்களும் இல்லை. கொஞ்சம் ஆரோக்கியமாகவே இருந்தோம் என்று சொல்லலாம்.

இன்றைக்கு நுகர்வோர் சந்தையில் நாம் எல்லாவற்றுக்கும் அடிமைப்பட்டுவிட்டோம். கிடைப்பதைத்தான் உபயோகிக்க முடிகிறது .இது இயற்கைச் சீரழிவு.அதிலிருந்து காப்பாற்றிக்கொள்ள ஓரளவு ஐ எஸ் ஐ முத்திரை உள்ள பொருட்களைத் தேடுகிறோம். இயற்கையைச் சீரழிக்காவிட்டால் இயற்கை அளிக்கும் முத்திரையைத் தவிர எந்த முத்திரையும் தேவையில்லை.

இனி மனித ஆற்றல் சீரழிவைப் பார்ப்போம். ஒரு அலுவலகத்தில் ரேட்டிங் என்பது வருடாந்திர முடிவில் அளிக்கப்படுகிறது. சில அலுவலகங்களில் 1,2 என்று ரேட்டிங் வாங்கினால் ப்ரமோஷன் & இன்செண்டிவ் உண்டு.  4, 5 ரேட்டிங் வாங்கினால் வேலையை விட்டு தாமாகவே ரிசைன் செய்துவிடவேண்டியதுதான் என்று அர்த்தம். அவர்களின் திறமையில் நிர்வாகத்தினருக்கு நம்பிக்கை இல்லை என்று விலக்குவது போல. ஆனால் சில மென்பொறியியல் அலுவலகங்களில் 4, 5 என்று ரேட்டிங் வாங்கினால் ப்ரமோஷன் & இன்செண்டிவ் உண்டு. இல்லையென்றால் வேறு ப்ராஜெக்டுக்கு அல்லது வேறு வேலைக்கு மாறிவிடவேண்டியதுதான்.


இப்படி ஒரே கம்பெனிக்காக ஒழுங்காக உழைப்பவர்களை உதாசீனப்படுத்திவிட்டு ஸ்மார்ட் வொர்க்கர்ஸ் எனப்படும் கோல்ட் மெடலிஸ்டுகளை கம்பெனிகள் தக்கவைத்துக்கொள்கின்றன. இவர்கள் கொண்டுவரும் புது ப்ராஜெக்டுகள் அனைத்தும் வெற்றி பெறுகின்றன என்று சொல்லமுடியாது.

சிலவருடங்களுக்குமுன் ஒரு வங்கியில் கரன்சி ட்ரேடிங்கில் தங்களிடம் லோன் வாங்கியிருந்த, அக்கவுண்ட் வைத்திருந்த வெளிநாட்டு ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் நிறுவனங்களை அங்கே உச்சப் பொறுப்பில் விடப்பட்டிருந்த ( எம்பிஏ கோல்ட் மெடலிஸ்ட்) ஒரு இளம்பெண் அதிகாரி அத்தனை கம்பெனிகளையும் அவர்களின் ஏற்றுமதி இறக்குமதி பிஸினஸோடு கரன்ஸி ட்ரேடிங்கிலும் ஈடுபடுத்த திடீரென ஏற்பட்ட டாலர் சரிவினால் பல கம்பெனிகளால் வங்கிக்குப் பெருத்த நஷ்டம். அதைக் கம்பெனிகளும் ஏற்றுகொள்ளமுடியாது என அறிக்கைவிட வேறு வழியில்லாமல் அதை வங்கியே ஏற்கவேண்டியதாயிற்று. இதுதான் மெத்தப் படித்த புத்திசாலிகள் செய்யும் கோளாறு.

அதே வங்கி அதனோடு மெர்ஜ் ஆன பழைய வங்கியின் அனுபவஸ்தர்களான ஊழியர்களை  குறைந்த ரேட்டிங்க் அளித்துக் கொத்துக்கொத்தாக வெளியேற்றியது. இன்றைக்கு வியாபாரம்தான் முக்கியம். நிறுவனத்தின் பெயரும் புகழும் நிலைத்ததன்மையும் முக்கியமல்ல என்பது போல் நடந்துகொள்கின்றன நிறுவனங்கள்.மத்திய வயதில் வெளியேற்றப்படும் இவர்கள் உருக்குலைந்து போகிறார்கள், குடும்பங்கள் சிதறுகின்றன. படிக்கும் வயதில் பையனும், திருமண வயதில் பெண்ணும் இருக்க, தங்கள் வயதான காலத்துக்குப் போதிய சேமிப்புமில்லாமல் நொறுங்கிய குடும்பங்கள் அநேகம். அவர்களின் பிள்ளைகள் தலையெடுத்தபின்புதான் சில குடும்பங்கள் உருப்பெருகின்றன. அதன்பின் மனித உறவை விடப் பணமே ப்ரதானம் என்று அந்தக் குடும்பங்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் எண்ணத் தொடங்குவதுதான் இந்த நிறுவனங்கள் கொடுக்கும் மனிதவளக்கூலி.

அடுத்ததாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இதன் ரேட்டிங்கைப் பேச ஆரம்பித்தால் பெரும் அரசியல் கூடத் தோற்றுவிடும். ஒவ்வொரு தொலைக்காட்சி சேனலும் தங்கள் ரேட்டிங்கை அதிகப்படுத்த தங்கள் நிகழ்ச்சிகளுக்குப் பார்வையாளர்களை அதிகப்படுத்த என்ன என்னவோ ரியாலிடி ஷோக்களைக் கொண்டு வருகின்றன.

இவற்றுள் சூப்பர் சிங்கர் போல பாடல் போட்டியும், குற்றம் நடந்தது என்ன ? சொல்வதெல்லாம் உண்மை.போன்ற நிகழ்ச்சிகளும் இதுபோல் வெளிநாட்டில் வைஃப் ஸ்வாப்பிங், போன்ற நிகழ்ச்சிகளும் நடத்துகின்றன. வாழ்க்கையை வாழ்ந்து பார்க்காமல் நடித்துப் பார்ப்பது என்பது போல இவர்கள் எல்லாம் காசுக்காக வாழ்க்கையைப் பணயம் வைக்கும் தற்காலிக நடிகர்கள்.

சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை எல்லாம் முதன் முதலில் பார்த்தபோது அதிர்ச்சியாக இருந்தது. அட இந்தியாவில் தமிழகத்தில் எல்லாக் குடும்பங்களிலும் முறைகெட்ட உறவுகள்தான் இருக்கிறது போல என்று உலகுக்குத் தெரியப்படுத்தும் நிகழ்ச்சிபோல இருந்தது. அதன்பின்னணியில் ஒரு நாடக ஒத்திகை இருக்கிறது என்றும் சொல்கிறார்கள். உண்மையிலேயே பாதிக்கப்பட்டவர்கள் ஏன் தொலைக்காட்சி ஜட்ஜுகளிடம் வரவேண்டும். நேரடியாக கோர்ட்டுக்கே செல்லலாமே. தங்களைச் சார்ந்தவர்களைப் பழிவாங்க உலகத்தின் கண்களில் காட்டி அவமானப்படுத்தவே இந்நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள மனுச்செய்கிறார்கள். அவர்களின் கதையை, தனிப்பட்ட வாழ்க்கைப் ப்ரச்சனையை { பெரும்பாலும் ஏழை மக்கள் போலவே இருப்பார்கள் ) உலகத்துக்கு வெளிச்சமிட்டு டி ஆர் பி ரேட்டிங்கை உயர்த்திக் காசுபார்க்கின்றன ஊடகங்கள். இம்மாதிரி நிகழ்ச்சிகளைப் புறக்கணிப்பதன் மூலமே இந்நிகழ்ச்சிகள் தொடர்ந்து எடுக்கப்படாமல் இருக்கும். இதில் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவை கவுன்சிலிங்க் மற்றும் சட்ட உதவியே தவிர இதைத் தொலைக்காட்சியில் சீரியல் போலக் காட்டுவதால் என்ன பயன். பார்க்கும் மனிதர்களை எண்ணக் கசடுகள் ஆக்கியதுதான் மிச்சம்.

மலாலா போன்ற பெண்ணின் வாழ்க்கை, இன்னும் போராடி ஜெயித்த பெண்களின் வாழ்க்கை நிகழ்ச்சிகளை எல்லாம் தொலைக்காட்சிகள் ஹைலைட் செய்வதில்லை.

பாட்டுப் பாடி முதலிடத்தில் வந்துவிட்டால் அல்லது நடனமாடி முதலிடம் பெற்றுவிட்டால் உலகத்தில் அனைத்தையும் வென்றுவிட்டதாக அந்தக் குழந்தைகளை நம்பவைக்கிறார்கள். அந்தக் குழந்தைகள் மட்டுமல்ல பார்த்துக்கொண்டிருக்கும் எல்லாக் குழந்தைகளுக்கும் அப்படியான ஒரு உணர்வை உண்டாக்குகிறார்கள். குழந்தைகள் மட்டுமல்ல அவர்களின் பெற்றோர்கள், பார்க்கும் நேயர்கள் அனைவரின் மனதிலும் ஏதோ சில பாடல்களை உச்சஸ்தாயியில் பாடிவிட்டால் அவர்கள்தான் சிறப்பானவர்கள் என்ற எண்ணத்தை விதைக்கின்றன.

இதே தொலைக்காட்சிகள் ஒரு விளையாட்டு வீரருக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. குழந்தைகளுக்கான இலக்கிய நிகழ்ச்சிகள், அறிவியல் நிகழ்ச்சிகள் நடத்துவதில்லை.அதே போல பன்முகத் திறமை உள்ள குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள் பெரிதாக வைப்பதில்லை. இந்த பாடல் நிகழ்ச்சிகளிலும் வளர்ந்த குழந்தைகள் ஃபேஷன் என்ற பெயரில் ஸ்லீவ்லெஸ் கவுனில் பெல்ட் அணிந்தது  போல அலங்கரிப்பட்டு பாடவைக்கப்படுகின்றார்கள். அவர்கள் வயதுக்கு என்ன அர்த்தம் என்றே புரியாத பாடல்களுக்கு அங்கங்களை அசைத்துப் பாடவைக்கப்படுகின்றார்கள்.

இதுபோன்ற நிகழ்ச்சிகளில் வெற்றிபெறாத குழந்தைகளுக்குப் பெற்றோரின் மூலம் ஏற்படும் மனவுளைச்சல் மட்டுமல்ல. தன்னம்பிக்கைக்குறைவும் ஏற்பட்டுவிடுகிறது. தற்காலிக தொலைக்காட்சிப் புகழுக்காகப் பெற்றோர் தங்கள் குழந்தையின் எதிர்கால வாழ்க்கையைப் பணயம் வைக்கிறார்கள். மேலும்

அந்நிகழ்ச்சிகளில் நன்றாகப் பாடாவிட்டால் அந்த ஜட்ஜுகள் செய்யும் கிண்டலும் நையாண்டியும் தாங்கவொண்ணாதது. ஏதோ பிள்ளைகளைப் பிடித்து மிரட்டுவது போல் இருக்கும். சில சமயம் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு குழந்தையை வெளித்தள்ளியே ஆகவேண்டும் என்று வரும்போது ஏதோ ஒன்றைக் கண்டுபிடித்து வெளியேற்றுவார்கள். அந்தந்த வாரங்களில் ஒவ்வொரு குழந்தையாக அழுதுகொண்டே வெளியேறுவது மன வருத்தம் தரும் செயல்.

கல்லூரிகளில் பார்த்தால் முதல்நாள் அன்று ராகிங் நடைபெறும் . அந்த ராகிங்க்கும் இந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கும் வித்யாசமில்லை. பொதுவாக ராகிங் என்பது ஆக்கபூர்வமாக ஜூனியர்களும் சீனியர்களும் கலந்து உரையாட அறிமுகப்படுத்திக்கொள்ள ஏதுவாக இருந்தது ஒரு காலத்தில். காலமாற்றத்தில் அது கொடுமையான அளவில் டீசிங், ராகிங் ஆகிவிட்டது. இதிலும் ஈவ் டீசிங் பற்றித்தான் நாம் பேப்பரில் படிக்கிறோம். ஆனால் ஆடம் டீஸிங்கும் இருக்கிறது. அதனால் உயிரிழந்தவர்களும் உண்டு.
மாணவர்களால் மட்டுமல்ல. மாணவிகளாலும் மாணவர்களும் ஏன் மாணவிகளுமே கூட அதீதப்படியாய் ராகிங் செய்யப்பட்டு தற்கொலை செய்துகொண்டு இறந்தும் போயிருக்கிறார்கள்.  

இந்த ரேட்டிங் போன்றவைதான் குழந்தைகள் மனதில் மனவியல் ரீதியாக ஜெயித்தே ஆகவேண்டும் என்ற அழுத்தையும் இன்னொரு பகுதியில் தாழ்வு மனப்பான்மையையும் உருவாக்குகின்றன.  இன்னொரு பரிமாணமாக ஒரு பகுதிக் குழந்தைகளை பெல்லீஸ் என்று பள்ளிகளில் சொல்லப்படும் முரட்டுப் பையன்கள் உருவாக்குகின்றன. இவர்கள் எல்லாவற்றையும் கையிலெடுக்கும் அடியாட்கள் போலக் கல்லூரிகளிலும் தொடர்கிறார்கள். இதில் ஆண்குழந்தை பெண்குழந்தை வேறுபாடு இல்லை. இவர்கள்தான் பெரும்பகுதியான ராகிங் மரணங்களுக்குக் காரணம்.

இவ்வாறு தன்னம்பிக்கை குலைக்கப்பட்டவர்களே முடிவெடுக்கத் திராணியற்றவர்களாகவும், குழப்பமுடையவர்களாகவும் உருவெடுக்கிறார்கள். இந்த ரேட்டிங் போன்றவை உளவியல் ரீதியாக வளர்ச்சியைத் தடுக்கின்றன. வாழ்வை எதிர்கொள்ளும் நம்பிக்கையைக் குலைக்கின்றன. இவர்களுக்குக் கவுன்சிலிங் தேவை.

ஒப்பீடுகள் தனித்திறமைகள் உள்ள குழந்தைகளின் திறன்களை அழித்துவிடுகின்றன. உருவத்தில் நெல்லிக்காய் வேறு, எலுமிச்சை வேறு ஆப்பிள் வேறு. மூன்றிலும் விட்டமின் சி சத்துதான் நிரம்பியுள்ளது. ஆனால் இதன் பயன்முறைகள் வேறு. வெள்ளை நிறம் அழகு, கிளிபோன்ற மூக்கு அழகு என்ற பொதுப்புத்தியின் விளைவே இம்மாதிரி ஒப்பீடுகள். ஒரு கிளியை எப்படி மயிலோடு ஒப்பிட முடியும். அல்லது கிளியோ மயிலோ உயர்ந்தது என்று எப்படிச் சொல்லமுடியும். இரண்டும் வேறுவேறானவை. வெவ்வேறு திறமைகள் கொண்டவை. இதைப்போலத்தான் மனிதர்களும் அவர்களின் தனித்திறன்களும்.

நமக்குக் கிடைத்த இயற்கைவளத்தையும் மனித வளத்தையும், மனித உறவுகளையும் குழந்தைச் செல்வங்களையும் ரேட்டிங், ரா(ங்)கிங் எல்லாம் போட்டு சிதைக்காமல் அதன் உன்னத நிலையிலேயே வைத்திருப்போம்.

டிஸ்கி:-  2015 தைமாத மெல்லினத்தில் வெளியானது.

11 கருத்துகள்:

 1. பல பேருடைய மன ஆதங்கங்களை அச்சு அசலாக கொட்டியிருக்கிறாய் தேனு,அருமையான,அட்டகாசமான பதிவு,,,ஓதுவதை ஓதிவைப்போம் கேட்பவர்கள் கேட்கட்டும்
  பொதுவா பேருக்கும் ,புகழுக்கும் ஆசைப்படுபவர்கள்தான் ரேட்டிங்கிற்கு பலியாகிறார்கள்---சரஸ்வதி ராசேந்திரன்

  பதிலளிநீக்கு
 2. This is a highly competitive world. உங்கள் பார்வை பலவீனங்களைப்பட்டியல் இடுகிறது, நாணயத்தின் மறு பக்கம் பற்றியும் கூறலாமே. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்குக.

  பதிலளிநீக்கு
 3. வணக்கம் சகோதரி.

  நல்ல கருத்துக்களை அலசி சிந்தனையை தூண்டும் பதிவு. அருமையாக சொல்லியிருக்கிறீர்கள். பகிர்ந்தமைக்கு நன்றி.
  என் தளம் வந்து கருத்திட்டமைக்கும் மிக்க நன்றிகள்.

  நன்றியுடன்,
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 4. இன்றைய படுவேக,வியபார உலகத்தில் இதெல்லாம் சகஜம்.யாரை நோவது?

  பதிலளிநீக்கு
 5. தற்காலச் சமூகம் சிந்திக்கவேண்டிய பதிவு சகோ !

  ஒவ்வொன்றும் சம்பந்தப் பட்டவர்களின் கவனத்திற்கு சேரவேண்டியது அவசியம் ...எனக்குப் பிடிக்காத அந்த சொல்வதெல்லாம் உண்மை ஐயோ தாங்க முடியல்ல ஏழைகளின் கண்ணீரும் அங்கே வியாபாரம் என்ன உலகமடா இது !

  பதிலளிநீக்கு
 6. நல்ல அலசல், தற்காலத்தில் பெற்றோர் விருப்பம் இப்பத்தான்,
  மீடியாக்கள் தம் ரேட் ஏற்ற,,,,,,,,,,
  அருமையான பதிவு. நன்றி.

  பதிலளிநீக்கு
 7. மெல்லினத்தில் வெளிவந்துள்ள மேன்மையான கட்டுரைக்கு பாராட்டுகள். வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 8. அனைத்தும் உண்மைகள்...

  நாம் நினைத்தால் அடிமையாக மாறுவதை தடுக்கலாம் - எதிலும்...

  பதிலளிநீக்கு
 9. பாராட்டுகள்!
  பொருட்களைப் பற்றிச் சொல்லியதும் மிகச் சரியே!
  //இவற்றுள் சூப்பர் சிங்கர் போல பாடல் போட்டியும், குற்றம் நடந்தது என்ன ? சொல்வதெல்லாம் உண்மை.போன்ற நிகழ்ச்சிகளும் இதுபோல் வெளிநாட்டில் வைஃப் ஸ்வாப்பிங், போன்ற நிகழ்ச்சிகளும் நடத்துகின்றன. வாழ்க்கையை வாழ்ந்து பார்க்காமல் நடித்துப் பார்ப்பது என்பது போல இவர்கள் எல்லாம் காசுக்காக வாழ்க்கையைப் பணயம் வைக்கும் தற்காலிக நடிகர்கள்.// அருமையான கருத்து.. தாங்கள் சொல்லி இருக்கும் கருத்துகள் அத்தனையையும் வழி மொழிகின்றோம். இதைப் பற்றி ஒரு சிறிய பகுதியை பெரியதாக எங்கள் தளத்தில் எழுதியிருந்தோம்..(கீதா)

  கதையல்ல நிஜம், சொல்வதெல்லாம் உண்மை ....மிக மிகக் கேவலமான ஒரு நிகழ்சி. இதனைப் பெண்களும் மாய்ந்து மாய்ந்து பார்க்கின்றார்களே!

  ரேட்டிங்க், ராங்கிங்க்....நாம் வாழ்க்கையைப் போட்டியாகப் பார்த்தால் இந்த நிமிடத்து மகிழ்வுகளை இழந்துவிடுவோம் என்பதில் துளியும் ஐயமில்லை. இதற்கெல்லாம் அடிமையாக மாறாமல் இருப்பது நமது கையில்தான். டிவிக் காரர்களைச் சொல்லிப் பயனில்லை.

  பதிலளிநீக்கு
 10. மிக அருமையாக சொன்னீங்க சரஸ் மேம். கருத்துக்கு நன்றி :)

  பலத்தைத்தானே அனைவரும் பார்க்கிறோம். பலவீனங்களை அது உண்டாக்கும் மன உளைச்சல்களை மறைத்துவிடுவதால்தான்., அதைப்பற்றி யாரும் பேசாததால்தான் இங்கே அதைப்பற்றி மட்டும் எழுதி இருக்கேன் பாலா சார்.

  நன்றி கமலா மேம்.

  ஆம் சென்னைப் பித்தன் சார். ஹ்ம்ம்

  உண்மை சீராளன் சகோ சரியா சொன்னீங்க.

  ஆம் மகேஸ்வரி கருத்துக்கு நன்றி

  நன்றி விஜிகே சார்

  ஆம் டிடி சகோ

  நன்றி துளசி சகோ & கீதா :)  பதிலளிநீக்கு
 11. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...