ஒரு காலத்தில் மிக அழகாக இருந்த இளைஞன் ஒருவன் மிகப் பயங்கரமான உருவத்தை அடையும்படி நேரிட்டது. அந்த அழகு தர்மராஜனான அவனை அப்படிச் செய்தவர் கயிலைமலையில் வாழும் பரமேஸ்வரன்தான். அதுவும் தர்மராஜன் செய்துவந்த தொழிலின் நிமித்தம்தான். அது என்ன தொழில். ஏன் அவர் அழகை இழந்தார் எனப் பார்ப்போம் குழந்தைகளே.
தர்மராஜனின் கொள்ளுப்பாட்டன் மகாவிஷ்ணு. அவரது மகன் பிரம்மா தர்மராஜனின் பாட்டன். அவரது மகன் சூரியன் தர்மராஜனைப் பெற்றவர். சூரியனுக்கும் உஷாதேவிக்கும் பிறந்தவன் தர்மராஜன் எனப்படும் காலதேவன். இவனை யமா என்றும் அழைப்பார்கள். இவனுக்கு இவனது தாய் உஷாதேவி மூலம் மனு என்ற சகோதரனும், யமுனை என்ற சகோதரியும் உண்டு. உஷாதேவி உருவாக்கிய இன்னொரு தாயான சாயாதேவி மூலம் சனி, சாவர்ணி மனு என்ற சகோதரர்களும் தபதி என்ற சகோதரியும் உண்டு.
சிறுவயதில் சாயாதேவியைத் தன் தாய் என நினைத்து வந்த யமா ஒரு கட்டத்தில் அது தன் தாய் அல்ல, தாயின் சாயல் கொண்ட தாய் உருவம் எனப் புலப்படுகிறது. அதனால் தன் தந்தையைத் தாய் ஏமாற்றுவதாகக் குறை கூறி கோபத்தால் காலால் எட்டி உதைத்து விடுகிறான். சாயாதேவி உடனே கோபமுற்று அவனது கால் புண்ணாகும்படி சபித்துவிடுகிறார்.
