எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 17 ஆகஸ்ட், 2023

முதல் கனவே.. முதல் கனவே.. மறுபடி ஏன் வந்தாய்

 முதல் கனவே.. முதல் கனவே.. மறுபடி ஏன் வந்தாய்

ஸ்வர்யா கருத்தரிப்பு நிலையத்தில் அமர்ந்திருந்தார்கள் தேவியும் சாமும். திருமணமாகி ஐந்தாண்டாகிவிட்டதே பிள்ளைப் பூச்சி ஏதும் வைக்கலியா என உறவினர்கள் கேள்வி மேல் கேள்வி எழுப்ப சாமின் அம்மா இருவரையும் செக்கப் செய்யச் சொல்லித் தொணத்திருந்தார்.

இன்னும் நான்கு பேர் கன்சல்டேஷனுக்குக் காத்திருந்தார்கள். அவர்களுக்குப் பின் தான் இவர்களது டோக்கன் என்பதால் டாக்டருக்காகக் காத்திருந்த நேரத்தில் இருவரும் எதிரே இருந்த தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். டிஸ்கவரி சேனலில் ப்ளாட்டிபஸ்கள் நீந்திக்கொண்டிருந்தன. முட்டையிட்டுப்  பால் கொடுக்கும் இனம் என்று சொல்லிக்கொண்டிருக்கும்போது நர்ஸ் டாக்டரைப் பார்க்க அழைத்தாள்.

”ரெண்டு பேருக்கும் பிபி, சுகர், எதுவும் இல்லை. மன்த்லி எஸ்ட்ரஸ் ஸைக்கிள் கொஞ்சம் அன் ஈவன். ஸ்பெர்ம் கவுண்ட்ஸ் ஓகே . பட் தேவியோட கரு முட்டை வளர்ச்சி பார்க்கணும். உள்ளே டக்ட்ஸ் இருக்கான்னும் செக்கப் செய்யணும். ஒரு அப்டாமன் ஸ்கேன் பண்ணிப் பார்த்துடலாம்” என்று சொன்னார் டாக்டர் ஐஸ்வர்யா.

காரை ஓட்டிச் செல்லும்போது ஓடிய ஆடியோ பாடல்களிலோ, தேவியின் பேச்சுக்களிலோ மனம் செல்லவில்லை சாமுக்கு. எதுவும் காதில் விழுந்தும் விழாத நிலையில் ஓட்டிக் கொண்டிருந்தான். மனமெங்கும் இன்னொன்று சுழன்று கொண்டிருந்தது.

லாபுக்குப் பக்கமாக இருந்தது அந்த ஹாஸ்பிட்டலின் காண்டீன். ஒவ்வொரு பேஷண்டுகளுக்கும் நியூட்ரீஷனல் வேல்யூ பார்த்து சார்ட்படி உணவு தயாரித்து தட்டுகளில் அடுக்கி கவர் செய்து கொண்டிருந்தார்கள், தலையிலும் கைகளிலும் கவர் போட்டிருந்த பெண்கள். சாப்பாட்டின் மணம் கலவையாய் பசியைத் தூண்டியது. ஒரு டீயாவது சாப்பிடலாமா. வேண்டாம் ரிசல்டைக் கேட்ட பின்பு சாப்பிடுவோம் எனத் திரும்பி லாபுக்கு நடந்தான் சாம்.

வேகவேகமாகச் சென்று திரும்பும்போது பூப்பந்து போல ஒரு பெண்மணி மீது மோதி மீண்டான் சாம். ”சாரி.. சாரிங்க.” என்று பதறியபடி விழுந்த ரிசல்ட் ஃபைலை எடுத்து நிமிர்ந்த போது கையிலிருந்து உருண்ட பிஸ்கட் பாக்கெட்டை எடுத்த அவளும் ”சாரி நானும் பார்க்கலை” என்றாள்.

அட.. இது இது.. மஹாராணில்ல.. கொஞ்சம் பூசி மெருகேறி புஷ்டியாக இருந்தாள். கல்லூரி வனப்பை விட மிடுக்கான அவள் தோற்றம் அவன் விழிகளை விரியச் செய்திருந்தது. பந்தயக் குதிரை போலிருந்தவள் பாந்தமான குதிரை போல ஆகியிருந்தாள். “நீங்க மஹாராணிதானே “ என்று தயங்கியபடி கேட்டான்.

”ஆமா நீங்க ஸாமா” என்றாள் அவளும் விழிகளை விரித்தபடி. கல்லூரியில் பார்த்ததற்கும் இப்போதைக்கும் என்ன வித்யாசம். ’அப்பக் கொஞ்சம் ரவுடி மாதிரி இருப்பான்’ என மனதுக்குள் சிரித்தவளுக்கு அந்த ஃப்ரேம்லெஸ் ஆட்டோ கூலிங் கண்ணாடியும் கிருதாவும் மீசையும் ஆகிருதியும், பர்சனாலிட்டியும் சந்தனக் கலர் சட்டையிலிருந்து அடித்த ப்ளேபாய் செண்டின் வாசமும் லேசாக மயக்கத்தை உண்டாக்கியது.

”ஆமா. அட கண்டுபிடிச்சிட்டீங்க பஞ்சு மிட்டாய்” என்றான் குறும்பாக, அன்று அவள் அணிந்திருந்த பேபி பிங்க் கலர் சுடிதாரைப் பார்த்தபடி. பழைய கோபம் எல்லாம் இல்லாமல் அவளும் குறும்பாகப் புன்னகைத்தாள். ”அப்புறம் எப்பிடி இருக்கீங்க பிரசிடெண்ட் ”என்றாள் அவளும் குறும்பாக.

கல்லூரி எலக்‌ஷன் நடந்தபோது யதேச்சையாக இவளின் கிண்டலில் அகப்பட்டு அவளைக் கவர்ந்தே தீரவேண்டும் என்று தீவிரமாக சவால் எல்லாம் விட்டுப் போட்டியிட்டு வென்றது ஞாபகம் வந்தது.  முதல் கனவே முதல் கனவே மறுபடி ஏன் வந்தாய் ..இனிப்பான சிந்தனைகள் ஓடின முகமெங்கும்.

”காலேஜ் எலக்‌ஷன் நடக்குது. இங்கே பாரு ஒரு கும்பல் கடல ஒடச்சிட்டு இருக்குது. யார் எப்பிடிப்போனா என்ன. யாரோ வந்து நமக்கு எல்லாத்தையும் செய்வாங்க. நாம கடல ஒடச்சிட்டே என்ஜாய் பண்ணலாம்” என்று இவன் கூட்டத்தைப் பார்த்துத் தோழியிடம் கிண்டலடித்தபடி காரிடாரைக் கடந்தாள் மஹாராணி. 

இளரத்தம் துள்ளியது அவனுக்கு. ஹாஸ்டலிலும் கல்லூரியிலும் மாணவர்களுக்கு என்னென்ன தேவைகள் இருக்கின்றன. எவை முக்கியமானவை என ஒரு டீம் செட் செய்து கேட்டறிந்து தன்னையும் தன் குழுவினரையும் செலக்ட் செய்தால் இன்னின்ன கோரிக்கைகளை அமல்படுத்துவோம் என்று மேடையேறி முழங்கினான். புலியைப் போலக் கோபத்தில் உறுமினான் என்றே சொல்லலாம். ஏன் பிட் நோட்டீஸில் அடித்தே கொடுத்தான். தான் பிரசிடெண்டாக வந்து இதை எல்லாம் சாதிக்காவிட்டால் எல்லாவற்றையும் சாட்சி வைத்து ஏன் செய்யவில்லை எனக் கேட்கலாமென.

வெற்றி சுளுவானது. பதவியேற்பு அன்று மாணவர்கள் அவனைத் தோள்களில் சுமந்து கல்லூரியைச் சுற்றிக் கோஷமிட்டபடி வந்து லாபியில் இறக்கினார்கள். அதன் பின் ஒரு வருடம் கல்லூரியின் எல்லாத் தேவைகளும் மளமளவென நிறைவேறின.

”பைசாவாலா பாபு கா பேட்டா” என்று காண்டீன் பக்கத்தில் சாட் கடை வைத்திருக்கும் பபிதாம்மாகூட சாட் வாங்கக் கொடுக்கும் நோட்டுக்களை வாங்கித் தலையைச் சுற்றித் திருஷ்டி கழித்ததுண்டு. அதைவிட ஆயிரம் மடங்கு பைசா அதிகமாகிவிட்டதுதான் ஆனால் குழந்தை வரம். ஹ்ம்ம் யோசித்தபடி..

”நல்லா இருக்கேன். நீங்க.” என்றான். ”இப்போ என்ன பண்றீங்க. இங்கே ஏன் ”என்பது போலப் பார்த்தபடி.

”மெடிசின் வாலண்டியரா சர்வீஸ் செய்றேன். சிலப்போ கரு முட்டை தானமும் கூட “ என்றாள். 

”கல்யாணம்..” என்றான். ”ஆச்சு. அவர் ஒரு லாயர். இப்போ பிரிஞ்சிட்டோம். “ என்றோள் சுருக்கமாக. முகம் இறுகிவிட்டது. ஏண்டா கேட்டோம் என்று இருந்தது அவனுக்கு.

சரி பின்னர் பார்ப்போம் என்று கார்டைக் கொடுத்துவிட்டு அவள் ஃபோன் நம்பரை வாங்கிக் கொண்டு பிரிந்து நடந்தான். கூடவே ஒரு குழந்தை வாசமும் தொற்றிக் கொண்டது போல் இருந்தது மேனியெங்கும்.

காரை வளைவில் திருப்பி வீட்டுக்குள் ஓட்டி நீளமாக வந்து நிறுத்தியவன் தேவயானியை நிமிர்ந்து பார்த்தான். ”எப்படிச் சொல்வேன் இவளுக்கு அந்த விஷயத்தை” என்பது போலிருந்தது பார்வை. கூர்மையாகும் மனைவியின் பார்வையில் தப்பிக்க வேண்டி ஓடி வந்த டாமியை அணைத்துக் கொண்டான்.

என்ன உங்க மேலே லேடீஸ் செண்ட் வாசனை அடிக்குது நான் யூஸ் பண்றதில்லை சானல் செண்ட். என்னோடது ஔத் செண்ட் ”என்றாள். இல்ல காண்டீனுக்குப் பக்கத்தில் திரும்பும்போது ஒரு பெண் மேலே லேசா இடிச்சிட்டேன் என்று சமாளித்தான்.

இதற்கே கோபிக்கும் இவளிடம் எப்படிச் சொல்வது டாக்டர் தனிப்பட்டுக் கூப்பிட்டுச் சொன்ன விஷயங்களை.. தீர்வென்னவென சிந்தித்தவாறு மாடிப்படிகளில் டாமியைத் தூக்கியவாறு ஏறினான். வழக்கமாக அதைப் புல்வெளியில் ஓடவிட்டு விளையாடியபின் செல்லும் கணவனை யோசனையாகப் பார்த்தபடி பின் தொடந்தாள் தேவயானி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...