எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 31 ஜூலை, 2018

சிகப்பி இல்லத்தில் சில பாடல்கள்.

 ஆ.. காரைக்குடியிலா முதியோர் இல்லமா. அதுவும் நகரத்தார் குடும்பங்களிலா என்று திகைக்க வேண்டாம். இன்று பல்வேறு காரணங்களை ஒப்பு நோக்கும்போது முதியவர்கள் தங்க இவை பாதுகாப்பானவையாகவே எனக்குத் தோன்றுகிறது. இங்கே தங்குபவர்கள் மாதாந்திரக் கட்டணம் கட்டி மிகுந்த வசதியோடேயே தங்குகிறார்கள்.. ஹோம் அவே ஃப்ரம் ஹோம். பட் இட்ஸ் அ ஹோம்.. 

பெரிய வீடுகளில் தனித்தனியாகத் தங்கி வந்த பெரியவர்கள் பாதுகாப்புக் காரணங்கள் மற்றும் தனிமை கருதி இங்கே தங்கி இருக்கிறார்கள். வசதியானவர்கள். ஒரு மகன், ஒரு மகள் உள்ள பெற்றோர், அல்லது பிள்ளை இல்லாதவர்கள், கணவன் அல்லது மனைவி இழந்தவர்கள் இவர்களுக்கு கிட்டத்தட்ட 60 வயதில் இருந்தே உடல்நலக் கோளாறுகள் ஆரம்பித்து விடுவதால் எல்லா வேலைகளையும் முன்போல் தனக்குச் செய்து கொள்ள முடிவதில்லை. முக்கியமாக மூன்று வேளையும் சுடச் சுட சமையல்.

அலுவலுக்குச் செல்லும் மகன் மருமகளுடன் இருந்து அவர்கள் சமைத்துத் தருவதைச் சாப்பிட்டு ஒருவேளை பிடிக்காமல் வேறு செய்தால் அதற்கும் மனஸ்தாபப்பட்டுக் கொண்டிருக்காமல் இங்கே சூடாகக் கிடைப்பதை உண்ணலாம். மேலும் இவ்வயதில் ஓடியாடும் பேரன் பேத்தியரைக் கவனித்துக் கொள்வது என்பது சிறிது சிரமமே. வெளிநாட்டில் வசிக்கும் பிள்ளைகள் இவர்களைக் கொண்டுபோய் வைத்துப் பார்த்துக் கொள்வதில் ஏற்படும் சிரமங்களும் இவர்கள் இங்கே வரக்காரணம். 
எல்லாவற்றையும் விட முக்கியக் காரணம் இவர்கள் பிள்ளைகளுக்கும் சீக்கிரமே இக்காலத்தில் முதுமை வந்துவிடுவதுதான். பார்க்க இளையராய் இருந்தாலும் அநேகரின் பிள்ளைகள் 60 வயதை எட்டிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் உடல் உபாதைகளோடு இவர்களையும் கவனித்துக் கொள்ளுதல் சிரமமானதாகவே இருக்கலாம். 
இங்கே 60 வயதில் இருந்து 80 வயது வரை உள்ள பெரியவர்களைச் சேர்த்துக் கொள்கிறார்கள். 

இங்கே 20 பெரியவர்கள் தங்கி இருக்கிறார்கள். வேலை செய்பவர்கள் 18 பேர் இருக்கிறார்கள். வருடம் ஒருமுறை பதினைந்து நாள் பராமரிப்புப் பணிக்காக மூடப்படுகிறது. 


இங்கேயே அவர்களுக்குத் தேவையான காய்கனிகளை விளைவிக்கிறார்கள். ஃபார்ம் ஹவுஸ் போல் உள்ளது. க்ரீன் நெட் போட்டு மாடித்தோட்டம் போல் கீரைத்தோட்டம் போட்டு இருப்பது பார்த்தேன். 

இப்படி ஒவ்வொரு செடியின் அடியிலும் தேங்காய் மட்டைகளைப் போட்டு இருப்பது அழகூட்டி இருந்தது . இது நீரை சேமிப்பதோடு செடிகளுக்கும் நல்ல உரம் ( கோகனட் பித் - தென்னை நார் உரம் சத்துமிக்கது. )

அனைவரும் அமைதியாக அமர்ந்திருந்தார்கள். மெல்ல நடந்து உணவருந்த வந்தார்கள். அங்கே துபாய் நகரத்தார் சங்கத்தின் சார்பில் ( எனது சகோதரன் மெய்யப்பன் சபாரெத்தினம் இந்த ஆண்டு துபாய் நகரத்தார் சங்கத்தின் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கிறார். )  சிறிது நேரம் தெய்வீகப்பாடல்கள் பாடினோம். அதன் பின் அவர்களுடன் உணவருந்தினோம். 

பெரியவர்களுக்கு ஏற்றாற்போல் சமைத்திருந்தார்கள். நான்கு பெண்கள் சமையலில் ஈடுபடுகிறார்கள். சாதம் கத்திரி முருங்கை சாம்பார், ரசம், சௌ சௌ கூட்டு, உருளை பொரியல், அப்பளம் ஜவ்வரிசி சேமியா பாயாசம். எல்லாருக்கும் சைவ உணவுதான்.  எங்கும் சுத்தமாக இருந்தது மிகப்பெரிய ப்ளஸ் பாயிண்ட்.  


சிகப்பி இல்லம் செட்டிநாட்டரசர் எம் ஏ எம் அவர்களின் மனைவி சிகப்பி அவர்களின் பெயரால் அவரது ஸ்வீகார புத்திரர் முத்தையா அவர்களால் நிர்மாணிக்கப்பட்டு அவரது துணைவி கீதா முத்தையாவால் நிர்வகிக்கப்படுகிறது. அங்கே மேனேஜர் பொறுப்பில் குப்பான், இராமசாமி ஆகிய இருவரும் இருக்கிறார்கள். நிர்வாகப் பொறுப்பில் லெக்ஷ்மி ஆச்சி என்பவர் இருக்கிறார்கள். கனிவான முகத்தோடு புன்னகைக்கும் ஆச்சி தன் உடல் உபாதைகளையும் மீறி இச்சேவையில் ஈடுபட்டு வருவது மெச்சத்தக்கது. 

மூன்று வேளையும் உணவருந்த மெயின் ஹாலுக்கு நடந்துதான் செல்லவேண்டும். இவர்கள் ஆரோக்யத்தைப் பேண ஒரு மருத்துவ அறையும் 24 மணி நேர பணியில் ஒரு செவிலியும் இருக்கிறார். மேலும் அவ்வப்போது பிஸியோதெரஃபிஸ்டுகள் வந்து சின்ன சின்ன எக்ஸர்சைஸ்களைச் சொல்லித்தருகிறார்கள். யோகாவும் கற்பிக்கப்படுகிறது.


இருவர் தங்கும் அறைகள் வாடகை & சாப்பாடு, மெடிக்கல் ஹெல்த் செக்கப்,உட்பட ஒருவருக்கு மாதம் 6000/- ரூபாய். மிக விசாலமான அறைகள், பாத்ரூம்கள். இருவர் தங்கும் இன்னும் பெரிய அறைகள் குளிர்சாதன வசதியுடன் இருக்கின்றன அவற்றுக்கு மாதம் ஒன்பதினாயிரம் ரூபாய் கட்டணம். அதில் ஒருவர் மட்டுமே தங்க வேண்டும் என்றால் கட்டணம் 14,000./-.  கணவன் மனைவியாக ஒரு ஜோடி அங்கே தங்கி இருக்கிறார்கள். 
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர். முதியவர்களுக்கான சக்கர நாற்காலி வசதி உண்டு .
துணி துவைத்து உலர்த்த தனி இடங்கள் உள்ளன. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ( RO WATER ) ஒவ்வொரு கட்டிடத்திலும் வழங்கப்படுகிறது. ஜெனரேட்டர், லைப்ரரி, லாண்ட்ரி சர்வீஸ்,  தொலைக்காட்சி உள்ளது. பொது பூஜை அறையும் உள்ளது. அங்கே தெய்வத் திரு உருவங்கள் அருள் பாலிக்கிறார்கள். துதிப்பாடல்கள் புத்தகங்கள் உள்ளன. 
வாக்கிங் போவதற்கு ஏற்றாற்போல நடைபாதைகள். திறந்தவெளி முற்றம் அழகு. பக்கத்தில் இருக்கும் பிள்ளையார்பட்டி, ஞான சரஸ்வதி, லெக்ஷ்மி குபேரன் கோயில்களுக்கு விருப்பமிருப்பவர்களை அவ்வப்போது அழைத்துச் செல்கிறார்கள். 
அங்கங்கே அழகு ஓவியங்கள் கலை நயத்தோடு வைக்கப்பட்டுள்ளன. யார் வரைந்தது என்று தெரியவில்லை. அவருக்கு ஒரு பாராட்டு.
சங்கடஹர சதுர்த்தி பூஜை, சிவபூஜை, கோ பூஜை ஆகியன செய்யப்படுகின்றன. கோசாலை ஒன்று உள்ளது. இங்கே உள்ள பால் தேவையை அது பூர்த்தி செய்கிறது. 
தங்கள் பழைய நினைவுகளில் ஆழ்ந்து மௌனமாக இருக்கும் பெரியவர்கள் பலர். சிலரே உரையாடுகிறார்கள். அவர்கள் கண்ணுக்குள்ளும் நாம் அவர்களின் ஏதோ ஒரு உறவினரின் ஜாடையில் தென்படுவதும் நமக்கும் அவர்கள் நம் உறவினர் ஒருவரை ஞாபகப்படுத்துவதுமாக இருந்தது சூழ்நிலை. இன்னும் சொல்லப்போனால் அங்கே போய் வந்தது சீக்கிரம் வரப்போகும் நம் முதுமையையும் அதை நாம் எப்படி மௌனமாகவும் தன்மையாகவும் எப்படி எதிர்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்துவதாக இருந்தது.

சிகப்பி இல்லம்,
திருப்பத்தூர் ரோடு,
சரஸ்வதி கோவில் அருகில்,
சிவகங்கை மாவட்டம்,
குன்றக்குடி – 630 206.
ஃபோன் –  +91 4577 264800

கைபேசி - +91 9941 817777.
மின்னஞ்சல் முகவரி :- Sigappiillam@gmail.com

2 கருத்துகள்:

  1. மிக நேர்மறையான பதிவு மா. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. நன்றி கிருபாஸ்.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...