எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 14 டிசம்பர், 2010

கருவேலம்., பெட்டகம்., எழுத்து வாகனம்., எச்சப்புள்ளிகள்., தினசரி...

1. கருவேலம்:-

********************

ஈரப்பதம் உறிஞ்சி
உள்துப்பும் இயந்திரங்கள்
சமையற்கட்டிலும்.,
சயனத்திட்டிலும்.,
வரவேற்பறையிலும்.,
வாகனத்திலும்..

வெந்நீர் வளையங்கள்
பொங்கித்தரும்
தொட்டில் ஜலக்ரீடை..


பாலிவினைல் புட்டிகளில்
நன்னீரும்..
டஃபர்வேரில் நல்லுணவும்..
துகளானவை தொண்டைக்குழாய்க்குள்..

ஓசோன் டார்பாலின் கிழிய
கந்தகமாய்த் தீயும் பூமி..
முடங்கிப் போன முழங்காலாய்..

எஞ்சியவை
இடையறாத இருமலோடு..
எண்டோஸ்கோப்பியிலும்
கண்டு பிடிக்க இயலாமல்..

எடுத்து ஊன்றிக் கொண்ட
கருவேலங்களாய்..
வேரோடு வெட்டியும் கிளைவிட்டு..

=======================================

2. பெட்டகம் :-
******************

இரும்புக்கம்பு அடைத்து
இரட்டைப் பூட்டிட்ட
தேக்கு மரக்கதவின் பின்னே..

கைமுஷ்டியாய் இறுகின கைப்பிடியோடு
பித்தளைத்தகடு மறைத்த பூட்டோடு..
பலவர்ணத்தில் அசைக்க முடியாமல்..

ஒரு காலத்தில் கன்னமிட்ட நீ.,
உள்ளே வெள்ளைத்துணி சுற்றிய
வெள்ளிப் பிள்ளையார் கவசத்தை..

உன்னுரிமையாய் எண்ணி.,
களவாட முயன்று.,
கைநோக தோற்று..

வங்கி லாக்கருக்குப் பின்
வேண்டுவாரற்று
வெளியில் கிடக்கிறது..

வரும்போதெல்லாம்
முகம் திருப்பிச் செல்லும்
உன்னைக் கண்டு வருத்தமுற்று..

=====================================

3. எழுத்து வாகனம்..:-
*************************

ஏறும் வரையில்
தீர்மானிக்கப் படுவதில்லை..
எங்கு எதில் செல்வதென..

ஏறியபின்
சிறகு முளைத்த அன்னமாகவோ.,
பிடரி சிலிர்க்கும் சிங்கமாகவோ.,
கொம்பு கிளைத்த எருதாகவோ.,

எடுத்துச் செல்கிறது..
குவளைகள் கொட்டிய குளத்துக்கோ.,
அரவுகள் நெளியும் காட்டுக்கோ.,
மனிதர்கள் முட்டும் ஜல்லிக் கட்டுக்கோ..

நகர்ந்தோ., சிலிர்த்தோ., பொருதியோ..
பரிமாறியதெல்லாம்
பார்வைக்குப் பார்வை
உருமாறுகிறது..

காவியணிந்த நபராகவோ.,
காவியடித்த சுவராகவோ.,
காவி படிந்த பல்லாகவோ..

எந்தத் தேடுதலும் அற்று
பயணித்து முடிக்கையிலும்
சிதறிக்கிடக்கிறது..

வெள்ளை இறகோடு நீர்ச்சொட்டுக்களும்.,
மஞ்சள் பிடரி முடியோடு பாம்புச் செதில்களும்..
கருங்கொம்பின் வர்ணத்தோடு சரிந்த குடல்களும்.

=========================================

4. எச்சப் புள்ளிகள்..:-
**********************

பறவை எச்சப் புள்ளிகளோடு
நிழலைக் கோலமாக
வரைந்து கொண்டிருந்தது மரம்..

மொட்டை மரங்களிலும்
நீர்ப்பூக்கள்.
உதிர்த்துக் கொண்டிருந்தது மழை...

மண் பாளங்களாய்
வெடித்திருந்தன..
நீரற்ற காய்ந்த மரத்தின் கிளைகள்..

தானியத் தட்டை
கொத்தும் பறவைகளாய்
சூரியத் தட்டில் கதிரைக்
கொத்திக் கொண்டிருந்தன மரங்கள்..

மஞ்சள் உமியோடு
வெய்யிலைத்
தூற்றிக் கொண்டிருந்தது சூரியன்..

======================================

5. தினசரி :-
*************

சுமைதாங்கிக் கல்லாகவோ.,
சிலுவைக் கட்டையாகவோ.,
அலுவலகச் சுமைகள்
அசைய முடியாமல்
அடித்து வைக்க..

களைத்துக் கைகோர்த்துப்
பின்னே சாய்கிறாய்..
குழந்தையாகும் வேட்கையில்
என் வரவை எதிர்பார்த்து..

உன் பதவி., பாவனைகளோடு
கம்பீரத்தையும்., கடுமையையும்
கழற்றி எறிகிறாய்..
உயரப் பறக்கும் மின்விசிறி மீதோ.,
காலடியில் திறக்கும் குப்பைத்தொட்டியிலோ..

மாடிப்படியில் செருப்பு போடும் ஸ்டாண்டிலோ.,
துவைக்கும் யந்திரத்தின்
அழுக்குத் துணிகளோடோ.,
நானும் உரித்துப் போடுகிறேன்.,
என் கோபத்தையும்., சலிப்பையும்...

ஊறவைத்த தானியங்களைப் போல
முளைத்துக் கிடக்கிறோம்.,
மூழ்கிய அன்பில்..
மறுபடி முளைக்கும்
மற்றொரு நாளை எதிர்நோக்க..

டிஸ்கி 1 :- கருவேலம் கவிதை 13.12.2010 உயிரோசையில் வெளிவந்துள்ளது.. நன்றி உயிர்மை..:))

டிஸ்கி..2.:- கருவேலம்., பெட்டகம்., எழுத்து வாகனம்., எச்சப்புள்ளிகள்., தினசரி .. இந்த ஐந்து கவிதைகளும் தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள் என்ற தலைப்பில் 12.12.2010 திண்ணையில் வெளிவந்துள்ளது.. நன்றி திண்ணை..

18 கருத்துகள்:

 1. //கருவேலம்., பெட்டகம்., எழுத்து வாகனம்., எச்சப்புள்ளிகள்., தினசரி...//

  அனைத்து கவிதைகளுமே அருமையான வரிகள்...

  சூப்பர்... தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

  பதிலளிநீக்கு
 2. ஐந்தும் அருமை. திண்ணையில் வாசித்து விட்டேன்:)! திண்ணை, உயிரோசை இதழ்களில் வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள்.

  //ஊறவைத்த தானியங்களைப் போல
  முளைத்துக் கிடக்கிறோம்.,
  மூழ்கிய அன்பில்..
  மறுபடி முளைக்கும்
  மற்றொரு நாளை எதிர்நோக்க..//

  மிகப் பிடித்த வரிகள்.

  பதிலளிநீக்கு
 3. //ஊறவைத்த தானியங்களைப் போல
  முளைத்துக் கிடக்கிறோம்.,
  மூழ்கிய அன்பில்..
  மறுபடி முளைக்கும்
  மற்றொரு நாளை எதிர்நோக்க..//

  உண்மைதான்...

  பதிலளிநீக்கு
 4. \\ஊறவைத்த தானியங்களைப் போல
  முளைத்துக் கிடக்கிறோம்.,
  மூழ்கிய அன்பில்..
  மறுபடி முளைக்கும்
  மற்றொரு நாளை எதிர்நோக்க..\\

  Arumai.. attagasam...

  பதிலளிநீக்கு
 5. //மஞ்சள் உமியோடு
  வெய்யிலைத்
  தூற்றிக் கொண்டிருந்தது சூரியன்..//

  தேனக்கா,

  தெவிட்டாதச் சொற்கள்..!

  பதிலளிநீக்கு
 6. மாடிப்படியில் செருப்பு போடும் ஸ்டாண்டிலோ.,
  துவைக்கும் யந்திரத்தின்
  அழுக்குத் துணிகளோடோ.,
  நானும் உரித்துப் போடுகிறேன்.,
  என் கோபத்தையும்., சலிப்பையும்....//

  எல்லோரூம் இப்படி இருந்தால் நன்றாக இருக்கும்.

  பதிலளிநீக்கு
 7. அக்கா, கலக்குறீங்க.... மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 8. எல்லாக் கவிதைகளுமே ஆழ்ந்து அனுபவித்த வரிகள்.வாழ்த்துகள் தேனக்கா !

  பதிலளிநீக்கு
 9. //ஊறவைத்த தானியங்களைப் போல
  முளைத்து கிடக்கிறோம்.,
  மூழ்கிய அன்பில்..
  முறுபடி முளைக்கும்
  மற்றொரு நாளை எதிர்நோக்க..//

  உண்மையான வரிகள்.

  வாழ்த்துக்கள் தேனம்மை.

  பதிலளிநீக்கு
 10. உயிரோசையில் படித்தேன். அருமை. வாழ்த்துகள். கருவேல மரங்கள் அது இருக்கும் நிலத்தை மட்டுமல்லாது, அருகினில் இருக்கும் நிலத்தையும் அழிக்கும் வல்லமை கொண்டது.

  பதிலளிநீக்கு
 11. உயிரோசையில் படித்தேன். அருமை. வாழ்த்துகள். கருவேல மரங்கள் அது இருக்கும் நிலத்தை மட்டுமல்லாது, அருகினில் இருக்கும் நிலத்தையும் அழிக்கும் வல்லமை கொண்டது.

  பதிலளிநீக்கு
 12. நன்றி மாணவன்., குமார்., ராமலெக்ஷ்மி., சங்கவி., லோகு., சத்ரியன்,., ரமேஷ்., சித்து., ஹேமா.,ஜயந்த., கோமதி உழவன். , அக்பர்.

  பதிலளிநீக்கு
 13. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...