எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 7 அக்டோபர், 2014

இவர்கள் தூய அரசர்கள்இவர்கள் தூய அரசர்கள் :-

உச்சியில் கயிறுகட்டிக்கொண்ட
ஒய்யாரக் கூந்தலழகிகள்
பாப் வெட்டிக்கொண்டு
தரையைத் தேய்த்துக்கொண்டு
நடப்பவர்கள்.

தரைக்குழந்தைகளுக்குத்
தினம் தினம் உடல்துடைத்து
வாரமொருமுறை நீரூற்றிக்
குளியல் செய்யும் பொறுப்புள்ள தாதிகள்.

சடைபின்னாமல்
ரப்பர்பாண்ட் போட்டதால்,
நுனி வெடித்த சிகையழகிகள்

தென்னைமரவீட்டைத்
தாயாகக்கொண்ட
செம்பரட்டைத் தலையர்கள்
வாயிலோரம் ஒதுங்கி
விடிகாலைப் பனியில்
வியர்க்க விருவிருக்க நடைபயில்வர்
அங்குமிங்கும் நடந்து
மண்வாசல் முதுகு தேய்த்துச்
சொரிந்து குளிப்பாட்டுவர்.

செம்பரட்டைத் தலையர்
வாயிலிலே சேவகம் செய்தால்
அவர்தம் பெண்சாதிகளாம்
வெள்ளைத் தோற்சிலுப்பிகள்
சமையற்கட்டின் மூலையோரங்களில்
குளிருக்கு அடக்கமாய்
முடங்கிப் படுத்துக்கிடப்பர்.


விடிந்தபின்தான் வேலை தொடங்குவர்.
அடுப்பு மேடையைத் தூசிதட்டித்
தூக்கத்திலிருந்து எழுப்புவர்.

செம்பரட்டைத் தலையர்
மரங்களுக்குக்கீழே
பகலெல்லாம் ஓடி ஓடி
ஓயாமல் சருகு சேர்ப்பர்
உதிர்ந்த பூக்களை
சாக்குமூட்டையில் தள்ளி
மூச்சுத் திணற வைப்பர்

சாதிபேதம் பார்க்காத
சமரசவாதிகளாய்
சாக்கடையையும்
சலிக்காமல் சுத்தம் செய்வர்.

ஒரே ஒரு கிழடாகிப் போன
வாறுகோலார் மட்டும்
கழிப்பறையின் மூலையில்
கதிகலங்கி முழித்துக்கொண்டிருப்பார்.
மூச்சுவிடத் தவிப்பார்.

ஒட்டடைக்குச்சியின் மேலேறி
வீட்டின் உத்தரம் மூலையிலெல்லாம்
ஓடிப்பிடித்து விளையாடிச்
சேட்டைசெய்வார் சிலர்.

ஒற்றுமையின்மையால் சில
சகோதர ஈர்க்குச்சிகள்
கட்டிலிருந்து தளையறுத்துக்
கீழ்விழுவர்.

வீட்டின் தூசிகளில்
கவியெழுதும் பேனாக்கள்
இவர்கள்.

செருப்பணிந்து சுகம் தேடாத
எளிமைவாதிகள்.

குப்பைகளால் சிலும்பி நிற்கும்
மண்முடியை வாரிவிடும் சீப்புகள்.
பல் இல்லாக் கிழட்டுச் சீப்புகள்
முரணையால் உணவு முதம்பும்
சின்னக்குழந்தைகள்.

நடக்கும்போதே
சரிகை சிதறிச் செல்லும்
ஜிகினாப் பாவாடைக்
குழந்தைகள்.

கண்ணுக்குள் தூசி
தும்பட்டை புகாமல்
சுத்தமாய் ஆக்கும்
சன்ன இமைக்காரிகள்

வேலைக்காரி கையில்
குதித்துக் குதித்து
நாலடிக்கு நாலடி தாவும்
லகான் மாட்டிய குதிரைகள்.

மண்டை வெடிக்கும் வெய்யிலில்
எக்ஸர்சைஸ் பண்ணும்
தென்னையின் மைந்தர்கள்

தலையை உயர்த்தி
வெய்யிலை உறுத்து விழித்து
தன் நெற்றி உயர்ந்த வழுக்கைத் தலையை
ரசிக்கும் கட்டிடத் ( தாத்தாக்கள் )
அறிஞர்கள் கூட இவர்கள் இல்லையென்றால்
பழுப்படைந்து செம்பட்டை பிடித்துப் போவார்கள்.

ஒவ்வொரு கட்டிடங்களும் மண் தரைகளும்
புல்வெளிகளும் நோயாளிக்குழந்தைகளாய்க்
காலைக்கடன் கழிக்க இவர்களைத்தான்
எதிர்நோக்கி இருப்பர்.

ஹிப்பித் தலையர்களாய்
இவர்கள் இருந்தாலும்
தூய்மையைப் போதிக்கும் நல்லாசிரியன்கள்.

அதிகாலை வேளைகளில்
குளிருக்குக் கிச்சுக் கிச்சு மூட்டும்
சுப்ரபாதங்கள்.

கண்ணனை எழுப்பத்
தவிப்புடன் எழுந்து
தன் கடமைகளைச் செய்து
பலனை எதிர்பாராமல்
காத்திருக்கும் திருப்பாவைகள்.

இவர்கள் தூய அரசர்கள்தான்
ஆனால்
இவர்கள் பாதங்கள் பயணப்படுவது
கல்லிலும் முள்ளிலும். 

-- 84 ஆம் வருடம் 80 ஆம் வருட டைரியில் எழுதியது. தூய்மை இந்தியாவாக ஆக்குவோம். 


5 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...