எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012

பிம்பத்தின் மீதான ரசனை.

இணைந்திருந்த போதும்
ஒரு தனிமையின் துயரத்தைத்
தருவதாய் இருந்தது அது.

புன்னகை முகம் காட்டி
ஒரு பெண் திரும்பிச் செல்லும்போது
அவள் பின் உடலை
ரசிக்கத் துவங்குகிறாய்.

எதிர்பாராமல் லௌட் ஸ்பீக்கரில்
அலறும் பாடலைப் போல
நாராசமாயிருக்கிறது அது.


இல்லாத பியானோவின்
சோகக்கட்டைகளை
அமுக்கவேண்டும் என்ற
எண்ணம் எழுகிறது என்னுள்.

உன்னைப் பொறுத்தவரை
அது ஒரு பிம்பத்தின் மீதான ரசனை
என்னைப் பொறுத்தவரை
அது அடுத்த உடலின் மீதான காமம்.

ஒரு வேட்டையை பிடித்த
திருப்தியுடன் உன் கண்கள்
என்மேல் மீளும்போது
ஏதோ வேலையாய் விலகிச்செல்கிறேன்.

எங்கோ பதிந்த உன் பார்வை
என் மேல் பதியமிடுவது
பிடிக்காமல்  எதிர்ப்புணர்வோடு.

அந்தந்தத் தருணங்களில்
வாழ்ந்திருக்கும் நீ
அடுத்த கோப்பையை நிரப்பியபடி
தொலைக்காட்சியில் மூழ்குகிறாய்.

மூழ்கமுடியாத நான்
பாத்திரங்களோடு என்
போராட்டத்தைத் தொடருகிறேன்..

டிஸ்கி:- இந்தக் கவிதை 3, ஜூலை 2011 திண்ணையில் வெளியானது. 


4 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...