திங்கள், 13 ஆகஸ்ட், 2012

கபினியின் கருணையில் ஆவணி 18..?

இந்த வருடம் போல எந்த வருடமும் குழாயடியில் ஆடி பதினெட்டைக் கொண்டாடி இருக்க மாட்டார்கள் மக்கள். அகண்ட காவிரி மணலால் வரண்ட காவிரியாகக் கண்ணைக் கசியச் செய்தது நிஜம். எப்படியும் வந்துவிடும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் நீரோ, மழையோ வரவேயில்லை.

நதிக்கரையோர நாகரீகங்களில் தழைத்தவர்கள் நாம். நதியே இல்லாமல் பிழைப்பவர்களும் இப்போது நாம்தான். கோயில் இருக்கும் இடமெல்லாம் பார்த்தால் ஒரு ஊரணி, குளம், ஆறு, கடல் ஏதாவது இருக்கும். ஸ்தல புஷ்கரணி என்று. இப்போது எல்லாம் காய்ந்து கிடக்கிறது. வரண்ட வாய்க்கால்களையும், கால்வாய்களையும் பாலீதீன் குப்பைகளோடு பஸ்ஸில் அல்லது ட்ரெயினில் பார்த்தபடி கடக்கிறோம்.


“வைகை நதி பெருகி வர வண்ண மணல் ஊர்ந்து வர..”இதெல்லாம் பாடல்களில் மட்டுமே கேட்கக் கூடியதாக இருக்கு. ஆடி மாதம் அம்மன் திருவிழாக்காலம். தெப்பக்குளத்துக்குள்ளே எல்லாம் மோட்டார் போட்டு தண்ணீரால் ஒரு வாரமாக நிரப்பி இருக்கின்றார்கள். திருச்சியில் மாநகராட்சியே மக்களுக்காக ஆற்றில் பைப் லைன் போட்டு போர் இறக்கி ஆடி பதினெட்டில் மக்களுக்கு நீராட வசதி செய்திருக்கிறது. நகரத்து மக்கள்தான் பைப்புக்கு பூஜை செய்யும் துர்ப்பாக்கியசாலிகள் என நினைத்திருந்தேன். இது ஆற்றிலேயே நடக்கிறது.

கபினியில் இப்போதுதான் நீர் நிரம்பிக் கொண்டிருக்கிறது. அது உபரியானதால் மேட்டூர் அணை நிரம்பிக் கொண்டிருகிறது.. அது நிரம்பித் ததும்பினால் காவிரியில் தண்ணீர் வரும். அது ஆவணி 18 ஆக இருக்கலாம். தென்மேற்குப் பருவ மழையும் சரிவரப் பெய்யவில்லை. சம்பா பயிர் சாகுபடி தள்ளிப் போகிறது. குறுவை சாகுபடி செய்தவர்கள் வடகிழக்குப் பருவ மழையை எதிர் நோக்கி இருக்கிறார்கள். இது பெய்யும் அல்லது பெய்யாமல் கிடக்கும். இதனால் தரிசு நிலங்கள் பெருகி வருகின்றன.

வேகாத வெய்யிலில் ஆற்றில் சலவைத் தொழிலாளிகள் இரண்டு ஊத்து வெட்டி ஒன்றில் துவைத்து இன்னொன்றில் அலசுவதைப் பார்த்தேன். என்ன கொடுமைடா சாமி. விலங்குகளுக்குக் கூடக் குடிக்கத் தண்ணீரில்லாமல்.

அதே நாள் உத்தரகண்டில் கனமழை. வெள்ளம். 3 மாடிக் கட்டிடத்தையே உருட்டியது வெள்ளம். 34 பேரை பலி கொண்டது. ஒரிஸ்ஸாவில் மகா நதியில் வெள்ளம். ஹிராகுட் அணையின் 19 மதகுகளும் திறந்து விடப்பட்டிருக்கின்றன. அங்கே பெய்து கெடுத்து இங்கே பெய்யாமல் கெடுக்கிறது.

வருடா வருடம் அஸ்ஸாமில் வெள்ளம். ஆந்திராவில் வெள்ளம் எனக் கேள்வியுறுவோம். இங்கே தமிழ்நாட்டில் தஞ்சைத் தரணியில் விவசாயிகள் தண்ணீரில்லாமல் , விவசாயமில்லாமல் எலிகளைத் தின்ன கதைகளையும் தற்கொலை செய்து கொண்ட கதைகளையும் படித்து கண்ணீர் விட்டுவிட்டு அப்போதே மறப்போம்.

தேசிய நெடுஞ்சாலைகளைப் போல தேசிய நதிகளையும் இணைப்பதில் என்ன சிரமம் ஏற்பட்டுள்ளது.? ரயில்வே , நெடுஞ்சாலைகள் எல்லாம் தேசியமயமாக்கப்பட்டிருக்கின்றன. நதிகளும் அப்படித்தான். தேசிய நதி நீர் ஆணையம் இடும் ஆணைகளை சிரமேற்கொண்டு நிறைவேற்ற வேண்டியது ஒவ்வொரு மாநிலத்திலும் ஆட்சியில் இருக்கும் அரசின் கடமையாகும். மழை நீர் சேகரிப்பை முறைப்படுத்தியதன் மூலம் ஓரளவு சென்ற வருடங்களில் மாநகரங்களில் தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடவில்லை.

 வீணாகக் கடலில் கலக்கும் உபரி நீரை முறையாகப் பகிர்ந்து கொடுக்கும் மனப்பான்மை வந்திருந்தால் எங்கும் வெள்ளமும் படுத்தாது. வறட்சியும் படுத்தாது. சின்னச் சின்னக் கால்வாய்களாக வெட்டி நதி நீரை மாநிலம் விட்டு மாநிலம் கொண்டு வருவதில் என்ன தடை இருக்க முடியும். ?

நதிகளைத் தாயாக்கி வணங்கும் தேசம் இது. கங்கா மாவுக்கு ஆரத்தி என்று பெண்கள் பூஜை செய்து ஆரத்தி எடுத்து வணங்குவார்கள். இலைகளில் தீபங்களை மிதக்கச் செய்வார்கள். அலஹாபாத் சென்றால் கங்கை , யமுனை , சரஸ்வதிக்கு பூஜை செய்யுங்கள் என்று பண்டிட் செய்யச் சொல்லுவார்.

ஆடி பதினெட்டில் என் சிறுவயதில் மன்னார்குடி பாமினி ஆற்றில் நுங்கும் நுரையுமாக வந்த புது வெள்ளத்தில் குளித்தது இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது. குளித்தபின் கரையோரமாக ஒரு வீடு போல மணலில் கட்டி அதில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து அம்மனை மண்ணில் பிடித்து ( தெளிவான ஞாபகம் இல்லை) . அதற்கு மஞ்சள் குங்குமம், புஷ்பம் வைத்து, காதோலை, கருகமணி, கண்ணாடி வளையல்கள் சமர்ப்பித்து. ஊதுபத்தி காட்டி , வணங்கி , கொண்டுபோன கட்டுசாதத்தை சாப்பிட்டு ஆடித்திரிந்து வந்திருக்கிறோம்.

மணியனின் ஒரு கதையில் வரும் சியாமளாவும் பாபுவும் காவிரிக் கரையின் வாசத்தோடு மனதில் பதிந்திருக்கிறார்கள். சுஜாதாவின் ஸ்ரீரங்கத்து தேவதைகளில் வரும் அம்மா மண்டபத்தை மறக்க முடியுமா.. தி ஜா ரா, லா ச ராவின் கதைகளில் வரும் காவிரி மண்ணின் வாசம் சுமந்த காற்றையும், வசவையும் கூட. சிவகுமாரும் கவிதாவும் நடித்த ஒரு படத்தின் பெயர்.,”புது வெள்ளம்”.

ஐப்பசி மாதத்தில் துலா ஸ்நானம் என்று கோட்டையூர் அருகே இருக்கும் கொத்தங்குடிக்குச் சென்று நீராடி வந்திருக்கிறோம். இப்போதெல்லாம் வாட்டர் தீம் பார்க்குகளில்தான் பிள்ளைகள் நீராடுகிறார்கள். குளம், ஆறு, ஓடை, அருவி, வாய்க்கால், கால்வாய், குட்டை, மதகு, அணை, முகத்துவாரம் ஏன் கடலைக் கூட நாம் ஆவணப்படுத்த வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

வறட்சியாலா, வெள்ளத்தாலா, தாது வருடப் பஞ்சம் எதால் நிகழப் போகிறது எனத் தெரியவில்லை. அதற்கு முன் நதி நீரைத் தேசியமயமாக்கிய திட்டத்தின் படி கிடைக்க கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இல்லாவிட்டால் மனிதர்கள் என்றொரு இனம் இருந்தது எனவும் ஆவணப்படுத்தப் பட வேண்டி வரலாம்.

5 கருத்துகள் :

ஹுஸைனம்மா சொன்னது…

//இப்போதெல்லாம் வாட்டர் தீம் பார்க்குகளில்தான் பிள்ளைகள் நீராடுகிறார்கள். குளம், ஆறு, ஓடை, அருவி, வாய்க்கால், கால்வாய், குட்டை, மதகு, அணை, முகத்துவாரம் ஏன் கடலைக் கூட நாம் ஆவணப்படுத்த வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

வறட்சியாலா, வெள்ளத்தாலா, தாது வருடப் பஞ்சம் எதால் நிகழப் போகிறது எனத் தெரியவில்லை. அதற்கு முன் நதி நீரைத் தேசியமயமாக்கிய திட்டத்தின் படி கிடைக்க கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இல்லாவிட்டால் மனிதர்கள் என்றொரு இனம் இருந்தது எனவும் ஆவணப்படுத்தப் பட வேண்டி வரலாம்.//

கட்ந்த சில நாட்களாக என் மனதில் ஓடிக்கொண்டிருக்கும் பயம் இதுதான். கண்கெட்ட பிறகாவது விழித்து, நதிநீர் இணைப்புக்கு வழிவகுத்தால் சரி.

பெயரில்லா சொன்னது…

nice

பெயரில்லா சொன்னது…

nice

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி ஹுசைனம்மா

நன்றி மதிவண்ணன்.

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...