எனது பதிநான்கு நூல்கள்

சனி, 26 ஜூலை, 2014

சனிக்கிழமைப் பதிவு. தமிழின் எதிர்காலம் பற்றி பேராசிரியர் குணா தமிழ்.ஈரோட்டில் வசித்துவரும் காரைக்குடிக் கல்லலைச் சேர்ந்த தமிழ்ப் பேராசிரியர் குணா அவர்களின் வலைத்தளம் ”வேர்களைத் தேடி. ” இந்த வலைத்தளத்தைப் பலமுறை படித்திருக்கின்றேன். சமீபகாலமாகத்தான் அடிக்கடி படிக்க இயலவில்லை.

பேராசிரிய வலைத்தளங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. சுசீலாம்மா, கல்பனா சேக்கிழார் , குணா ஆகியோரின் வலைத்தளங்கள் மாணவர்க்கு மட்டுமல்ல. தமிழ் மொழியின் பால் ஈடுபாடு கொண்ட அனைவருமே கற்றுக்கொள்ள உதவுபவை. இவற்றைப் படிக்கும் கணம்தொறும் மாணவியாக உணர்வதுண்டு.

திருச்செங்கோடு கே எஸ் ஆர் கலை அறிவியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார் குணசீலன் அவர்கள். இவருடைய இடுகைகள் அனைத்தும் தமிழ் மொழியின் இலக்கிய நயம், இலக்கணம் ஆகியவற்றையும் சொல் நயம் , பொருள் நயம் ஆகியவற்றையும் எளிதில் புரிந்துகொள்ளும் வண்ணம் தரப்பட்டவை. 

பேராசிரியர் நன்னனின் பணி போலவே இவரின் பணியும் சிறப்புக்குரியது. முகநூலில் பெரும்பாலும் வெளிநாடு/ வெளிமாநிலங்களில் வாழ்ந்துவரும் தமிழ் பேசத்தெரியாத தமிழ்நாட்டு நண்பர்களே நன்னனின் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் தமிழை எழுத்துக்கூட்டிப் படிக்கத் தெரிந்து கொண்டதாகத் தெரிவிப்பார்கள்.

அந்த முறையில் இன்றைய தமிழ் இளைய தலைமுறைக்கு தமிழின் அரிச்சுவடி பற்றி அறிந்து கொள்ளவும். ஒரு சிறப்பான பொருள் அகராதியாகவும் இவரின் வலைத்தளம் திகழ்கிறது என்றால் மிகையில்லை. 

இவரிடம் நம் வலைத்தளம் சும்மாவின் சனிக்கிழமைப் பதிவுக்காக தமிழ் பற்றி சில வினாக்கள் ஆதங்கத்துடன். 

 நான் சில கல்லூரிகளுக்குச் சிறப்பு விருந்தினராகப் பேசச் சென்றிருக்கிறேன். 

 ////// கலைக்கல்லூரிகளில் கூடத் தமிழ் மொழிப்பாடமாக இப்போது இல்லையே. இதனால் இலக்கியம் படிப்பவர்கள் இனிக் குறைந்துவிடுவார்களா. மனிதர் வாழ்வில் இலக்கியம் இனி தேவையே இல்லையா. கல்லூரிகளின் இந்த நிலைப்பாடு குறித்து உங்கள் கருத்து என்ன ?. இதன் பொருட்டு என்னென்ன செய்யலாம் ?. /// தமிழின் எதிர்காலம்..

இன்றைய சூழலில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் தமிழ் இரண்டாம் நிலையிலும் சில கல்விநிலையங்களில் இல்லாத நிலையிலும் உள்ளது. காலம் காலமாகவே இதுதான் தமிழர் இயல்பாக இருந்திருக்கிறது. சங்ககாலம் தொடங்கி இன்றைய காலம் வரை தமிழர் தமிழராக இருந்ததில்லை…

சேரனாக, சோழனாக, பாண்டியனாக, பல்லவனாக, சைவனாக, வைணவனாக, சமணனாக, பௌத்தனாக என ஆட்சி மாற்றத்தின்போதும், சமய மாற்றங்களின் போதும் கலாச்சார மாற்றங்களின்போதும் தன்னைத் தானே நிறம் மாற்றிக்கொள்ளும் இயல்பு தமிழர்களின் பிறவி குணமாக  உள்ளது.
தாய்மொழி மீது பற்று வை!
பிறமொழிகளைக் கற்று வை!

என்ற சிந்தனையை தமிழர்கள் உணரவில்லை.
இன்றைய தமிழின் நிலையை எண்ணிப் பார்த்தால்..

தமிழை கல்விமொழி ஆக்கு

தமிழை கல்விமொழி ஆக்கு
தமிழ்மொழி பேசட்டும்
உன் பிள்ளை நாக்கு
வெள்ளைக்காரன் மொழியை
கற்றுக்கொடாதே - என்
பிள்ளை வாயில் கொடிய
நஞ்சை இடாதே!
மணிப்புறா ஒரு நாளும் 
குயில் மொழி ஏற்காது!
மான் நரி மொழியைத்தன்
நாக்கிலே தூக்காது!
அணிற்பிள்ளை கிளிமொழி
பேசவே பேசாது!
ஆங்கிலத்தை நீயேன் 
சுமக்கின்றாய் கூசாது?
பிள்ளையே தன் தாயை
கண்முன் வதைப்பதா?
பேசும் தாய்மொழியின்
உயிரை நாம் சிதைப்பதா?
பள்ளியே தமிழுக்கு 
கொள்ளியாய் ஆவதா?
பாராண்ட தமிழ்மொழி 
சாவதா? சாவதா?
வள்ளுவன் ஆங்கிலம் 
படித்தானா? இல்லையே!
வந்தான் வெள்ளையன் இங்கு 
வந்தது தொல்லையே!
வெள்ளைக்காரன் போயும்
விலங்கு அறல்லையே!
வேண்டாத தமிங்கிலம்
உடைக்குது பல்லையே!
கவிஞர் காசி ஆனந்தன்
என்ற கவிஞரின் கவிதைதான் நினைவுக்கு வருகிறது.
தமிழர் பலரும் அறியாத தமிழின் வளர்ச்சிகளைக் காண்போம்…

தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டதால் பெற்ற பயன்கள்
இந்திய அரசால் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட பின்பு 2005 ஆம் ஆண்டில் ஜூலை மாத இறுதியில் இந்திய அரசின் மத்திய இந்திய மொழிகள் நிறுவனத்தின் கீழ் செம்மொழித் தமிழ் உயராய்வு மையம் ஒன்று அமைக்கப்பட்டது. இந்த மையத்தின் வழியாக தமிழ் மொழி வளர்ச்சிக்கான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
பத்து முதன்மைத் திட்டப் பணிகள்
செம்மொழித் தமிழின் தொன்மையையும் தனித்தன்மையையும் புலப்படுத்தும் பத்து முதன்மைத் திட்டப்பணிகள் வகுக்கப்பட்டுள்ளன.

பழந்தமிழ் நூல்களின் செம்பதிப்பு

தொன்மைக்காலம் முதல் கி.பி. 6 ஆம் நூற்றாண்டு வரையிலான 41 நூல்களையும், மரபுவழி மூலபாடச் செம்பதிப்புகளாகச் சுவடிகள், பழம்பதிப்புகள், உரை மேற்கோள்கள் கொண்டு ஒப்பிட்டு உருவாக்குதல்.

பழந்தமிழ் நூல்களை மொழிபெயர்த்தல்

41 நூல்களுக்கும் மொழிபெயர்ப்புகள் தொகுக்கப்பட்டு வெளியிடப்படும். புதிதாக இவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் பணிகளும் மேற்கொள்ளப் பெறும்.

வரலாற்று அடிப்படையில் தமிழ் இலக்கணம்

தொன்மைக்காலம் தொடங்கி இக்காலம் வரையிலான தமிழ் இலக்கண ஆய்வு மேற்கொள்ளப்படும். இதற்கென இலக்கியங்கள், உரைநடைகள், கல்வெட்டுக்கள் ஆகியவற்றின் மொழிநடை கருத்தில் கொள்ளப்படும்.

தமிழின் தொன்மை - ஒரு பன்முக ஆய்வு

பண்டைத் தமிழரின் சமூகம், பண்பாடு, மொழி ஆகியவற்றின் இயல்புகளை வெளிக்கொணரும் வகையில் தமிழின் தொன்மை பற்றிய பன்முக ஆய்வு நிகழ்த்தப் பெறும்.

தமிழ் வழக்காறுகள் ஆய்வுத் திட்டம்

வட்டாரம், தொழில் சார்ந்த தமிழ் வழக்காறுகள் தொகுக்கப்படும். அகராதிகளில் பதிவு செய்யப்படாத இலட்சத்திற்கும் மேற்பட்ட வழக்குச் சொற்கள் திரட்டப்படும்.

தமிழும் பிற மொழிகளும்

தமிழை இந்திய மொழிகளோடும் பிற உலக மொழிகளோடும் ஒப்பிட்டு ஆராய்தல்.

பழந்தமிழ் ஆய்விற்கான மின் நூலகம்

அரிய சுவடிகள், கையெழுத்துச் சுவடிகள், நூல்கள் ஆகியவற்றைத் தேடித் தொகுத்து மின்பதிப்பு ஆக்குவதோடு தமிழ் ஆய்வாளர் ஆய்வுத் தரவுகளை எளிதில் பெற்றுக் கொள்ள மின் நூலகம் வடிவமைக்கப்படுகிறது.

இணையவழிச் செம்மொழியைக் கற்பித்தல்

உலகெங்கும் உள்ளோர் பழந்தமிழ் நூல்களை எளிய முறையில் இணைய வழியே கற்றுப் பயன்பெறப் பாடத்திட்டம் வகுக்கப் பெற்றுள்ளது.

பழந்தமிழ் நூல்களுக்கான தரவகம்

41 பழந்தமிழ் நூல்களும் அவற்றிற்கான எழுத்துப் பெயர்ப்பு, மொழிபெயர்ப்பு, உரைகள், அருஞ்சொற்பொருட்கள், இலக்கணக் குறிப்புகள் முதலியனவும் கணினியில் உள்ளீடு செய்யப்படும். இந்நூற்கலைப் பற்றிய அனைத்துக் குறிப்புக்களையும் அறிய தொழில்நுட்ப ஏந்துகள் உருவாக்கப்படும்.

பழந்தமிழ்க் குறுங்காட்சிப் படங்கள்

தமிழின் அரிய வரலாற்றுக் கருவூலங்களான இலக்கணம், இலக்கியம், கல்வெட்டு, நாணயம், கலை, பண்பாடு, அயலகத் தமிழ் உறவு குறித்த காட்சிக் குறும்படங்கள் உருவாக்கப்படுகின்றன.

நூலகம்

செம்மொழி நூலகத்தில் 40, 000 அரிய நூல்களும், பழந்தமிழ் ஆய்வுக்கு உதவும் மின்படியாக்கப்பட்ட நூல்களும், ஓலைச்சுவடிகளும், இதழ்களும் தொகுத்து வைக்கப்பட்டுள்ளன.

உதவித் தொகைகள்

முனைவர் பட்ட ஆய்வு உதவித் தொகை

செம்மொழித் தமிழாய்வில் ஈடுபட்டுள்ள இளம் ஆய்வாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் இந்நிறுவனம் முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்கு மாத உதவித் தொகை ரூ 12 ஆயிரத்தை இரண்டாண்டுகளுக்கு வழங்குகிறது. ஆய்வு தொடர்பான பிற செலவுகளுக்கு ஆண்டுக்கு ரூ 12 ஆயிரம் வழங்குகிறது.

முனைவர் பட்ட மேலாய்வு உதவித் தொகை

முனைவர் பட்டம் பெற்ற பின் பழந்தமிழாய்வில் ஈடுபட விரும்பும் முனைவர் பட்ட மேலாய்வாளர்களுக்கு மாத உதவித் தொகை ரூ 18 ஆயிரத்தை வழங்குகிறது. ஒவ்வோராண்டும் பிற செலவினங்களுக்காக ரூ 30 ஆயிரம் வழங்குகிறது.

குறுகிய காலத் திட்டப் பணிகள்

பழந்தமிழ்ச் சமுதாயத்தின் தொன்மையையும் தனித்தன்மையையும் தமிழ் மொழியின் செவ்வியல் தன்மையையும் வெளிப்படுத்தும் வகையில் ஆய்வு மேற்கொள்ளும் ஆய்வறிஞர்களுக்கும், ஆய்வு நிறுவனங்களுக்கும் நிறுவனம் நிதியுதவி அளிக்கிறது.

செம்மொழித் தமிழ் விருதுகள்

தொல்காப்பியர் விருது

தமிழியல் ஆய்வில் ஈடுபட்டு ஒப்பிலாப் பங்களிப்பை வழங்கியுள்ள இந்தியத் தமிழறிஞருக்கு ஒவ்வோராண்டும் சான்றிதழும் நினைவுப் பரிசும் 5 இலக்கம் ரூபாய் பரிசுத் தொகையும் அடங்கியதொல்காப்பியர் விருதுவழங்கப்படுகிறது.

குறள் பீடம் விருது

தமிழியல் ஆய்வில் ஈடுபட்டு ஒப்பிலாப் பங்களிப்பை வழங்கியுள்ள இந்தியத் தமிழறிஞர் ஒருவருக்கும், பிற நாட்டுத் தமிழறிஞர் ஒருவருக்கும் ஒவ்வோராண்டும் சான்றிதழும் நினைவுப் பரிசும் 5 இலக்கம் ரூபாய் பரிசுத் தொகையும் அடங்கியகுறள்பீடம் விருதுகள் வழங்கப்படுகிறது.

இளம் அறிஞர் விருது

தமிழியல் ஆய்வில் ஈடுபட்டுள்ள 30 - 40 அகவைக்குட்பட்ட இளம் அறிஞர்களை ஊக்குவிக்கும் வகையில் மதிப்புச் சான்றிதழும் நினைவுப் பரிசும் 1 இலக்கம் ரூபாய் பரிசுத் தொகையும் அடங்கியஇளம் அறிஞருக்கான விருதுகள் ஒவ்வோராண்டும் ஐந்து நபர்களுக்கு வழங்கப்படுகிறது.
·         41 பழந்தமிழ் நூல்களின் செம்பதிப்புக்களை வெளியிடுதல்
·         அந்த நூல்களை முக்கிய ஐரோப்பிய, இந்திய மொழிகளில் மொழிபெயர்த்தல்

விருதுகள்

இந்த மையத்தின் வழியாக செம்மொழித் தமிழில் சிறப்பாகப் பணியாற்றியவர்களுக்கு தொல்காப்பியர் விருது, குறள் பீடம் விருது, இளம் ஆய்வாளர் விருது போன்றவை ஒவ்வொரு வருடமும் வழங்கப்பட்டு வருகின்றன.

தொல்காப்பியர் விருது

இந்த விருதுக்கு சான்றிதழ், நினைவுப்பரிசு மற்றும் ஐந்து இலட்சம் ரூபாய் பணம் ஆகியவை ஒரு முறை இந்தியர் ஒருவருக்கு அளிக்கப்படும். இந்த விருது ஆண்டிற்கு ஒரு முறை அளிக்கப்படுகிறது.

குறள் பீடம் விருது

இந்த விருதுக்கு சான்றிதழ், நினைவுப்பரிசு மற்றும் ஐந்து இலட்சம் ரூபாய் பணம் ஆகியவை ஒரு முறை அளிக்கப்படும். இந்த விருது ஆண்டிற்கு இருவருக்கு அளிக்கப்படும். இதில் ஒன்று வெளிநாட்டைச் சேர்ந்த தமிழறிஞர் ஒருவருக்கும், மற்றொன்று வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவருக்கும் அளிக்கப்படுகிறது.

இளம் ஆய்வாளர் விருது

இந்த விருதுக்கு சான்றிதழ், நினைவுப்பரிசு மற்றும் ஒரு இலட்சம் ரூபாய் பணம் ஆகியவை ஒரு முறை ஐந்து நபருக்கு அளிக்கப்படும். இந்த விருது ஆண்டிற்கு ஒரு முறை 30 முதல் 40 வயதுக்குட்பட்டவர்களுக்கு அளிக்கப்படுகிறது.
தமிழின் தொன்மை, தனித்தன்மை, தமிழர்களின் நாகரீகம், பண்பாடு ஆகியவற்றின் சிறப்புக்களைக் கவனத்தில் கொண்டு பல திட்டங்களைத் தீட்டி இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
·         பல்துறை அறிஞர்களை ஒருங்கிணைத்துத் தமிழின் தொன்மை குறித்து ஆய்வு செய்தல்.
·         தமிழ் பிற திராவிட மொழிகள் மீது ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்து விரிவாக ஆய்தல்.
·         பண்டைத் தமிழ் இலக்கணம், இலக்கியம், தொல்லியல் சார்ந்த செய்திகளைக் குறும்படங்களாக உருவாக்குதல்
·         இணையவழிச் செம்மொழித் தமிழ் கற்பித்தல்
·         திராவிட மொழிகளின் வரலாற்று ஒப்பாய்வும் தமிழ் வழக்காறுகள் குறித்த ஆய்வும் மேற்கொள்ளல்.
·         உலக அளவில் ஆய்வுக்களங்களை உருவாக்கிப் பன்னாட்டு அறிஞர்களை ஆய்வில் ஈடுபடுத்தல்
·         பழந்தமிழ் நூற்களை வெளியிடவும் அவற்றை முறையே ஆங்கிலத்திலும் பிற இந்திய மொழிகளிலும் மொழிபெயர்த்து வெளியிடவும் நிதி வழங்குதல்.
·         தமிழாய்வில் நிலைத்த பணிபுரியும் நிறுவனங்களுக்கு ஆய்வுத் திட்டங்களை வழங்குதல்.
·         செம்மொழி தொடர்பான முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்கும், முனைவர் பட்ட மேலாய்வாளர்களுக்கும் உதவித்தொகை வழங்குதல்
·         செம்மொழித் தமிழாய்வில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு நல்கியோருக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பு செய்தல்.
-இவை போன்று இன்னும் பல செம்மொழித் தமிழ் வளர்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டுள்ளதால் பெற்ற பயன்பாடுகளுள் சிலவற்றை மட்டுமே இங்கு எடுத்துரைத்திருக்கிறேன். சில கல்விநிலையங்களில் தமிழ் பயிற்றுமொழியாக இல்லை என்பதை மட்டும் பார்த்து தமிழின் எதிர்காலம் குறித்து அச்சம் கொள்ளத்தேவையில்லை. 

ஆங்கிலம் அறிவின் மொழி என்ற தவறான புரிதால் காரணமாக தாய்மொழியான தமிழை இன்று தமிழர்கள் மறந்து தம் குழந்தைகளை ஆங்கிலவழிப் பள்ளியில் படிக்கவைக்கின்றனர்.
டெல்லி வழி இந்தி"
பள்ளி வழி ஆங்கிலம் 
இறைவன் வழி சமஸ்கிருதம் 
இசையின் வழி தெலுங்கு"

என்னும்  தணிகைச் செல்வன் அவர்களின் கூற்று இன்று நடைமுறைக்கு வந்திருக்கிறது.
மொழி என்பது ஒரு தகவல்த் தொடர்பு சாதனம் மட்டுமல்ல ஒரு பண்பாட்டின், ஒரு இனத்தின் அடையாளம் என்பதை யாவரும் உணரவேண்டும்.

தமிழர்கள் சூழல்களுக்கு ஏற்ப தன்னை நிறம்மாற்றிக்கொள்பவர்கள் என்றாலும்,
தமிழ் காலத்துக்கு ஏற்ப தன்னை தகவமைத்துக்கொள்ளும்மொழி என்பதை நாம் மறக்கக்கூடாது.

இணையத்தில் காணக்கிடைக்கும் மின்னூலகங்களையும், ஒலி,ஒளிக் கோப்புகளையும், சமூகத் தளங்களில் தமிழின் பயன்பாட்டையும் காணும்போது தமிழ் இக்காலத்துக்கு ஏற்ப தன்னைத் தகவமைத்துக்கொண்டது என்பதும் இலக்கிய வாசிப்பு அடுத்த படிநிலையை அடைந்திருக்கிறது என்பதையும் உணரமுடியும்.
மேற்சொன்ன எல்லா செய்திகளுக்கும் மேலாக…….
இன்றைய புகழ்பெற்ற பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள் வருவதற்கு முன்பே புகழ்பெற்ற இலக்கிய, இலக்கணங்களைக் கொண்ட மொழி நம் தமிழ் மொழி என்பதை நாம் நினைவுகொள்ளவேண்டும்.
தொல்காப்பியரையும், வள்ளுவனையும், கம்பனையும், இளங்கோவையும் இன்றைய கல்விநிலையங்கள் உருவாக்கவில்லை அதனால் இவைபோன்ற கல்விநிலையங்களில் தமிழ் இல்லாமல் போனாலும் தமிழ் தன் இயல்பை இழக்காது என்பது என் கருத்து.
தமிழின் சிறப்பு அதன் தொன்மையில் மட்டும் இல்லை! அதன் தொடர்ச்சியிலும் உண்டு. அந்த மரபை  உணர்ந்த தமிழர்கள் இணையத்தில் சங்கம் வைத்து தமிழ் வளர்க்கிறார்கள்! நாமும் இயன்றவரை தமிழை இணையத்தில் பதிவுசெய்வோம் தமிழ் இலக்கியங்களை வாசிப்போம் என்று உறுதிகொள்வோம்.


http://www.gunathamizh.com/p/blog-page.html

உயர்தனிச் செம்மொழி என்ற இந்தக் கட்டுரையை கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் பகுதி1 தமிழ் பயிலும் மாணவர்களுக்குப் பாடமாகவைத்திருக்கிறார்கள் என்பது பெருமிதமிக்க தகுதி 

http://www.gunathamizh.com/2009/04/blog-post_01.html

டிஸ்கி:- அடேயப்பா இவ்வளவு விவரங்கள் கொடுத்தமைக்கு நன்றி குணா சார். ஆய்வுகள் பற்றியும் மொழிபெயர்த்தல் பற்றியும் சிறப்பாகப்  பகிர்ந்துள்ளீர்கள். பிறமொழி ஒப்பீடும், மின் நூலகமும், செம்பதிப்பும் ,தரவகமும்,இணையவழி கற்பித்தலும், குறுங்காட்சிப் படங்களும் மிக அத்யாவசியமானவைதான்.

ஆய்வுக்களங்களும் ஆய்வுத் திட்டங்களும் இன்றியமையாதன.

வழக்காறுகள் பற்றியும் அவற்றை ஆவணப்படுத்துவது பற்றியும் கூட நானும் யோசித்திருக்கிறேன். அது பெரும் பணியாக இருக்கும். 

தாய்மொழி தமிழைக் கற்க இவ்வளவு உதவித்தொகைகளும் சலுகைகளும் விருதுகளும் வழங்கப்படுவதை முதன் முறையாக அறியத்தந்தமைக்கும் சும்மாவின் சார்பில்  நன்றிகள். 

உங்கள் கருத்துக்களையே வழி மொழிகிறேன் சார். // நாமும் இயன்றவரை தமிழை இணையத்தில் பதிவுசெய்வோம் தமிழ் இலக்கியங்களை வாசிப்போம் என்று உறுதிகொள்வோம்.///

அன்பும் நன்றிகளும்.

5 கருத்துகள்:

 1. திரு குணா அவர்களுக்கு என் இனிய வாழ்த்துக்கள் அத்துடன் பதிப்பிட்ட தங்களுக்கும் என் வாழ்த்துக்கள் நன்றி வணக்கம். சுரேந்திரன், குண்டூர்.

  பதிலளிநீக்கு
 2. தமிழின் எதிர்காலத்தைப் பகிர்ந்துகொள்ள வாய்ப்பளித்த தங்களுக்கு மனம் நிறைந்த நன்றிகள் அம்மா.

  பதிலளிநீக்கு
 3. அன்பின் தேனம்மை

  அழகான நடை - அருமையான பதிவு - குணாவிடம் நேர்காணல் - தமிழ் மொழியின் எதிர்காலம் - தமிழ் மொழி செம்மொழியாக்கப் பட்டதனால் ஏற்பட்ட நன்மைகள் - ஆங்கிலம் அறிவின் மொழி என்ற தவறான புரிதால் காரணமாக தாய்மொழியான தமிழை இன்று தமிழர்கள் மறந்து தம் குழந்தைகளை ஆங்கிலவழிப் பள்ளியில் படிக்கவைக்கின்றனர்.

  டெல்லி வழி இந்தி"
  பள்ளி வழி ஆங்கிலம்
  இறைவன் வழி சமஸ்கிருதம்
  இசையின் வழி தெலுங்கு"

  தமிழ் - முனைவர் பட்டம் ஆய்வு செய்பவர்களூக்கு அரசின் பண உதவி - அத்தனை விபரங்களும் அருமை பயனுள்ளவை.

  பல பயனுள்ள தகவல்கள் பகிர்வினிற்கு குணாவிற்கும் - சனிக்கிழமைப் பதிவிற்கு தேனம்மைக்கும் பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 4. நன்றி சுரேந்திரன்

  மிக அருமையான பதிவு கொடுத்ததுக்கு நன்றி குணா சார் :)

  நன்றி சீனா சார். :)

  பதிலளிநீக்கு
 5. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...