எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 12 மார்ச், 2013

வாமனக் குழந்தை.

கைக்குழந்தையாய்
அடிக்கடி கையிலெடுத்து
கூர்ந்து பார்க்கிறோம்
கைபேசியை.

அவ்வப்போது
செல்லமாய்ச் சிணுங்குகிறது.
விரல்கள் பற்றியவுடன்
அமைதியாகிறது.


இடுப்பில் சுமப்பதாய்
கால்சராய்ப் பையிலும்
இதயத்தில் சுமப்பதாய்
சட்டைப்பையிலும்
சுமக்கிறோம்.

யாரோ அதை
அழைத்துக்கொண்டே
தொடும்போது எடுத்துக்கொள்
என விசும்புகிறது.

சத்துக் குறைந்தபோது
சார்ஜர் வழி
மின்சாரப்பால் குடித்து
நிம்மதியாய் உறங்குகிறது.

குறுந்தகவல் கனவுகளால்
அவ்வப்போது வீரிட்டழுகிறது.
சைலன்சில் போட்டவுடன்
மௌனமாகிறது.

வெளியே செல்லுமுன்
சென்று வந்தபின்
தூக்கத்துக்கு முன்
தூங்கி விழித்தபின் என

கைக்குழந்தையாய்க்
கொஞ்சிக் கழிக்கிறோம்
கைபேசியை
காதோடு முத்தமிடவைத்து.

வருடக்கணக்காய்
வாமனக் குழந்தையாய்
களிப்பாக்கிக் கொண்டிருக்கிறது
நம்மை கைபேசியும்.

டிஸ்கி:- இந்தக் கவிதை டிசம்பர் 15-31 அதீதத்தில் வெளிவந்தது. 

5 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...