எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 19 மார்ச், 2023

நட்புக்கு எடுத்துக்காட்டாய் வாழ்ந்த நண்பர்கள்

 நட்புக்கு எடுத்துக்காட்டாய் வாழ்ந்த நண்பர்கள்

எத்தனையோ மனிதர்களை நட்புக்கு எடுத்துக்காட்டாய் நாம் சுட்டுகிறோம். படித்து அதிசயிக்கிறோம். ஆனால் எத்தனை சோதனைகள் வந்தாலும் உண்மையிலேயே நட்புக்கு எடுத்துக்காட்டாய் பார்த்த கணத்திலிருந்து இறந்து வீழ்ந்த கணம் வரை வாழ்ந்தவர்கள் என்றால் கர்ணனையும் துரியோதனனையுமே சுட்டலாம். அவர்களின் சிறப்பான பக்கங்களைப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.

அஸ்தினாபுர அரண்மனையில் மன்னர்களுக்கிடையே ஒரு வில்வித்தைப் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஒருபோட்டியில் விஜயன் வென்றுவிட அங்கே தேரோட்டியின் மகனான கர்ணன் பங்கெடுக்க விரும்புகிறான். ஆனால் துரோணரோ அது க்ஷத்திரிய மன்னர்களுக்கான போட்டி என நிராகரிக்கிறார். உடனே துரியோதனன் கர்ணனைத் தன் நண்பனாக ஏற்று அங்க தேசத்தின் அரசனாக அறிவிக்கிறான். இங்கே ஆரம்பிக்கிறது அவர்களின் மாசற்ற நட்பும் கர்ணனின் செஞ்சோற்றுக் கடனும்.

ப்ரக்ஜோதிஷ்பூரை ஆண்ட பகதத்தன் என்பவரின் மகள் பானுமதி. இவளுக்கு சுயம்வரம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கொள்ளை கொள்ளும் அழகுடைய பானுமதியைக் கரம்பிடிக்கஅங்கே அனைத்து தேசத்து அரசர்களும் அணிவகுத்திருந்தனர். அப்போட்டியில் பங்கேற்க துரியோதனனும் சென்றிருந்தான். அவனுக்குத் தோழனாக கர்ணனும் சென்றிருந்தான்.

பார்த்ததுமே பானுமதியின் அழகில் மயங்கினான் துரியோதனன். ஆனால் அவளோ சுயம்வர மாலையோடு துரியோதனன் பக்கம் வந்ததும் வேறு பக்கம் திரும்பி விட அவளைக் கடத்திச் சென்று மணக்கத் துடிக்கிறான். இச்சந்தர்ப்பத்தில் கர்ணன் தேரோட்டியாக இருந்து பல்வேறு மன்னர்களுடன் போரிட்டு  இருவரையும் அஸ்தினாபுரத்துக்குக் கொண்டு வந்து சேர்க்க அவர்கள் திருமணம் அதன் பின் இருமனம் இணைந்த திருமணமாக முடிந்தது.

ஒருமுறை பானுமதியும் கர்ணனும் சொக்கட்டான் ஆட்டம் ஆடிக்கொண்டிருந்தார்கள். அப்போது அங்கே துரியோதனன் வருகை புரிந்தான். கணவனைக் கண்ட பானுமதி மரியாதை நிமித்தமாக எழுந்தாள். தோற்கும் நிலையில் இருந்த அவள் ஆட்டத்தைவிட்டு வெளியேறுவதாக நினைத்த கர்ணன் வேகமாக அவள் உடையைப் பற்றி அமரவைக்க எத்தனித்தான். ஆனால் அவள் இடுப்பில் அணிந்திருந்த மணிமேகலை என்னும் ஆபரணம் அறுபட்டு அதிலிருந்து மணிகள் தரையெங்கும் உருண்டோடின. இருவருமே பதற்றத்தில் ஆழ்ந்தனர்.

அதற்குள் பக்கத்தில் வந்துவிட்ட துரியோதனன் ” எடுக்கவோ, கோர்க்கவோ” என சூழ்நிலையை இயல்பாக்க முயன்றான். தன் மனைவியுடன் தன் சிநேகிதனே ஆனாலும் தனிமையில் அமர்ந்து சொக்கட்டான் ஆடுவதையோ அவன் பற்றியதால் அவளது ஆடையின் மேகலை அறுந்து உதிர்ந்ததையோ பெரிதாக எண்ணாமல் சூழ்நிலையை இலகுவாக்க முயன்ற துரியோதனன் தன் நண்பன் கர்ணனின் மேல் வைத்த நம்பிக்கை கர்ணனைத் தன் வாழ்நாள் முழுவதும் அசைத்துக் கொண்டிருந்தது.

இது எப்போது வெளிப்பட்டது என்றால் குருக்ஷேத்திரப் போர் நடந்து கொண்டிருக்கும் சமயம் பாண்டவர்களின் தாயான குந்தி, கர்ணன் தன் மகன் என்ற உண்மையை கர்ணனிடமே உரைக்க வந்தாள். மேலும் போரில் அவன் பாண்டவர் பக்கம் சேர்ந்து கௌரவர்களை எதிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ள வந்தாள். அப்போது கர்ணன் வாய்மொழியாகவே இந்நிகழ்வு வெளிப்பட்டது.

கர்ணன் தன் தாயிடம்” பிறந்தவுடனே என்னைக் கைவிட்ட தாயான நீங்கள் இப்போதுதான் மகனாக ஏற்றுக்கொள்ள வந்திருக்கிறீர்கள். ஆனால் என் நண்பனான துரியோதனனோ நான் யாரென்று தெரியாமலே என் வீரத்தைப் பார்த்துச் சகோதரனாக ஏற்று அங்க தேச அரசனாக்கினான். அங்கேயே ஆரம்பித்துவிட்டது என் செஞ்சோற்றுக் கடன். இதைவிடத் தன் மனைவியுடன் சொக்கட்டான் ஆடும்போது அவள் மேகலை அறுந்து வீழ்ந்ததைக் கூடத் தப்பாக எண்ணாமல் எடுக்கவோ கோர்க்கவோ என்று கேட்ட அவன் பண்பின் முன் என் எல்லா அன்பும் இணைந்துவிட்டது அம்மா. ”

”நான் இன்றுவரை தானதர்மம் செய்துவரும் பொருட்களெல்லாமே துரியோதனனைச் சேர்ந்ததுதானேம்மா. மாயக் கிருஷ்ணனின் துணையை நீங்களெல்லாம் நம்பும்போது என் வில்திறமையை மட்டுமே நம்புகிறான் அம்மா. இப்படிப்பட்ட என் நண்பனுக்குனுக்கு என் உடல் பொருள் ஆவியைத் தியாகம் செய்யாவிட்டால், செஞ்சோற்றுக்கடனைத் தீர்க்காவிட்டால் நான் வாழ்ந்ததன் பயன் ஏது?” என்று கேட்க அர்ஜுனன் மேல் பிரம்மாஸ்திரத்தை ஒருமுறைக்குமேல் ஏவக்கூடாது என்றும், அர்ஜுனனைத் தவிர பாண்டவர்கள் யாருடனும் பொருதக் கூடாது என்றும் கர்ணனிடம் வரம் பெற்றுச் செல்கிறாள் குந்தி.

இப்படித் தன் நண்பனுக்காகத் தாயே வந்து கேட்டும் மாறாத கர்ணனின் பண்பு உயர்ந்ததுதானே. அதனினும் குருக்ஷேத்திரப் போரின் போது பீஷ்மர் தடுத்ததால் அவன் வெறும் படைவீரனாகவே போரிட நேருமென்பதால் போரிடப் புகமாட்டேன் என்று மறுத்ததையும் துரியோதன் ஏற்றான். அதன்பின் பீஷ்மர் விழுந்ததும்தான் அவன் தன் நண்பன் துரியோதனுக்காகப் போர்க்களம் புகுந்தான். இதுவே இவர்களின் இணைபிரியாத புரிதலுள்ள நட்பினுக்கு எடுத்துக்காட்டு என்பதைப் பார்த்தோம் இல்லையா குழந்தைகளே.  

3 கருத்துகள்:

  1. // ”நான் இன்றுவரை தானதர்மம் செய்துவரும் பொருட்களெல்லாமே கர்ணனைச் சேர்ந்ததுதானேம்மா. //

    "துரியோதனனைச் சேர்ந்ததுதானேம்மா" என்றிருக்க வேண்டுமோ...

    நட்பை பற்றிய குழந்தைகளுக்கான கதை நன்று.

    பதிலளிநீக்கு
  2. மிகச்சரி ஸ்ரீராம் திருத்தி விடுகிறேன் :)

    பதிலளிநீக்கு
  3. நன்றி ஸ்ரீராம்.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...