எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 15 ஆகஸ்ட், 2023

காயின் கலெக்‌ஷன் - 1. 1 பைசா முதல் 25 பைசா ( நாலணா) வரை.

 பிலடெலி என்று ஸ்டாம்ப்ஸ் கலெக்‌ஷன் பற்றி முன்பே போட்டிருந்தேன். இப்போது என் தாயாரும், என் சின்ன மகனும் மற்றும் நானும் சேகரித்த நாணயங்களைப் பற்றிப் பகிர்கிறேன். உலகளாவிய அளவில் இது ஒரு காலத்தில் பெரும் பொழுது போக்காவும் அரிய சேமிப்பாகவும் இருந்திருக்கிறது. செல்லாமல் போன இந்திய/அந்நிய நோட்டுக்களை எண்ணிப் பார்த்தால் அதுவே லட்ச ரூபாய்களை எட்டும். 

இது ஒரு பைசா. நான் சின்னப் பிள்ளையாய் இருந்தபோது இக்காசுக்குப் பெட்டிக்கடையில் மிட்டாய்கள் கிடைக்கும். பாக்கு மிட்டாய், தேன் மிட்டாய், பெப்பர்மிண்ட் போன்றவை. 1968 என்று பெரும்பாலான காயின்களில் அச்சடிக்கப்பட்டுள்ளது. 80 க்குப் பின் இவை வழக்கில் இல்லை என்றே சொல்லலாம். இந்தியிலும் ஆங்கிலத்திலும் ஒரு பைசா என்று அச்சடித்திருப்பார்கள். சதுரக் காயின்கள். அலுமினியத்தால் ஆனவை. 


இதன் பின்புறம் நம் தேசிய அசோகச்சின்னம்  ( மூன்று சிங்கங்கள்) பொறிக்கப்பட்டிருக்கும். 
எல்லாக் காயின்களிலும் அப்படித்தான். 
இது இரண்டு பைசா. அலுமினியத்தால் ஆனதுதான் சிறிது நெளி நெளியாய் ஓரங்கள் வடிவமைக்கப்பட்டிருக்கும். 

இந்த இரண்டு காசுக்கு கொடுக்காப்புளி, இலந்தை மிட்டாய், நவ்வாப்பழம் கிடைக்கும். இதுவும் 1968 க்குப் பின் அச்சடிக்கப்படவில்லை என்றே நினைக்கிறேன். 



இது மூன்று பைசா காயின். அறுபட்டை ஓரம், அலுமினிய உலோகம். அதே அசோகச் சின்னம் ஒரு பக்கம். இன்னொரு பக்கம் நாணயத்தின் மதிப்பு. 

இதில் சில காயின்கள் 1969 இல் அச்சடிக்கப்பட்டுள்ளன. 
ஐந்து பைசா காயின். 

நாற்சதுரம். அலுமினியம். இவை 1990  வரை அச்சடிக்கப்பட்டுள்ளன. 


இந்த ஐந்து காசுகளுக்கு ஐஸ்புரூட், கல்கோனா, கடலை அச்சு, மாங்காய் பத்தை போன்றவை கிடைக்கும். 

பசுமைப் புரட்சி, குழந்தைகள் நலன் என்று ஒரு பக்கம் இவை அச்சிடப்பட்டு இருக்கும். 


பத்துப் பைசா நாணயங்கள். இவையும் இரண்டு பைசா போல் நெளி நெளியான ஓரங்கள் கொண்டவை. இரண்டு பைசாவில் எட்டு வளைவுகள். சில சிட்டா மாதிரி ரவுண்டானவை. இதில் பன்னிரெண்டு வளைவுகள். சிலவற்றில் எட்டு வளைவுகள். இவை 2000 வரை ( 1997) வரை அச்சடிக்கப்பட்டு உள்ளன. புழக்கத்திலும் இருந்திருக்கின்றன. 


பல்வேறு கருப்பொருட்களையும் மையமாக வைத்து இந்நாணயங்களை அச்சடித்திருக்கிறார்கள். டெல்லி ஏஷியன் கேம்ஸ் 1982 என்று ஒன்று, குடும்பக் கட்டுப்பாடு, விவசாயிகள் நலன், ஹேப்பி சைல்ட் நேஷன்ஸ் ப்ரைட்  (மகிழ்ச்சியான குழந்தை தேசத்தின் பெருமை) , கிராமப்புறப் பெண்களின் நலன் என்று பல்வேறு கருத்துக்களுடன் இவை வெளியாகி உள்ளன. 

இந்தப் பத்துப் பைசா, இருபது பைசாவுக்கு ஐஸ் புரூட், குச்சி ஐஸ், பால் ஐஸ், சேமியா ஐஸ் போன்றவை கிடைக்கும் :)


இதுவும் அலுமினிய உலோகத்தால் அச்சடிக்கப்பட்டது. ஏறத்தாழ 2000 வரை புழக்கத்தில் இருந்திருக்கிறது. 


இதிலும் மீன்பிடித்துறை வளர்ச்சி, உலக உணவு தினம் ஆகியவை அச்சடிக்கப்பட்டுள்ளன. 


25 பைசா நாணயம். ஓரணா என்றால் ஆறேகால் பைசா, நாலணா என்றால் 25 பைசா. இதுவும் சுதந்திரத்துக்கு முன்னிருந்து 2015 ஆம்  ஆண்டுகள் வரை ஓரளவு புழக்கத்தில் இருந்துள்ளது.

இதற்குக் கடலை மிட்டாய் பாக்கெட்டே கிடைக்கும். :) அலாய் மெட்டலில் அல்லது சில்வரில் அச்சடிக்கப்பட்ட கனமான நாணயம். 


டெல்லியில் நடைபெற்ற ஒன்பதாவது ஏஷியன் கேம்ஸ், கிராமப்புற பெண்களின் வளர்ச்சி, தேசிய விலங்கான காண்டாமிருகத்தைப் பாதுகாத்தல் என அச்சடிக்கப்பட்டுள்ளது. 

மொத்தத்தில் ஒரு நாட்டின் ஸ்டாம்புகளும், நாணயங்களும் அந்நாட்டின் பெருந்தலைகள், முக்கிய விஷயங்கள், முன்னேற்றங்கள், உயர்வுகள், நிகழ்வுகளைக் கௌரவிக்கும் வண்ணம் வெளியிடப்பட்டுள்ளன. ஜெய் ஹிந்த்! வந்தே மாதரம் !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...