எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 24 ஆகஸ்ட், 2023

யுத்தம் செய் சேரன்

 யுத்தம் செய் சேரன்


”நானே தொலைந்த கதை நானறியேன் கண்மணியே””,”மனசுக்குள்ளே காதல் வந்தல்லோ”, “இருவிழியோ இறகடிக்கும் இமைகளிலே வெடி வெடிக்கும்” இந்தப் பாடல்களை முணுமுணுக்காதவர் இருக்க முடியாது. “ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போர்க்களமே” என்ற தன்னம்பிக்கைப் பாடல்கள் இவர் படங்களில் சிறந்த அம்சம்.

முதலில் இயக்குநராக ஆகி அதன் பின் நடிகரானவர்களில் இவரும் ஒருவர். வெள்ளலூரின் சலூனில் முடிவெட்டியபின் அப்போதைய இளைஞர்களின் ரோல்மாடல் நடிகரான கமலைப் போலத் தலையை வாரி வாரிச் சீவிக் கண்ணாடியில் பார்த்து ரசித்ததையும், பதின்பருவத்தில் கண்ட மேலூரின் இளம்பெண்களை ஏதென்ஸ் நகரத்துத் தேவதைகள் போல் உலா வருவார்கள் எனச் சிலாகித்தும், முறைப்பெண்ணான செல்வராணியைச் சந்திக்க ஒரு கூடை மல்லிகைப்பூவை வாங்கிச் சென்றதையும் விகடனில் வெளியான இவரின் கட்டுரைகள் அழகாகச் சித்தரித்தன.

புரியாத புதிரில் உதவி இயக்குநராக வேலை பார்த்த போது அல்லும் பகலும் ஸ்டூடியோவிலேயே உட்கார்ந்து திரைப்பணியில் ஈடுபடும் இயக்குநர் ரவிக்குமாரை ”ராத்திரி பகல்னு பார்க்காமப் பேண்ட் சட்டை போட்ட பேய் பிசாசுபோல் வேலை பார்ப்பார்” என ரசனையோடு குறிப்பிட்டு இருந்தார் அத்தொடரில். சேரன்,பாண்டியனிலிருந்து நாட்டாமை வரை அவரிடம் பணிபுரிந்தார். கமலஹாசனின் மகாநதியிலும் உதவி இயக்குநராகப் பணிபுரிந்துள்ளார்.

சேரன் பிறந்தது 12 டிசம்பர் 1965 ஆம் ஆண்டு மேலுருக்கு அருகிலுள்ள கொழிஞ்சிப்பட்டி. இவருடைய தந்தை பாண்டியன், தாய் கமலா, இரு தங்கைகள் உண்டு. இவரது தந்தை வெள்ளலூர் சினிமா தியேட்டரில் ஆப்பரேட்டராகப் பணிபுரிந்தார். தாய் தொடக்கப் பள்ளி ஆசிரியை. சிறு வயதிலேயே ஊர்த் திருவிழாக்களில் நாடகங்களில் நடித்து இருக்கிறார். தனது 32 ஆம் வயதில் பாரதி கண்ணம்மா என்ற தன் முதல் படத்தை இயக்கினார். தனது 37 ஆம் வயதில் சொல்ல மறந்த கதை மூலம் முதன் முதலாகக் கதாநாயகனாக அறிமுகம். 30 படங்களை இயக்கியும் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தும் இருக்கிறார்.

சேரன் சிறந்த இயக்குநர் மட்டுமல்ல. நல்ல நடிகரும் கூட இவர் இயக்கிய வெற்றிக் கொடி கட்டு, ஆட்டோகிராஃப், தவமாய்த் தவமிருந்து ஆகியன தேசியத் திரைப்பட விருதுகள் பெற்றன. இவர் இயக்கிய மற்ற படங்கள் பாரதி கண்ணம்மா, பொற்காலம், தேசிய கீதம், அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது, ஆடும் கூத்து, பாண்டவர்பூமி. இதில் ”தோழா தோழா தோள் கொடு கொஞ்சம் சாஞ்சுக்கணும்” என்ற பாடல் இனிமை.

சொல்ல மறந்த கதை, பொக்கிஷம் , முரண் , ராமன் தேடிய சீதை, திருமணம், யுத்தம் செய், ஆட்டோகிராஃப், தவமாய்த் தவமிருந்து, பிரிவோம் சந்திப்போம், மாயக் கண்ணாடி ஆகியவற்றிலும் நடித்துள்ளார். தங்கர் பச்சான், மிஷ்கின் ஆகியோர் டைரக்‌ஷனில் நடித்துள்ளார்.

அவரது தவமாய் தவமிருந்து., ஆட்டோகிராஃப்., பொற்காலம்., பிரிவோம் சந்திப்போம், யுத்தம் செய் படங்களுக்கு ரசிகை நான்.  இவர் இயக்கிய படங்களில் பாரதி கண்ணம்மா காதலுக்கு ஜாதி மதம் ஏழை பணக்காரன் தெரியாது எனக் கூறியது. பொற்காலம் ஊமைத் தங்கைக்கு உள்ளூர் மாப்பிள்ளையை விட்டு விட்டு வெளியூர் மாப்பிள்ளைக்கு அதிக வரதட்சணை கொடுத்தாவது திருமணம் செய்ய எண்ணும் அண்ணனின் மனப்போக்கைச் சித்தரித்தது. வெற்றிக் கொடி கட்டு வெளிநாட்டு வேலை மோகத்தை விளாசியது.

ஆட்டோகிராஃபில் மூன்று நாயகியர். கோபிகா மாளவிகா சிநேகா, ஆனால் இவர் கடைசியி கனிஹாவை மணப்பார். இவரது படங்களில் பாடல்கள் தன்னம்பிக்கை ப்ளஸ். “ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே” ஒரு எடுத்துக்காட்டு. இவருடைய படங்கள் எளிய மத்தியதரக் குடும்பத்தின் பிரச்சனைகளையும், குடும்ப உறவுகளின் சிக்கல்களையும், சமூக அவலங்களையும் சித்தரித்தன. அதே சமயம் மனித உறவுகளின் உன்னதங்களையும் மேன்மையையும் நற்குணங்களையும் போதித்தன.


நடுத்தர வர்க்கப் பெற்றோர்களையும் பிள்ளைகளையும் அவர்களது எதிர்பார்ப்பு, ஏமாற்றம், பாடுகள், வாழ்க்கைமுறை ஆகியவற்றைக் காட்சிப்படுத்திய படம் தவமாய்த் தவமிருந்து. இதில் சேரனுக்கும் பத்மப்ரியாவுக்கும் கெமிஸ்ட்ரி நன்கு வொர்க் அவுட் ஆயிருக்கும். செட்டிநாட்டு வாழ்வியலைச் சொல்லிய படம் பிரிவோம் சந்திப்போம். அதில் நடேசனும் சாலாவுமாக வாழ்ந்திருப்பார்கள் சேரனும் சிநேகாவும். ஆனால் இம்மூன்று படங்களிலும் சிறிது மிகை நடிப்பு இருக்கும். ஆனால் யுத்தம் செய் பர்ஃபெக்டான படம்.

சென்னை லாமிகிளில் எங்கள் முகநூல் நட்பு வட்டத்தின் முதல் சந்திப்பு நிகழ்ந்தது. அதில் நண்பர்களின் அன்பு அழைப்புக்கிணங்க இந்த வி ஐ பி வந்திருந்தார். அதற்கு முன்பே என் முகநூல் வலைத்தளப் பகிர்வுகளில் ஆச்சியின் தீபாவளிப் பலகாரங்கள் அட்டகாசம் என்று கருத்துரை நல்கியிருந்தார். நல்ல படங்களின் மூலமே அறிந்திருந்த மிகவும் எளிமையான இந்த மனிதரைச் சந்திப்போமென்று நினைக்கவேயில்லை. அனைவருடனும் உரையாடிப் புகைப்படம் எடுத்துக் கொண்டார் நண்பர் இயக்குநர் சேரன். அதன்பின்னும் சிலமுறை நட்புவட்டங்களிலும் விசேஷங்களிலும் சந்தித்திருக்கிறோம்.

அடுத்த முறை அபிபுல்லா ரோட்டில் உள்ள இவரது அலுவலகத்துக்கு மலேஷியாவிலிருந்து வந்திருந்த ராஜிகிருஷ் அக்காவுடன் சென்று சந்தித்தோம். கிட்டத்தட்ட 15 பேர் முகநூல் நண்பர்கள், தோழிகள் பி ஆர் மத்ஸ்யாவில் அக்காவுக்கு வெல்கம் லஞ்ச் கொடுத்தவுடன் இவரைப் பார்க்கச் சென்றோம். இயற்கைச் சாளர முறையில் அமைந்த கட்டிடம். மேல் மாடியில் அலுவலகம். கீழே உதவியாளர்கள் காஸ்ட்யூம்களை அடுக்கிக் கொண்டிருந்தார்கள். முகமலர்ச்சியுடன் வரவேற்ற அவர் எங்கள் அனைவருடனும் நின்று புகைப்படத்துக்குப் போஸ் கொடுத்தார். புன்னகை தவழும் முகத்தோடு எங்களின் எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லி காஃபி வாங்கிவரச் செய்து அனைவருக்கும் தன் கையாலேயே கொடுத்தார். நட்புக்கு மரியாதை..!!!

அதன் பின் சென்னை சிட்டி ஐநாக்ஸில். யுத்தம் செய் திரைப்படத்தினை முகநூல் நண்பர்களுக்கான ஃப்ரீ ஷோவாக வழங்கினார். ஒரு தாய் தன் குழந்தைக்கு கொடுமை இழைக்கப்பட்ட போது மிரண்டு எழுந்து மிரட்டியதுதான் யுத்தம் செய்.. நிச்சயம் எல்லாருமே செய்ய வேண்டிய யுத்தம்தான்.. அதை மிக அழுத்தமாக மிஷ்கினும் சேரனும் சொல்லி இருக்கிறார்கள். சேரனின் படம் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு பரிணாமம் இருக்கும். ஆனால் எல்லாவற்றிலும் மூலாதாரமாய் பாசக்கார அண்ணன்., தம்பி., போன்ற ஒரு தோற்றம் இருக்கும். இந்தப் படத்திலும் அதே.. ஆனால் இன்னும் அழுத்தமான கம்பீரமான சேரனைப் படைத்திருக்கிறார் மிஷ்கின்.

சேரனின் உதவியாளர்களாக தீப்தி ஷா., சங்கர் நன்றாக பெர்ஃபார்ம் செய்திருக்கிறார்கள்.. சிபிசிஐடி ஆஃபீசராக., சேரன் அசத்தல்.. ரொம்ப கம்பீரமும் கனமும் பொருந்திய பாத்திரம்.. மிகவும் சுளுவாக நடித்து சேரன் ஸ்கோர் செய்கிறார்.. எதையும் சரியாக செய்ய முடியாத மத்தியதரவர்க்கத்து மனிதனாகவும்., விடாமுயற்சியோடும் நேர்மையோடும் செய்யத் துடிக்கும் போலீஸ் அதிகாரியாகவும் சிறப்பாக செய்திருக்கிறார் சேரன். நீதி கேட்டு யுத்தம் செய்யுங்கள் ஜெயிப்பீர்கள் என்ற செய்தியோடு. அற்புதம்.

படம் முடிவில் நாங்கள் அனைவரும் விரும்பி அளித்த தொகை ஹெச் ஐ வியால் பாதிக்கப்பட்டவர்களின்  குழந்தைகள் இல்லத்துக்கு அளிக்கப்பட்டது. இதிலும் மனிதநேயம் மிக்கவர் எங்கள் நண்பர் சேரன் என்ற பெருமிதத்தோடும் ஒரு நல்ல படம் பார்த்த திருப்தியும்., ஒரு நல்ல செயலில் பங்குபெற்ற மனநிறைவும் கிடைத்தது. அந்தக் குழந்தைகளின் இல்லம் சென்று அவர்களோடு அளவளாவி பக்கத்தில் அமர்ந்து உணவு உண்டு  மகிழ்வித்துத் திரும்பியுள்ளார். அப்போதுதான் உணர்ந்தேன் அந்த நடிகருக்குள் ஒரு உயர்ந்த மனிதன் இருப்பதை. ஒரு நடிகர் நண்பராவதில் உள்ள பெருமையைவிட மனிதநேயமிக்க  மனிதனின் தோழியாக அறியப்படுவதில் பெருமையுறுகிறேன் நான்.

அதன் பின் யுத்தம் செய் ப்ரமோவுக்காக சத்யம் தியேட்டரின் மாடியில் சேரன், மிஷ்கின், டாக்டர் ஷர்மிலி, இயக்குநர் நந்தினி, ஈவண்ட் மேனேஜர் கயல்விழி, எடிட்டர் ஐஸ்வர்யா ராகவ் ஆகியோருடன் எழுத்தாளராக நானும் அழைக்கப்பட்டிருந்தேன். அப்போதெல்லாம் பத்ரிக்கைகளுக்கு இணையம் கிடையாது. முகநூலும் அவ்வளவு பிரபலமாகவில்லை. எனவே வலைப்பதிவு விமர்சனங்களே ஒரு படத்தின் வீச்சைத் தீர்மானித்தன. ஒரு இயக்குநரான நீங்க மிஷ்கின் டைரக்ஷனில் எப்படி உணர்ந்தீங்க என்று கேட்டபோது சேரன் தான் தன்னை டைரக்டரிடம் ஒரு நடிகராக ஒப்புக் கொடுத்ததாக சொன்னார்.. தான் ஒரு டைரக்டர் என்ற நினைப்புடன் செயல்படவில்லை.. நடிகராக மட்டுமே கொடுத்த பாத்திரத்தை நிறைவா செய்தேன் என்றார்.! தன் படப் பாடல் போல் தானும் தன்னை வனையக் கொடுத்த பொம்மை எனக் கூறியது சிம்ப்ளி சூப்பர்ப்.

இவர் படப்பாடல்களை நாம் மட்டும் ரசிக்கவில்லை, உலகத் தமிழர்கள் அனைவருமே ரசிக்கிறார்கள் என்பது சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் எஸ் ஆர் நாதன் அவர்களின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியின் போது தெரிந்தது. தனது இறப்புக்கு முன் திரு நாதன் தஞ்சாவூரு மண்ணு எடுத்து என்ற பாடல் தன் இறுதி நிகழ்ச்சியில் ஒலிபரப்பப்படவேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்கிணங்க ஒலிபரப்பப்பட்டது !. இது சேரனுக்கு மட்டுமல்ல. தமிழுக்கும் தமிழ் மண்ணுக்கும் கிடைத்த பெருமை.!

3 கருத்துகள்:

  1. அருமை. நல்ல இயக்குநர். அவர் படங்கள் எல்லாமே டீசண்டாக இருக்கும். அவர் உங்கள் நண்பர் என்பது மகிழ்ச்சி

    கீதா

    பதிலளிநீக்கு
  2. நன்றி கீத்ஸ்.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்!!

    பதிலளிநீக்கு
  3. நன்றி கீத்ஸ்.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்!!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...