எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 15 நவம்பர், 2009

தும்பைப்பூ

கடலில் மூழ்கிய
கப்பலாய் சென்னை...
மழையில் ராயவரம்
குடிசைகள் தெப்பமாய்...

ஆலை ஊருக்குள்
தும்பைப்பூ வேஷ்டி செய்யும்
தினக் கூலியாயிருந்து ...
வேலையிழந்து...

ரிக்ஷாக்காரனாய்.
மீன்பாடிவண்டி ஓட்டியாய்
திருவல்லிக்கேணியில்...

நியானோ சோடியமோ
ஒளிவீச என்னுடன்
சேர்த்துக்கொண்ட
என் கறுத்த உதட்டழகி ...
கன்னத்து மருவழகி...

காடுகளில் முளைத்துக்
கிடக்கும் தும்பைப்பூவாய்
என் மார்பில் மகன் ...
சிறுகோழிக்குஞ்சாய்...

குலினான் சுரங்கத்து
பட்டை தீட்டப்படாத
பெட்ரா டைமண்டாய்...

மழையென்றும்
வெய்யிலென்றும்
நான் இடம் பெயரும்
திசையெல்லாம்
என்னோடு கூட அவள்...

ப்ளாஸ்டிக் குடத்தில்
நீர் சுமந்து கொடுத்தும் .,
மல்லிகை கட்டி விற்றும் .,
வீட்டு வேலை செய்தும்.,

காசு புரளும் நாளெல்லாம்
ராவுத்தர் பிரியாணியும்
ரத்னா கபே இட்லி சாம்பாரும் ...

மழையடித்து என் உலகம்
மேல் கீழாய் மாறும் காலம்.,
பாரீஸின் ப்ளாட்பாரங்களில்...

தார்பாலின் தடுப்பு வீட்டில் ...
கல்கூட்டி சோறாக்கி ..
கருவாட்டுக் குழம்போடு...

வாசமாய் அவள் போட
பாசமாய் என் கண்ணில்
இரு தும்பைப்பூக்கள்....

27 கருத்துகள்:

  1. அட்டகாசம் - அருமையான் இயல்பான கவிதை - வாழ்க்கை வாழ்வதற்கே என்னும் மனப்பான்மை தெரிகிறது.

    க்ருத்த உதட்டழகி - கன்னத்து மருவழகி

    இனிய குடும்பம் - வாழ்க

    நல்ல கவிதை ரசித்தேன் நல்வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  2. நடப்பு சம்பவங்களை கோர்த்து ரசிக்கும்படியாக தருவது மிக அரிதான கலை. அதில் தங்களின் வெற்றி என்னுடைய வெற்றியாக மனமகிழ்கிறேன் சகோதரி.

    வாழ்த்துக்கள்

    விஜய்

    பதிலளிநீக்கு
  3. தங்கள் அழைப்பை ஏற்று, சங்கிலித் தொடர் இடுகை போட்டு இருக்கின்றேன்

    வந்து தங்களின் மேலான கருத்துகளை பதியுமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்ளுகின்றேன்.

    பதிலளிநீக்கு
  4. வாங்க சீனா ஸார் ..

    உங்க வரவிற்கும் வாழ்த்திற்கும் நன்றி ..

    ஒரே நேரத்தில் 4 வலைப்பூக்களை நடத்திக் கொண்டு இருக்கிறீர்களே ..எப்படி .?

    உங்க எல்லா பின்னூட்டமும் படித்தேன்..

    ரொம்ப பொறுமையாக என் முதல் கவிதையில் இருந்து படித்து மிகச் சிறப்பாக பின்னூட்டம் அளித்து உள்ளீர்கள்..

    உங்க விமர்சனங்கள் எனக்கு மகிழ்வை அளித்தன..

    மிக்க நன்றி ஸார்

    பதிலளிநீக்கு
  5. மதுரை மாநகரம்
    படித்ததில் பிடித்தது
    asai poduvathu
    வலைச்சரம் எல்லாமே அருமை

    சகோதரருக்கு திருமண வாழ்த்துக்கள் சீனா ஸார்

    பதிலளிநீக்கு
  6. உங்களின் இயற்கை பற்றிய நேசம் மற்றும் கவலை அர்த்தமுள்ளதுவிஜய்

    நன்றி விஜய் பாராட்டுக்கு

    பதிலளிநீக்கு
  7. அசத்தல்..
    கலக்கல் ..
    அற்புதம் என்று எது வேண்டு மானாலும் போடலாம் ராகவன்..

    அவ்வளவு அருமையாக எழுதி உள்ளீர்கள்..


    நன்றி ராகவன் இடுகையை மிகச் சிறப்பாக எழுதியமைக்கு

    பதிலளிநீக்கு
  8. இயல்பான நிகழ்வுகளை எளிமையான வரிகளில் அழகாக வடித்துள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
  9. பூக்கள் பற்றிய 50வது இடுகைக்கு வாழ்த்துகள்.

    காதல், பூ இரண்டும் ஒன்றுக் கொன்று தொடர்புடைய விசயங்கள்.

    காதல், பூ இரண்டும் மலரும்.

    காதல் கொள்ளும் போது பூ இன்னும் அழகாகக் தோன்றும். காதல் வயப் பட்டவருக்கு பூ வைப் பார்க்கும் போதெல்லாம், மனம் இன்னும் சந்தொஷமடையும்.

    உங்கள் பூக்கள் கவிதைகள் என் நினைவுகள் பலவற்றை கிளறியது. நன்றிகள் பல.

    பதிலளிநீக்கு
  10. // காசு புரளும் நாளெல்லாம்
    ராவுத்தர் பிரியாணியும்
    ரத்னா கபே இட்லி சாம்பாரும் ... //

    அடுத்த நாளைப் பற்றி கவலைப் படாத வாழ்க்கை என்பதை எவ்வளவு அழகாகச் சொல்லியிருக்கீங்க.

    பதிலளிநீக்கு
  11. வாவ்வ் பூக்கள் பற்றி 50 கவிதை எழுதிருக்கிங்களா?ஆச்சர்யமா இருக்கு அக்கா.வாழ்த்துக்கள்+பாராட்டுக்கள்!!

    நன்றாக இருக்கு.அனைத்து வரிகளும் ரசித்தேன்..

    பதிலளிநீக்கு
  12. //காசு புரளும் நாளெல்லாம்
    ராவுத்தர் பிரியாணியும்
    ரத்னா கபே இட்லி சாம்பாரும் ...

    மழையடித்து என் உலகம்
    மேல் கீழாய் மாறும் காலம்.,
    பாரீஸின் ப்ளாட்பாரங்களில்...//

    வறுமையும் செழிப்புமான வாழ்வை அழகாய்ச் சொல்லியிருக்கிறீர்கள் தேனு.

    பதிலளிநீக்கு
  13. ஆஹா, திருவல்லிக்கேணி, ரத்னா காபி எல்லாம் போட்டிருக்கீக. அயித்தானுக்கு இந்தப் பதிவை அனுப்பி படிக்க வெச்ச சந்தோஷப்படுவார். (ட்ரிப்ளிகேன் ஆளு):)))

    அதென்னவோ நான் இருந்தப்போ சென்னையில மழையே இல்லை. இப்ப கொட்டோ கொட்டுன்னு கொட்டுது. :)))

    கவிதை நல்லா இயல்பா இருக்குங்க

    பதிலளிநீக்கு
  14. அனைத்தும் அருமை..

    தார்பாலின் தடுப்பு வீட்டில் ...
    கல்கூட்டி சோறாக்கி ..
    கருவாட்டுக் குழம்போடு////


    இது சூப்பர் (But I am a vegetarian)

    பதிலளிநீக்கு
  15. ரொம்ப நாளா சென்னையில இருக்கீங்களா??

    ரொம்ப நல்லா இருக்கு கவிதை :)

    பதிலளிநீக்கு
  16. உங்க வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நவாசுதீன்

    அருமையான வார்த்தைப் பிரயோகம்

    //பசலை எனும் யாளி //

    பதிலளிநீக்கு
  17. நன்றி ராகவன் ஸார் உங்க ஆசீர்வாதத்துக்கு

    பதிலளிநீக்கு
  18. நன்றி மேனகா சத்யா உங்க வாழ்த்துக்கு

    பதிலளிநீக்கு
  19. நன்றி ஹேமா உங்க வாழ்த்துக்கு

    பதிலளிநீக்கு
  20. நன்றி புதுகைத் தென்றல்

    உங்க அயித்தான் என்ன சொன்னாங்க

    நல்லா இருக்காமா இந்த இடுகை

    பதிலளிநீக்கு
  21. கருவாட்டுக் குழம்பின் மணம் உங்கள் கவிதையில்
    உணர்கிறேன்.வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  22. வலைப்பூக்களின் தான் எத்தனை வகை. மனிதர்களின் கற்பனைத்திறனை அற்புதமாக காட்டுகிறது. இன்று தான் உங்கள் வலைப்பூவை காணும் வாய்ப்பு கிடைத்தது. கவிதையும், கற்பனையும் வியப்பை தந்தது. வாழ்த்துக்கள்... வணக்கம்.

    பதிலளிநீக்கு
  23. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...