கூடையிலே என்ன பூ குஷ்பு
”நீ எங்கே என் அன்பே நீ இன்றி இனி நான் எங்கே.” என்று உருகிப் ”போவோமா ஊர்கோலம்” என்று திருமணம் முடித்த காதலர்களுக்குத் தேசிய கீதமாக விளங்கியது 92 இல் வெளிவந்த சின்னத்தம்பி படம். இதற்கு முன்னே ”சைனீஸ் பட்லர்” என்று தான் கலாய்த்த குஷ்பூவையே ”யாரு அந்த ராதிகா கண்ணனோட கோபிகா” என்று தன் நண்பர்கள் கலாய்க்கும் விதம் கார்த்திக் காதலிக்கும் படம்தான் வருஷம் 16.
மெழுகு பொம்மை போன்ற தோற்றம், லேசான சரிதா சாயலும், ஜீனத் அமன் சாயலும், மெல்லிய உருவமும் மீடியமான உயரமும் கொண்டவர் குஷ்பூ. பெண்மை விகசிக்கும் உடல், பெரிதான கண்கள், கொழு கொழு கன்னங்கள், கான்வெண்ட் பெண் தோற்றம், அழகிய பல்வரிசை, கால்கேட் புன்னகை, அபாரத் துணிச்சல், அசாத்தியத் தன்னம்பிக்கை, ரோஜா நிறம் இதுதான் குஷ்பூ. பின்னர் அவர் இரட்டை ரோஜாவாகிவிட்டார்!
முக்கால்வாசிப் படங்கள் கவர்ச்சி நாயகித் தோற்றம் என்றாலும் சில படங்களில் தன் உணர்ச்சி மிகு நடிப்பால் நெகிழச் செய்திருக்கிறார். சின்னத் தம்பி, வருஷம் 16, அலைபாயுதே ஆகியவற்றின் கிளைமாக்ஸ் சீன்ஸ், கிழக்கு வாசலில் கார்த்திக் பாடும் பாடிப் பறந்தகிளி பாடல் காட்சி ஆகியவற்றில் அவரின் உணர்ச்சி மிகுந்த நடிப்பு சிறப்பு.
