எனது இருபது நூல்கள்

எனது இருபது நூல்கள்
எனது இருபது நூல்கள்

சனி, 14 ஜூலை, 2018

சாட்டர்டே ஜாலிகார்னர். வாசிப்பை நேசிக்கும் சரஸ்வதி காயத்ரி.

என் பெயர் சரஸ்வதி காயத்ரி வீட்டில் காயத்ரி .வெளியில்( official பெயர் சரஸ்வதி). சென்னை ,மடிப்பாக்கம்( அரசு) பள்ளியில் ஆசிரியை. 27 வருட பணி அனுபவம். சிறுவயதிலிருந்தே புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் அதிகம். திருமணமானவுடன் குடும்பம்,குழந்தைகள் ,வேலை என வாசிப்பது நின்று இப்பொழுது ,2015ல் முகநூல் வந்தப்பிறகு இழந்த ஆர்வங்களையெல்லாம் மீட்டெடுத்திருக்கிறேன். அதில் வாசிப்பது தலையாயது.

சரஸ்வதி காயத்ரி என் முகநூல் தோழி. புத்தகங்களை வாசிப்பதிலும் அவற்றை மென் இறகால் தொடுவது போல மென்மையாக விமர்சிப்பதிலும் வித்தகி. சொல்லப்போனால் இவருக்கு கவிதைத் தொகுதிகள்தான் பிடிக்கும். வண்ணதாசனின் கவிதைகள் பிடிக்கும்.

இவர் தனது உறவினர்கள் பற்றி எழுதும் அனைத்தும் மனம் தொட்டவை. உறவுகளின் நெருக்கத்தையும் அன்பையும் வாசித்துக் கண்ணைக் கசியவிட்டவை. வீடு பற்றிய இவரது கவிதை என் உயிரைத் தொட்ட ஒன்று. வீடு என்பது சிதிலமானாலும் அதில் வாழ்ந்த அன்பு இன்னும் உயிர்த்துக்கொண்டிருக்கிறது இவரது எழுத்தில்.

இனி சாட்டர்டே ஜாலி கார்னருக்காக நான் இவரிடம் சிறுகதை, கவிதைகள் பற்றிய இவரது பார்வையைக் கேட்டிருந்தேன். அவர் கூறியதை இங்கே அளித்திருக்கிறேன்.

///பாவண்ணனின் " துங்கபத்திரை" படித்துக்கொண்டிருக்கிறேன்.
நந்தனார் படத்தில் தண்டபாணி தேசிகரின் குரலைப்பற்றி அவர் எழுதியிருப்பதை படித்தவுடன் படிப்பதை நிறுத்தி விட்டு பாடல்களை கேட்க ஆரம்பித்து விட்டேன்.துக்கப்பிரவாஹத்திலிருந்து மீள்வதற்கு படிக்க ஆரம்பித்து மீண்டுமொரு துக்கத்தில்.. அழும்பொழுது அழுது சிரிக்கும்பொழுது சிரித்தால் தானே இயல்பாயிருப்பதாக அர்த்தம். ஒரு சிறுகதையை படித்து முடிக்கிற தருணம் அதி அற்புதமானது. எண்பதுகள்,தொண்ணூறுகளில் பல்வேறு இதழ்களில் வெளிவந்த சிறுகதைகள் வாசகனுக்குள் பரவசத்தை ஏற்படுத்துவனவாக இருந்தன. நெகிழ்ச்சியும்,மகி்ச்சியும்,கலக்கமும்,வருத்தமும் சமவிகிதத்தில் கலந்தளிக்கப்பட்ட ஒரு உணர்ச்சி காவியமென ஒவ்வொரு சிறுகதையும் இருந்தன. பட்டியலிட்டால் நீளும் எழுத்தாளர்தம் பெயர்களும் அவர்தம் படைப்புகளும். என்னுடைய ஆதர்சம் சுஜாதா தான் எனினும் அவர் சுட்டி காட்டிய அத்தனை எழுத்தாளர்களையும் படிக்கும் ஆவலாதி எனக்கு வெகுவாக இருந்தது. கணையாழி,விருட்சம்,புதியபார்வை,சுபமங்களா போன்ற சிற்றிதழ்களில் வந்த சிறுகதைகளைப் படித்த அதேநேரத்தில் வெகுஜன இதழ்களில் பிரசுரமான அத்தனை சிறுகதைகளையும் தேடித்தேடி படித்திருக்கிறேன். உண்மையில் சொல்லப்போனால் சுண்டல் மடித்துத்தருகிற தாளில் இருப்பதைக் கூட படிக்காமல் தூரப்போடுகிற பழக்கமற்றவளாய். அதுவும் லட்சுமி,சிவசங்கரி,இந்துமதி,அனுராதா ரமணன்,வித்யா சுப்ரமணியன் ,பாலகுமாரன், ராஜேஷ் குமார்,ராஜேந்திர குமார்,பட்டுக்கோட்டை பிரபாகர்,பி.வி.ஆர் போன்ற பிரபலங்கள் தொடர்கதைகள் எழுதுவதில் மூழ்கியிருந்தாலும் அவர்கள் அவ்வப்போது எழுதுகிற சிறுகதைகளையும் விடாமல் படித்தக் காலம் பொற்காலம். ஜோதிர் லதா கிரிஜா, கார்த்திகா ராஜ்குமார்,கீதா பென்னட்,உஷா சுப்ரமணியன், ஸ்டெல்லா புரூஸ்,ஆகியோர் எழுதின முத்திரைக் கதைகள் ஆனந்த விகடனில் வெளிவந்த போது சேர்த்து வைத்து பைண்ட் செய்து வைத்துக் கொண்டது மற்றுமொரு பொற்காலம். நீண்ட இடைவெளிக்குப்பிறகு நான் படிக்கத்தொடங்கியிருக்கிற இந்நாட்களில் எனக்கு பல புதிய கதவுகளைத் திறந்து விட்டிருக்கிறது தமிழ் இலக்கியம். எங்கு திரும்பினாலும் முத்துக்களும்,வைரங்களும்,கோமேதகமும் ,வைடூரியங்களும் ..எதை படிப்பது ; எதை விடுவது எனத்தெரியவில்லை. அத்தனை இணைய இதழ்கள்! எழுத்தாளர்கள்.! அதுவும் இளைஞர்கள்!மொழியை தங்கள் வசமாக்கிக்கொண்டு ஆரம்பித்தால் முழுதும் படித்தால் தான் முடியும் என்பதாக செய்துவிடுகிற எழுத்தின் உரிமையாளர்களாக இருக்கிறார்கள். கற்றது கைம்மண்ணளவு அளவு என்பது போல் வாசிப்பின. துளியின் துளியின் துளியின் துளியை கீழே சொந்த விடுவது போல் உணர்கிறேன். (அம் மைக்ரோத் துளியை சிந்தும் போதே அது காணாமல் போய் விடுகிற சாத்தியக் கூறுகள் இருப்பினும்!) அப்படி நான் எழுதுகையில். அப்படி நான் சமீபமாய் வாசித்த சிறுகதைகளும்; எழுத்தாளர்களும். ஆத்மார்த்தியின் இன்னொரு மைதிலி. உயிர்ச்சோறு- கணேச குமாரன் G.R.சுரேந்திரநாத்தின் - ஷ்ரவந்தி. எனது அறையில் ஒரு உடும்பு இருக்கிறது- நந்தன் ஸ்ரீதரன் கொன்றோம் அரசியை - தமயந்தி இவற்றினூடே நான் என்றும் வாரத்தில் ஒரு நாளேனும்அவர்கள் தம் மொழிநடைக்காகவும் ஒரு கதையையாவது வாசிக்கிற பழக்கம் வைத்திருக்கிறவர்களாக என்றென்றும் என் பிரியத்துக்குரியவர்களாக,வாழ்வில் எதுவரினும் தம் எழுத்துக்களில் அன்பை மட்டும் கசிய விடுபவர்களாக இருப்பவர்கள் லா.ச.ரா வும் வண்ணதாசனும். லா.ச.ரா வின் " தரிசனம்"- சிறுகதையிலிருந்து. //சௌந்தர்ய உபாஸகன் என்று என்னைச் சொல்லிக்கொள்வதில் எனக்கு ஒரு ஆசை .சௌந்தர்யம்.எங்கும் எப்பவும் செறிந்து கிடக்கிறது.அதை அடையாளம் கண்டுகொள்வதில் தான் த்ரில்.ஆனந்தம், பரவசம் ,தளும்பும் கண்ணீரில் ,ஒரு இலையின் அசைவில் ,ஒரு கவளம் சோறு போட்டதற்காக நன்றியுடன் பார்க்கும் நாயின் கண்களில் ,பேசாமலே நிறைந்த மனதில் ,இருவரிடையே தேங்கும் மோனத்தில் .சொல்லிக்கொண்டே போகலாம்.எல்லாம் அவள் . தரிசனம் எல்லாருடைய உரிமை.காத்திருக்க வேண்டும் .மனம் நெகிழ வேண்டும்.அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். லலிதா சஹஸ்ரநாமத்தில் " தருண்யை நம: " என்று ஒரு நாமம் வருகிறது.அதுதான் அதாவது ,யாருடனும் எத்தோடும் நான் விரோதமாயில்லாத சமயத்தில் ,மோனம் எனும் ஸ்தாயியிடம் தற்செயலாய் உரசல் எப்போது ஏற்படுகிறதோ அப்போது தரிசனம்நிகழ்கின்றது.நான் ஒன்றும் புதிதாய் சொல்லி விடவில்லை ." தீயுள் விரலை வைத்தால் உன்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா " பாரதிக்கு நந்தலாலா,ராமகிருஷ்ணருக்கு மாதா .The madman of God .எனக்கு " அவள் " " இவள்" யார்? அம்மாவிலிருந்து சகல ஜீவராசிகளிடையிலும் வெளிச்சமாகவும் சூக்ஷ்மமாகவும் இயங்கும் அத்தனை உறவுகளின் சங்கமம் .அவள் என் ப்ரியதர்ஷினி.இதைவிட விவரமாக அவளை விஸ்தரிக்க முயன்றால் ,அவள் பாஷைக்கு நழுவி விடுகிறாள். என் எழுத்து இதுவரை சொல்லிக்கொடுத்ததும் காட்டிக்கொடுத்ததும் இதுவரை இவ்வளவுதான்.// வண்ணதாசனின் சிறுகதையிலிருந்து: "நம் நற்றிணை " என்றொரு இலக்கிய இதழ் ( நான் முதன்முதலாக வாங்குகிறேன்) அதில் வண்ணதாசன் அவர்களின்" நிரம்பியும் காலியாகவும் " என்கிற சிறுகதை. என் பெரியப்பாவும் இக்கதையில் வருகிற சுயம்புலிங்க பெரியப்பா மாதிரி ரேஷன் சர்க்கரையை எனக்குக் கொடுத்தனுப்புகிறவர் தான். அதுவும் குழந்தைகளோடும்,கணவரோடும் வீட்டிற்குள் நுழைந்த உடனேயே காஃபி போட்டு கையில் கொடுக்க சொல்லி அல்லது தானே போட்டுக்கொடுத்து விட்டுத்தான் மறுவேலை பார்ப்பார்.அவர் வீட்டிற்கும் நான் இக்கதையில் வருகிற ரெங்கம்மா அவள் தோழி நவஜோதியைக் கூட்டிக்கொண்டு போனமாதிரி நான் என் தோழியைக் கூட்டிக்கொண்டு போயிருக்கிறேன்( அவளுக்கும் பெரியம்மா,பெரியப்பாவை பற்றி எல்லாமும் தெரியும்) வண்ணதாசன்,உங்கள் கதைகளில் நான் மீண்டும் மீண்டும் ஆழ்ந்து போவதற்கு ,நெகிழ்ந்து பின் செல்வதற்கு உங்கள் கதைகளில் நீங்கள் காட்சிப்படுத்துகிற மனிதர்களே காரணம். அந்த மனிதர்கள் எல்லாம் என்னுடன் இருப்பவர்கள் போலவே இருக்கிறார்கள் அல்லது என்னுடன் இருப்பவர்கள் அப்படி இருக்க வேண்டுமென நான் விரும்புகிறேன். எனக்கு மகிழம்பூவை பார்க்க வேண்டும். இப்போதைக்கு மருதாணிப்பூவை சூடிக்கொள்ள வேண்டும்.ஊஞ்சலில் ஆட முடியவில்லையெனினும். // பெரியம்மைக்கு எல்லாம் எல்லாரும் வேண்டும் .அதே மாதிரி சுத்தமாக ஒருத்தரும் ஒன்றும் வேண்டாம்.நிரம்பியும் காலியாகவும் இருக்க முடிந்தவள் அவள்.// // வீட்டின் உட்பக்கத்திலிருந்து தனியே வந்துகொண்டிருந்த நவீனாவிடம் ஒரு சிரிப்பு இருந்தது.அவிழ்ந்து கொண்டே போகும் ஒரு உல்லன் நூல் கண்டை உருட்டும் ஒரு பூனைக்குட்டிப் பார்வை இருந்தது.// // நவீனா கையில் ஒரு மருதாணிப் பூங்கொத்து இருந்தது.சுயம்புலிங்கப் பெரியப்பா நவீனா பக்கத்தில் உட்கார்ந்திருந்தார் .வீசி வீசி ஆடுகிற ஊஞ்சல் வீச்சில் பட்டாசல் முழுவதும் மருதாணி வாசம் நிரம்பியிருந்தது.// // ரெங்கம்மா ஏறி உட்கார்ந்தாள் .மூன்று பேரின் கனம் ஏறியதால் ஊஞ்சலின் வீச்சில் எந்த மாற்றமும் இல்லை .கனமே அற்றதாகி ,ஒரு பறவை சிறகு வீசி பறப்பது போல ஊஞ்சல் ஆடியது. மருதாணி மணம் பட்டம் குறைந்து தன் மணம் ஆகி விட்டிருந்தது.//

டிஸ்கி :- அருமை சரஸ்வதி. நானும் மருதாணி வாசத்தோடு ஊஞ்சலாடிக்கொண்டிருக்கிறேன். என் கனமும் பறவையின் இறகாகிறது. அருமையான உணர்வுகளை எழுத்தில் வடித்துத் தந்தமைக்கு அன்பும் நன்றியும். நீங்கள் வாசிப்பை நேசிக்கிறவர் மட்டுமல்ல. நல்ல எழுத்துக்குச் சொந்தக்காரியும் கூட. இன்னும் நிறைய எழுதுங்கள்.

உங்கள் தன்மையான முகம் போலவே எழுத்தும் தன்மையாக மிளிர்கிறது. சாட்டர்டே ஜாலிகார்னரில் ஊஞ்சலை ஆட விட்டதுக்கும் மனமெங்கும் மருதாணியைப் பூக்க விட்டதுக்கும் திரும்பவும் அன்பும் நன்றியும் மகிழ்ச்சியும். வீடுவஇ

5 கருத்துகள்:

 1. இது போன்றவர்களின் ஸ்னேகம் அரிது/

  பதிலளிநீக்கு
 2. இந்தமாதிரி சாட்டர் டே பதிவுகள் மூலம் பலரையும் தெரிந்து கொள்ள முடிகிறது

  பதிலளிநீக்கு
 3. நன்றி டிடி சகோ.

  நன்றி விமலன்

  நன்றி பாலா சார்

  நன்றி ஜம்பு சார்

  வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...