எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 28 ஜூன், 2019

மதுரையில் "மஞ்சளும் குங்குமமும்" வெளியீடு.

மதுரை தானம் அறக்கட்டளையின் நமது மண்வாசத்தின் ஐந்தாம் ஆண்டு ஆரம்ப விழாவில் எனது பத்தாவது நூலான ”மஞ்சளும் குங்குமமும் ”வெளியிடப்பட்டது.

பெண்கள் சுய உதவிக் குழுக்களின் தலைவி திருமதி சாந்தி மதுரேசன் அவர்கள் வெளியிட பிரபல வழக்கறிஞர் திருமதி செல்வகோமதி அவர்கள் பெற்றுக்  கொண்டார்கள்.

இக்கட்டுரைகள் நமது மண்வாசம் இதழில் சென்ற இரு ஆண்டுகளாக வெளிவந்தவை. மரபும் அறிவியலும் என்ற தலைப்பில் எழுதித்தாருங்கள் என நமது மண்வாசம் ஆசிரியர் திரு.ப. திருமலை அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க இவற்றை எழுதினேன்.

தானம் அறக்கட்டளையின் பட்டறிவு பதிப்பகம் மூலமே இக்கட்டுரைகள் தொகுத்து நூலாக்கம் செய்யப்பட்டது. ஜூன் 10, 2019 திங்களன்று தானம் அறக்கட்டளையின் அலுவலகக் கட்டிடத்தில் கான்ஃபரன்ஸ் ஹாலிலேயே வெளியிட்டு சிறப்பிக்கப்பட்டது. அன்பும் நன்றியும் திரு ப திருமலை சார், தானம் அறக்கட்டளை., & நமது மண்வாசம்.

பத்தாவது நூல் “ மஞ்சளும் குங்குமமும் “


ஆரம்பவிழாவுக்கு வந்திருந்த பெண்மக்கள். சந்தனம் குங்குமம்  ரோஜாப்பூவோடு வழக்கம்போல் நமது மண்வாசம் வழங்கும் கிஃப்ட் ஹாம்பர்களோடு விழா மங்கலகரமாக ஆரம்பித்தது. ( ஒவ்வொருவருக்கும் ஜூஸ், தண்ணீர் பாட்டில், விசிறி, நமது மண்வாசம், வெண்ணிற துவாலை, வழங்கப்பட்டிருந்தது சிறப்பு )



முன் இரு வரிசைகளில் பேராசிரியர்களும் பெருமக்களும் அமர்ந்திருக்க பின் வரிசைகளில் சுய உதவிக் குழுவின் பெண் தலைவிகளும் பெண் மக்களும் அமர்ந்திருந்தார்கள். பத்து மணிக்கு ஆரம்பித்து மதியம் ஒரு மணி வரை கட்டுக்கோப்புடன் நடந்தேறியது விழா.


சிறப்பு விருந்தினர்கள் குத்து விளக்கேற்றியபின்,

பெண்கள் குழுத் தலைவிகள், ஆண்கள் குழு தலைவர்கள், இளம்பெண்கள் குழு ரெப்ரசெண்டேட்டிவ்ஸ், நமது மண்வாசத்தில் பங்களிப்புச் செய்து வரும் ஆண் & பெண் எழுத்தாளர்கள் குத்துவிளக்கேற்ற வரச்சொல்லிக்  கௌரவிக்கப்பட்டார்கள்.

இவர் முகநூல் நண்பர் என நினைக்கிறேன். ( ரவி )

நூல் வெளியீடு. விழா சிறப்பு விருந்தினர் ஒவ்வொருவருக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. அதில் பங்களிப்பு செய்துவரும் பலருக்கும் தனித்தனியாகப் பரிசுகள் வழங்கப்பட்டன.




பழநிச்சாமி என்பவர் அனைவரையும் வரவேற்று அறநெறி மேம்பாடு குறித்து பேசினார். குழுப்பாடல் பாடப்பட்டது. விழாவுக்கு வந்திருந்த மகளிர் அனைவருமே அதன் பின் விழாவை ஆரம்பிக்கக் குத்துவிளக்கு ஏற்றுதல்.

ஆசிரியர் ப திருமலை அவர்களின் வரவேற்புரை . மதுரை காவல்துறை ஆணையரும் வந்திருந்தார். காலையில் தனது மனைவியுடன் சிறு பிணக்கு ஏற்பட்டபோது உடனே காவல்துறை அதிகாரியிடமிருந்து போன் வந்ததால் “ என்னடா இது டொமஸ்டிக் வயலன்ஸ் என்று உடனே காவல்துறை அதிகாரிக்கு நியூஸ் போய்விட்டதோ . அதனால்தான் அழைத்தாரோ “ என நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.

திரு. ம. பா. குருசாமி ஐயாவின் காந்திய சிந்தனைகள், கட்டுரைகள், எழுத்துக்கள், பணிகள் ஆகியவற்றைக் குறிப்பிட்டு அவரை சிறப்பித்தார். கட்டுரைகள் காந்திய நெறிகளோடு இருக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்து வழிநடத்துவதாகப் பாராட்டினார்.

பேராசிரியர் திரு. கு. ஞான சம்பந்தன் தன்னுடைய 30 ஆண்டு கால நண்பர் என்றும் அவருடனான நட்பு, உரிமை குறித்தும் சிலாகித்தார்.  நமது மண் வாசம் ஆரம்பநாளில் இருந்து இன்றுவரை அதன் வளர்ச்சியில் வேரோடி இருப்பதாகவும் ஒவ்வொரு மாதமும் கட்டுரையை அனுப்புவதோடு அல்லாமல் புத்தகம் வந்ததும் எந்த நாட்டில் இருந்தாலும் அதைப் படித்துவிட்டு போன் செய்து கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வார் என்றும் கூறினார். முதலாம் ஆண்டிலிருந்து எந்த நிகழ்வு இருந்தாலும் நமது மண்வாசம் என்றால் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிப்பார் , இன்று கூட மாலையில் சென்னையில் திரைப்பட ஷூட்டிங் இருந்தும் அதை ஒத்திவைத்துவிட்டு இங்கே கலந்துகொள்ள வந்துள்ளார் எனவும் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார்.

நிர்வாக இயக்குநர் திரு மா. ப. வாசிமலை அவர்களின் நிர்வாகத் திறமை குறித்துப் பேசும்போது புத்தகத்தில் இடம்பெறும் படங்கள் கூட மக்களை சிந்தனையைச் சிதறவிடாமல் அறநெறிப்படி அமையவேண்டியதன் அவசியத்தை தனக்கு எடுத்துக் காட்டியதாகக் கூறினார். எடுத்துக்காட்டாக மர்லின் மன்றோவின் புகைப்படத்தை அநேக மக்கள் புகைப்படத்தின் பொருட்டே அது என்னவென்று படிப்பார்கள் என்ற எண்ணத்தில் ஒரு  கட்டுரையில் உபயோகித்தபோது திரு வாசிமலை அவர்கள் அதைப் போடாமலே கட்டுரையின் வீர்யத்தின் பொருட்டே படிப்பார்கள் எனவே அது தேவையில்லை எனச் சொன்னதை திரு . திருமலை வெளிப்படைத் தன்மையோடு ஒப்புக்கொண்டார்.

பேராசிரியர் திரு விஜயகுமார் குறித்தும், டாக்டர் வடிவேல் முருகன் குறித்தும் அவர்களின் பத்ரிக்கைப் பணி, மருத்துவப் பணி குறித்தும் சிலாகித்துப் பேசினார்.

ஐந்து வருடங்களில் 500 புதிய எழுத்தாளர்கள், 1000 கட்டுரைகள் வரை வெளியிடப்பட்டிருப்பதாகப் புள்ளி விவரம் தெரிவித்தார். நமது மண்வாசத்துக்கான இவரது பணியைப் பேசிய அனைவருமே ஒரு மனத்தோடு பாராட்டினார்கள். குமுதம் ரிப்போர்ட்டரிலிருந்து இன்று நமது மண்வாசம் வரை தொய்யாத பத்ரிக்கைப் பணிக்குச் சொந்தக்காரரான இவரை நாமும் பாராட்டுவோம்


திரு குருசாமி அவர்கள்  தலைமையுரையில் பத்ரிக்கையின் பணிகள் பட்டியலிடப்பட்டு நமது மண்வாசம் அதை எவ்வளவு செம்மையுடன் நிறைவேற்றி மக்கள் தொண்டாற்றி வருகிறது என்பதைக் குறிப்பிட்டுப் பாராட்டினார். தொலைக்காட்சியில் பேராசிரியர் திரு ஞானசம்பந்தன் அவர்கள் வழங்கும் பொம்மியும் திருக்குறளும் என்ற நிகழ்ச்சியைத் தன் பேத்தியுடன் பார்ப்பதாகவும் அந்நிகழ்ச்சி இளைய தலைமுறையினரை வழிநடத்தும், காலத்துக்கேற்ற நல்ல நிகழ்ச்சி என்றும் பாராட்டினார்.

அடுத்துச் சிறப்புரை ஆற்றிய பேராசிரியர் திரு . கு. ஞான சம்பந்தன் அவர்கள். தொலைக்காட்சியில் நடத்தி வரும் பொம்மியும் திருக்குறளும் என்ற நிகழ்ச்சி அநேக வாசகர்களுக்குத் தெரிந்ததாய் இருந்தது. அவரே நகைச்சுவையாக திரைப்படங்களில், சீரியல்களில் தான் அடையாளம் காணப்பட்டதைவிடவும் திருக்குறள் மூலம் மூன்று வயது இரண்டு வயதுக் குழந்தைகளுக்கும் பரிச்சயமானவராக மாறியதே தனக்கு உற்சாகமளிக்கும் விஷயம் என்றார்.

திரு ப திருமலையுடனான தனது நட்புக் குறித்துப் பேசும்போது அவரே பேராசிரியராக இருந்தாலும் எந்த விஷயத்தில் சந்தேகம் ஏற்பட்டாலும் அதை திருமலை அவர்கள் தெளிவுபடுத்துவார் என்றும் அவர் ஒரு லிவிங் விக்கிபீடியா/ என்சைக்ளோபீடியா என்றும் பாராட்டினார்.

நமது மண்வாசம் வாசகர்களுடனான தொடர்பு தனக்கு நெகிழ்ச்சி அளிப்பதாகவும் அதனாலேயே எவ்வளவு முக்கியமானதாக இருந்தாலும்  மற்றைய நிகழ்வுகளை ஒத்திவைத்துவிட்டு இந்நிகழ்வில் கலந்துகொள்ள வந்ததாகவும் இன்னும் பல்லாண்டுகள் மக்கள் சேவையில் ஒளிவிடும் மண்வாசத்தோடு தானும் பங்களிப்பு செய்வேன் என உறுதி அளித்தார். .

திரு வாசிமலை அவர்கள் பேசும்போது மற்ற மாநிலங்களிலும் அந்தந்த மொழிகளில் மண்வாசம் வெளிவரப்போவதாகக் குறிப்பிட்டார். கன்னட மொழிக்கான ஆசிரியர் ஒருவரும் வந்திருந்தார். இன்னும் வாசிமலை அவர்கள் பத்ரிக்கை நெறிமுறைகள் பற்றியும் நான்கு விதமான தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்கள்.


நிகழ்ச்சிகளைத் திரு. பழனிச்சாமி அவர்கள் தொகுத்து வழங்கினார்கள். வாசகிகள் நமது மண்வாசம் பற்றிப் பகிர்தல் செய்தார்கள்.

அதில் ஒருவர் ( சென்ற வருடம் ஒரு வாசகி எனது அஞ்சரைப் பெட்டி மருந்திருக்க அலோபதி மருந்தெதற்கு என்ற கட்டுரையைப் பாராட்டினார். அதே போல் இந்த வருடம் ) கோடை விளையாட்டு பாப்பா, அதைக் கூடி விளையாடு பாப்பா என்ற என் கட்டுரை மிகப் பிடித்ததாகவும் ,அதில் குறிப்பிடப்பட்ட விளையாட்டுகள் தான் சின்ன வயதில் விளையாடியவை என்றும், இந்தக் கோடை விடுமுறை விட்டதில் இருந்து தனது பேரனுடன், செல்போன், டிவி போன்றவற்றைத் தவிர்த்துவிட்டு பல்லாங்குழி , பரமபதம், தாயக்கட்டம், பாண்டி போன்ற விளையாட்டுக்களை விளையாடி மகிழ்ந்ததாகக் கூறினார்.


ஒவ்வொருவரும் தங்கள் பகிர்வில் வாசிப்புக்குத் தம்மை அழைத்து வந்தது மண்வாசம் என்றும். அதில் தலைவர்கள் பற்றிப் படிப்போம், அரசியல் பற்றி அறிந்து கொள்கிறோம். உபயோகமான தகவல்கள், பெண்களுக்கான தகவல்கள், பெண்களைத் தாக்கும் நோய்களில் இருந்து காத்துக் கொள்வது,  இயற்கை உரங்கள், பொருளாதாரம், ஆரோக்கியம், சமூகம் , கலாச்சாரம், பாரம்பர்யம், மருத்துவம்,  சுகாதாரம், மாசுக்கட்டுப்பாடு, மதுவிலக்கு, ஆளுமை, பேரிடர் மேலாண்மை, நீர் மேலாண்மை, நீர் சேமிப்பு, இயற்கை விவசாயம், பெண்கள், சாதனைகள் இடம்பெறுவதால் தங்களுக்கு ஏற்பட்ட பயன்கள் பற்றிப் பகிர்ந்தார்கள்.



இவர்  குழுப்பாடல் பாடினார். மேலும் தமிழா தமிழா என்ற விழிப்புணர்வுப் பாடலையும் ஒருவர் பாடினார்.

தானும் தன் பிள்ளைகளும் தன்னம்பிக்கை பெற்றதாகப் பல்வேறு பெண்களும் கூறினார்கள். சிலர் மேற்படிப்புக்கும், சிலர் வேலைக்கும் சென்றதாகச் சொன்னார்கள். தானம் அறக்கட்டளை வழங்கிய பயிற்சிமூலம் விவசாயத்தில் சாதனை செய்ததை ஒருவர் பகிர்ந்திருந்தார். மாடித்தோட்டம் அமைத்துப் பயன்பெற்றதாக ஒருவர் கூறினார்.


முதலில் நமது மண்வாசம் 50 ஆவது இதழ் வெளியீடும், ( இதை ம. பா. குருசாமி ஐயா வெளியிட்டார் ) அதன் பின் காலப் பெட்டகமும் ஏப்ரல் 2018 - மே 2019 இதழ் தொகுப்பு ) வெளியிடப்பட்டது. அதன் பின் ” மஞ்சளும் குங்குமமும் “ வெளியிடப்பட்டது.




எனக்குக் காலப்பெட்டகத்தையும் காந்திய சிந்தனை கொண்ட வால் ஹேங்கிக்கையும் சுய உதவிப் பெண்கள் குழுத்தலைவி திருமதி ராஜலெட்சுமி அவர்கள் வழங்கினார்கள்.



திருமிகு தோழி  செல்வகோமதி அவர்களுடன்.



புதிய ஆசிரியனின்  இணை ஆசிரியர்  பேராசிரியர் திரு. விஜயகுமார் அவர்கள் பத்ரிக்கையைத் தொடர்ந்து நடத்துவதன் சிரமங்களைப் பட்டியலிட்டு அதை எல்லாம் மீறி நமது மண்வாசம் ஜொலிப்பதையும் பாராட்டினார்கள். ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் நமது மண்வாசம் இன்னும் பல்லாண்டு மக்கள் சேவையில் பொலிய வாழ்த்தினார்கள்.

கன்யாகுமரி அரசு மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர், மருத்துவர் டாக்டர் வடிவேல் முருகன் இந்த ஆண்டும் பெண்களுக்கான உடல் நலன் குறித்து அறிவுறுத்தினார்கள்.

உணவு, உழைப்பு, உடற்பயிற்சி ஆகியவற்றின் தேவைகள் பற்றிக் கூறி நேரத்துக்கு உணவு உண்பது குறித்தும் பெண்கள் தமக்கான நேரத்தை ஒதுக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் கூறினார்கள்.  மிஷின்கள் மூலம் செய்யும் வீட்டு வேலை எல்லாம் உடற்பயிற்சியில் சேராது எனவும் பட்டியலிட்டார்கள்.

இந்தியர்களின் ( ஜெனடிக்ஸ் ) உடலமைப்பு படியே சர்க்கரை நோய் வரும் வாய்ப்பு அதிகம் இருப்பதாகக் கூறினார் இவர். அதிகரித்து வரும் சர்க்கரை நோயை கர்ப்பத்திலிருந்தே கவனம் எடுத்துப் பார்க்க வேண்டும் என்றும் டைப் 1 , டைப் 2 சர்க்கரை நோய்கள் பற்றியும் வந்தபின் எக்சர்ஸைஸ், மருந்து உணவுக் கட்டுப்பாடு ஒன்றே வழி என்றும். எதையும் வருமுன் காப்பதே சிறந்தது என்றும்  தெளிவுறுத்தினார்கள். சர்க்கரை நோயால் காலில் ஏற்படும் புண் ஆறாததற்கு அங்கே ரத்த ஓட்டம் இல்லாததே காரணம் என்றும் கூறினார். வழக்கம் போல் இவரது பேச்சு உபயோகமாவும் அருமையாகவும் இருந்தது.

விழிப்புணர்வுப் பாடல். “ தமிழா நீ பேசுவது தமிழா “

பட்டறிவு பதிப்பகத்தின் முதன்மை நிர்வாகி திரு. வீ. வெங்கடேசன் அவர்கள் நன்றியுரை நவில விழா இனிது நிறைவுற்றது.

வயலகம், களஞ்சியம் போன்றவையும் நமது மண்வாசம் அலுவலகத்தோடு இருக்கின்றன.

இது கீழே உள்ள வரவேற்பரை ஹால். இங்கே காந்தியடிகளும் ஐவகை நிலங்களும் புகைப்படங்களில் நம்மை வரவேற்கிறார்கள்.

விழா இனிது முடிந்ததும் தேசிய கீதம் பாடப்பட்டது. அதன் பின் வெஜ் பிரியாணி, தயிர்சாதம், சப்பாத்தி, ஆம்லெட், சாதம் , ரசம் குருமா சிப்ஸ், ஜிலேபி ஆகியவற்றோடு சிறப்பான மதிய விருந்தும் கிடைத்தது.

மஞ்சள் குங்குமத்தைச் சுமந்துகொண்டு என் இரு நூல்கள் வெளியிட்ட இந்த ஆலயத்தை வணங்கி நன்றி கூறி வந்தேன்.

முகப்பில் காந்தியடிகளோடு காட்சி அளிக்கும் தானம் அறக்கட்டளையின் நமது மண்வாசம் அலுவலகம். இங்கே 100 க்கும் மேற்பட்டோர் பணிபுரிகிறார்கள். நான்கு மாடி  கட்டிடம்.

மூன்றாண்டுகள் என்னை அழைத்துச் சிறப்பித்த தானம் அறக்கட்டளைக்கும், நமது மண்வாசத்துக்கும் பத்ரிக்கையாளர், நமது மண்வாசத்தின் ஆசிரியர் திரு. ப. திருமலை அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். 

4 கருத்துகள்:

  1. நன்றி ஜட்ஜ்மெண்ட் சிவா

    நன்றி ஜெயக்குமார் சகோ

    நன்றி வெங்கட் சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...