எனது பதிநான்கு நூல்கள்

செவ்வாய், 22 ஜூலை, 2014

பீமனும் பாஞ்சாலியும்:-

பீமனும் பாஞ்சாலியும்:-
******************************

திருவிழாவில் கூத்துக் கட்டினாள்.,
கியாஸ் லைட்டின் வெப்பத்தில்
சுண்ணமிட்ட உருவத்தில்
பஞ்சமரும் வெஞ்சமரும் பொங்க..

காதலித்து விட்டுப் போனவன்.,
கட்டி முடித்து வெட்டி விட்டவன்.,
சித்தாளாய்ச் சேர்த்துக் கொண்டவன்.,
அறுத்தபின் கோர்த்துக் கொண்டவன்
முகமெல்லாம் முகம் வழியே
வர்ணங்களாய்ப் பிதுங்கி வழிய..சித்திரைக் கூத்தில்
ஓங்கிக் குரலெடுத்துப் பாடுவாள்.,
கொண்டை தட்டி விட்டபடி.,
“நான் பாஞ்சாலி.. நான் பாஞ்சாலி..
அய்ந்துபேர்க்குப் பெண்டாட்டி..
பத்தினி நான்., பத்தினி நான்..”

பத்திரகாளியாய் விரிந்த கையில்
நால்வருக்குள்ளும் ஒளிந்திருந்த
துச்சாதனனையும் துரியோதனனையும்
தோலுரிக்கும் சன்னதத்தில்..

குடக்கூத்து., அல்லியக்கூத்தாடுபவன்
பெண்சிம்மக் கர்ஜனையில்
சரபமாகி அவள் முன் நின்று.,
“பீமன் நான்.. பீமன் நான்..
பழிமுடிப்பேன்.. என் பத்தினி நீ..”

தொடை தட்டி அவன் முடிக்க
வருடமொரு முறையாவது
வாக்குத்தரும் அவனை
குடிகாரனாய் இருந்தாலும்
கொண்டவனாக்கிக் கொண்டாள்.

ரத்தமாய் முடிசுருட்டி
அவள் முடிந்து சாந்தமாக
வருடம் தப்பாது
இவர்கள் சன்னதத்தில்
அதிர்ந்து கிடக்கிறது ஊர்சனம்..

டிஸ்கி:- ஏப்ரல் 1 - 15, 2014, புதிய தரிசனத்தில் வெளிவந்தது. 


5 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...