எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 31 ஆகஸ்ட், 2023

பாரபட்சமில்லாமல் உணவளித்த உடுப்பி மன்னர்

 பாரபட்சமில்லாமல் உணவளித்த உடுப்பி மன்னர்

மகாபாரதப் போர் நடைபெற்றபோது எல்லா மன்னர்களும் பாண்டவர்கள் பக்கமோ, கௌரவர்கள் பக்கமோ துணை நின்று போர் புரிந்தனர். அம்மாபெரும் போரில் அனைவருக்கும் உணவின் தேவை இருந்தது. எல்லா மன்னர்களும் இப்படி இரு புறமும் பிரிந்து நின்று போரிட்டபோது உடுப்பி மன்னர் மட்டும் வித்யாசமாகச் சிந்தித்தார். அதைக் கிருஷ்ணரின் துணையோடு செயலாக்கமும் செய்தார். அப்படி அவர் என்ன செய்தார் எனப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.

மகாபாரதப் போர் ஆரம்பிக்குமுன்பு மன்னர்கள் அனைவரும் இருகூறாகப் பிரிந்து பாண்டவர் பக்கமோ, கௌரவர் பக்கமோ சென்று யுத்தகளத்தில் கைகோர்த்தனர். அச்சமயம் அந்த ரத்த யுத்தத்தில் பங்கேற்காமல் நடுநிலை வகித்தார் ஒருவர். அவர்தான் உடுப்பியின் மன்னர். அவர் கிருஷ்ணரிடம் யுத்தம் ஆரம்பிக்கும் முன்பே தான் யுத்தத்தில் பங்குபெறப்போவதில்லை என்றும் ஆனால் அனைவருக்கும் தான் உணவு வழங்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.

அவரது கருத்தை ஏற்ற கிருஷ்ணர் அவர் நல்லுள்ளம் புரிந்து அனைவருக்கும் உணவு வழங்கும்படிச் சொன்னார். பதினெட்டு நாட்கள் நடைபெற்றது அம்மாபெரும் யுத்தம். இருபுறமும் ஏராளமான உயிரிழப்பு. அந்தப் பதினெட்டு நாட்களும் உடுப்பி மன்னர் பாரபட்சமில்லாமல் அனைவருக்கும்  தனது ஆட்களைக் கொண்டு உணவு சமைத்து வழங்கி வந்தார். இதில் என்ன ஆச்சர்யம் என்றால் ஒரு நாள் கூட உணவு அதிகமாகச் சமைக்கப்பட்டு வீணாகவும் இல்லை. உணவு யாருக்கும் இல்லாமல் போகவும் இல்லை. அனைத்து வீரர்களுக்குமே உணவு கிடைத்தது.

இது அனைவருக்குமே ஆச்சர்யத்தை உண்டு செய்தது. ”தினமும் எத்தனை பேர் இறப்பார்கள். மீதம் எத்தனை பேர் இருப்பார்கள் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் நீங்கள் சமைத்து வழங்கிய உணவு கச்சிதமாக அனைவருக்குமே கிடைத்ததே. அது எப்படி.? இத்தனைபேர்தான் மறுநாள் இருப்பார்கள் என்பதை நீங்கள் முன்கூட்டியே அறிந்தது எப்படி ? ” என்றொரு கேள்வி அவர்முன் வைக்கப்பட்டது.

அவரோ “” எல்லாம் கிருஷ்ணரின் தயவால்தான். ஒவ்வொரு நாளும் இரவுப் பொழுதில் நான் வறுத்த நிலக்கடலையை எடுத்துக் கொண்டு கிருஷ்ணரின் கூடாரத்துக்குச் செல்வேன். அங்கே என்னுடன் உரையாடியபடி கிருஷ்ணர் அந்த நிலக்கடலைகளைச் சாப்பிடுவார். அவர் எவ்வளவு கடலைகளைச் சாப்பிடுகிறார் என்பதைக் கவனிப்பேன். உதாரணமாக அவர் அன்றைக்குப் பத்து நிலக்கடலைகளைச் சாப்பிட்டால் மறுநாள் பத்தாயிரம் மரணங்கள் நிகழும் என்பதைப் புரிந்து கொள்வேன். எனவே மறுநாள் பத்தாயிரம் பேரைக் குறைத்துவிட்டு மிச்சமுள்ள வீரர்களைக் கணக்குப் போட்டு  உணவு சமைப்பேன். எனவே இதுவரை உணவு வீணாகவில்லை. இருந்த அனைவருக்கும் போதுமானதாகவும் இருந்திருக்கிறது “”என்றார்.

இப்படி தனக்கு வேண்டியவர் வேண்டாதவர் என்கின்ற பாரபட்சமில்லாமல் உணவை வழங்கியது மட்டுமல்ல. அதைத் தேவையான அளவே சமைத்துக் கொடுத்தது உணவை வீணாக்காதது ஆகிய நற்குணங்களை நாம் உடுப்பி மன்னரிடம் இருந்து கற்றுக் கொள்ளலாம்தானே குழந்தைகளே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...