வெள்ளி, 1 மார்ச், 2013

பங்குச் சந்தையில் பெண்களின் பங்கு.

பங்குச்சந்தையில் பெண்களின் பங்கு.

”ரிஸ்க் எடுக்கிறதெல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரி”ன்னு பங்குச் சந்தையில சொல்லிட முடியாது. இல்லத்தரசிகளும் சரி  வேலைக்குக் செல்லும் பெண்களும் சரி இன்று தங்கள் பணத்தை பல வழிகளிலும் முதலீடு செய்கிறார்கள்.

 பங்குச் சந்தையில் ஈடுபடுவது கொஞ்சம் ரிஸ்கியானது என்ற அறிமுகத்தோடே ஆரம்பிக்க வேண்டியதாய் இருக்கிறது. ஏனெனில் இதில் எவ்வளவு லாபம் வருமோ அவ்வளவு நஷ்டமும் வரும். பொதுவாய் வீட்டில் சும்மாதானே இருக்கேன். நான் ஏதாவது பிசினஸ் செய்கின்றேன் அல்லது வேலைக்குப் போறேன் என்று கணவரை நச்சரிக்கும் பெண்கள் தங்கள் கணவரிடம் துணிந்து என்னிடம் ஒரு பத்தாயிரம் கொடுங்க . ஷேர் மார்க்கெட்டில் இன்வெஸ்ட் செய்து பார்க்கிறேன். ,லாபம் பண்ணத் தெரியுதான்னு.  நஷ்டமாயிட்டா தொடர வேண்டாம். லாபம் வந்தா தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமா செய்யலாம் எனக் கேட்கலாம்.


உங்கள் சிறுவாட்டுப் பணத்தில் கூட ( போஸ்டாஃபீஸ், இன்சூரன்ஸ், தங்கம்,  வீடு, மனை ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்தது போக) சிறிய அளவில் பங்குகள் வாங்கி விற்கலாம். லாபம் காணலாம். இதற்கெல்லாம் அதிகம் ஒன்றும் தேவையில்லை பெண்மணிகளே.. கொஞ்சம் பொறுமை, கொஞ்சம் அனுமானம், கொஞ்சம்  வாங்கிய ஷேர்களின் ஏற்ற இறக்கங்களைப் பின் தொடர்தல் மட்டுமே.

பொதுவா ஒருத்தர் ஷேர் பிசினஸ் செய்யணும்னா இரண்டு விதமா செய்யலாம். இதுக்குன்னே இருக்கின்ற ப்ரோக்கர் ஆஃபிசுகளை அணுகி தங்களுக்காக ஒரு டீமேட் அக்கவுண்டும், ஷேர்  ட்ரேடிங் அக்கவுண்டும், ஆரம்பிக்க வேண்டும். ஏற்கனவே பாங்க் அக்கவுண்ட் இல்லாவிட்டால் பாங்க் அக்கவுண்டும் ஆரம்பிக்க வேண்டும். இதற்கு பான் கார்டு மற்றும் புகைப்படம் அத்யாவசியத் தேவை. இது போக ரேஷன் கார்டு, ஓட்டர் ஐடி, ட்ரைவிங் லைசன்ஸ், பாஸ்போர்ட்,  இதில் ஏதோ  ஒன்று முகவரிக்கான  சான்றிதழாகக் கொடுக்க வேண்டும்.   இரண்டு க்ராஸ் செய்யப்பட்ட ப்ளாங்க் செக்குகளைக் கொடுக்க வேண்டும்.

அடுத்து என்ன.. கொஞ்சம் பணத்தைக் கணவரிடம் கேட்டு வாங்கிப் போட்டு ஷேர் ட்ரேடிங்கை ஆரம்பிக்க வேண்டியதுதான்.  ஆரம்பிக்க ரூபாய் 500/- ம் , வருடாந்திரத் தொகையாக ரூபாய் ( சர்வீஸ் சார்ஜ்) 350/- கட்டவேண்டி வரும்.

ப்ரோக்கர் அலுவலகம் மூலமாக செய்யப்படும் பிசினஸ் ஆஃப்லைன்  ட்ரேடிங் எனப்படும். நாமே நம்முடைய கணினியில் செய்யும் ட்ரேடிங்கின் பெயர்  ஆன்லைன்  ட்ரேடிங்.ஷேர்கான்,  icicidirect.com, பெனின்சூலார், ஓரியண்டல் ஸ்டாக்ஸ், கார்வி போன்ற நிறுவனங்களின் மூலம் ஆஃப்லைனாகவோ ,அவர்களின்  அனுமதியின் பேரில் நம்முடைய கணினியில் இருந்து ஆன்லைனாகவோ ட்ரேடிங் செய்ய முடியும்.

பங்குச்சந்தை என்பது பிரசித்தி பெற்ற நிறுவனங்களின் பங்குகளை வாங்கி விற்பது. நாமே அதன்குறிப்பிட்ட பங்குகளை வாங்கி அந்த நிறுவனத்தின் பங்குதாரர் ஆவது. நீங்கள் ஆரம்பிக்காமலே நீங்கள் ஒரு நிறுவனத்தின் பங்குதாரர் ஆகின்றீர்கள். மேலும் அந்தக் கம்பெனியின் லாபம் நஷ்டம் பொறுத்து உங்களுக்கு  வருடாந்திர ரிப்போர்ட்டின் அடைப்படையில் போனஸ் பங்குகளும் வழங்கப்படும்.

முதன் முதலாக அறிமுகப்படுத்தப்படும் பங்குகள் இனிஷியல் பப்ளிக் ஆஃபரிங்ஸ் எனப்படும். ( பொதுமக்களின் பங்களிப்பையும் நிறுவனங்கள் ஏற்பது. பொதுமக்களையும் பங்குதாரராக்குவது. ) இதன் படி குறைந்த முதலீட்டில் வாங்கப்படும் பங்குகள் பெருமளவு லாபத்தையும் கொடுக்கும். சிலது நஷ்டத்தையும் கொடுக்கும். நஷ்டம் என்றால் நீங்கள் முதலீடு செய்த தொகை மட்டுமே.

இந்த டீமேட் அக்கவுண்ட்  மற்றும் ஆன்லைன் ட்ரேடிங்க் ஆரம்பிக்கும் முன் இது எல்லாமே பேப்பர் வடிவில் இருந்தது. இப்போது எல்லாமே ஈ ட்ரேடிங்தான். எதுவுமே பேப்பர் இல்லை. உங்கள்  இன்வெஸ்ட்மெண்ட் எல்லாமே கணினி மூலமே. வங்கியில் பணம் செலுத்தி ட்ரேடிங்கை ஆரம்பித்தால் அதன்  இருப்புத்தொகை அல்லது நாம் நிர்ணயித்து முதலீடு செய்யும் தொகைக்கேற்ப லாபமோ நஷ்டமோ கிடைக்கும்.

லாபத்தையும் நஷ்டத்தையும் சேர்த்தே சொல்ல வேண்டி இருக்கிறது. ஏனெனில் மிகக் குறைந்த  ரிஸ்க் உள்ள முதலீடுகள் என்றால் அது வங்கியில் ஃபிக்சட் டெப்பாசிட், அஞ்சலக முதலீடு, ரியல் எஸ்டேட், தங்கம், வீடு, மனை, இன்சூரன்ஸ், பிபிஎஃப்  இவை எல்லாம் அடங்கும். கொஞ்சம் ரிஸ்க் உள்ள முதலீடு என்றால் அது மியூச்சுவல் ஃபண்ட். இதுவும் பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கம் பொறுத்தே அமையும். மிக அதிக ரிஸ்க் என்றால் அது பங்குச் சந்தையில் ஈடுபடுவதுதான். மிகச் சிறந்த வழிகாட்டலுடன் ஈடுபட்டால் இதிலும்  அதிகம் சம்பாதிக்கலாம்.

தினப்படி ட்ரேடிங் செய்பவர்களை ஜாபர் என்பார்கள். ( joobers ) . மிக அதிக அளவு சூதாட்டம் போல வாங்கி விற்பது நல்லதல்ல. இதை  gambling  என்பார்கள்.  NSE & BSE & MSE ( NATIONAL STOCK EXCHANGE &  BOMBAY STOCK EXCHANGE & MADRAS STOCK EXCHANGE) பரிந்துரைக்கும் நிறுவனங்களின்  அதாவது A+++   நிறுவனங்களின் பங்குகளை வாங்கி முதலீடாக வைத்துக் கொள்வது சாலச் சிறந்தது. அந்தப் பங்குகள் ஏறும்போது விற்றால் நல்ல லாபம் பார்க்கலாம்.

பங்குச் சந்தையில் ஈடுபட்ட சில காலத்துக்குள் மிக அதிக லாபம் பார்த்து விட்டால் அது உங்களை அதிக அளவு ஈர்த்து பணம் பண்ணும் வெறியிலும் தள்ளி விடலாம். எனவே பார்த்து ஈடுபடுவது நல்லது.

ஷேர் மார்க்கெட்டிலேயே கமாடிட்டி மார்க்கெட் ( பலசரக்கு சாமான்கள் ) . கரன்சி மார்க்கெட் (  அந்நிய நாட்டுப் பணப் பரிவர்த்தனை ) ஆகியவனவும் உண்டு. நீங்கள் தங்கத்தைக் கூட பேப்பர் கோல்ட் அல்லது ஈ கோல்ட் என்னும்  முறையில் கூலி சேதாரம் இல்லாமல் 22 காரட், 24 காரட் தங்கத்தில் பணத்தைப் போட்டுக் குறிப்பிட்ட சவரன் அல்லது கிராம் தங்கம் வாங்கலாம். திருடர் கொண்டு போய்விடுவாரோ என்ற பயம் இருக்காது. வெள்ளியையும் கூட இம்முறையில் வாங்கலாம்.

இன்னும் இண்டெக்ஸ் ட்ரேடிங்கும் உண்டு. அது நிஃப்டி, என் எஸ் இ, பி எஸ் இ ஆகியவற்றின் இண்டெக்ஸ் பார்த்து முதலீடு செய்து விற்பது. எதில் செய்தாலும் மார்க்கெட்டின் ஏற்ற இறக்கம்பார்த்து உடனடியாக வாங்கவோ விற்கவோ செய்தால் லாபம் அதிகமாக்கலாம். நஷ்டம் வந்தாலும் தவிர்க்கலாம். வீட்டில் செய்யும் ஆன் லைன் ட்ரேடிங்குக்கு நாம் ஸ்டாப் லாஸ் என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் நஷ்டத்தைத் தவிர்க்கலாம்.

ஃப்யூச்சர் மற்றும் ஆப்ஷன் ( கால் ஆப்ஷன், புட் ஆப்ஷன் ) ஆகிய வியாபாரங்கள். யூக வணிகம் எனப்படுகின்றன. அதாவது மார்க்கெட் இரண்டு மாதம் கழித்து ஏறும் அல்லது இறங்கும் எனக் கொண்டு வணிகம் செய்வது. இதில் நஷ்டம் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளதால் இதை மிகவும் பரிந்துரைப்பதோ ஊக்குவிப்பதோ இல்லை.

முன்பெல்லாம் பங்குச் சந்தையில் சென்று கூவிக் கூவிப் பங்குகள் விற்பதை தொலைக்காட்சியில் பார்த்திருக்கலாம். இப்போதெல்லாம் ஆன்லைன் ட்ரேங்க்/ஆஃப்லைன் ட்ரேடிங்தான். இருந்த இடத்தில் இருந்தே வியாபாரம்.

ஸ்பாட் என்று ஒன்று உண்டு. அந்த இடத்திலேயே பணம் கொடுத்து வாங்குவது. மார்க்கெட் புல்லிஷ் என்றால் ஏற்றமாயிருக்கிறது என்று அர்த்தம். பியரிஷ் என்றால் இறக்கமாயிருக்கிறது என்று அர்த்தம். பங்குச் சந்தையில் ஈடுபடும் பலர் என் குடும்பத்தில் இருப்பதால் என்ன புல்லா, பியரா என்று முன்பு பேசுவதைக் கேட்டிருக்கிறேன். இதுபற்றி முரட்டுக் காளையும் மிரளும் கரடியும் என்ற தலைப்பிலும் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறேன்.

நாம் புதிதாக ஆரம்பிக்கும் நிறுவனங்களிலும், மென்பொருள் துறையிலும்  பணத்தை முதலீடு செய்யுமுன் பலமுறை யோசிக்க வேண்டும். எம் பி ஏ படிக்கும் மாணவர்களுக்குப் பாடத்திட்டத்திலேயே எல்லா நிறுவனங்களையும் ஆராய்ந்து எப்படி முதலீடு செய்வது என ஆலோசனை சொல்லும் பாடத்திட்டமே உள்ளது. இதற்கு என்று சில கால்குலேஷன்ஸ் இருக்கிறது.

பொதுவாக ஆட்சி மாற்றம், உலகளாவிய யுத்தங்கள், குரூட் ஆயில் விலை ஏற்றம், தங்கம் விலை ஏற்றம் பொறுத்து பங்குச் சந்தையின் போக்கும் மாறுகிறது.  ஹிந்து , இந்தியன் எக்ஸ்பிரஸ், பிசினஸ் லைன், எகனாமிக் டைம்ஸ், காபிட்டல் மார்க்கெட்  ஆகிய பத்ரிக்கைகளும் , இதழ்களும் போக என் டி டி வி, சி என் பி சி டிவியும் 24 மணி நேரமும் ஷேர் ப்ரைஸ் மூமெண்ட்ஸ் பற்றி அறிவித்துக் கொண்டே இருக்கின்றன.

பங்குச் சந்தை என்ன ஆண்கள் மட்டுமே ஈடுபடும் ஒரு துறையா.. இல்லை.. எனக்கு நெய்வேலியில் ஹிந்தி வகுப்பு எடுத்த ஆசிரியை, மற்றும் என் உறவினர் பெண்கள் சிலர் மட்டுமல்ல என் 68  வயதான அம்மா கூட இதில் ஈடுபட்டு பணம் சம்பாதித்து வருகிறார். மிகச் சிறந்த கம்பெனிகளின் அல்லது வங்கிகளின் பங்குகளை வாங்குவது அவை ஏறும்போது விற்று லாபம் பார்ப்பது இதுதான் அவரின் கொள்கை. இறங்கி விட்டால் அப்படியே வைத்து விடுவார். தொடர்ந்து தொலைக்காட்சியில் பங்கு ஏற்ற இறக்கம் குறித்துக் கவனித்து வந்தாலே ஒரு தெளிவு கிடைத்து விடும்.

மனம் போன போக்கிலோ, அல்லது நிபுணர் கருத்துக்களிலோ, டிப்ஸ்களிலோ நம்பிக்கை வைக்காமல் தொடர்ந்து சந்தையின் போக்கைக் கவனித்து வருவதே சாலச் சிறந்தது. குமுதத்தில் தீபதர்ஷிணி பங்குச் சந்தை குறித்து எழுதி வருகிறார். மேலும் மும்பையைச் சேர்ர்ந்த தர்மஸ்ரீ பங்குச் சந்தை பற்றிய வகுப்பு எடுக்கிறார். பங்குச் சந்தை என்றால் என்ன, அடிப்படை விஷயங்கள், ஆன் லைன் ட்ரேடிங் மூலம் பங்குகளை வாங்குவது , விற்பது, நாள் வர்த்தகத்தில் ஈடுபடும் முறைகள், நல்ல நிறுவனங்களைக் கண்டுபிடிப்பது எப்படி என 5 வகுப்புக்கள் எடுக்கிறார்.

என்னுடைய தாத்தா 96 வயது ( இறக்கும் )வரையிலும் பங்குச் சந்தையில் ஈடுபட்டு வந்தார். நாளை மார்க்கெட்டில் என்ன பங்கு ஏறுமோ, என்ன பங்கு இறங்குமோ என்ற நினைப்பு அவர் சில சமயம் உடம்பு சரியில்லாமல் ஆஸ்பிட்டலில் முதுமை காரணமாக அட்மிட் ஆனபோதும் ஏற்பட்டதுண்டு. அந்த வேகத்திலேயே எழுந்து விடுவார். அவரை அந்த வயது வரை செலுத்தியது  சுறுசுறுப்பாக வைத்திருந்தது  அவர் ஈடுபட்ட பங்குச் சந்தையே எனலாம்.

இதை சூதாட்டக்களம் என்று பெண்கள் கருதுவதாலேயே ஈடுபடுவதில்லை. இதுவும் ஒரு முதலீடு என உணர்ந்தால் ஈடுபடலாம். நம் நாட்டில் 2 சதவிகிதம் பேரே இந்தப் பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுகின்றார்கள். நம் நாட்டின் பொருளாதாரத்தின் முகுகெலும்பாய் இருக்கும் பங்கு வர்த்தகத்தைப் பாதுகாப்பாக செய்து நம்மையும் உயர்த்தி நாட்டையும் உயர்த்தலாம்.

1 கருத்து :

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...