சிக்கனம் பழகுவோம்
கொள்ளைநோய் கொரானா பரவிவரும் காரணத்தால் ஏற்படும் பொருளாதார வீழ்ச்சியைச்
சரிக்கட்ட நிறுவனங்கள் ஆட்குறைப்பு, வேலைக்குறைப்பு, சம்பளக் குறைப்பு
செய்துவருகின்றன. இந்தச் சூழ்நிலையில் கொரோனாவோடு பழகி வாழக் கற்றுக்கொண்ட நமக்கு
சிக்கனம் பழகுவது கஷ்டமா என்ன. தேவையற்றவைகளை வாங்கிக் குவித்தால் தேவையானவைகளை
விற்க நேரிடும் என்கிறார் உலகின் மாபெரும் பணக்காரரான வாரன் பஃபே. வாங்கும்
சம்பளத்தில் செலவுபோக மிஞ்சியதை மட்டுமே சேமிப்பதென்று இருக்காமல் குறிப்பிட்ட
தொகையை சேமிப்பில் போட்டுவிட்டு மிச்சத்தையே செலவழிக்க வேண்டும் எனவும்
சொல்கிறார்.
சிக்கனம் என்றால் என்ன? செலவே செய்யாமல் இருப்பதா சிக்கனம். இல்லை.
அநாவசியச் செலவுகளைக் குறைப்பது, ஆடம்பரச் செலவுகளைத் தவிர்ப்பது இவைதான் சிக்கனம். தனிமனித சிக்கனம் வீட்டை மட்டுமல்ல நாட்டையும்
மேம்படுத்தும். பொருட்கள் விலை உயர்வதையும் அந்நியச் செலாவணி உயர்வதையும்
உள்நாட்டுப் பணவீக்கத்தையுமே சிக்கனம் கட்டுப்படுத்தும்.
சிங்கப்பூரின் பொருளாதாரம் உயர்ந்ததற்குக் காரணமே சிக்கனமும் சேமிப்பும்தான். ஏனெனில் கிராஸ் டொமஸ்டிக் ரேட் – மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் பார்க்கும்போது சிங்கப்பூர் மக்களின் சேமிப்பு குறிப்பிடத்தக்க அளவு உயர்ந்துள்ளதாக சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழகத்தின் பொருளாதார நிபுணர் BY TOH MUN HUNG சொல்கிறார்.
பன்னாட்டு நிறுவனங்களின் பரிசோதனைக்கூடமாக ஆகிவிட்டது இந்தியா.பொருளை வாங்கிக் குவித்தால் சந்தோஷம் சிலருக்கு. சாப்பிடுகின்றோமோ இல்லையோ தேவைக்கு மேலே கை நிறையத் தின்பண்டங்களை அள்ளிக்கொண்டு வர்றது. அதில் பாதிக்கு மேலே ( வீட்ல சுகர், பிரஷர், தைராய்டு பார்டிங்க பெருகிட்டாங்க ) உங்காம திங்காமக் கெட்டுப் போய்த் தூக்கிப் போடுவதால் என்ன பயன்.
அலமாரி நிறையச் சேலையும் உடைகளும், வீடு நிறையப் பொருட்களும் வைத்திருந்தா
அவங்க பணக்காரங்க என்ற மாயையான மதிப்பீடு இன்றும் இருக்கு. இந்தக் கொரோனா
காலத்தில் நைட்டியையும் லுங்கியையும் தவிர வேறு எதையும் யாரும் அணியவில்லை.
இப்போது அலமாரியைத் திறந்து பார்த்தால் அதில் இருக்கும் 200 புடவைகளும் 25 பட்டுப்
புடவைகளும் உடுத்தாமல் கொள்ளாமல் முடங்கிப்போய்க் கிடக்கும் பணத்தின்
வடிவாயிருக்கின்றன.
’எங்களால முடியும், முடி இருக்கும் சீமாட்டி கொண்டையும் போடுவா அள்ளியும்
முடிஞ்சுக்குவா’ என்று அளவற்ற ஆசையுடன் பொருட்களைத் தேவையில்லாம வாங்கி அடுக்கி
வைத்து அழகு பார்ப்பதும் ஃபேஷன் போனபிறகு அதைத் தூக்கி யாரிடமாவது கொடுப்பதும்தான்
நடக்குது.
இளம் குழந்தைகளுக்குப் பேசுவதற்கான கைபேசி மட்டுமே போதும். அவங்களுக்கு
மதிப்பு தெரியாத விலையுயர்ந்த கைபேசியைக் கொடுத்து இணைய இணைப்பின் மூலம் பல்வேறு
கெடுதல்களும் வர வாய்ப்பாகுது. அதனால் குழந்தைகளுக்கு சிக்கனத்தைக் கற்பிப்பதோடு
காசின் அருமையும் உழைப்பின் அருமையும் சொல்லிக் கொடுக்க வேண்டும். ஆடம்பரத் திருமணங்கள்,
புதுமனை புகுதல் நடத்துவதால் தனிப்பட்ட கடன், பண அட்டைக் கடன், பற்று அட்டைக் கடன்
என்பவை கடனுக்கு மேல் கடன்படுதலுக்கு இட்டுச் செல்லும்.
அத்யாவசியத்துக்கு வாங்கவேண்டும். அதை விட்டுவிட்டு புதிய உருப்படின்னு
வணிக முத்திரைக்காக வாங்குவது, விளம்பரமோகம் கொடுக்கும் அழுத்தத்தால் போலியாக
இருந்தாலும் பொருட்களை வாங்கிக் குவிப்பது, அக்கம்பக்கத்து வீட்டில் இருப்பதால்
நம்மிடமும் இருக்கணும்னு அநாவசியமா வாங்குறது, காசு இருக்கேன்னு சும்மா வாங்கிப்
போடுறது, எப்பவாவது தேவைப்படும்னு நினைச்சு வாங்குறது, தேவை இல்லாவிட்டாலும்
பெருமைக்காக வாங்குவது இவற்றோடு அதை வாங்கி வைச்சிக்கிட்டா நாம் ஏதோ உயர்ந்த ஒன்றை
அடைஞ்ச திருப்தியை மாயையாகக் கொடுப்பதால் வாங்குவது என அநாவசியத்துக்குப் பொருளைச்
சேர்க்கிறோம் நாம்.. ஆன்லைன் விற்பனையால் பொருட்களை வாங்கும் மோகம் அதிகரிக்குது.
படத்துல பார்க்க நல்லா இருப்பது வந்து சேர்ந்தா தரமற்ற பொருளா இருக்கும்.
அடுத்தவங்களை விட நாங்க வித்யாசமானவங்க அல்லது ஒரு படி மேலானவங்க
அப்பிடின்னு காட்ட விலையுயர்ந்த பொருட்களை வாங்கிக் குவிப்பது சிலரின் பழக்கம்.
ஒருவர் வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டு அவர்களை மற்றவர்கள்
மதிப்பிடுவதால்தான் இந்த வாங்கும் மோகம் அதிகரிக்குது. அதிலும் விலையுயர்ந்த கார்,
குளிர்பதனப்பெட்டி, துவைக்கும் இயந்திரம்,பாத்திரம் கழுவும் இயந்திரம், தூசி
உறிஞ்சி, நவீனத் தொழில்நுட்பத்துடன் கூடிய தொலைக்காட்சி, கைபேசி எனப் பொருள்
அதிகமா இருக்க இருக்க அவங்க பெரிய பணக்காரங்க என்ற மிரட்சியை உண்டாக்கி
தற்பெருமைப்பட்டுக் கொள்வது சிலரின் வழக்கம்.
மகிழ்ச்சியை அவங்க இந்த மாதிரிக் கடைகளில் வாங்கிடலாம்னு நினைச்சிட்டு
இருக்காங்க. உண்மையில் மகிழ்ச்சி எளியபொருட்களை வீணாகாமல் பயன்படுத்துவதிலும்
இருக்கு. சுதேசிப் பொருட்களை வாங்குங்கன்னு அரசாங்கம் படிச்சுப் படிச்சுச்
சொல்லுது. நாம என்ன பண்றோம் சர்வதேச நிறுவனங்களின் விலை உயர்ந்த பொருட்களில்தான்
தரம் இருக்குன்னு நினைச்சு வாங்குறோம். இதை வாங்கப் பண அட்டை, கடன் அட்டை
பயன்படுத்துறோம். இதனால் கடன் வேற ஏறுது. இந்த அட்டைகளுக்கு உரிய பணத்தை உரிய
நாளில் கட்டாவிட்டால் வட்டியும் தண்டப் பணமும் வேறு அழவேண்டி இருக்கும். இதே போல்
சிறு வியாபாரிகளின் கடைகளை விடுத்துப் பேரங்காடிகளில்தான் நல்ல பொருள்
கிடைக்கும்னு நினைக்கிறோம்.
முன்பு கடலை எண்ணெய் உபயோகித்தோம். அதுல கொழுப்பு இருக்குன்னு
சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்க்கு மாறினோம். இப்பிடி எல்லாம் விளம்பரத்துல திரும்பத்
திரும்பச் சொல்லி நம்ம மனதை நம்ப வைக்கிறாங்க. ஒரு முப்பது வருஷமா, பாக்கெட் பால்,
எண்ணெய், உப்பு ஆகியவற்றில் அவங்க ஆதிக்கத்தை செலுத்தி நம்முடைய ஆரோக்கியத்தில்
விளையாடி வருகின்றன பன்னாட்டு நிறுவனங்கள். நாமும் கொழுப்பு நீக்கப்பட்ட பால்,
சிவப்பு நிற அடையாளமிடப்பட்ட எண்ணெய் இதயத்துக்கு நல்லது, அயோடின் உப்பு
தைராய்டுக்கு நல்லதுன்னு நம்பி வாங்கிக்கிட்டு உடல்நலத்தைச் சீரழிச்சிக்கிட்டோம்.
இது பற்றிய விழிப்புணர்வுகள் இப்போதான் ஏற்பட்டுக்கிட்டு வருது. நம்ம பாரம்பரியப்
பொருளுக்கே மாறிட்டு வர்றோம். இது நல்ல மாற்றம்தான்.
அக் 30 உலக சிக்கன தினம். சிக்கனமே சிறந்த சேமிப்பு என்பதை நாம்
மறந்துவிடக் கூடாது. ’வரவு எட்டணா, செலவு பத்தணா’, ’வருமுன் காவாதவன் வாழ்க்கை
எரிமுன் வைத்தூறு போலக் கெடும்’. இந்தச் சொலவடைகளை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
சரி சிக்கனம் என்பது பணத்தைச் செலவழிக்காமல் இருப்பதில் மட்டும்தானா,
கிடைத்தற்கரிய இயற்கை வளம், தண்ணீர், எரிபொருள், உணவுப்பொருள், மின்சாரம்
ஆகியவற்றையும் சிக்கனமாகச் செலவிடல் வேண்டும். தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தியும்
மழைநீரைச் சேமித்தும் வந்தால் வருங்காலத் தலைமுறை கடல்நீரிலிருந்து தண்ணீர்
எடுக்கும் அவதிக்கு ஆளாகாது. பொதுமக்கள் உபயோகப்படுத்தும் போக்குவரத்து
சாதனங்களைப் பயன்படுத்தினால் காசு மிச்சமாவதோடு காற்றும் எச்சமாகாது.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. பால் மளிகை காய்கள் கனிகள் தவிர
இந்தக் கொரோனா காலத்தில் வேறு எதுக்குமே மதிப்பும் தேவையும் இல்லாமல் போயிடுச்சு.
எனவே நீங்க சிக்கனமா இருப்பதோடு தேசமும் கடன் படாமலிருக்க ஒவ்வொரு காசையும்
ஆராய்ந்து செலவு செய்யுங்கள்.


சிறப்பான கட்டுரை. இந்தச் சூழ்நிலை நிறையவே பாடங்களைக் கற்றுக் கொடுக்கிறதுதான்.
பதிலளிநீக்குதுளசிதரன்
கீதா
// கிடைத்தற்கரிய இயற்கை வளம், தண்ணீர், எரிபொருள், உணவுப்பொருள், மின்சாரம் ஆகியவற்றையும் சிக்கனமாகச் செலவிடல் வேண்டும். //
பதிலளிநீக்குசிறப்பு...
ஆம் துளசி சகோ
பதிலளிநீக்குநன்றி டிடி சகோ
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!