எனது பதிநான்கு நூல்கள்

புதன், 9 ஜூலை, 2014

கானகத்தில் ஒரு கஸ்தூரி மான்.:-கானகத்தில் ஒரு கஸ்தூரி மான்.:-


அம்பையின் காட்டிலே ஒரு மான் பற்றிப் படித்தபோது எனக்கு எங்கள் ஃபாத்திமா அம்மா சொல்லும் ஒரு கதை ஞாபகம் வந்தது. ஒரு பெரிய கானகத்தில் அருவி பொழியும் அடர்வனத்தில் ஒரு மான்குட்டி துள்ளிக்குதித்து ஆடிக்கொண்டிருந்தது. மிக அழகிய பெரிய கண்களும் புள்ளிகள் வரைந்த உடலும் கொண்ட ஓவியம் உயிர்பெற்றது போல இருந்தது அது. ஏதோ ஒரு நறுமணம் அதன் நாசியைத் துளைத்துக்கொண்டே இருந்தது. அந்த மணம் எங்கிருந்து வருகிறது என்று அதனால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. அது துள்ளிக்குதித்துக் காடுமுழுதும் அந்த வாசம் வரும் இடத்தைக்காண அலைந்தது. அது செல்லும் இடமெல்லாம் அந்த வாசனை அடித்துக்கொண்டே இருந்தது. கொடியை, செடியை, மலையை, மரத்தை, மண்ணை முகர்ந்து பார்த்துக்கொண்டே மலைமடுவெல்லாம் கடந்தது. ஓய்ந்து ஒரு இடத்தில் கால்மடித்து அமரும்போது அதன் முகம் அதன் உடல்நோக்கித் திரும்பியது.. அப்போது புரிந்தது அந்த மனங்கவர் மணம் தன் மேலேதான் வீசிக்கொண்டிருக்கிறது என.. அதுதான் அந்தக் கஸ்தூரி மானின் வாசம். தன்னிடமிருந்தே வீசும் இந்த வாசத்தைக்காணவா இவ்வளவு தூரம் பயணித்தோம் எனத் தோன்றியது  அதற்கு.

இதைப்போல உங்கள் ஒவ்வொருவரிடமும் திறமைகள் ஒளிந்துள்ளன. அந்த மான்குட்டிகள் போலத்தான் நீங்கள் அனைவரும். உங்கள் மணத்தை வேறெங்கோ தேடுகின்றீர்கள். உங்களிடமே அவை அனைத்தும் உள்ளன என்பதைக் கண்டடையுங்கள் என்பார்.

சுசீலாம்மாவும் ஃபாத்திமா அம்மாவும் எங்கள் ஃபாத்திமா கல்லூரியில் எங்கள் இரு கண்கள் மாதிரி. தமிழ்த்துறை ஆசிரியைகள். இன்று கலை அறிவியல் கல்லூரிகளில் தமிழுக்கும் ஆங்கிலத்துக்கும் இடமில்லை. வாழ்க்கைக்கு இலக்கியம் தேவையில்லை என்று கலை அறிவியல் கல்லூரிகளே முடிவு செய்துவிட்டன. லைப்ரரி ஹவர்ஸ் தேவையில்லை. சப்ஜெக்ட் மட்டும் போதும் என.

நாங்கள் கல்லூரியில் சேர்ந்தபோது முதல் இரு வருடங்கள் ஆங்கிலமும் தமிழும் கட்டாயம் உண்டு. அது போக முதலிரு வருடங்கள் ஒரு (ஆன்சிலரியும்) துணைப்பாடமும், இரண்டாம் மூன்றாம் வருடத்தில் இன்னொரு துணைப்பாடமும் ,நாம் தேர்ந்தெடுக்கும் துறைப்பாடம், (மெயின் கோர்ஸ்) மூன்று வருடமும் உண்டு.

பள்ளிகளில் தமிழ் படித்த காரணத்தால் தமிழே பிடித்தமானதாய் இருக்க நாங்கள் சிலர் மொழிப்பாடமாய் தமிழ் எடுத்தோம். சிலர் மதிப்பெண் முழுமையாக வாங்க ஹிந்தி, சமஸ்கிருதம், ஃப்ரெஞ்ச் எடுத்துப் படித்தார்கள். அப்போது சக்தி பெருமாள் தமிழ்த்துறைத்தலைவராக இருந்தார். பூ சொல்விளங்கும் பெருமாள் அவர்களின் கணவர். தொலைக்காட்சி எல்லாம் மிகப்பிரபலமாகி இருக்காத சமயம் இவர்கள் பட்டிமன்றங்களில் மிகப்பிரபலமான ஜோடியாக விளங்கினார்கள். ஒரு முறை இவரிடம் என்னுடைய கவியரங்கக் கவிதை ஒன்றை ( கல்லூரிகளுக்கிடையான நிகழ்ச்சியில் வாசிக்க ) இவரிடம் காட்ட கல்லூரிக்கு எதிரில் இருந்த இவரது இல்லத்துக்குச் சென்றிருக்கிறேன்.

தமிழ்ப்பாட வகுப்புகள் சுவாரசியமானவை. சுசீலாம்மாவின் கம்பீரக்குரலுக்கு நாங்கள் அடிமை என்றால். ஃபாத்திமா அம்மாவின் மென் குரலுக்கும் பாலாம்பாள் மிஸ்ஸின் சந்தனக் குரலுக்கும் கூட அடிமைகள்தான். தமிழ் என்பதால் கூடுதல் ஒட்டுதலோ என்னவோ.

அதிலும் பாலாம்பாள் மிஸ் தேனம்மை நீங்க சொல்லுங்க. என்று முதல் பெஞ்சில் அமர்ந்திருக்கும் என்னை ஏதும் கேள்வி கேட்டு பதில் சொல்லச் சொன்னால் உடனே இண்டர்வெல்லில் என் தோழி மீனா பாலாம்பாள் மிஸ்ஸுக்கு தேனம்மை ஒருத்திதான் இந்த க்ளாசிலேயே இருக்கான்னு நினைப்பு. அவங்களுக்கு தேனம்மை என்ற பேரைத்தவிர நம் க்ளாசில் வேறு பேரே தெரியாது என்று கிண்டலடிப்பாள்.

அது என்னவோ தமிழாசிரியைகளுக்கும் எனக்கும் இந்தக் கெமிஸ்ட்ரி என்பார்களே அது ரொம்பவே ஒர்க் அவுட் ஆகிக்கொண்டிருந்தது. அதுதான் வேதியலே நம்ம மெயின் சப்ஜெக்ட் ஆச்சே.

இலக்கியங்களில் நான் டீடெயில் பாடங்களில்தான் ஓரளவேனும் ஷேக்ஸ்பியரின் மெர்ச்செண்ட் ஆஃப் வெனிஸும், ஒத்தல்லோவும் ஹாம்லெட்டும் அறிமுகமானார்கள். தமிழில் அழகிரிசாமி ( ராஜா வந்திருந்தார் ) அய்க்கண் ( மேன்மக்கள் ) ஆகியோரும் இன்னும் சுசீலாம்மாவின் கைங்கர்யத்தில் ந பிச்சமூர்த்தி, வைமு கோதைநாயகி அம்மாள், நீல பத்மனாபன், லாசரா, திஜாரா, வாஸந்தி, ஜெயகாந்தன், பாலகுமாரன், சிசு செல்லப்பா, குபரா, புதுமைப்பித்தன், அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, சுபாஷிணி, ரெங்கநாயகி, புனிதன், லெக்ஷ்மி, வண்ணதாசன், இராஜம் கிருஷ்ணன், அகிலன், கோமகள், ஜெயந்தன் , சிவராமகாரந்த். ஆகியோர் பரிச்சயமானார்கள்.

இன்றைய பொறியியல் கல்லூரிகள் வாழ்க்கைக்கு இலக்கியம் தேவையில்லை துறை சம்பந்தப்பட்ட அறிவே போதும் என நினைக்கின்றன. அதையே கலை அறிவியல் கல்லூரிகளும் பின்பற்றுகின்றன. இலக்கியம் தெரியாத படிக்க விருப்பமில்லாத சலிப்புற்ற வெறுப்புற்ற வாழ்க்கையில் பற்றற்ற ஒரு தலைமுறையையே உருவாக்கிக்கொண்டிருக்கின்றன.

ஒரு புத்தக வாசிப்பு மனிதனைப் புதுப்பிப்பது போல வேறு எதுவும் புதுப்பிக்கச்செய்வதில்லை. அதற்கு எங்களுக்குக் கிடைத்த நல்லாசிரியர்களு,ம் ஒரு காரணம். முதன் முதல் ஒரு கட்டுரை புதுக்கவிதை பற்றி எழுதச்சொன்னபோது நான் புதுக்கவிதை வடிவிலேயே அந்த அசைன்மெண்டை சமர்ப்பிக்க ( ஆசிரியையை ஆச்சர்யத்தில் ஆழ்த்த வேண்டாமா. என் மொழியையும் செம்மைப்படுத்திக்கொள்ளவும்தான் ) ஃபாத்திமா அம்மா 5 க்கு 4 ¾ மதிப்பெண் வழங்கினார்கள்.

பகைவருக்கு அருள்வாய் நன்னெஞ்சே என்ற தலைப்பில் ஒரு கவிதைப்போட்டி வைத்த சுசீலாம்மா எனக்கும் மீனாவுக்கும் முதல்பரிசாக ஆளுக்கொரு பேனா வழங்கினார்கள். இவர்கள் கொடுத்த ஊக்கத்தாலும் தன்னம்பிக்கையாலும் கல்லூரி கல்லூரியாகக் கவி பாடச் சென்றோம் நானும் சிகப்பியும்.

வாரா வாராம் அசோஷியேஷன் ஹவர்ஸ் என்று வெள்ளிக்கிழமைகளில் மாலை இரு வகுப்புகள் ஒதுக்கப்படும். எல்லாத் துறையிலும் இருக்கும் ப்ரபலமானவர்களையும் அழைத்து உரை நிகழ்த்தச் சொல்வார்கள். மற்ற துறை மாணவிகள் எல்லாம் முன்பே வந்து அமர்ந்திருக்க வேதியல் துறை மாணவிகளான நாங்கள் மட்டும் லாபிலிருந்து அரைகுறையாக கெமிக்கல் வாசம் வீசும் ஏப்ரனைக் கழற்றியபடி ஆரம்பித்து விட்ட கூட்டத்தில் வந்து கலந்து கொள்வோம்.

மரத்தடிகளில் பெரும்பாலும் நடக்கும் வகுப்புகள் இன்னொரு சுவாரசியம். ஆசிரியைகளுக்கும் மாணவிகளுக்குமான ஒரு தனியான உலகம் அது. இலக்கிய உலகத்தை முழுமையாக உள்வாங்க முடிந்த தருணங்கள் அவை. ஹ்ம்ம் அவை வாய்க்கப்பெறாத இந்தத் தலைமுறையினர் கொடுத்துவைக்காதவர்கள்தான்.

ஆங்கில இலக்கியம் படித்து வந்த உமா மகேஸும் நானும் ஹாஸ்டல் ரூம்மேட்ஸ். தமிழ் இலக்கியம் இருவரையும் ஒன்று சேர்த்தது. என் டைரிகளில் தினம் நான் எழுதும் கவிதைகள், கதைகள் , கட்டுரைகள், சுய இரக்க பதிவுகள் சுசீலாம்மாவின் பார்வைக்கும் ஃபாத்திமா அம்மாவின் பார்வைக்கும் போகும்.

இருவரும் படித்து பக்கக்கோடு அல்லது அடிக்கோடிட்டு தங்களுக்குப் பிடித்த வரிகளை சிலாகித்துப் பாராட்டுவார்கள். தனிமை, சுய இரக்கம் அதிகமாகிவிட்டால் அதைக் கண்டிக்கும் தொனியிலோ, நீக்கும் தொனியிலோ சில ஆறுதல் வார்த்தைகளும்( கிட்டத்தட்ட கவுன்சிலிங் போல ) இடம்பெறும். மொத்தத்தில் எங்களுக்குக் கல்லூரியில் எங்கள் வளர்பருவத்தினைப் புரிந்துகொண்ட அம்மா என்னும் தோழிகளாக எங்கள் தமிழன்னைகள் திகழ்ந்திருக்கிறார்கள்.

அப்படி ஒரு முறை எனக்கு ஃபாத்திமா அம்மா எழுதிக்கொடுத்ததுதான் இது. 82 – 85 வரையிலான காலகட்டத்தில் கல்லூரியில் படித்தேன். இது 82 ஆம் வருட டைரி. ஆனால் அம்மா எழுதியது 83 ஆம் வருடம் பிப்ரவரி மாதத்தில். சுசீலாம்மாவின் எழுத்துக்களைப்போலத் தன்னம்பிக்கை ஊட்டும் வரிகள் இவைகளும். பல வருடங்களுக்குப் பிறகு என் கல்லூரிக்கால டைரியின் கவிதைகளை வலைத்தளத்தில் ஏற்றிகொண்டு இருக்கும்போது ஃபாத்திமா அம்மாவின் இந்த அன்பு வார்த்தைகள் கண்ணில்பட்டது. செயலற்று ஒரு கணம் மெய்மறந்து பழைய கல்லூரிக்காலத்துக்குச் சென்று மீண்டேன். 


Life is a gift from God

Whatever we posses, whatever we receive, whatever awaits for us – they are all from His hands. He is the alpha & Omega. He is everything.

Surrender everything to him. Ask him to show you his plans for you.

He has made you a talented person, a loving person.

May God abide with you at all times, especially when human persons fail. May you be strong in faith to the last day.

With love,
Fatima.
 சில மாதங்களுக்கு முன்பு புதிய தலைமுறை இதழில் பெண்கள் டைரி  என்ற பகுதியில் சுசீலாம்மா பற்றி எழுதி இருந்தேன். அவர்கள் அப்போது எஸ் ஆர் எம் யூனிவர்சிட்டியின் விருதும் மற்ற இரு விருதுகளுமாக 3 விருதுகளைப் பெற்றிருந்த நேரம். நான் பெங்களூரில் இருந்ததாலும் புத்தகம் கைக்குக்கிடைக்க நாளானதாலும்  அதை சுசீலாம்மாவிடம் தெரிவிக்க எனக்கு சில நாட்களானது அதைப் படித்த ஃபாத்திமா அம்மா சுசீலாம்மாவிடம் தேனம்மை உங்களைப் பத்தி எழுதி இருக்காப்பா பாருங்க என்று தொலைபேசியில் தெரிவித்து இருக்கிறார். அம்மாவும் ஊர்மாற்றலில் பிசியாக இருந்ததால் கவனிக்கவில்லை. நான் தொலைபேசியபின்னே அது பற்றி ஃபாத்திமா அம்மா சொன்னதாக ஆமோதித்தார்கள். ஜிலீரென்று இருந்தது.


எங்களைக் கஸ்தூரிமான்களாக உணரச் செய்த ஃபாத்திமா அன்னையும் மிகபெரிய அழகிய ஆழமான கண்களோடு கஸ்தூரிமான் அன்னை உருவில் வந்ததுவோ என இருப்பார். அவரைக் காணும் கணந்தொறும் ஒரு தாய்மையும் பாசமும் அவரிடமிருந்து அனைவருக்கும் பரவிக்கொண்டே இருக்கும். ஏன் இப்போது நினைக்கும் கணத்திலும் அது நிகழ்கின்றது.

இன்றைய அவசர உலகத்தில் ஆசிரியைகள் மாணவிகள் இடையே இப்படிப்பட்ட உறவு நிகழ சாத்தியம் இருக்கிறதா தெரியவில்லை. எல்லாவற்றிற்கும் கொடுத்துவைத்திருந்த தலைமுறை எங்கள் தலைமுறை என்று தோன்றுகிறது. நாங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். உண்மைதான்.

டிஸ்கி:- இந்தக் கட்டுரை ஜூலை 6 திண்ணையில் வெளியானது.


4 கருத்துகள்:

 1. மெயின் சப்ஜெக்ட் இன்று தான் தெரியும் சகோதரி...! ஹிஹி...

  வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 2. மிகவும் அருமையான கட்டுரை அக்கா...
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 3. நன்றி தனபாலன் சகோ :)

  நன்றி குமார் சகோ :)

  பதிலளிநீக்கு
 4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...