எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 12 ஆகஸ்ட், 2019

பிரம்ம ராட்சசனை மனிதனாக்கிய இசை. தினமலர் சிறுவர்மலர் - 29.


சொன்ன சொல்லைக் காப்பாற்றியவன்/ பிரம்ம ராட்சசனை மனிதனாக்கிய இசை.

சொன்ன சொல்லைக் காப்பாற்ற உயிரைக் கூடக் கொடுப்பார்கள் சிலர், ஆனால் இறைவனைப் பாடிய பாடல்களின் பலனைக் கொடுக்கமாட்டார்கள். அதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தான் நம்பாடுவான் என்ற மனிதன். அவனது கதையைப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
திருக்குறுங்குடி என்றொரு ஊருக்கருகே ஒரு கிராமத்தில் வசித்து வந்தான் நம்பாடுவான் என்றொரு மனிதன். அவன் தினமும் அதிகாலையில் எழுந்து காலைக்கடன்கள் முடித்து திருக்குறுங்குடிப் பெருமானை நியம நிஷ்டைப்படி வணங்கி வந்தான். கைசிகம் என்ற பண் இசையால் அவன் தினமும் இறைவனைப் பாடித் துதித்து வந்தான்.
தினமும் அவன் கோயிலுக்குச் செல்வதை ஒரு பிரம்ம ராட்சசன் கவனித்து வந்தான். ஒரு நாள் நம்பாடுவான் கோயிலுக்குச் செல்லும் போது வழியில் ஒரு பெரிய உருவம் தோன்றித் தடுத்தது. அதுதான் அந்த பிரம்ம ராட்சசன். பூமிக்கு வானுக்கும் இடையே கருத்த உருவத்தில் பிரம்மாண்டமாக இருந்த  அந்த பிரம்ம ராட்சசன் நம்பாடுவானைப் பிடித்து வைத்துக் கொண்டான்.
”ஐயோ பசிக்கிறதே.. நீ எனக்கு இப்போதே உணவாக வேண்டும் “ என்று அலறியவாறு தன் கரியகைகளால் நம்பாடுவானைப் பிடித்து வாயின் அருகில் கொண்டு சென்றான் பிரம்ம ராட்சசன். அதைக் கண்டும் பயப்படாமல் நம்பாடுவன் “ ஹே ராட்சசா , சிறிது நேரம் பொறு . நான் பெருமானை வழிபட்டு வந்தபின் உனக்கு உணவாகிறேன் “ என்றான்.

இதை பிரம்ம ராட்சசன் நம்பவில்லை. கையில் கிடைத்த உணவை விடுவதா. நம்பாடுவான்,” பிரம்ம ராட்சசா.  சத்தியமாக வந்துவிடுவேன் இப்போது விடு” என்றான். அப்போதும் பிரம்மராட்சசன் தன் பிடியை இறுக்கியதால் “ நான் திரும்பி உன்னிடம் வராவிட்டால் பெருமானுக்கீடாக வேறொரு தெய்வத்தை எவன் துதிப்பானோ அவன் அடையும் துர்க்கதியை நான் அடைவேன், இது சத்தியம். என்னை விடு “ என்றான்.
இதைக்கேட்ட பிரம்ம ராட்சசன் நம்பாடுவானை விட்டு விட்டான். ” சரி சரி சீக்கிரம் வந்துவிடு. எனக்கு அகோரப் பசி. நான் இங்கேயே இந்த வழியிலேயே காத்திருப்பேன். மறந்துவிடாதே. சீக்கிரம் வா” என அனுப்பினான். நம்பாடுவானும் கோவிலுக்குச் சென்று பெருமானைப் பல்விதமாகத் துதித்து வணங்கினான்.  வழக்கம்போல் தன் இனிமையான கைசிகப் பண் இசையால் அவன் இறைவனைப் பாடினான்.
அதன் பின் அவன் பிரம்ம ராட்சசன் இருக்கும் வழியே வீடு திரும்பத் தொடங்கினான். அப்போது நம்பிக் கிழவன் என்றொருவன் அந்தப் பாதையில் வந்தான். அவன் நம்பாடுவானைத் தடுத்து “ நீ இவ்வழியே போகாதே. அந்த ராட்சசன் உன்னைப் பிடித்து விழுங்கி விடுவான். நீ வேறு வழியே செல் “ எனக் கூறினான்.
ஆனால் நம்பாடுவானோ சொன்ன சொல்லைக் காப்பாற்றுபவன். நேர்மை தவறாதவன். எனவே பிரம்ம ராட்சசன் இருந்த வழியிலேயே வீட்டுக்குச் சென்றான். அங்கே பிரம்ம ராட்சசன் நம்பாடுவனை எதிர்பார்த்து வழிமேல் விழிவைத்துக் காத்திருந்தான்.
” ஆகா. இதோ வந்துவிட்டது என் உணவு. அஹோய் நம்பாடுவா. உன் நேர்மையைப் பாராட்டுகிறேன். நீ இறைவனைப் புகழ்ந்து பாடிய பாடல்களின் பலனை மட்டும் எனக்குக் கொடுத்துவிடு. நான் உன்னை விட்டு விடுகிறேன்.” என்றான்.
நம்பாடுவானோ, “ஹேய் பிரம்ம ராட்சசா, நீ கூறியபடி நான் வந்துவிட்டேன். உனக்கு உணவாக எடுத்துக் கொள். ஆனால் நான் பெருமானைப் பாடிய பாடல்களின் பலனை மட்டும் தரமாட்டேன் “
”கொஞ்சம் கொடுக்க மாட்டியா.?”
”கொஞ்சமும் கொடுக்க மாட்டேன்.”
உடனே பிரம்மராட்சசன் கண்களில் கண்ணீர். “ நம்பாடுவானே நீ பெருமானைப் பாடிய பாடல்களில் கால் பங்குப் பலனையாவது எனக்குக் கொடு. எனக்கு இந்த ராட்சச ஜென்மத்தில் இருந்து விடுதலை கொடு “
உடனே இரக்கம் துளிர்க்க பிரம்ம ராட்சசனின் கண்ணீரைத் துடைத்து அணைத்துக் கொண்டான் நம்பாடுவான் “ ஆமாம் நீ யார்? ஏன் பிரம்ம ராட்சசன் ஆனாய் ?”
உடனே பிரம்ம ராட்சசன் தன் கதையைக் கூறினான். ” என் பெயர் சோம சர்மன். நான் ஒரு வேள்வியைத் தவறான முறையில் செய்துவிட்டேன். அது நிறைவேறுவதற்குள் இறந்ததனால் அந்தப் பாவம் பீடித்துப் பிரம்ம ராட்சசனானேன். இங்கே உன்னைத் தினமும் தரிசித்ததால் எனக்கு முன் ஜென்ம ஞாபகம் வந்தது.”
மனம் இரக்கமுற்ற நம்பாடுவான் தான் பெருமானை கைசிகம் என்ற பண் இசையால் பாடிய பலன்களை எல்லாம் பிரம்ம ராட்சசனுக்குத் தாரை வார்த்துக் கொடுக்க பிரம்ம ராட்சசன் தன் சுய உருவம் பெற்று சோம சர்மன் ஆனான்.
நம்பிக் கிழவன் தடுத்தும் சொன்ன சொல்லைக் காப்பாற்ற ராட்சசனுக்கு உணவாகச் சென்ற நம்பாடுவானின் துணிவு பாராட்டத்தக்கது. அதனினும் தன் கைசிகப் பண் இசையால் பாடிய தெய்வீகப் பலனை எல்லாம் பிரம்ம ராட்சசனுக்காகத் தாரை வார்த்து அவன் சுய உருவம் திரும்பக் கிடைக்க வைத்த நம்பாடுவானது தியாகமும் போற்றத்தக்கதுதானே குழந்தைகளே.  

டிஸ்கி 1 :-  இந்தக் கதை இதிகாச புராணக் கதைகள் என்ற தலைப்பில் 9. 8. 2019  தினமலர் சிறுவர்மலர் இதழில் இடம்பெற்றுள்ளது. நன்றி தினமலர் சிறுவர் மலர், தனது அழகான ஓவியங்களால் கதைக்கு எழில்கூட்டும் ஓவியர் ரஜனி & எடிட்டர் தேவராஜன் ஷண்முகம் சார்.

1 கருத்து:


  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...