எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 24 ஜூலை, 2018

உருவுகண்டு எள்ளாமை வேண்டும்./அகந்தையை அழித்த உபேந்திரன். தினமலர் சிறுவர்மலர் - 26.


உருவுகண்டு எள்ளாமை வேண்டும்./அகந்தையை அழித்த உபேந்திரன்.


ர்மதை நதியின் கரை. அங்கே அஸ்வமேத யாகங்கள் ஒன்றல்ல. இரண்டல்ல.. நூறு யாகங்கள் ஒருங்கே நடைபெற்றுக் கொண்டிருந்தன. இந்திர பதவியை அடைந்தபின்னும் அதைத் தக்கவைத்துக் கொள்ள மஹாபலி மன்னன் இந்த ஹோமங்களை நடத்திக் கொண்டிருந்தான்.

அசுரகுல மன்னன் ஆனாலும் மஹாபலி அறநெறி தவறாதவன். பிரஹலாதனுடைய பேரன். தன்னால் எதுவும் முடியும் என்ற எண்ணம் கொண்டவன். சகல சம்பத்துகளும் கொண்ட அமராவதிப் பட்டணம் மஹாபலி மன்னனின் வசமாகிவிட்டது.  இந்திரனும் தேவர்களும் இந்திரபுரியைவிட்டு மறைவிடம் தேடித் தஞ்சம் புகுந்தார்கள்.

ஹோம சமித்துக்கள் மலைபோல் குவிக்கப்பட்டிருந்தன. அவிர்பாகங்களை அந்த அந்த தேவதைகள் பிரத்யட்சமாகி வாங்கிக் கொண்டார்கள். பூக்களும் பூஜா திரவியங்களுமாக மணத்துக் கொண்டிருந்தது அந்த இடம். ஹோம குண்டங்களில் இருந்து ஹோமப் புகை சூரியனைத் தொடுவது போல எங்கெங்கும்உயர்ந்து கொண்டிருந்தது.

அசுர குல குரு சுக்கிராச்சாரியாரின் மேற்பார்வையில் ஒவ்வொரு யாக குண்டத்திலும் பட்டும் பீதாம்பரமும் கொப்பரையும் வாசனைப் பொருட்களும் பூமாலைகளும் மணக்கப் பூர்ணாகுதி நடைபெற்றுக் கொண்டிருந்தது. பூர்ணாகுதி முடிந்ததும் யாசிப்பவர்களுக்கு வேண்டிய பொன்னும் பொருளும் கொடுத்து மஹாபலி அவர்களின் ஆசி பெறுவான்.

ந்த ஹோமசாலையை நோக்கி ஒரு சின்னஞ்சிறுவர் வந்துகொண்டிருந்தார். நெருங்கும்போது பார்த்தால் தெரிகிறது அவர் சிறுவரல்ல. இளைஞன்தான். தேவர்களின் தாய் அதிதிக்கும், கச்யப முனிவருக்கும் பிறந்தவர்.. அவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் வாமனன். உபேந்திரன் என்றும் அழைப்பார்கள்.

மாந்தளிர் நிறம். இடையிலே அரையாடை,  மார்பிலே முப்புரி நூல், ஒரு கையில் கமண்டலம், இன்னொரு கையில் மரக்குடை தாங்கிய குள்ள உருவம். கால்களில் பாதரட்சை ஒலிக்க அந்த பிரம்மச்சாரி இளைஞன் ஹோமங்கள் நிகழ்ந்த இடத்தை நோக்கி வந்தார்.

அவர் வந்ததும் ஏற்கனவே ஹோம குண்டங்களின் அக்னியால் ஒளிவிட்டுக் கொண்டிருந்த யாக சாலை  சூரியனே உதித்ததுபோல் இன்னும் அதிகமாக ஒளிவிடத் துவங்கியது. எல்லா அந்தணர்களையும் வரவேற்றுப் பாத பூஜை செய்து பொருள் அளிப்பது போல் இவரையும் வரவேற்று உபசரித்தான் மன்னன் மஹாபலி.  

”தேவரீர். ஹோமங்கள் முடிவுறும் நிலையில் இங்கு எழுந்தருளி இருக்கிறீர்கள். நீங்கள் எதைக் கேட்டாலும் நான் தருவேன். தங்களுக்குப் பிரியமானதைக் கேளுங்கள். “ என்றார் மஹாபலிச் சக்கரவர்த்தி.

பக்கத்திலே குலகுரு சுக்கிராச்சாரியார் நின்றிருந்தார். அவருக்கு ஏனோ இந்த குள்ளமான இளைஞனைப் பிடிக்கவேயில்லை. ஏதும் குழப்பம் நிகழ்த்த வந்திருக்கிறானோ என்று ஐயம் ஏற்பட்டது. அதனால் மன்னன் மஹாபலியின் அருகிலேயே இருந்தார் அவர்.

“மன்னா, வாக்குக் கொடுக்கும் முன் யோசித்துக் கொடுங்கள்” என்று தடுக்கப் பார்த்தார் குலகுரு சுக்கிராச்சாரியார். ஆனால் அதற்குள் மன்னன் வாக்களித்துவிட்டாரே என் செய்வது ?

”யாசிப்பவர் கேட்பதைக் கொடுப்பதாகக் கூறும் அரசே நான் யாசிப்பதைக் கொடுப்பாயா ? அப்புறம் பேச்சு மாறக்கூடாது” என்று உறுதி சொல்லும்படிக் கேட்கிறார் அந்த வாமனன்.

’குள்ளமான இந்த மனிதன் மஹா சக்கரவர்த்தியான தன்னிடம் என்ன கேட்கப் போகிறான்? அப்படிக் கேட்டும் தன்னால் கொடுக்க முடியாத பொருள் இருக்கிறதா என்ன.? எதைக் கேட்டாலும் கொடுக்கக் கொடுக்கக் குறையாத தான்யக் கருவூலமும், நிதிக் கருவூலமும் சாம்ராஜ்யமும் தன்னிடம் இருக்கிறதே’ என்ற மமதையான எண்ணம் திடீரென மன்னனை ஆட்டிப் படைத்தது.  

”எனக்கு மூன்றடி நிலம் வேண்டும். அதுவும் என் பாதங்களால் மூன்றடி அளந்து கொடுத்தால் போதும். “  

” என்னது மூன்றடி நிலமா. ? “ மன்னனுக்கு வியப்பை அடக்க முடியவில்லை. மனதுக்குள் வாமனனின் உருவைக் கண்டு சிரிப்பு பொங்குகிறது. எள்ளல் ஏற்படுகிறது. இருந்தாலும் மறைத்துக் கொண்டு., “ சுவாமி, தாங்கள் தவம் செய்யத் தோதாகத் தபோவனங்களை என்னால் வழங்க முடியும். தாங்கள் வேண்டியதைப் பெற்றுக் கொள்ளுங்கள்” என்கிறான்.

“இல்லை என் காலடியால் மூன்றடி நிலமே போதும்” என்கிறான் அந்த இளைஞன்.

சுக்கிராச்சாரியாருக்கோ அந்தக் குள்ள இளைஞனைப் பார்த்தால் கோபம் பற்றிக் கொண்டு வருகிறது. ஏதேனும் சூழ்ச்சித் திட்டத்துடன் யாக சாலைக்கு இவன் வந்திருக்கிறானோ. இவன் நரனோ, நாரணனோ என்ற ஐயம் உதிக்கிறது. அவர் ஞானக் கண்ணுக்கு அவன் நாரணனாகவே காட்சி அளிக்கிறான். மன்னனை இந்த இக்கட்டிலிருந்து எப்படியாவது காப்பாற்ற வேண்டுமே என அவனது குலகுருவான அவர் உள்ளம் துடிக்கிறது.

”மன்னா ஜாக்கிரதை. வந்திருப்பவன் சாதாரணப்பட்டவன் அல்ல. நூற்றுக் கணக்கான ஹோமம் நடக்குமிடம் வந்து சக்கரவர்த்தியிடம் மூன்றடி நிலம் மட்டும் யாசிப்பவன் சாதாரண நரன் அல்ல. நாராயணன் போல் எனக்குத் தோன்றுகிறான். “ என்று எச்சரித்தும் மன்னன் கேட்கவில்லை.

குள்ளமான இவன் காலால் மூன்றடி இடம் என்றால் மிகச் சிறிய இடம்தானே கொடுக்கவேண்டும் என்று வாமனனிடம் “ நீங்கள் கேட்ட மூன்றடி நிலத்தை அளிக்கிறேன்” என்று வாக்குத்தத்தம் செய்துவிடுகிறான்.

மஹாபலி தன் மனைவி விந்தியாவளியை அழைத்து வாமனனுக்கு உபசாரங்கள் செய்து தானமளிக்கத் தயாராகிறான். தன் சொல்பேச்சுக் கேட்காத மன்னனை இக்கட்டிலிருந்து காப்பாற்ற சுக்ராச்சாரியார் ஒரு வண்டின் உருவம் எடுத்து கெண்டிச் சொம்பில் நீர் வரும் பாதையை அடைத்து விடுகிறார்.

கெண்டிச் செம்பை அசைத்துப் பார்த்தும் நீர் வரவில்லை. அமர்ந்திருக்கும் வாமனனுக்கு சுக்ராச்சாரியாரின் திட்டம் இது என எல்லாம் புரிகிறது. உடனே அவன் ஒரு தர்ப்பைப் புல்லை எடுத்து கெண்டிச் செம்பின் நீர் வரும் பாதையைத் தூர்க்க அது அங்கே வண்டு ரூபத்தில் இருக்கும் சுக்ராச்சாரியாரின் கண்ணில் குத்துகிறது. அவர் உடனடியாக செம்பின் துவாரத்தைவிட்டுப் பறந்து சுய உருவம் எடுத்துக் காயம்பட்ட கண்களைப் பிடித்தபடி அமர்கிறார்.

அதற்குள் மன்னன் தன் மனைவியுடன் நீரை வார்த்துத் தாரை வார்த்துவிட்டான். அஹா இதென்ன அந்தக் குள்ளச் சிறுவன் விசுவரூபம் எடுக்கிறான்.  கண்ணுக்குள் அடங்காத மாபெரும் உருவம் விண்ணுக்கும் மண்ணுக்குமான உரு கண்டு மஹாபலியின் கண்கள் விரிகின்றன. குள்ளன் என்று எண்ணினோமே இவன் விசுவரூபமெடுத்து இருக்கிறானே என்று வியப்பாகப் பார்க்கிறான்.

விசுவரூபம் எடுத்த வாமனன் மஹாபலி கொடுத்த மண்ணைத் தன் ஒரு அடியால் அளக்கிறான். இன்னொரு அடியால் விண்ணை அளக்கிறான்.

“மூன்றடி நிலம் தருகிறேன் என்றாயே மன்னா. இரண்டடி தானே இருக்கிறது. மூன்றாவது அடி நிலம் எங்கே” என்று வினவ மன்னனுக்குத் தன் தவறு புரிகிறது.  என்ன செய்வதென்று புரியவில்லை. உடன் தன் சிரசைக் காட்டி” இதோ இங்கே”  என்கிறான்.

உபேந்திரனான வாமனன் தன் மூன்றாவது அடியை மன்னன் சிரசில் வைக்க மஹாபலி மன்னனின் அகந்தை அழிகிறது.  

டிஸ்கி:-  இந்தக் கதை இதிகாச புராணக் கதைகள் என்ற தலைப்பில் 6. 7. 2018  தினமலர் சிறுவர்மலர் இதழில் இடம்பெற்றுள்ளது. நன்றி தினமலர் சிறுவர் மலர் & தேவராஜன் ஷண்முகம் சார்.

4 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...