எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 6 ஆகஸ்ட், 2012

சூலும் சூலமும்

சூலும் சூலமும்..:-
*****************
அவளது அழுகையாலும் புலம்பலாலும்
நிறைந்திருந்தது அந்த வீடு.
தொட்டித் தண்ணீர் கசிந்து
ஊறிக்கிடக்கும் புல்தரையாய்
மொதும்பி இருந்தது அவளது தலையணை.
சமையல் மேடையின் தாளிதத்தெறிப்புக்களாய்
தரையெங்கும் சிதறிப் பொறிந்து கிடந்தன
அவளது கண்ணீர்ப் பூக்களின் உப்பு இதழ்கள்.

உலாவரும் கண்ணீர்க் கதிர்களோடு
தன் சவத்தைத் தானே சுற்றியபடி இருந்தாள் அவள்.
ஓசையற்று ஒலித்துக்கொண்டே
இருந்தன அவளது ஓலங்கள் கேட்பவரற்று.
தனது பிலாக்கணத்தைத் தானே பாடிக்கொண்டு
முடையத் தொடங்கி விடுவாள்
அவ்வப்போது பச்சை ஓலைக் கீற்றுக்களை.
சிவப்புப் பட்டால் போர்த்திக் கிடக்கும்
தனது ப்ரேதம் செல்லும் வழியில்
சிவப்பு மாத்து விரித்துப் பார்த்துக் கொள்வாள்.
யாருக்குமே கேட்காமல் அவள்
அழுது முடிக்கும்போதெல்லாம்
ஒரு சூலம் முளைக்கும் அவளது ஞானக்கண்ணாய்.
எடுத்து வயிற்றிலே செருகிக் கொள்வாள்
ஏன் சூலுற்றீர்கள் எனப் பெற்றவரை நினைத்து.
ஏன் சூலுறவைத்தாய் எனக்கொண்டவனை நினைத்து.
என் சூலில் ஏன் பிறந்தீர்கள் என
சூல் கொண்டவர்களை நினைத்து.
வயிற்றுப் புண் வேக்காளமாகி
நெஞ்சையும் வாயையும் தாக்கும்வரை
சூலத்தால் குத்தியே மீளாத நரகினில்
தன்னையே தள்ளிடுவாள்.
குத்திய சூலத்தின் ரத்தத்தில்
எலுமிச்சையை மாட்டி நிலை நிறுத்தியபின்
தொடர்வாள் தன் கடமைகளை ..
கருவறைக்குள் சக்தி பீடமாய் நிலைநிறுத்தப்பட்டு
திருவிழாவின் ஒரு நாளில் மட்டும் தேரோடும்
அவளுக்குப் புரிகிறது சக்தியின் பேரெழில் சக்தியை
ஒருநாள்கூட யாராலும் தாங்கமுடிவதில்லை என்று.


3 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...